கன்றுக்குட்டி அசைபோட்டபடி படுத்திருந்தது. கன்றுக்குட்டியின் அசைவைச் சித்தன் கண்கொட்டிப் பார்ப்பதாக இருந்தான். அசைபோடுவது, அவனுக்கு அவல் தின்பதைப் போலிருந்தது. இந்த கன்றுக்குத்தான் என்னவொரு கொடுப்பினை? முதலில் வாய்க்காகத் தின்று, பிறகு வயிற்றுக்காகத் தின்னுகிறது. வாய்க்குத் தின்பது ருசிக்கு, வயிற்றுக்காகத் தின்பது பசிக்கு. இதைப் புரிந்துகொள்ளும் வயதில்லை, சித்தனுக்கு. இத்தனை நாட்கள், அங்காடி அரிசியை அள்ளி, கொடும்புக்குள் ஊற வைத்து மென்றவனுக்கு, அவல் தின்னப் போகும் ஆசை, நாக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டது.
ஒன்றுக்கு மூன்று பைகளைச் சுருட்டி, கமுக்கட்டுக்குள் வைத்துக்கொண்டான். கோழி மூக்குப் பொத்தல் ஏதேனும் இருக்கிறதா, எனப் பார்த்துக் கொண்டான். எலிக்கடி ஓட்டைப் பையை எடுக்கும் போதே தெரிந்துவிடும். கோழிப் பொத்தல், பைக்குள் கையை விட்டு துழாவிப் பார்த்தால்தான் தெரியும். பையில் ஓட்டைகள் இருந்திருக்கவில்லை.
போன பட்டம், ஒரு பை மட்டுமே கொண்டுபோனான். ஒரு பையும் முழுமையாக நிறைந்துவிட்டிருந்தது. பை நிறைந்தளவுக்கு மனசு நிறையவில்லை. கொள்ளளவு கொண்டது துணிப்பை. கொள்ளாதளவு, மனப்பை. அவன் விதைநெல் வாங்கிக் கொண்டு மனக்குளம் கரையில் ஏறுகையில், அவன் சோட்டுப் பையன்கள், இரண்டு மூன்று பைகளோடு இடுமுடிக் கட்டி, சபரிமலை ஏறுவதைப்போல ஏறிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதே அவன் நினைத்ததுதான். அடுத்தப் பெரும்பட்டத்தின் போது, மூன்று பைகளோடு வந்துவிட வேண்டுமென்று.
வீடு திரும்ப எந்நேரமாகுமோ, என நினைத்த சித்தன், சோற்றுப் பானைக்குள் கையை விட்டு அளாவி, இரு கைப்பிடியளவு சோறு அள்ளி, தூக்குவாளியில் போட்டுக்கொண்டு, முக்கால் வாளி நீராகாரம் ஊற்றி, நான்கு விரல்களால் உப்புப் போட்டுக்கொண்டான். அட்டாலியில் மூடியைத் தேடி எடுத்தவன், தூக்குவாளியில் மல்லாக்கக் கவிழ்த்து, கொஞ்சம் போல உப்பைக் கடிதாசியில்
மடித்து, இரண்டு பச்சை மிளகாய், மூன்று வெங்காயம் எடுத்து வைத்துக் கொண்டு, அத்தனை வேகமாகக் கிளம்பினான்.
அவன் வீட்டை விட்டுக் கிளம்புகையில், கன்றுக்குட்டி கட்டுத்தறியைச் சுற்றி வந்தது. ‘மைனர்’ கொடுத்த கன்றுக் குட்டி அது. ஊரார் அழைப்பது, அப்படித்தான். தானத்திற்கோ, கூலிக்கோ எனக் கொடுத்திருந்தால், கயிறு மாற்றிக் கொடுத்திருப்பார். இது இரவலாகக் கொடுத்தது.
மைனர், பெருந்தலைக்கட்டு. கூத்தனையும், சிலம்பியையும் வேற்றூரிலிருந்து கூட்டிவந்து, வெள்ளாமை பார்க்க, தன் கொல்லையில் குடி வைத்திருந்தார். பனைமட்டையினாலான குடிசை. புழங்கிக் கொள்ள துண்டு நிலம், அவ்வளவே!.
“ சித்தா, கஞ்சியக் குடிச்சிட்டு, கன்னுக்குட்டிய அவித்து விடு” மகனிடம் சொல்லிக் கொண்டே கூத்தன் ஓடினார். அவருக்குக் கால்கள் என்பது நடக்க அல்ல, ஓடுவதற்கு. அவர் ஓடும் வேகத்திற்கு சிலம்பியும் ஓடுவாள். குத்தகைக் கூலியோ, வாரக் கூலிக்கோ அல்ல. பட்டக்கூலி. வாங்கும் கூலி, குடிவாசல் வரைக்கும் வரவில்லையென்றாலும் வயிற்று வாசல் வரைக்கேனும் வர வேண்டும். கொடுப்பவன் வயிற்றில் அடிக்கலாம், கூலி அடிக்கக் கூடாது. ஆனால் கூத்தனுக்கு அடித்தது.
“ மைனரே, நாங்க ஒழச்சி வதைஞ்சது போதும். வெள்ளாமைய வேற ஆள வச்சி பார்த்துக்குங்க. நாங்க சொந்த ஊர்ப்பக்கம் கிளம்புறோம்” என்றார் கூத்தன். இவர் அடிமாடாய் உழைக்கும் உழைப்புக்கு ஆயிரம் நிலக்கிழார்கள் கிடைப்பார்கள். இந்தக் குறைந்த கூலிக்கு, கூத்தனை விட்டால், மைனருக்கு யார் கிடைப்பார்?
“ என்னடா எதிர்ப்பார்க்கிறே?”
“ ஆறிலே ஒரு பங்கு சாதிதே நாங்க. அதுக்கா கூலியயும் அதையேவா தர்வீங்க?”
தயங்கிதான் கேட்டார். ஆனால் சத்தமாகக் கேட்டார். மைனர் தலைக்குள் வத்திக்குச்சி பற்றியது. பதிலுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை. தலைப்புக்கறை வேட்டியை இரு விரல்களால் பிடித்துக்கொண்டு, தோப்புத் துறவை ஒரு சுற்று வலம் வந்தார். நிலம், உழுபவனிடம் பேசும். வரப்பு, உரிமையாளனிடம் பேசும். நிலத்துக்கு வரப்பு நாட்டாமை. கூத்தனின் உழைப்பு வரப்புகளில் தெரிந்தது.
மைனர், கூத்தனை அழைத்துச் சொன்னார், “ கூத்தா, தொழுவுலே பால்க்குடி கன்னுக்குட்டி நிக்கு. பிடிச்சு வளத்துக்கோ ”
இனமா, தானமா? கூத்தனுக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலென்ன, சிலம்பி வேண்டாம், என்றாள்.
“ மைனர் மனசு இரங்கி கொடுக்கிறத, நீ ஏனடி வேண்டாங்கிறே”
கன்றுக்குட்டியை இழுத்து வந்து வாசலில் கட்டினார், கூத்தன்.
கன்றுக்குட்டி, தும்பைப்பூ நிறம். தொடையைச் சுற்றி பெருமச்சம். வாழைக்குழைத் தள்ளும் முகம். நாகாபரண குடை நெற்றி. மூக்கைப் பார்த்து, காதைப் பார்த்து, முதுகைப் பார்த்தாள் சிலம்பி. முதுகில் ரெட்டைச் சுழி கிடந்தது. ரெட்டைச் சுழிகளும் பாடைச் சுழி.
சிலம்பி வயிற்றில் நெருப்பு பற்றியது. கைகளைக் கொண்டு, வயிற்றைப் பிசைந்தாள். வயிறு அவளைப் பிசைந்தது. “ இது குடிக்கு ஆகாது, கொண்டுபோய் விட்டுட்டு வந்திருங்க” பத்தடி பதடியாகக் குதித்தாள்.
“ தானம் கொடுக்கிற மாட்ட, இப்படியாப் பல்லப் பிடிச்சு பதம் பார்ப்பே”
“ ஊரப் பார்த்து பொண்ணு எடுக்கணும், சுழியப் பார்த்து கன்னுப் பிடிக்கணும் ”
இருவரும் ஒருவரையொருவர் வாய்வெட்டு வெட்டுக் கொண்டார்கள். வெளியே, காய்ந்த சருகில் மிதியடி அரவம் கேட்டது.
“ சிலம்பி ” வெளியே கூப்பாடு.
“ யாரது?” வெளியே எட்டிப் பார்த்தாள். வெள்ளையும் சொள்ளையுமாக நின்றார், மைனர்.
“ சிலம்பி, உன் புருசனுக்கிட்ட, இன்னொரு புள்ள பெத்துக்கடானு சொன்னேன். அவன் உதட்டோரமா சிவக்கான். ஒத்தைய வச்சிக்கிட்டு உத்துத்து பார்க்க முடியாது. தொணைக்கு ஒன்னு வேணும். அதான் கன்னுக்குட்டிய பிடிச்சிட்டு போடான்னேன். தலைச்சங்கன்னு. பொம்பளைக்கு இடுப்பு மடிப்பு தெரியுற மாதிரி, மாட்டுக்கு வயித்து மடிப்பு தெரியக் கூடாது. பார்த்து வளர்க்கணும்”
சிலம்பி, தொண்டைக்குள் எதையோ மென்று, எதையோ விழுங்கினாள். அவளது நாசிக்குள் காற்று மண்டலம் நெருப்புக் கட்டி வீசியது.
சித்தன் நினைப்பெல்லாம், கன்றுக்குட்டி அசைபோடுவதிலேயே இருந்தது. பாவுநெல் வாங்கி வந்து, ஆர உலர்த்தி, வறுத்து, இடித்து, அந்தக் கன்றுக்குட்டியைப் போல தானும் தின்ன வேண்டும், என்கிற ஆசையில் அவன் வயற்காட்டை நோக்கி நடந்தான்.
போன பட்டத்தின் போது, அவன் வாங்கி வந்த நெல்லை வறுத்து, உலர்த்தி, வரகோட்டில் கொட்டி குந்தாணியில் கொட்டினாள், தாய் சிலம்பி. சூடு ஆறுவதற்குள் இடித்தால்தான் அது அவல். மரவுலக்கையால் அத்தனை வேகமாக இடித்தான் சித்தன். உலக்கையின் இடி அவலிலும் விழுந்தது. குந்தாணியிலும் விழுந்தது. சிலம்பி மாற்றுக்கை கொடுத்தாள். தேங்காய்ச்சிரட்டை ஆப்பையால் கிளறுகையில், சிந்திய நெற்களைக் குஞ்சுத்தாய் கோழிகள் ‘ கொக், கொக்’ என பொறுக்கின.
அம்மா, அவலை முறத்தில் புடைக்கும் பொழுதே ஒரு பிடி அள்ளி, அவனிடம் கொடுத்ததை நினைத்துப் பார்த்தான். அவனது வாயில் எச்சில் ஊறியது. சூடான அவலின் ருசியே தனிதான். அவலைக் கைமாற்றி, வாய்க்குள் கொட்டி, அதக்கி, எச்சிலில் ஊற வைத்து மென்றான். தொண்டைக்குள் இறங்கிய அவலின் வாசம், நாசி வழியே குடலுக்குள் இறங்கியது.
அவனைப் பொறுத்தவரைக்கும் கன்றுக்குட்டி என்பது வெள்ளை வேட்டி கட்டாத ஒரு மைனர். அப்படியாகத்தான் சித்தன் நினைத்தான். கன்றின் அசைவு வாய், அவனைக் கேலி செய்வதைப் போலிருக்கும். இன்று பாவு நெல் வாங்கி வந்து, வறுத்து இடித்து, பதிலுக்குக் கன்றைப் பழிக்க போகிற உற்சாகத்தில் நடந்ததில் வயற்காடுகள் அவனை நோக்கி வருவதாக இருந்தன.
“ அப்பாவுக்குக் கொஞ்சம். அம்மாவுக்குக் கொஞ்சம். மிச்சதெல்லா எனக்குத்தெ” தனக்குத்தானே சொல்லிக் கொண்டு மனக்குளக் கரையில் ஏறினான். குளத்தின் கீழக்கரை மனவயல். குளத்துக் குமுளியில் தண்ணீர் நேர்ந்துவிட்ட காளையைப் போல, மொடுகு மேட்டில் ஏறி இறங்கிக் குதித்து ஓடிக்கொண்டிருந்தது. கிளித்தட்டுகளாக குறுக்குமறுக்காக வரப்புகள். மறித்துக் கட்டிய பாத்திகள். வரப்புகளில் கொசகொசத்த அருகம், கோழிக்கால் புற்கள். கோரைப் புற்கள் ஒன்றரை ஆள் உயரத்திற்கு வளர்ந்து, வெண்பூக்கள் பூத்திருந்தன.
வயல் வரப்புகளில் கொக்கு, நாரைகள் வரப்புக்கு வரப்பு தாவுவதாக இருந்தன. காக்கைகள் பாவுநெல் மூட்டைகளைக் கொத்தின. கரையில் நின்றபடி பார்த்தான் சித்தன். சேறடித்த
நாற்றங்கால்கள், ஆழஉழவு முடிந்து பதவுழவில் இருந்தன. சிலர், குஞ்சுப்பத்தை, குருவிப் பத்தைகளைப் பெருங்கட்டாகக் கட்டி, அதன் மீது பெருங்கல் வைத்து, பரம்படிப்பதாக இருந்தார்கள். பரம்படியில் மொடுகு நிலங்கள் மட்டமாகிக் கொண்டிருந்தன.
நல்ல நாள், நேரம் பார்த்தே சேற்றில் விதையை வைப்பார்கள், விதைநெல் பாவ உகந்த நேரம், ஒன்பது மணியென, ஊரில் பேச்சு இருந்தது. ஒன்பது மணி என்பது, கரம்பக்குடி சங்கு ஊதுகிற நேரம். அதற்கு இன்னும் கொஞ்சம் நேரமிருக்கிறது, என நினைத்தவனாய் வரப்பில் நடந்தான் சித்தன்.
பாவியது போக, மீதமுள்ள நெல்லை யாரும் யாருக்கும் சும்மா கொடுத்துவிட மாட்டார்கள். நெல் மூட்டையைக் கொத்தும் காக்கை, கொக்குகளை விரட்ட வேண்டும். மண்வெட்டியை எடுத்து, நீட்ட வேண்டும். உடைப்பெடுக்கும் தண்ணீரை மறித்துக் கட்டவும், சேறு ஆகாமல் கட்டிப்பட்டிருக்கும் மண்ணாங்கட்டியை காலால் மிதித்து, சேற்றுக்குள் மூழ்கடிக்க வேண்டும். “கடவுளே அய்யனாரே, ஐயாவூட்டு நாற்றங்காலு பெரும்பச்சைக் கட்டணும்” எனச் சேற்றுழவு உழுபவர்கள் காதில் விழும்படியாக கும்பிட வேண்டும். இத்தனையும் செய்யவில்லையென்றாலும் செய்வதைப்போலப் பாசாங்கு காட்ட வேண்டும். உழைப்பவனுக்குள்ள மரியாதை, உழைப்பதைப் போல நடிப்பவனுக்கும் உண்டுதானே.
இதெல்லாம் செய்தால்தான், சேற்றில் பாவியது போக, மிச்சமிருக்கும் நெல்லை, ஒரு பிடி அள்ளி பஞ்சத்திற்கென கொடுப்பார்கள். சிலர், மிஞ்சும் நெல்லை அப்படியே கொடுத்துவிடுவதும் உண்டு. சிலர், வந்து நிற்கும் சில்லுச் சிண்டுகளுக்கு ஆளுக்கொரு பிடியாகப் போடுவர். சிலர், எடுபிடி வேலைகளை வாங்கிக்கொண்டு, விதைத்த கையை உதறாமல் போய்விடுவர்.
மனவயல் குளிர்ச்சிக்குப் பாம்பு, வரப்பில் தலை வைத்துப் படுத்திருக்கும். சாரை, புடையன்களின் சரணாலயம். வெள்ளாமை வயலில் புடையன் கிடப்பது யோகம். சாரை, விளைச்சலைச் சாவியாக்கும்.
மனக்குளத்திற்கும் வயலுக்குமிடையே நான்கைந்து குமுளிகள். அதன் கரையில் ஒரு நல்லத்தி மரம். நடவுக்கு வரும் பாலூட்டும் பெண்கள், அம்மரத்தில் தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்திவிட்டு, வயலுக்குள் இறங்குவர். சித்தன், தன் கையில் வைத்திருந்த தூக்குவாளியை அம்மரத்துக் கொம்பில் கோர்த்துவிட்டு, பையைச் சுருட்டி கைலிக்குள் மறைத்துக்கொண்டு,
வரப்பில் நடந்தான். முட்டு, மேடுகளான வரப்புகளைப் பச்சைக் குதிரையென நினைத்துத் தாண்டினான். சேறடியைப் பலரும் மட்டம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.
சித்தன் வாய்க்காலில் இறங்கி, உடைப்பெடுத்தத் தண்ணீரை அடைத்தான். நெல் பாவியதன் பிறகு, மையத்தில் ஒரு பிடி வேப்பங்கொத்தைச் சொருகி வைப்பார்கள். அதற்காக, அவன் மரமேறி வேப்பங்கொத்தைப் பறித்து வந்து கொடுத்தான். ஒரே வயலோடு அவன் நின்றுவிடாமல், நான்கைந்து வயல்களுக்குள் இறங்கி, விதைப்பெட்டி எடுத்துக் கொடுக்கவும், நெல் கொட்டிவிட்டால் அதைக் கூட்டி அள்ளிக் கொடுக்கவும் செய்தான்.
ஒன்பது மணி சங்கு ஊதியது. “ மணி ஒம்பதாச்சு” எனக் கூவினான். அவரவர் கையில் வைத்திருந்த நெல்லை, ஈசானிய மூலையிலிருந்து பாவத் தொடங்கினார்கள். தாழ்வாரமாக ஆலவட்டமடித்த காக்கை, கரிச்சான்குருவிகளை விரட்டியடித்தான். அவனது கவனமெல்லாம் மிஞ்சப் போகும் நெல் மீதே இருந்தது.
சூரியன் ஏறுநெற்றிக்கு வருகையில், இரண்டு பிடி அளவுக்கே நெல் கிடைத்திருந்தது. அதைப் பையோடு இறுக்கிப் பிடிக்கையில் கன்றுக்குட்டியின் ‘முட்டார்’ அளவுக்கே இருந்தது. தன் ஆசையில் மண் விழுந்துவிட்டதாகவே நினைத்தான். இவ்வளவு நேரம் பசியாறாது ஓடியாடி வேலை செய்ததில், அவனுக்கு மயக்கம் கிறுகிறுத்து வந்தது. தூக்குவாளியைத் திறந்து, அதிலிருந்த தெளிந்த நீராகாரத்தை அருந்திவிட்டு, ஏமாற்றத்துடன் பருக்கையை ஓடையில் கொட்டினான். அவன் கொட்டிய இடத்தில், மீன்குஞ்சுகள் கொத்தாக மொய்த்தன. ஏமாற்ற மூச்சுடன், அவன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் குடிசையை அடைகையில், ‘மைனர்’ வாசலில் நின்றுகொண்டிருந்தார்.
“ கன்னுக்குட்டிய இன்னைக்கு மேய்ச்சலுக்கு அவுத்து விடலயா?”
“ இனிமேதா அவுக்கணும்”
“ இவ்ளோ நேரம் எங்கே போனே?”
“ பாவு நெல் வாங்கப் போனேன்”
மைனர் ஒன்றும் பதிலுக்குப் பேசவில்லையே தவிர, அவனை வெறுப்பாக ஒரு பார்வை, பார்த்துவிட்டே சென்றார். கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டான், சித்தன். நேர்ந்துவிட்ட கோவில் கன்றைப்போல அது நினைத்த இடத்தில் வாய் வைத்து, மாலை வீடு திரும்பி, அசைபோட்டது.
கூத்தனும் சிலம்பியும், மாலை குடிசைக்குத் திரும்பினார்கள். சிலம்பி, மகன் சேகரித்து வந்திருந்த பாவு நெல்லைக் கண் அகப்பையால் பார்த்தாள். அவளது கைக்கு ஒரு பிடி அளவுக்கே, நெல் இருந்தது. “ இவ்ளோதான் கிடைத்தது” எனச் சொல்லும்படியாக மகன் ஒரு மூலையில், சொடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.
கூத்தன், நெல்லை உள்ளங்கையில் அள்ளிப் பார்த்தார். அவரது இமைகள் நெற்றிக்கு ஏறின. தங்கத்துகள் நிறத்தில் நெற்கள் இருந்தன. குறுக்குச் சிறுத்து, வாய் பெருத்து, வெடித்து, முளை விட்டிருந்தன. நெல்லின் வகையறா அவருக்கு அத்துப்படி. அரிதினும் அரிதான உயர்ரக நெல் அது. “ அதிசய பொன்னி”. மகனின் தலையை வருடிக் கொடுத்து, கன்னத்தைத் தட்டினார். “ பெரிய யோகக்காரன்டே நீ” என்றவர், சிலம்பி பக்கமாகத் திரும்பி, “கண்ணூறு நாவூறு கழிக்க புள்ளெக்குத் திருஷ்டி சுத்திப் போடு” என்றார். சிலம்பி மகனின் கன்னத்தை அள்ளிக் கொஞ்சினாள்.
“ சித்தா, இது உசத்தியான நெல்லு ரகம். காவிரி படுகையிலே விளைஞ்சி, பெரிய மனுசங்க சாப்பிடுறது. இதெப் பாவி, நட்டு, அறுத்தா, நெறெய நெல்லு கிடைக்கும். அதிலே ஒரு வேள வயிறாற சாப்பிடலாம். அதிலே அவல் செஞ்சு ஆசை தீர தின்னலாம்” என்றார்.
சித்தன், தாயின் முகத்தைப் பார்த்தான். அவள், ‘ஆமாம்ப்பா’, என்று சொல்வதைப் போல, மகனை அள்ளிக் கொஞ்சினாள்.
மைனர் கொடுத்திருந்த, குடிசையொட்டிய துணுக்காணி நிலத்தைக் கூத்தனும், சிலம்பியும் வெட்டிக் கொத்தினார்கள். சுற்றிலும் வேலி அமைத்தார்கள். குளிக்கிற, துவைக்கிற தண்ணீர் ஓடி பாயும் படியாக வாய்க்கால் வடித்தார்கள். களைக்கொட்டால் கொத்தி, சேறும் சகதியுமாக்கி, சித்தன் வாங்கிவந்த முளைநெல்லை, அதில் பாவினார்கள்.
சித்தன், அதன்பிறகு அந்த இடத்தை விட்டு நகர்வதாக இல்லை. கண்களைக் கருக்கருவாளாகக் கொண்டு காவல் காத்தான். பயிர் வளருமிடம், அவனுக்கு அவல் விளையும் இடமாகத் தெரிந்தது. அதையே சுற்றிச் சுற்றி வந்தான். பாவிய நெல், யார் என்னை விதைத்ததென, மொட்டைத் தலைக்கு முடி முளைப்பதைப் போல கொசகொசவென முளைத்தன. நாளுக்கொரு வளர்ச்சியை அவன் கண்டான். பயிர்களை உள்ளங்கையில் நீவிக்கொடுக்கவும், தடவிக் கொடுக்கவும் செய்தான். ஒவ்வொரு நாற்றுக்கும் முத்தம் கொடுத்தான். நெல் விளைவதற்குப் பதிலாக நேரடியாக அவல் விளைந்தால் தேவலாம் போலிருந்தது அவனுக்கு.
வளர்ந்து வரும் நாற்றுக் குறித்து, தினமொரு கனவு கண்டான். நாற்று, ஓரிரு நாளில் அறித்து, நடவேண்டிய பருவத்தை எட்டியிருந்தது.
நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றைப்போல மேகம் சூல் கொண்டிருந்தது. பெரும்பாட்டம் மழையால் மொத்த பூமியையும் குளிப்பாட்டி, தலை துவட்டி விடுவதைப் போல காற்று மரக்கிளைகளை முறித்தெறிந்து வீசியது. இந்த மேகம் சற்று நேரம், நின்று பெய்தால், இந்த நாற்று தரையில் தங்காது. வாசலில் பெருக்கெடுக்கும் வெள்ளம், மொத்த நாற்றையும் வாரித்துடைத்து, வேரோடு அடித்துச் சென்றுவிடும். அவன் நாற்றுக்காகப் பெரிதும் இரங்கினான். குடிசைக்குள் இருந்தபடி நல்லத்தி மரத்தையும் அய்யனார் சாமியையும் மனதிற்குள் வேண்டினான்.
மேகம், நின்று பெய்யவில்லை. கலைந்துவிடவுமில்லை. பெய்யலாமா, வேண்டாமா, என காற்றோட்டம் பார்த்தது. ஒரு பக்கத் திசையை வாள் கொண்டு வெட்டுவதைப்போல, மின்வெட்டு வெட்டியது. அவனது கவனமெல்லாம் நெல் நாற்றுகள் மீதே இருந்தது. சித்தன் இத்தனை நாட்கள் கட்டிய கனவுகள் மெல்லக் கலைவதாக இருந்தன. நாற்றையே நினைத்துக் கொண்டிருந்து, தூங்கி விட்டிருந்தான்.
தலைச்சேவல் கூவியது. இத்தனை அதிகாலையில், இதற்கு முன்பு, அவன் எழுந்ததில்லை. வேகமாக எழுந்து, வாசலுக்கு ஓடி வந்தான். அவனது வேண்டலும், கெஞ்சலும் வீண்போகவில்லை. வாசலில் ஒரு சொட்டு தூற்றலில்லை. இலை சருகுகள், எங்குமாக வியாபித்துக் கிடந்தன. மகிழ்ச்சியில் பெருங்குதி குதித்தான். இன்றைக்கு நடவுவதாக நினைத்த நாற்றைப் பார்க்க ஓடினான். நாற்றங்கால், தரையோடு தரையாக மழிக்கப்பட்டிருந்தது. ஒரு நாற்றோ, ஒரு பயிரோ, ஒரு பச்சையோ அதில் இருந்திருக்கவில்லை.
அவனது பூமி, அவனை மட்டும், தனியே சுற்றியது. “அம்மா,…” எனப் பெருங்குரலெடுத்து கத்தினான். சிலம்பி, பரிதவிக்க எழுந்து ஓடி வந்தாள். கூத்தன் ஒரே பாய்ச்சலில் நாற்றங்காலை எட்டினார். சித்தன் தலையில் அடித்துக்கொண்டு குதித்தான். வயிற்றில் குத்திக் கொண்டான். அப்பனும் தாயும் அவனைப் பெருவிசைக்கொண்டு பிடித்தார்கள். அவன், பிடியிலிருந்து விசும்பி, பைத்தியம் பிடித்தவனைப் போல ஓடவும், உருளவும் செய்தான். “ ஏ அவலெல்லாமே போச்சு” கேவவும், ஓலமிடவும் செய்தான்.
அவனைத் தாயால், அம்சடக்க முடியவில்லை. எப்படியெல்லாமோ அவனைத் தேற்றிப் பார்த்தாள். போனப் பட்டத்தில், வறுத்து இடித்த அவலில் ஒரு பிடி, துணியில் முடிந்து வைத்தது,
நினைவுக்கு வந்தது. அதை எடுத்து, மடியில் கட்டிக் கொண்டு, மகனை நோக்கி ஓடினாள். அவனைக் கெஞ்சி, சமாதானம் செய்து, வீட்டுக்கு அழைத்து வந்து, முடிச்சை அவிழ்த்து, ஒரு பிடி அவலை அவனது கையில் கொட்டினாள்.
அவலை அவன் நீண்ட நேரம் கையிலேயே வைத்திருந்தான். பிறகு நுகர்ந்து பார்த்தான். அதில், அவ்வளவாக வாசம் இல்லை. வாயில் கொட்டிக்கொண்டு கொடும்புக்குள் அதக்கினான். அவனது கண்கள் கன்றுக் குட்டியைத் தேடின.
கன்றுக்குட்டி, மைனர் வீட்டு கொட்டகைக்குள், கால் மேல் கால் கிடத்திக்கொண்டு, படுத்திருந்தது. அதை நோக்கி நடந்தவன், கன்றுக்குட்டியின் முன்பு மண்டியிட்டு, அமர்ந்தான். கன்றுக்குட்டி அவனைப் பார்த்தபடியே அசைபோட்டது. அதன் வாயிலிருந்து பச்சை அவல்கள் உதிர்வதாக இருந்தன……
அண்டனூர் சுரா
1546 C, மகாத்மா நகர்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் – 613301
அலைபேசி – 958565 7108
rajamanickam29583@gmail.com
அருமை.
கதைக்கான படங்கள் ரொம்ப நல்லா இருக்கு….