Featureஇலக்கியச்சோலை

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்…. ஒரு பார்வை…… கிறிஸ்டி நல்லரெத்தினம்.

அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ சிறுகதைத்தொகுப்பு பற்றிய எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினத்தின் பார்வை.

வ.ந.கிரிதரன் எழுதிய இந்த புனைகதை தொகுதியில் 25 சிறுகதைகளும் 2 குறுநாவல்களும் அடங்கியுள்ளன. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பது விட்டு வந்த நாட்டின் வேர்களை நோண்டிக் கொண்டிருப்பதல்ல என்பது மட்டுமல்லாமல் வாழும் நாட்டின் கிளைகளுடன் பின்னிப் பிணைத்து இலக்கியம் படைப்பதே எனும் கருத்தை கதாசிரியரின் ஒவ்வொரு கதையும் சொல்லிப் போகிறது.

‘எங்கட ஆட்கள்’ எனும் சிறு வட்டத்தை உடைத்து, வாழும் நாட்டின், ஒட்டுமொத்த சமுதாயமும் எப்படி வாழ்கிறது எனும் புரிதலுடன் ஜீவனுள்ள கதைமாந்தர்களை இக்கதைகளில் உலாவ விட்டிருக்கிறார் கிரிதரன்.

முடிவிலியில் கூட முட்டிக்கொள்ளாத கலாச்சார விரிசல்களிலும் சிக்கல்களிலும் மாட்டிக் கொண்டு வாழும் மானுடர்களை எமக்கு அறிமுகப்படுத்துகிறார் கதாசிரியர். மாற்று நாட்டானைப் பார்த்து சிரித்து அவனை சிறுமைப்படுத்தும் மேட்டிமைத்தனம் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது மட்டுமல்லாமல் ஊக்குவிக்கப்பட வேண்டியதொன்று.

இன்னெரு பண்பாட்டுடன் கலாச்சார முரண்பாடுகளை தவிர்த்து ‘அவனும் மனிதன் தான்” எனும் உயர் நிலைப்புள்ளியில் இருந்து புனையப்பட்ட இக் கதைகளைப் படிக்கும் போது மனச்சங்கடம் மௌனமாகிறது. தன்னை சுற்றியுள்ள வேற்று சமூகத்து மாந்தர்களை ஒரு உருவமாக நோக்காமல் அவர்கள் உணர்ச்சிகளுக்கு உருக்கொடுத்து அவர்களின் கனவுகளுக்கும் அபிலாஷைகளுக்கும் இடம் கொடுத்து மதிப்பளிப்து ஒரு புதிய அணுகுமுறை என்பேன்.

‘ஸ்லேட்டர் ஹவுஸ்’ பொன்னையா, ஆபிரிக்க குடிவரவாளன், நாய் வால் நிமிராது என உணரும் மனோரஜ்சிதம், யங் வீதி முகமற்ற மனிதன், சந்தேகி சபாபதி, சுண்டெலி சுமந்து வந்த தத்துவம், சுமணதாஸ் பாஸ் உறவு என பல பரிமாணங்களை பக்குவமாய் படைத்திருக்கிறார் கிரிதரன். இவை சில பதங்களே….. இன்னும் எத்தனையோ.

சில கதைகளைப் படிக்கும் போது ‘அட, இன்னும் எழுதி நீட்டியிருக்கலாமே’ என ஒரு வாஞ்சை வாசகன் மனதில் தோன்றலாம். அந்தப் புள்ளிக்கு வாசகனை அழைத்துச் சென்று அங்கு அவனை பரிதவிக்க விட்டுவிட்டு மறைவதும் ஒரு கதை சொல்லியின் யுக்தியே!

இலகு நடை, சொல்ல வந்ததை நறுக்கென சொல்லும் பாணி, கதை முடிந்த பின்பும் வார்த்தை சோடனையால் கதையை நீட்டாத சிக்கனம், கதைக்குள் தேவையற்று எட்டிப்பார்க்கும் பாத்திரங்களை படைக்க தவிர்த்தமை என பல குணாதிசயங்கள் ‘இவர் மூத்த படைப்பாளி’ என சொல்லிப் போகின்றன.

இன்னோரு பண்டாட்டை எப்படி ஒரு புலம்பெயர்ந்த தமிழன் புரிந்து கொள்கிறான் என்பதை ஆவணப்படுத்தும் கைநூல் இது. எனவே அனுபவித்து படிக்கப்பட வேண்டியதொன்று!

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.