Featureஇலக்கியச்சோலை
படைப்பாளியும் ஆசிரியரும்!…. சங்கர சுப்பிரமணியன்.
“ஞானம் 262 ஆவது இதழ் கட்டுரைகள்” என்ற திரு. முருகபூபதி அவர்களின் படைப்பை படித்தேன். அதில் கடைசி பத்தியில் “படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தங்கள் படைப்புக்களை மீண்டும் மீண்டும் படித்து செம்மைப்படுத்திவிட்டு இதழ்கள், ஊடகங்களுக்கு அனுப்பினால், அவற்றின் ஆசிரியர்களின் வேலைச்சுமை குறையும்” என்று முடித்திருந்தார். இந்த பத்தி எனக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்த அதற்கு ஒரு பின்னூட்டம் எழுதலாம் என எண்ணினேன். அந்த எண்ணம் பின்னூட்டம் எழுதுவதைவிட அந்த கருப்பொருளை வைத்துக்கொண்டு ஒரு கட்டுரை எழுதலாமே என்ற எண்ணம் மேலோங்க அதன்வழி இக்கட்டுரை உருவானது. கவிதையோ கட்டுரையோ கதையோ எதுவானாலும் அவற்றை எழுத கருப்பொருளை படைப்பாளி சமூகத்திடமிருந்தே பெறுகிறான் அல்லவா?இதில் எனது தனிப்பட்ட ஒரு தாழ்மையான ஒரு கருத்தை தெரிவிக்கிறேன். ஒரு பழமொழி. இப்படியும் ஒரு பழமொழியா என நான் வியந்ததுண்டு. “பஞ்சத்துக்கு ஆண்டியும் பரம்பரை ஆண்டியும்” என்பதே அப்பழமொழி. அதாவது சிலர் பரம்பரை பரம்பரையாகவே ஆண்டியாக இருப்பவர்கள். வேறு சிலர் பஞ்சத்தினால் ஆண்டியானவர்கள். இதைப்போல படைப்பாளிகளிலும் இருவகை. ஒருவகை இயல்பாகவே படைப்பாளிகள். இன்னொருவகை பொழுதுபோக்காக எழுதும் படைப்பாளிகள். இயல்பாக எழுதுபவர்கள் அற்புதமான படைப்பாளிகள். இவர்கள் தொழிலே எழுத்துலகம்தான். இவர்களின் வாழ்வாதாரமும் வருமானமும் எழுத்துதான். இவர்கள் பல சகாப்தங்களாக எழுதிக் கொண்டிருப்பவர்கள். இதனால் இவர்கள் படைப்புக்களும் செம்மையாகவே இருக்கும். அதனால் அவற்றை செம்மைப் படுத்தும் அவசியமே இருக்காது என்பது வெள்ளிடைமலை. அடுத்த வகை படைப்பாளிகள் பொழுதுபோக்காகவோ அல்லது தமிழின் மீதுள்ள காதலினாலோ எழுதுபவர்கள். இந்தவகை படைப்பாளிகளுக்கு எழுதுவது முக்கியமான தொழிலாக இருக்காது. இவர்களின் வாழ்வாதாரமாக வேறொரு தொழில் இருக்கும். இவர்களின் எழுத்தும் ஓரளவு செம்மையாக இருக்கும். ஏனெனில் விரும்பிச் செய்யும் எந்த செயலுமே செம்மையாகவே இருக்கும். மேலும் விருப்பமின்றி எச்செயலையும் செய்ய முடியாது. அப்படிச் செய்தாலும் அதற்கு அங்கீகாரம் கிடைக்காது. நிரந்தரமான அல்லது படைப்பைத் தொழிலாக கொண்டுள்ள படைப்பாளிகளின் படைப்பின் அளவுக்கு செம்மையானதாக இல்லாவிடினும் பொழுது போக்காக எழுதும் படைப்பாளிகளின் படைப்பும் ஓரளவு செம்மையாகவே இருக்கும். ஏற்றுமதி செய்யும் அளவுக்கு ஃபர்ஸ்ட் க்வாலிட்டியாக இல்லாவிடினும் பயன்படும் வகையிலான செகண்ட் க்வாலிட்னியாகவாவது இருக்கும். பயன்படுத்த முடியாத அளவுக்கு தரமற்றதாக இருக்காது என்பது எனது தாழ்மையான கருத்து. ஏனென்றால் செம்மையில் முன் பின் என்றிருக்கலாமே ஒழிய செம்மையற்றவை எதுவும் அரங்கேறாது என்பதும் எனது தாழ்மையான தனிப்பட்ட கருத்து. அடுத்ததாக இதழ்கள், ஊடகங்கள் என்பனவற்றிலும் இருவகை உண்டு. ஒன்று வியாபார நோக்குடைய தினத்தந்தி, வீரகேசரி, குமுதம், மற்றும் ஞானம் போன்றவை. அடுத்தது சேவை நோக்குடையவை. பெரும்பாலான இணையவழி ஊடகங்களை இதற்கு சொல்லலாம். இணையவழி ஊடகங்களும் பொருளீட்டுகின்றன அதுவேறு. அடுத்ததாக வியாபார ஊடகங்கள் தம் படைப்பை விற்பனை செய்கின்றன. அதன் மூலம் பெரும் செல்வமீட்டிய எத்தனையோ ஊடகங்களை சொல்லலாம். இப்படிப்பட்ட ஊடகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இலவசமாக பணிபுரிவதில்லை. இந்த ஊடகங்களில் படைக்கும் நிரந்தரமான படைப்பாளிகளுக்கு சம்பளமாக ஒருதொகை கொடுக்கப்படுகிறது. அதுபோல எப்போதாவது படைக்கும் நன்கறியப்பட்ட படைப்பாளிகளுக்கு சம்பளமென்று இல்லாவிட்டாலும் சன்மானம் என்று ஒன்று வழங்கப் படுகிறது. சம்ளமோ சன்மானமோ பெறும் படைப்பாளிகள் தங்களது படைப்பை செம்மையாக கொடுக்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமையாகும். அதற்காக இலவசமாக படைக்கும் படைப்பாளிகள் செம்மையான படைப்புக்களை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் சொல்லவில்லை. தானம் கொடுத்த மாட்டின் பல்லைப்பிடித்து பார்க்க வேண்டாமே என்பதே என் தாழ்மையான கருத்து. அப்படியானால் செம்மைப்படுத்துவது யார் வேலை? செம்மைப் படுத்துவது ஆசிரியர் மற்றும் படைப்பாளி இருவரது தலையாய வேலையாகும். வியாபார ஊடகங்களில் ஆசிரியர்களும் படைப்பாளிகளும் வருவாய் மூலம் பயனடைகிறார்கள். அதற்கு அவர்கள் உண்மையாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஊடகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேலைதான் என்ன? படைப்பை வாசிப்பது, திருத்தம் செய்து செம்மைப் படுத்துவது, படைப்பின் தலைப்பை சரிபார்ப்பது, எழுத்துப்பிழை பாரப்பவர் சரியாக பணியாற்றியிருக்கிறாரா என கண்காணிப்பது போன்ற பல பணிகளைச் செய்யவேண்டிய பொருப்புள்ள பணியாகும். மேற்படி பணிகளை எல்லாம் படைப்பாளிகளே செய்துவிட்டால் அப்புறம் ஆசிரியருக்கு என்னதான் பணி? வாங்கிய சம்பளத்துக்கு வேலைசெய்யாமல் ஆசிரியருக்கு சௌகரியமாக இருக்க வழிவகை செய்யவேண்டும் என்ற எண்ணக்கிடக்கையை அல்லவா இங்கு காணமுடிகிறது. அதேசமயம் சம்பளம் சன்மானமோ பெறும் படைப்பாளிகளும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அதற்காக எல்லாவற்றையும் படைப்பாளிகள் தங்கள் தலையில் தூக்கிப்போட்டுக் கொண்டு ஆசிரியருக்கு எளிதான வாழ்க்கைக்கு வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவரவர் வேலையை அவரவர் செய்யவேண்டும். அடுத்ததாக சேவை நோக்குடைய ஊடகங்களை பார்ப்போம். இதில் ஆசிரியரும் படைப்பாளிகளும் எவ்வித வருமானமும் இன்றி இலவசமாக பணியாற்றுகிறார்கள். ஆனாலும் இருவருக்கும் அவரவர் கடமையென்று ஒன்று உண்டு. இலவசமாகத்தானே எழுதுகிறோம் என்று ஏனோ தானோ என்று படைப்பாளிகள் எழுதிவிடவும் முடியாது. ஆசிரியரும் இதனால் நமக்கென்ன பலன் என்று படைப்பாளிகள் அனுப்பவதை எல்லாம் அப்படியே படைத்து விடவும் முடியாது. அவரவர்கள் வேலையை அவரவர்கள் செய்தே ஆகவேண்டும். இங்கு படைப்பு சிறப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் குறிக்கோள். ஆசிரியர் வேலைச்சுமையை படைப்பாளி குறைக்கவேண்டும் என்றோ அல்லது படைப்பாளியின் சுமையை ஆசிரியர் குறைக்கவேண்டும் என்றோ எழும் கருத்துக்கே இடமில்லை. படைப்பாளியின் படைப்பு செம்மையாக இல்லாவிடில் படைப்பாளி அங்கீகாரமற்று மறைந்து போவான். ஆசிரியர் அவர் பணியைச் செய்யாவிட்டால் அந்த ஊடகமும் மறைந்து போகும். படைப்பாளிகளும் ஆசிரியர்களும் ஊடகங்களின் இரு கண்கள் போன்றவர்கள். அவர்கள் இன்றி இவர்கள் இல்லை இவர்கள் இன்றி அவர்கள் இல்லை என்பதுதான் உண்மை. படைப்பாளியாக இருந்து கொண்டே படைப்பாளிகள் திரும்ப திரும்ப படித்து தம்மை செம்மை படுத்தி ஆசிரியர்களின் சுமையைக் குறைக்கவேண்டும் என்பது படைப்பாளிகளை ஏதோ தொழிலாளிகள் போலவும் ஆசிரியர்களை முதலாளிகள் போலவும் வேற்றுமைப் படுத்துவதாக உள்ளது. படைப்பாளிகள் நன்றாக உழைத்து ஆசிரியரின் சுமையை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்துவது போல் நான் உணர்ந்தேன். தன் பணியை சுமையாக கருதும் எந்த ஆசிரியரும் அப்பணியில் ஆசிரியராக நிலைத்திருக்க மாட்டார். எந்த பணியில்தான் சுமையில்லை. படைப்பது மட்டும் சுமையற்ற பணியா? கருப்பொருளைத் தேடவேண்டும். கருப்பொருளுக்கு உயிர்கொடுத்து உருவாக்க வேண்டும். உருவாக்கியதை வாசகர்கள் உள்வாங்கும் வகையில் உருமாற்ற வேண்டும். இதெல்லாம் சேர்ந்ததுதானே செம்மைப்படுத்தல். படைப்பபைக் கொடுப்பது பிரசவிப்பது போன்றது. எல்லா பெண்களுமே நன்றாக கருவுற்று நல்லபடியாக பிரசவிக்க வேண்டும் என்றுதானே விரும்புவாள். பெற்றெடுக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் அழகுதான். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்ற கருத்தை மதிக்கிறேன். அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்பதிலே என்பதுபோல் ஆசிரயர் பணியையும் பார்க்கிறேன். படைப்பாளிகளின் கருத்தைச்சிதைத்து எடிட்டிங் என்றபோர்வையில் படைப்பாளிகளின் எண்ணங்களை சமூகத்திடமிருந்து மறைக்கவும் முடியும். படைப்பாளிகளின் கருத்தை சிதைக்காமல் செம்மைப்படுத்தி படைப்பை சிறக்கவைக்கவும் ஆசிரியரால் முடியும். சுமையைக்குறைத்து கட் அண்ட் பேஸ்ட் செய்யும் பணியல்ல ஆசிரியா் பணி. முடிவாக படைப்பை படித்து படித்து செம்மைப் படுத்த பள்ளியில் எழுதும் தேர்வல்ல புத்தகத்தை படித்துப் படித்து பின் உணர்ந்து செம்மையாக பதில் எழுத. கருத்தும் கற்பனையும் வந்து விழும் எண்ண ஓட்டங்களே படைப்பு. அதை படைப்பாளி உருவாக்கும்போதே பெரும்பாலும் செம்மைப் படுத்திவிடுவான் என்பது என் கருத்து. படைத்தபின் அதை மீள்பரிசோதனை என்ற பெயரில் செம்மைப்படுத்த முயன்றால் கருத்துச் சிதைவும் கற்பனை இழப்பும் மாறும் வாய்ப்புண்டு. இயல்பாக அடிமனதில் இருந்து வரும் நியாயமான கருத்தைக்கூட இது இப்படியிருந்தால் நன்றாயிருக்குமோஅது அப்படி இருந்தால் நன்றாயிருந்திருக்குமோ என்று செம்மைப் படுத்தப்போய் சொல்லவந்து கருத்தும் போய் அதற்கு கையாண்ட உருவாக்கிய முறையும் சிதைந்து பிள்ளயார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த கதைகளும் உண்டு. கட்டுரையாளர் தான் சொல்லவந்த கருத்தை இறுதியில் சொல்லியிருக்கிறார். இதை செம்மைப் படுத்துவதாக எண்ணி படைப்பாளிகளை மீண்டும் மீண்டும் படிக்கச் சொல்கிறோமே அவர்கள் எழுதுவது என்னவென்று அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? செம்மைப் படுத்தச்சொல்கிறோமே செம்மைப்படுத்தாமலா அனுப்பி வைப்பார்கள்? படைப்பாளியாக இருந்து கொண்டு ஆசிரியர்களின் வேலைச்சுமை குறையும் என்கிறோமே நமக்கும் சுமை உள்ளதே அதைச் சொல்லாமல் ஆசிரியர்களின் சுமையைப்பற்றி எழதுகிறோமே மற்ற படைப்பாளிகள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்திருந்தால் அவர் சொல்லவந்த கருத்து பதிவாகாமலே போயிருக்கும். இக்கட்டுரையை கட்டுரையாசிரியர் உட்பட எல்லா படைப்பாளிகளின் நிலைபற்றியும் அவர்களுக்குள்ள சுமை பற்றியும் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே எழுதினேன் என்றுகூறி முடிக்கிறேன். -சங்கர சுப்பிரமணியன்.