ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியனின் கதைகளில் பெண்ணியப் பார்வை!…. வாசந்தி சுந்தரம் ( இந்திய மூத்த எழுத்தாளர் )
( அவுஸ்திரேலியாவிலிருந்து நடத்தப்பட்ட “ நம்மவர் பேசுகிறார் “ மெய்நிகர் அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட உரை )
ராஜேஸ் என்று நான் நேசத்துடன் அழைக்கும் ராஜேஸ்வரியின் எழுத்து அலாதியானது . புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் விஷேசமான பெண்ணியப்பார்வை கொண்டவர்.
இந்திய தமிழ் நாட்டுப்பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களிலிருந்து இலங்கை பெண் எழுத்தாளர்கள் வேறுபட காரணங்கள் உண்டு. அவர்களின் பிரச்சினைகள் உள ரீதியாக மன ரீதியாக மாறுபட்டவை. இந்திய தமிழ் பெண்கள் உணராத பாதிப்புகளையும் , ஆறாத வடுக்களையும் சுமப்பவர்கள்.
இனக்கலவரத்தையும், பயங்கரவாத அத்துமீறல்களையும், போர்க்காலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமங்களைக் கண்டும் கேட்டும் அனுபவித்தும் மானத்தையும் உயிரையும் காக்கவேண்டி அக்கரை சீமைகளுக்குத் தப்பித்து வந்தவர்கள்.
இன்னமும் பலவித குழப்பங்களில் உழல்பவர்கள். ராஜேஸ்வரியின் கதை மாந்தர்கள் லண்டனில் வசிக்க வந்து அந்தச் சூழலுக்குத் தங்களைப் பழக்கிக்கொள்ள முற்பட்டாலும், சொந்த மண்ணின் தந்தை வழி சமுதாயத்தின் மரபணுக்களை சுமப்பவர்கள். தங்கள் மண்சார்ந்த சம்பிரதாயங்களை கடைபிடிக்கும் ஆவலில் இருப்பவர்கள். தங்களின் அடையாளத்தை இருத்திக்கொள்ள முனைபவர்கள்.
அது ஒரு அடையாளச் சிக்கல். Identity crisis. அதில் பாதிக்கப்படுபவர்கள், குழம்புபவர்கள், பெண்களே.
அச்சமூகத்தின் ஆண்கள் , லண்டனில் உடையும் சூழலும் மாறினாலும் , பெண்களுக்கு சம அந்தஸ்தையும் , உரிமையையும் அளிக்க முன் வராதவர்கள். உண்மையில் அத்தகைய சிந்தனை கூட அவர்களுக்கு ஏற்படுவதில்லை. அவர்களில் சில காமுகர்கள் , கயவர்களும் உண்டு. நிராதவறான நிலையில் இருக்கும் பெண்களை பயமுறுத்துவதும் சீரழிப்பதும் அவர்களுக்கு அந்நிய பூமியில் சுலபம். இவை எல்லாம் மிகத் துல்லியமாக ராஜேஸ்வரியின் சிறுகதைகளில் வெளிப்படுகின்றன. அப்படிப்பட்ட சூழலில் பெண்கள் என்ன செய்வார்கள்? நாடிழந்து ,
சுற்றமிழந்து, அன்னிய மண்ணில் கணவன் ஒருத்தனே தமக்கு நிழல் என்ற நிலையில் என்ன செய்வார்கள்?
ராஜேஸ்வரியின் கதாநாயகிகள் அநேகருக்கு அடிமைவாழ்க்கை . பொருளாதார சுதந்திரம் இல்லாததாலேயே அதிலிருந்து மீளமுடியாமல் இருப்பவர்கள் அதிகம் என்றால், அத்தகைய சுதந்திரம் இருந்தும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்கள் . கயவர்களின் மிரட்டலுக்கு இரையாகும் அவலம் நேரக்கூடும். ஆனால், புழுவும் ஒரு நாள் நிமிரும். துணிந்து தனது இருப்பைக் காண்பிக்கும். தார்மீக பலம் பெறும். ராஜேஸ்வரியின் எழுத்து சொல்லும் விஷயம் அதுதான். ஆனால், தனது சுயத்தையும் அதன் ஆன்மீக சக்தியையும் பெண் உணர்ந்துகொள்ள சில காலம் பிடிக்கும் .
நான் அவர் எழுதிய இரு சிறுகதைகளை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்.
யாத்திரை என்று ஒரு கதை. கதையின் துவக்கத்திலேயே ஒரு வரி அழுத்தமாக இரண்டு மூன்று முறை வருகிறது . ’ அவர், தில்லையம்பலம், நிம்மதியாக தூங்குகிறார்.’ மஞ்சுளா , அவர் மனைவி நித்திரைகொள்ளமுடியாமல் தவிக்கிறாள். இரவு உணவுக்குப்பின் அவர் மிக சாதாரணமாக ஒரு விஷயம் சொன்னார். அவர் மூன்று மாதம் இந்தியாவுக்கு தல யாத்திரை மேற்கொள்ளப்போவதாக. தனியாக. அவளுக்கு அதில் பங்கு இல்லை. அவளை சேர்த்துக்கொள்ளும் எண்ணம் கூட அவருக்கு எழவில்லை. அவர் தேடும் புண்ணியம் அவருக்கே சொந்தமானது. அவள் குழந்தைகளையும் அவரது வீட்டையும் பராமரிக்க வேண்டியவள். தனது வாழ்க்கைப்பயணத்தில் அவள் சகபயணி என்று அவர் எப்போதாவது நினைத்திருந்தால்தானே?
அதையும் மஞ்சுளா ஜீரணித்துக்கொண்டாள். மூத்தபெண் தேவிகா பெரியவளாகும் நேரம் . அதற்கு அவர்களது வழக்கப்படி சடங்குகள் செய்யவேண்டும். மஞ்சுளாவுக்கும் ஒரு சிறு பிரச்சினை. சில மாதங்களாக. மாதவிடாய் ஒழுங்காக வரவில்லை. அது நிற்கும் நேரமாக இருக்கலாம். 40 வயது . மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டபோது அதிர்ச்சியடையும்படி முடிவு சொல்கிறது. அவள் கர்ப்பமாக இருப்பதாக. நான்கு மாத கர்ப்பம் . மூன்று மாத யாத்திரைக்கு தயாராகியிருக்கும் கணவரிடம் எப்படிச் சொல்வது ?
இதற்கிடையில் பல சிநேகிதிகளின் பிரச்சினைகளைக்கேட்க நேருகிறது. மாலதி குழந்தை பிறக்காத குறைக்காக கணவனிடமும் மாமியிடமும் ஏச்சு கேட்கிறாள். செல்வி, பிரபல டான்ஸர். திடீரென்று தூக்க மத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறாள். அவளைக்காண மஞ்சுளா சென்றதும், செல்வி காரணத்தைச் சொல்லி அழுகிறாள். தான் கர்ப்பமானதும் கணவனும் மாமியாரும் அவளைக் கட்டாயப்படுத்தி
கர்ப்பத்தை அழிக்க வைத்தார்களாம், ஏனென்றால் குழந்தைப்பேறு என்று வந்தால் அவளால் நாட்டிய நிகழ்ச்சிகள் கொடுக்கமுடியாது, வருமானம் போய்விடும் என்று.
இச் செய்தி கேட்டு மஞ்சுளா கலங்கிப்போகிறாள். மற்றுமொரு சினேகிதி தனது மகன் தன்னுடைய தோழனுடன் வசிக்க வீட்டை விட்டுக்கிளம்பிப் போய்விட்டான் என்று அழுகிறாள் . அவளுடைய கணவன் அதற்கும் அவளைத்தான் வதைக்கிறாராம். தானும் தன்னைச் சுற்றி இருக்கும் எல்லா பெண்களும் ஒரு வலையில் சிக்கியிருப்பதாகத் தோன்றுகிறது.
காலம்தோறும் ஆண் இனம் பெண்களின் உணர்வுகளை, பெண்மையின் தாய்மை உணர்வை, பாலியல் உணர்வுகளை , உடலை தன் அதிகார கட்டுக்குள் ஏதாவது ஒரு வகையில் வரையிட்டுக்கொள்கிறது. மனைவி என்பவள் தனது சொத்து என்கிற எண்ணம் தந்தைவழி சமூகத்தில் வேரூன்றிப்போன விஷயம். படித்து பெரிய உத்தியோகத்தில் லண்டனில் வசித்தாலும் தில்லையம்பலமும் அப்படியான ஒரு பார்வையை தனது பிறப்புரிமையாக நினைக்கிறார், மனைவிக்கும் உணர்வுகளும் உரிமையும் உண்டு என்பது அவருக்குப் புலப்படாதவை.
அவள் கணவரிடம் , நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்கிறாள் ஒரு இரவு. அவர் அதிர்ச்சி அடைகிறார் அவள் ஏதோ ஏற்கமுடியாத பிழை செய்ததைப்போல. அப்போதுதான் மஞ்சுளாவின் சுயம் விழித்துக்கொள்வதை கதை கோடிடுகிறது.
“என்ன செய்யப்போகிறாய்?” என்கிறார் அவர்.
மஞ்சுளா அவரை ஏறிட்டுப் பார்த்தாள். மங்கிய வெளிச்சத்தில் அவர் அன்னியனாகத் தெரிந்தார். “ பதினைந்து வருடம் இந்த மனிதனுடன் வாழ்ந்துவிட்டேன். ஆனால், யார் இந்த மனிதன் என்று தெரியாதே “ என்று அவள் யோசித்தாள்
“என்ன பைத்தியம் போலப் பார்க்கிறாய்?” தில்லையம்பலம் பாய்ந்து விழுந்தார். இப்படிக் கடிந்துகொள்ளும்படியாக அவள் என்ன செய்தாள்?
“நான் யாத்திரைக்கு ஆயத்தம் செய்துபோட்டன்..”
குழந்தை பிறப்பது இப்போது அவருக்கு ஒரு இடைஞ்சல்.
அவள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்?
“பிரைவேட்டாகப் போகத்தான் வேணும்” என்கிறார் பிடிவாதமாக.
“என்ன பிரைவேட்?” மஞ்சுளா குழம்பினாள்.
“அபோஷன்… அபோஷன் பிரைவேட்டாய்த்தான் செய்ய வேண்டும். கொஞ்சம் காசு போகும்தான். ஆனாலும் கெதியில் செய்யலாம். நான்
யாத்திரைக்குப் போக முதல் விஷயத்தை முடிச்சு விடலாம்” தில்லையம்பலம் குரலில் உறுதியான முடிவு தொனித்தது.
அவளுடைய நிலைக்கு அவர்தான் காரணம் என்று அவர் நினைக்கவில்லை. உள்ளத் தூய்மையைத் தேடி, புண்ணியம் தேடி புனித யாத்திரை செய்யப்போகிறாராம் தில்லையம்பலம்.
கருவில் நான்கு மாதக் குழந்தை இப்போது சிறு கால், சிறு கைகள் விரித்து உதைக்கிறது. இந்த உயிரின் துடிப்பையடக்கிவிட்டு என்ன புண்ணியத்தைத்தேடி அந்த யாத்திரை?
மஞ்சுளாவின் யாத்திரை ஹாலுக்கும் குசினிக்குமாக கடந்த பதினைந்து வருடங்களாக நடக்கிறது.
உப்பும், புளியும், கத்தரிக்காயும் சுமக்கும் ஒரு வெறும் யாத்திரை.
“ஏன் அபோர்ஷன் செய்ய வேண்டும்?”அவள் மெல்லமாகக் கேட்டாள்
இவள் இப்படிக் கேட்பாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
“ஏன் என்றால் ……. எத்தனையோ விஷயம் குழம்பும்”
“ஒன்றும் குழம்பாது” என்கிறாள் அவள் தெளிவாக.
“நான் யாத்திரை போக வேணும். தேவிகா பெரிய பிள்ளையாகப் போகிறாள். இந்த லட்சணத்தில் ஒரு பிள்ளையும் தேவையா?”
“பிள்ளை தேவையா இல்லையா என்று முடிவுகட்ட எனக்கும் ஒரு உரிமையில்லையா?”
இது மஞ்சுளா தனது யாத்திரையில் ஏற்படுத்திக்கொண்ட மகத்தான திருப்பம். அத்துடன் கதை முடிகிறது.
இரண்டாவது , இப்படியும் கப்பங்கள் என்ற கதை.
லலிதா – மூர்த்தியின் குடும்பம் அழகானது. ஐந்து வயது அகிலா என்ற பெண்குழந்தை . இலங்கையில் இனப்படுகொலையும் கலவரமும் நடக்கையில் அங்கிருந்து லண்டனுக்குத் தப்பி வந்தவர்கள். மூர்த்தி மிக அன்பான கணவன். லலிதா லண்டனில் ஓரளவு சௌகர்யமான வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். ஆனால், ஒரு சாத்தான் அவர்களது வாழ்வில் குறுக்கிடுகிறான். அவன் ஒரு பயண ஏஜெண்ட். அவன் மூலமாகத்தான் மூர்த்தி லண்டனுக்குப் பயணிக்கமுடிந்தது . ஆனால், அவனிடம் வாங்கியிருந்த கடனை திருப்ப மூர்த்திக்கு அவகாசம்
வேண்டியிருந்தது. தனது பணம் திரும்பாமல் போனால் லலிதாவை பாலியல் பலாத்காரம் செய்வதாக அவன் அச்சுறுத்தியது பீதியை அளித்தது.
மூர்த்தி லலிதாவுக்கு ஏகமாய் முன்னெச்சரிக்கை வழிகள் சொல்லியிருந்தான் அவள் வெளியிலேயே தலைகாட்டாமல் இருக்க. ஆனால், குழந்தைக்கு விளையாட்டு மைதானத்தில் பலத்த காயம் பட்டிருப்பதாக அவள் உடனடியாகப் பள்ளிக்கு வரும்படி ஃபோன் வருகிறது. அது ஒரு ஏமாற்று செய்தி என்று நினைக்கத்தோன்றாமல் லலிதா பதறிக்கொண்டு வெளியில் நடக்கிறாள். பாதி வழியில்தான் அவளுக்கு சந்தேகம் வருகிறது. அதற்குள் விபரீதம் நடக்கிறது. ஒரு கார் அவளை பலாத்காரமாக அள்ளிக்கொண்டு போகிறது . ஏஜெண்ட் அவளது உடலை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி வீட்டில் கடாசிவிட்டுப்போகிறான்.
இப்படிப்பட்ட சந்தர்பங்களில் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்களின் நினைவு அவளை கலக்குகிறது. கூடவே முன்பு மூர்த்தி அப்படி செய்வது கோழைத்தனம் என்று சொன்னது நினைவில் நிற்கிறது. அவள் மூர்த்திக்கு ஃபோன் செய்கிறாள் . அழுதுகொண்டே தான் போலீஸுக்கு ஃபோன் செய்யப்போவதாகச் சொல்கிறாள். மூர்த்தி சடுதியாகப் புரிந்து கொள்கிறான். உடனடியாக வருகிறேன் என்கிறான். கயவர்கள் கும்பலில் ஒரு அன்பான உத்தமனும் இருக்கிறான் என்று நமக்கு சமாதானம் ஏற்படுகிறது.
பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மட்டும் ராஜேஸ்வரி சொல்வதில்லை. அவற்றை எப்படி சந்தித்து மீள்வது என்பதையும் சொல்கிறார். அவருடையது வரட்டு பெண்ணியவாதம் அல்ல. மனிதநேயம் மிக்கது.
—0—