கதைகள்
உருகும் மெழுகு!… ( சிறுகதை ) …. அகரா …. இலங்கை
இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டான் அவன். நான் என்ன தவறு செய்தேன்? இந்த ஏழு வருடங்களும் எந்த ஒரு பிழையும் இல்லாமல் ஒரு தடவை கூட வோர்னிங் லெட்டர் (warning letter) பெறாது எனது வேலையை சரி வரச் செய்துள்ளேன் தானே? இன்னும் இரண்டு மாதங்களில் விசாவும் முடிவடைந்து விடும் இந்த முறையாவது இந்த வெளிநாட்டு வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு நாட்டுக்கு சென்று விட வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் “கொஞ்சம் பொறு அவசர பட்டு வந்திடாத, ஒரு மாதிரி உன்ர புண்ணியத்தில இந்த பொம்பிள பிள்ளையள் இரண்டையும் படிப்பிச்சாச்சு, ஒருத்திக்கு கல்யாணம் முற்றாக்கியாச்சு, சீதனம், உடுப்பு நடப்பு, நகை நட்டு எண்டு கல்யாண செலவு எக்கச்சக்கமா இருக்கு, இஞ்ச வந்து உடன வேலை தேடுறதும் கஷ்ரம், இன்னும் கொஞ்ச காலம் குழம்பாம நில்லப்பன்!” என்று தாய் சொல்லியிருப்பதால் விசாவை புதுப்பிக்க வேண்டியும் உள்ளது.
இந்த நிலைமையில் “எதற்கு என்னை காலையில் வந்து சந்திக்க சொன்னார் மேலதிகாரி?” அவனுக்குள் உருவாகிக்கொண்டிருந்த எண்ண அலைகள் தூக்கத்தை குழப்பிக்கொண்டிந்தன. இனம் புரியாத பயம் தொற்றிக் கொண்டது. அமைதியாக எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்த அந்த இராத்திரியை அந்த அறையில் பல வருட பாவனையால் “டக் டக்” என்ற சத்ததோடு சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறி குழப்பிக்கொண்டிருக்கிறது. அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று சுழன்று படுத்தவன் நிமிர்ந்து அண்ணார்ந்து பார்த்து மின்விசிறியின் சுழற்சியை கன்வெட்டாமல் பார்த்துகொண்டிருக்க அவன் மனதில் கடந்த கால எண்ணங்களும் சுழல ஆரம்பித்தன.
***
பாடசாலை செல்லும் நாட்களில் மட்டுமே அவன் இறுதியாக மகிழ்ச்சியாக இருந்த நினைவு அதன் பின்னரான நாட்கள் எல்லாம் எப்போதும் ஒருவித கவலையைக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறது எனலாம். எல்லா தவணைகளிலும் அவனே வகுப்பில் முதல் மாணவன். முத்து முத்தான கையெழுத்தும் எப்போதும் ஒரு அமைதியும் பணிவும் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டு நிகழ்வுகளிலும் அவன் கொண்டிருந்த திறமையும் அவனை எல்லா ஆசிரியர்களுக்கும் பிடித்த மாணவனாக்கியாருந்தது. பாடசாலையில் மாத்திரமன்றி வீட்டிலும் பொறுப்பான மகனாவான். தந்தை ஒரு விவசாயி. தாய், வீட்டு வேலைகளோடு கணவனது வயல் வேலைகளுக்கும் ஒத்தாசை புரிந்தாள். இவனும் பாடசாலை விடுமுறை நாட்களில் அநேகமான நாட்களை வயலிலேயே கழிப்பான். தங்கையர் இருவரையும் கவனமாக பாடசாலை அழைத்துச் சென்று வர வேண்டியதும் இவன் பொறுப்பிலிருந்தது .
கல்வியில் பேரார்வம் கொண்டவனுக்கு தான் ஒரு பொறியியலாளராக வர வேண்டும் என்பதே கனவு. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பாடசாலையிலே முதல் மாணவனாக வந்திருந்தான். தாய் சிறிது சிறிதாக சேர்த்து பெட்டக்கத்தில் மறைத்து வைத்த பணத்தை இவன் கையில் திணித்து உனக்கு ஏ எல் படிக்க தேவையான பொருட்களை வாங்கிக்கொள் என்றாள். அப்போது தனது கனவின் ஆரம்பமாக கணிதத்துறைக்குள் நுழைந்தான். நன்றாக படித்தான். சிறப்புப் புள்ளிகளைப் பெற்று பல்கலைக் கழக பொறியியல் பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டான்.
கல்வியில் கவனமாக இருந்த போதும் பதின்ம வயது மாற்றங்கள் எல்லோரும் போலவே அவனுக்குள்ளும் நிகழ்ந்தது. தோழி ஒருத்தியின் மீது அவனது காதல் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. அவளும் சம்மதம் சொல்லி விடவே இரண்டு வருடங்கள் சுவாரஷ்யமாகவே கடந்துவிடுகிறது. எப்படியோ இவர்களின் காதல் பெண் வீட்டாருக்கு தெரிந்து விட காதலி கட்டாயமாக இன்னொருவனுக்கு மனைவியாக்கப்பட்டாள், இதற்கிடையில் வயலிலே நெற்கதிர்கள் முற்றி விளைந்திருந்த வேளையில் பரண் அமைத்து இரவுகளில் காவல் காத்து வந்த இவனுடைய தந்தை யானை தாக்கி படுகாயம் அடைந்து படுத்த படுக்கையாகிவிட்டார் . கணப்பொழுதில் எல்லாம் நடந்து முடிந்து விட கடந்து போக முடியாத வலியை சுமந்து கொண்டு கல்வியை இடைநிறுத்திக்கொண்டான். பொறியியலாளராகும் கனவு கலைந்து போனது. வீட்டுப் பொறுப்பை ஏற்றவன் ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே வாழ சபிக்கப்பட்டுள்ளார்கள் என்று விதியை நொந்துகொண்டு சுத்திக்கரிப்புத் தொழிலாளியாக அரேபிய நாடொன்றிற்கு வந்து சேர்ந்தான்.
தன்னைப் போலவே பல சோகக்கதைகளைக் கொண்ட பல நாட்டு நண்பர்களோடு அறையைப் பகிர்ந்து கொண்டான். அந்த நாட்டுத் தெருவோரங்கள் பொது இடங்கள் சுற்றுலாத் தளங்களில் உள்ள குப்பைகளை துப்புரவு செய்ய வேண்டியது அவர்கள் தொழில். காலநிலை மாற்றங்களின் போதும் குளிரால் நடுங்கி விறைத்தும் வெயிலில் புழுவாய் துடித்தும் தங்களது தொழிலை சரி வர செய்தால் மட்டுமே சம்பளத்தில் சாப்பாட்டு செலவு போக மிகுதியை வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியும். மரத்துப் போன நாக்கு அம்மாவின் கைப்பக்குவ உணவை கடந்த ஏழு வருடங்களாக எதிர் பார்த்தது இவ்வருடமும் ஏமாற்றமாகவே போய்விடும்.
***
மின் விசிறியின் சுழற்சியையும் தாண்டி வியர்த்துக் கொட்டியபோதுதான் நினைவுக்கு வந்தவனாய்… “ஏன் என்னை நாளைக்கு தன்னுடைய அறையில் வந்து சந்திக்க சொல்லி மேலதிகாரி தகவல் அனுப்பியிருக்கிறார்…..? நான் என்ன பிழை செய்தேன்…?” என்று மனதிற்குள் பலமுறை கேட்டுகொண்டவன் மெல்ல அசந்து தூங்கி விட்டான். காலையில் எழுந்தவன் இன்று அறையில் எல்லோருக்கும் சேர்த்து சமைக்க வேண்டிய பொறுப்பு தன்னுடையது என்பதை மறந்து விறுவிறுவென்று மேலதிகாரியின் அறையை நோக்கிப் புறப்பட்டான். அங்கே சென்று சில வினாடிகள் காத்திருந்த பின்னர் உள்ளே அழைக்கப்பட்டவனுக்கு மேசையில் இருந்த என்வெலப் அடிவயிற்றில் ‘சுர்’ என்று பீதியைக் கிளப்பியது. வியர்த்து விறுவிறுத்து நின்றவனுக்கு எழுந்து கை கொடுத்து “வாழ்த்துக்கள் உங்களுடைய நேர்மையான மற்றும் கடின உழைப்பின் பலனாக உங்களை சுத்திகரிப்பு தொழிலார்களுக்கான கண்காணிப்பாளராக தெரிவு செய்துள்ளோம்; உங்களது சம்பள உயர்வுக்கான கடிதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்…” என்று அந்த நாட்டு மொழியில் மேலதிகாரி கூறினார்.
இத்தனை வருட கால நகர்வில் அரேபிய மொழியை சரளமாக பேசப் பழகியிருந்தான் அவன். அறையை பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மாற்றமடையும் போதெல்லாம் மறக்காமல் அவர்களின் சோகக் கதைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்பவன் அவர்களுக்கு அந்த நாட்டு மொழி பேச வேண்டிய இடங்களில் எல்லாம் உதவி செய்யவும் தவறியிருக்கவில்லை. ஆதலால் மேலதிகாரி சொன்னவற்றை இலகுவில் புரிந்து கொண்டவனுக்கு சம்பள உயர்வுக் கடித்தை வாங்கியபோது தங்கையின் நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட திருமணமே நினைவில் தட்டியது.
மேலதிகாரிக்கு தனது நன்றிகளை கூறிவிட்டு வெளியே வந்தவனின் தொலை பேசி அலறியது. “மச்சான் இண்டைக்கு நீ சமைக்கிற ரேண் எல்லோ! எங்க காலங்காத்தலையே கிளம்பிட்டாய்?” என்றான் இந்திய நாட்டு நண்பன் ஒருவன். புன்னகையோடு …. “இதோ வந்து கொண்டிருக்கிறேன்…” என்று சொன்ன போது அவன் புன்னகைக்குள் அத்தனை துன்பங்களும் தொலைந்து போனது. இரண்டு மாதங்களின் பின் மீண்டும் சில ஆண்டுகளுக்கு வேலை செய்வதற்காக விசாவினைப் புதுப்பித்துக்கொண்டான்…..
(முற்றும்)
அகரா
வவுனியா