சண்முகம் சபேசனின் “ காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்!….. முருகபூபதி.
படித்தோம் சொல்கின்றோம்
சண்முகம் சபேசனின் “ காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் “
நாட்குறிப்பில் பிரபாகரனின் மற்றும் ஓர் பக்கம்!….
மாந்தருக்கு சிந்திக்கும் ஆற்றலும் இருக்கின்றமையால், ஏனைய உயிரினங்களிலிருந்து வேறுபடுகிறார்கள். அவர்களின் சிந்தனைக் கருவூலங்கள் எழுத்தில் – பேச்சில் – செயலில் வெளிப்படும்போது, அவற்றுக்கான மாற்றுச் சிந்தனைகளும் எதிர்வினைகளும் தோன்றுவதும் இயல்பு.
இந்தப்பத்தியில் பேசப்படும் நூலை எழுதியவர் தற்போது எம்மத்தியில் இல்லை. அத்துடன் அவர் உளமாற நேசித்த தமிழ் ஈழத் தேசியத் தலைவரும் இல்லை.
இவர்கள் இருவரதும் சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்டுதான் இந்த நூல் வெளிவந்துள்ளது.
காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் என்ற இந்த நூலை எழுதியிருக்கும் சண்முகம் சபேசன், அவுஸ்திரேலியா மெல்பனில் 1989 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்தவர். அற்பாயுளில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி மெல்பனிலேயே மறைந்துவிட்டார்.
இவர் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர். யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான சபேசன், அவுஸ்திரேலியா மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முதலானவற்றில் அங்கம் வகித்தவாறு, மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டு காலம் ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கிய தமிழ்த் தேசிய பற்றாளர்.
3 C R தமிழ்க்குரல் வானொலியில் தங்கு தடையின்றி, வாரம்தோறும் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதி தனது குரலிலேயே ஒலிபரப்பினார். அவ்வாறு எழுதி ஒலிபரப்பிய ஆக்கங்கள் நூற்றுக்கணக்கானவை.
அவற்றையெல்லாம் மீண்டும் செம்மைப்படுத்தி தொகுத்து வெளியிடவிரும்பியிருந்த சபேசன், அதனை சாத்தியமாக்காமல் விடைபெற்றுவிட்டார்.
ஈழப்போர்க்காலத்திலும், அதன் முடிவின் பின்னரும் பல நூல்கள், கவிதை, சிறுகதை, நாவல், ஆய்வு, சுயசரிதை முதலான வடிவங்களில் தமிழ், சிங்கள , ஆங்கில மொழிகளில் வந்துவிட்டன. தொடர்ந்தும் வெளியாகின்றன. சில மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஈழ விடுதலை இயக்கங்களிலிருந்தவர்கள், வெளியே பார்வையாளராக இருந்தவர்கள் மட்டுமன்றி, போர்க்களத்தில் நின்ற மேஜர் கமல் குணரட்னவும் Road to Nandikadal என்ற நூலை வரவாக்கியிருக்கிறார். அத்துடன், Prabakaran was a loving family man. The Srilankan army seized ten thousand photographs of the LTTE and his family and the LTTE events. But even in a film, Prabakaran could not be seen with a glass of liquor. He was a disciplined leader and was a different leader . என்றும் பதிவுசெய்துள்ளார்.
பிரபாகரனுடன் நெருங்கிப்பழகியிருக்கும் சபேசன், இறுதிப்போரின் போது சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்த யோகியின் உறவினருமாவார். சபேசனின் காற்றில் கலந்த சிந்தனைகள் நூலிலும் பல படங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் சில மேஜர் கமல் குணரட்ண குறிப்பிடும் அவர்களது படையினர் தேடி எடுத்த ஏராளமான படங்களின் தொகுப்பிலும் இருக்கலாம்.
சபேசனின் நண்பரும் எழுத்தாளரும் தமிழக அரசியல் பிரமுகருமான திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் முனைவர் சுபவீரபாண்டியனின் அணிந்துரையுடன் வெளியாகியிருக்கும் இந்நூல் ஐந்து பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.
நூலாசிரியரின் நாட்குறிப்பு, அவர் மெல்பன் 3 CR தமிழ்க்குரல் வானொலியில் நிகழ்த்திய அரசியல் சார்ந்த உரைகள், கலை, இலக்கியம், சமூகம் சார்ந்த பதிவுகள், அவர் நேசித்த இந்திய சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டு மரதண்டனை பெற்ற பகத்சிங், ஈழப்போராட்டத்தில் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த திலீபன், மெல்பனில் இயற்கை மரணமெய்திய மாமனிதர்கள் தில்லை ஜெயக்குமார், கொழும்பில் சுடப்பட்டு
கொலையுண்ட குமார் பொன்னம்பலம் ஆகியோர் பற்றிய ஆக்கங்கள், முதலானவற்றோடு ஒளியில் எழுதுதல் என்ற பிரிவில் பல முக்கியமான ஒளிப்படங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இவற்றையெல்லாம் சீராகத் தொகுத்து சபேசனின் கனவை, அவரது மறைவிற்குப்பின்னர் நூலாக வெளியிட்டு நனவாக்கியுள்ளார் மனைவி திருமதி சிவமலர் சபேசன்.
இந்நூலில் சபேசனின் நாட்குறிப்பிலிருந்து… என்ற பிரிவில் இடம்பெற்றுள்ள செய்திகள் பிரபாகரன் பற்றி நாம் அறியாத சில பக்கங்களை பேசுகின்றன.
சபேசன் எழுதுகிறார்: “ எனது வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்கள் என்று குறிப்பிடுவதானால், அவை தேசியத்தலைவருடன் உரையாடிய நாட்கள்தான். அந்தக்கணங்கள் மறக்கமுடியாதவை.
ஒரு முறை அவருடனான சந்திப்பின்போது, அவர் நிகழ்த்திய மாவீரர் தின உரையில் சில தவறுகள் இருக்கின்றன என்று சுட்டிக்காண்பித்தேன்.
அதற்கு அவர், “ சில தவறுகள் இல்லை சபேசன், இன்னும் கூர்ந்து பார்த்தால் பல தவறுகள் இருப்பது புலப்படும். “ என்றார்.
குறிப்பிட்ட மாவீரர் தின உரையை ஒப்புநோக்கியவர் (Proof Reader ) , “ தான் கண்டுபிடிக்காத தவறுகளை நீர் எவ்வாறு கண்டு பிடித்தீர்..? “ எனக்கேட்டதும் , “ நீங்கள் எழுத்துப் பிழைகளைத்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், நான் கருத்துப் பிழையைத்தான் கண்டுபிடித்தேன் .. “ எனச்சொன்னேன்.
அதனைக்கேட்டதும், தலைவர், “ சபேசன்… நீங்கள் மேலும் ஆழமாகப்பார்த்தால் மேலும் சில பிழைகளைக்கண்டுபிடிப்பீர்கள் “ என்றார்.
அத்துடன், ஏனைய இயக்கப்பொறுப்பாளர்களிடத்தில் “ சபேசன் வித்தியாசமாக சிந்திப்பவர். அவரது சிந்தனைகளையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள் “ என்று தலைவர் சொன்னார்.
மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில், “ சபேசனின் உரைகள் ஐ.பி.சி. வானொலியில் ஈழத்தின் நேரம் காலை 4.00 மணிக்கு ஒலிபரப்பாகும். அதனை அனைவரும் தவறாமல் கேட்கவேண்டும். நானும் அதனைக்கேட்பதுண்டு “ என்று இயக்கத்தினருக்கு சொன்னார்.
தலைவர் அவ்வாறு சொன்னதும், எனக்கு சற்று பதட்டமாகிவிட்டது. எனது உரையை தலைவரும் செவிமடுப்பதனால், இனிமேல் நானும் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் உரைகளை எழுதவேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டேன்.
தலைவர் எனக்கு எழுதிய ஒரு மடலில் “ உங்கள் விடுதலைப்பணி தொடர வாழ்த்துக்கள் “ என்று எழுதியிருந்தார்.
அதற்கு நான், “ விடுதலைப்பணி சிறக்க “ என்று எழுதியிருக்கலாமே என்று கேட்டதும், அவர் அதற்குச் சிரித்துவிட்டு, “ நீங்கள் சபேசன், விடுதலைப்பணியை சிறப்பாகத்தான் செய்கிறீர்கள். ஆனால், தொடர்ந்து செய்வதுதான் சிரமம். எங்கடை ஆட்களே உங்களை தொடர்ந்து விடுதலைப்பணி செய்யவிடமாட்டார்கள். “ என்றார்.
அவர் சொன்னது சரிதான். தீர்க்கதரிசனமான கூற்றுத்தான். தலைவர் போனபிறகு என்னை விடுதலைப்பணி செய்யவிடாமல் பலர் தடுத்துவிட்டார்கள்.
நான் வன்னியில் நின்ற நாட்களில் ஒரு நாள் இயக்கப்பொறுப்பாளர்களின் கூட்டத்திற்காக ஒரு கூடத்தில் குழுமியிருந்தோம்.
நானும் நிதிக்குப் பொறுப்பானவரும் உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது தலைவர் அக்கூடத்திற்குள் பிரவேசித்தார். நாம் அதனைக்கவனிக்கவில்லை. ஏனையோர் மரியாதையின் நிமித்தம் எழுந்து நின்றனர். தலைவர் எம்மருகில் வந்து, “ அறிவாளிகள் என்றால் ஒன்றாகத்தான் இருப்பீர்களோ..? “ என்றார்.
அவருடனான சந்திப்பு ஆரம்பமானதும், “ கேள்விகளை கேளுங்கோ… “ என்றார்.
அதற்கு நான், “ என்னத்தை கேட்கிறது. உங்களிடம் கேட்கவிருந்த கேள்விகள் எழுதப்பட்டிருந்த கொப்பியை உங்கட பொடியன்கள் சிலர் எடுத்துக்கொண்டு போட்டார்கள் “ என்றேன்.
உடனே தலைவர் வெளியே சென்ற பொடியளை உள்ளே அழைத்தார். அவர்கள் ஓடோடி வந்தார்கள்.
“ ஏனடா, சபேசன் அண்ணையோடு முண்டுறியள். அவருடைய உடைமைகளை அவரிடமே கொடுத்துவிடுங்கள் “ என்றார். அதன்பின்னர்தான் தலைவரிடம் நான் கேள்விகள் கேட்டேன்.
அதன்பின்னர், இயக்கப்பொடியள் ஒருவர்கூட என்னை நெருங்காமல் மரியாதையாக நடத்தினர்.
வன்னியில் தலைவருடன் நின்ற நாட்களில் அவரே…. சமைத்துக்கொண்டு வந்த உணவை எனக்குப் பரிமாறினார்.
“ ஏன் எனக்காக சமைத்து எடுத்துவந்தீர்கள்..? என்று கேட்டதற்கு, “ சபேசன்… முன்னர் நீங்கள் இங்கே வந்தபோது இதே சுவையுள்ள சாப்பாட்டை இரண்டுமுறை எடுத்துப்போட்டு சாப்பிட்டியள். அதுதான் இம்முறையும் நானே சமைத்து எடுத்துவந்து பரிமாறுகின்றேன். “ என்றார்.
அப்போது நான் அவரது பேரன்பினால் நெகிழ்ந்துபோனேன். எனது கண்களும் பனித்தன. ஒருநாள், தலைவருடனான சந்திப்பில், “ உங்களுக்கு ஏதாவது நடந்துவிட்டால், நீங்கள் போராட்டத்தில் வீரச்சாவடைந்தால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..? “ என்று கேட்டேன்.
அதற்கு அவர், “ போராட்ட வடிவங்கள் மாறும். இருநூறு வருடங்களுக்கு முன்னர் போராடி மடிந்த பண்டார வன்னியன் பற்றி இப்போது பேசுகின்றோம். இதுபோன்று எனது மறைவுக்குப்பின்னரும் என்னைப்பற்றி பேசுவார்கள். “ என்றார்.
அன்டன் பாலசிங்கம் அண்ணை, தலைவருக்கு ஆலோசனை வழங்குவதில் உறுதுணையாக இருந்தவர். அவரது மறைவுக்குப்பிறகு தலைவருக்கு சரியான ஆலோசனைகள் கூறுவதற்கு எவருமிருக்கவில்லை.
நான் தலைவருடன் வன்னியில் நின்ற நாட்களில் என்னை தன்னோடு வந்து நிற்கும்படி கேட்டிருந்தார்.
“ வெளிநாட்டில் வெள்ளைக்காரனிடமிருந்து சம்பளம் பெற்றால், பெருமை. என்னிடமிருந்து பெற்றால் சிறுமையோ..? “ என்றும் ஒருநாள் கேட்டார்.
நான் சொல்லிழந்து, செயலிழந்து அவரையே வைத்தவிழி வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றேன். அது சில மணித்துளிகள்தான். ஆனால், நீண்டநேரம் பார்த்ததுபோன்ற உணர்விருந்தது.
அதற்கிடையில் தலைவர் வேறு விடயங்கள் பேசத்தொடங்கிவிட்டார். நான் தலைவரிடத்திலேயே நின்றிருக்கவேண்டும். அந்த குற்றவுணர்வு என்னைப்பற்றியிருக்கிறது.
அது மட்டுமல்ல, எனக்கு மற்றும் ஒரு குற்றவுணர்வும் இருக்கிறது. தலைவர் வீரச்சாவடைந்தபின்னர், அவருக்கு வீரவணக்கம் செய்ய முடியாமல்போய்விட்டது. பலரும் அரசியல் ஆதாயம் கருதி, தலைவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
ஒரு விநாடிகூட வீணாக்காமல் தமிழீழ விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த எமது பெருமதிப்பிற்குரிய தமிழ்த்தேசியத்தலைவரை, கடந்த பதினொரு வருடகாலமாக (2009 மே மாதம் முதல் ) அவர் எங்கோ மறைந்து ஒளிந்துகொண்டிருக்கிறார் எனச்சொல்வது, அவரை இழிவுபடுத்தும் செயலாகும். அவருக்கு எப்போது வீரவணக்கம் செலுத்தப்போகிறோம்..?
ஒரு தடவை தேசியத்தலைவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அதற்கு இரத்தினச்சுருக்கமாக பதில் தந்தார்.
அதில் ஒன்று:
கேள்வி: நீங்கள் உங்களுக்கு கீழே உள்ளவர்களை வெட்டுகிறீர்கள் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.! அது உண்மையா..?
தலைவர்: அதில் என்ன தவறு இருக்கிறது.!
தலைவருக்கு, ஒருவர் இன்னுமொருவர் காலில் வீழ்வது பிடிக்காது. தமிழன் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் என்பார். ஒரு தடவை வெளிநாட்டிலிருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தலைவரைப்பார்ப்பதற்கு வன்னிக்கு வந்தார்கள்.
தலைவரைக்கண்டதும், தங்கள் பிள்ளைகளை அவரது காலில் வீழ்ந்து வணங்கும்படி சொன்னார்கள். அது அவருக்கு கோபத்தை வரவழைத்தது. இதுபற்றியும் தலைவர் என்னிடம் பேசியிருக்கிறார்.
என்னை நேரடியாக எதிர்த்தவர்கள் பலரும் என்னோடு உண்மையாக நேர்மையாக இருந்தார்கள்.
ஆனால், என்னை நேரடியாக ஆதரித்தவர்கள் பலர் எனக்கு மறைமுக எதிரிகளாக விளங்கினார்கள். “
இவ்வாறு இந்த நூலில் இடம்பெற்றுள்ள டயறிக்குறிப்பு பேசுகிறது.
சுயநிர்ணய உரிமையும் சுதுமலைப்பிரகடனமும், அதனையடுத்து எழுதப்பட்டிருக்கும் சுதுமலைப்பிரகடனம் – 32 ஆண்டுகள் சுட்டும் நிதர்சனம் ஆகிய கட்டுரைகள் சமகால இலங்கை அரசியலில் – தமிழ்த்தரப்பு அரசியல் தலைவர்களின் நடவடிக்கைளையும் ராஜபக்ஷக்களின் அரசையும் – இந்திய மத்திய அரசின் அசமந்தப்போக்கின் சடுகுடு விளையாட்டுக்களையும் கேள்விக்குட்படுத்துகிறது.
சபேசன், 2005 – 2019 காலப்பகுதியிலேயே, இனி என்ன நடக்கும் என்பதையும் தீர்க்கதரிசனமாக அன்றே சொல்லிவிட்டார் என்பதும் இந்நூலைப்படிக்கும் போது தெளிவாகிறது.
சபேசனின் மறைவுக்குப்பின்னர், அவரது கனவை நனவாக்கியிருக்கிறார் திருமதி சிவமலர் சபேசன்.
தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகத்தின் ஏற்பாட்டில் சுதர்சன் புக்ஸ் இந்நூலை பதிப்பித்துள்ளது.
முருகபூபதி.
—0—
letchumananm@gmail.com