பேராசிரியர் சோ. சந்திரசேகரம் விடைபெற்றார்!…. முருகபூபதி.
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் விடைபெற்றார்
மலையகத் தமிழ் மாணவர்களுக்கான குரலாகத் திகழ்ந்த ஆளுமை
“ இலங்கையில் வாழும் நான்கு இனக்குழுக்களுள் மலையகச் சமூகமும் ஒன்று. மலையகத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் (பேராதனை, ஊவா வெல்லச, சப்பிரகமுவ ) உண்டு. ஆனால், இங்கு மலையக மக்கள் சமூகம், வாழ்வியல், கலை, கலாசாரம் தொடர்பான கற்கை நெறிகளோ, அடையாளமோ எதுவுமில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் என்பன இலங்கைத் தமிழரின் அடையாளம் கொண்டவை. இராமநாதன் கலை அக்கடமி, விபுலாநந்தர் இசைக் கல்லூரி என்பன அத்தகையவை. அவ்வாறே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களின் அடையாளம் உண்டு. சுருங்கக் கூறின், மலையக மக்களின் தனித்துவ அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் (சகல இன மாணவர்களும் பயிலும்) தேசியப் பாங்கான மலையகப் பல்கலைக்கழக கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
இன்று இயங்கிவரும் 16 தேசியப் பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் காலப்போக்கில் நிச்சயமாக புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படப் போகின்றன. அவற்றின் வளர்ச்சி நின்று விட முடியாது. புதிதாக உருவாக்கப்படும் தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றை நுவரெலியாவில் நிறுவுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. “ இவ்வாறு தொடர்ந்து குரல் எழுப்பிவந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள், நேற்று 04 ஆம் திகதி திங்கட் கிழமை மாரடைப்பால் மறைந்தார்.
ஓய்வுபெற்ற தகைமைசார் பேராசிரியராக தொடர்ந்தும் கலை, இலக்கிய, கல்வி சார்ந்த நிகழ்வுகளிலும் சமகால மெய் நிகர் அரங்குகளிலும் இணைந்திருந்தவர், தமது 78 வயதில் மறைந்திருக்கிறார்.
பதுளையில் 1944 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் சந்திரசேகரம் அவர்கள், பதுளை ஊவா கல்லூரியில் தனது ஆரம்பக்கல்வியையும், அதனையடுத்து யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் உயர் கல்வியையும் தொடர்ந்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை பூர்த்திசெய்திருக்கும் அவர், ஜப்பானிலும் பட்டம் பெற்றவர். கொழும்பு , பேராதனை பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக கடமையாற்றியிருக்கும் அவர் இலக்கிய நிகழ்வுகள் பலவற்றுக்கும் தலைமை ஏற்று சிறப்பித்தவர்.
பத்திரிகைகள் , இதழ்களில் அடிக்கடி ஆக்கங்கள் எழுதிவந்திருக்கும் பேராசிரியர் சந்திரசேகரம், மலையகத்தில், மலையக மக்களின் கலாசாரத்தையும் பண்பாட்டுக்கோலங்களையும் பயிற்றுவிக்கும் தனியான பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்று தொடர்ந்தும் குரல் எழுப்பிவந்தவர்.
பன்முக ஆளுமையும் பல்துறை ஆற்றலும் நிரம்பப்பெற்ற பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களுக்கு 2004 ஆம் ஆண்டு மணி விழா நடந்தபோது வெளியான சிறப்புமலரின் உள்ளடக்கம், அவரது சிறப்பியல்புகளையும் பேசுகிறது.
இலங்கை – இந்தியர் வரலாறு, கல்வி இயல் கட்டுரைகள், புதிய நூற்றாண்டுக்கான கல்வி, கல்விச்செயற்பாட்டில் புதிய செல்நெறிகள், மலையக கல்வி சில சிந்தனைகள் உட்பட பல நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் வரவாக்கியிருப்பவர்.
முன்னைய நல்லிணக்க அரசின் பதவிக்காலத்தில், அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இலங்கை கல்வியியல் சார்ந்த பல கட்டுரைகளை ஊடகங்களில் தொடர்ந்து எழுதிவந்த அவரது கரம் ஓய்ந்துவிட்டது.
முருகபூபதி.
—0—