Featureஇலக்கியச்சோலை

ஓவியர் ‘செள’ – ஒரு படைப்பாளியின் கதை!… கிறிஸ்டி நல்லரெத்தினம்.

” இதை கொஞ்சம் பாருங்க….. எப்படி இருக்கு?”

“ச்சா! சோக்கா இருக்கு….. ஆச்சிய இன்னும் கொஞ்சம் வயசானவராக கீற முடியுமோ?”

“ஓ! அதுக்கென்ன….. ஏலும்.”

சில கிறுக்கல்களில் பின்

“இப்ப இதை பாருங்க….. சரிதானே?”

“அட, இதுதான் என்ர ஆச்சி!”

“ஆச்சி பயணம் போகிறாள்” கதைக்கான கேலிச்சித்திரம் வரைவது பற்றி ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியானுக்கும் ஓவியர் “செள” என அழைக்கப்படும் கருணாகரன் செளந்தரராஜாவிற்கும் இடையே நடந்த உரையாடல் இது!

இந்தப் புள்ளிதான் இரு படைப்பாளிகளின் எண்ணங்களும் சங்கமிக்கும் இடம்.

எழுத்தும் ஓவியமும் இலக்கியத்தின் இரு கண்கள். அவை ஒரு காட்சியை ஒருமித்து காணும் போது ஒரு தேடல் அங்கே நிறைவடைகிறது.

ஒரு காட்சியைப் பற்றி படித்ததும் ஓவியன் மனதில் பதியும் சுவடுகளே அவன் வரைய இருக்கும் ஓவியத்தின் ஊற்றுப்புள்ளி. அருவம் உருவமாகும் உருமாற்றத்தின் முதல் படி இது.

இங்கு எவரும் தம் படைப்புகளின் மேல் பீடமிட்டு அமர்வதில்லை. இரு கலைகளும் சமதரையில் சந்திக்கும் ஒரு ஞானநிலை அது!

இது ஒன்றும் புதிதல்ல. ஒரு கவிஞனும் இசையமைப்பளனும் இந்தப் புள்ளியில் சந்திக்கும் போது ஒரு கானம் பிறக்கிறது. கவிஞனின் கருத்துள்ள பாடல் வரிகள். அவ்வரிகளுக்கு வழிவிடும் இன்னிசை. மமதைகள் விடைபெறும் இடம் இது! கர்வம் இங்கு கடை விரிப்பதில்லை!

செங்கை ஆழியான் அமர்ந்திருந்த அந்த கதிரையில் அமர்ந்து ஒரு பூரணத்துவத்தை ஓவியர் ‘செள’ உடன் பகிர்ந்து கொண்ட பல ஈழத்து உன்னத

படைப்பாளிகளை கண்ட பாக்கியவான் நான். எஸ். பொ, மகாகவி, செம்பியன் செல்வன், மெளனகுரு, நுஃமான் என இவர்கள் பட்டியல் நீழும்.

ஒரு எழுத்தாளனின் எண்ணப் பூங்காவில் மலர்களை தூவிச் செல்வபனே ஓவியன்.

வார்த்தைகள் ஓவியனின் கைகளில் வரிகளாய் மாறி மாயம் செய்யும்! வளையும் கோடுகள் அந்த வார்த்தைகளுக்கு வடிவம் அமைத்து வாசகனுடன் இணைக்கும் சங்கிலியாய் மாறி விந்தை புரியும்!

கற்பனைச் சோம்பலுக்கு ஒரு அலுப்பு மருந்தே இந்த ஓவியம்.

கருத்தொருமித்து கண்டெடுத்த பென்சில் கிறுக்கல்களை “செள” இனி ‘இந்தியன் மை’ (Indian ink) கொண்டு மீழ வரைவார். இது 1966 அல்லவா? இப்போதுள்ள digital art கருவறைக்குள்ளும் நுழையாத காலங்கள் அவை.

மை குப்பிக்குள் விசேட பேனா முனையை நனைத்து மிக அவதானமாக பென்சில் கேடுகளுக்கு மைச் சட்டை அணிவிற்கும் படலம் ஆரம்பமாகும். நுணுக்கம் முன் வரிசையில் வந்தமரும் தருணம் இது. பேனா முனையில் மை அளவோடு இல்லாவிட்டால் சட்டை சால்வையாகி கறைபட்ட கனவாகிவிடும். தும்மலில் தொலைந்த பல ஓவியங்களும் உண்டு.

மை காய்ந்ததும் பாதை மாறிய பென்சில் கோடுகள் அழி இரப்பருக்கு இரையாகி மறையும்.

நிறைவடைந்த ஓவியத்தை இரண்டடி தள்ளி நின்று, தொட்டிலில் துயிலும் மழலை பார்த்து பூரிக்கும் தாயின் பெருமையுடன், பார்த்து புன்னகைப்பார் “செள”.

ஒரு படைப்பாளி இந்தப் புள்ளியை அடைய அனுபவிக்கும் பிரவசவேதனை அந்தரங்கமானது….. ஆனந்தமானது!

மட்டுநகர் திருகோணமலை வீதியில் அமைந்துள்ள இல்லத்தில்தான் பள்ளிப் பருவத்தில் நான் குடியிருந்தேன். அப்போது “செள” தம் மனைவி திருமதி ரஞ்சனி சகிதம் இவ் வீட்டில் 1966ல் குடிபுகுந்தார். இங்குதான் மேற்சொன்ன இலக்கிய உறவாடல்கள் நிகழும். இது போன்ற நேர் சம்பாஷணைகளை இன்று நாம் தொலைபேசியில் தொலைத்துவிட்டோம்!

ஓவியங்கள் பற்றி அவரிடம் நான் ‘அரிவரி’ கற்றது இக் காலங்களிலேயே. எனது கிறுக்கல்களை சீர்படுத்தி தட்டி நிமிர்த்தியதோடு மட்டுமல்லாமல் ஓவிய சாஸ்திர உண்மைகளை என்னுடன் பகிர்ந்து கொள்வார்.

அவரின் நாட்டம் ஓவியம் கடந்து இலக்கிய நயமுள்ள ஈழத்து தமிழ் சஞ்சிகைகளை தொட்டது மட்டுமல்லாமல் என்னையும் அவற்றை படிக்கும்படி ஊக்குவிப்பார். மல்லிகை, விவேகி. இளம்பிறை என பட்டியல் நீண்டாலும் சிரித்திரனுக்கும் அங்கு இடமுண்டு. இவர் எழுதிய சில சிறுகதைகள் இளம்பிறை சஞ்சிகையில் வெளிவந்து. தூரிகையினால் அவர் தீட்டிய வண்ண ஓவியங்களும் அவர் படைப்புகளில் அடங்கும்.

புதுமைப்பித்தனும் பாரதியும் பதியம் போட்ட நவீன இலக்கியம் எனும் விதை பெருவிருட்சமாய் வளர்ந்து 1930களில் மணிக்கொடியாய் வளர்ந்து மணம்பரப்பிற்று. ஆனால் அந்த விருட்சத்தில் ஓவியம் எனும் பறவை தங்காத நாட்கள் அவை. தமிழ் நூல்கள் சொற்குவியல்கள் துயிலும் கதைப்பலகைகளாகவே இருந்த காலங்கள். கிறுக்கல்கள் இல்லாத குழந்தைகள் இலக்கியங்கள் அச்சேறிய அந்நாட்களில் வளர்ந்தோர் நூல்களில் ஓவியங்களை யார் எதிர்பார்த்தார்?

ஆதி மனிதன் வரைந்த குகை ஓவியங்கள் கோவில்களை தரிசித்துவிட்டு ஓலைச் சுவடியில் ஏறி பின் நம் வீட்டு சுவர்களில் தெய்வப்படங்களாய் உருமாறி சாமி அறைகளை நிரப்பின.

காலப்போக்கில் அச்சுக்கலையின் முன்னேற்றத்தால் சுவர் ஓவியங்கள்

கோட்டு ஓவியங்களாயும் உருமாறி காகிதங்களை நனைத்த நாட்கள் வரத்தான் செய்தன.

1950களில் படிப்படியாக கோட்டோவியங்கள் தமிழ் நூல்களிலும் சஞ்சிகைகளிலும் தலைகாட்டத்தொடங்கின.

கல்கியின் வந்தியத்தேவனுக்கு உரு கொடுத்த ஓவியர் மணியமும் ஜெயகாந்தனின் ஹென்றிக்கு முகமமைத்த ஓவியர் கோபுலுவும் பார்த்தசாரதியின் சத்தியமூர்த்திக்கு சதை சேர்ந்த ஓவியர் லதாவும் நிச்சயம் அந் நாவல்களுக்கு மெருகேற்றினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையே.

இலங்கையில் கோட்டோவியங்களின் ரிஷிமூலம் தேடுவது இலகுவானதொன்றல்ல. ஆனால் சரித்திரம் இப்படி எழுதிச் செல்கிறது:

சித்திர ஆசிரியர்களுக்கு முறையான ஓவியப் பயிற்சியைத் தருவதை இலக்காகக் கொண்டு 1938ல் ‘வின்ஸர் ஆட் கிளப்’ எனும் ஓவியர் கழகம் யாழில் ஸ்தாபிக்கப்பட்டது. 1920ம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சி.எவ். வின்சர் எனும் ஓவியர் இலங்கை கல்வித்திணைக் கழகத்தில் பிரதம வித்தியாதிகாரியாக பதவியேற்று கடமையாற்றிய காலங்களில் யாழ் ஓவியக் கலைஞர்களை உத்வேகத்துடன் செயல்பட வைத்தார். இராசையா,

கனகசபாபதி உட்பட புகழ்பெற்ற யாழ் மூத்த ஓவியர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் வின்ஸர் ஆட்கிளப்புடன் தொடர்புடையவர்களாகவே இருந்தனர். இக் கிளப்பின் ஸ்தாபகர் எஸ்.ஆர். கனகசபை ( எஸ். ஆர். கே) தான் தற்கால யாழ் ஓவியக் கலையின் முன்னோடி எனலாம். வின்சர் ஆட் கிளப்பின் தோற்றத்துடன் யாழ் ஓவியக்கலை ஒரு புதிய பரிமாணத்தை பெற்றது எனலாம். அறிவார்ந்த அடிப்படையில் அழகியலுணர்வுடன் ஓவியம் வரைதல் முதன்மைப்படுத்தப்பட்டது. ஓவியத்தை வெறுமனே ஒரு வினைத்திறனாகவோ அல்லது புகைப்படக்கருவி செய்வது போன்ற படப்பிடிப்பு வரைதலாகவோ இல்லாது ஓவியத்தை ஒரு “கலையாக ” , ஆக்கத்திறன் கொண்டதாக வளர்ப்பதில் எஸ்.ஆர்.கே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

1955ல் எஸ்.ஆர்.கே நோய்வாய்ப்பட்டத் தொடர்ந்து இக் கிளப் செயலற்றுப் போனது. அத்துடன் இவருடன் இணைந்து செயல்பட்ட ஓவியர்களும் ஆசிரிய நியமனம் பெற்றும், மாற்றலாகியும் தென்னிலங்கைக்குச் சென்றமையும் வின்சர் ஆட் கிளப் செயலற்றுப் போக காரணமானது.

இதை தொடர்ந்து 1959ல் ‘விடுமுறைக்கால ஓவியக்கழகம்’ உருவாகிற்று. மாற்கு, எம்.எஸ். கந்தையா, சி.பொன்னம்பலம், செல்வநாதன் போன்ற ஓவியர்களின் முயற்சியினால் இக் கழகம் சிறப்பாக செயற்பட்டு வந்தது.

கொழும்பிலும் பல வேறு நாடுகளிலும் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் இக் கழக அங்கத்தினர்களின் பல ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு பரிசுகளையும் தட்டிச்சென்றது.

ஓவிய ஆசிரியர்களான இவர்கள் தூரிகையை வெறுமனே ‘உழைக்கும் கருவி’ என்ற எல்லைக்கும் அப்பால் கலை என்ற உயர்தளத்தில் பரவசப்படுத்தும் வெளிப்பாட்டுச் சாதனமாகக் கண்டு அதை அதற்குரிய புனிதத்தோடு பேணியவர்கள்.

1943 காலப் பகுதியில் கொழும்பில் ஓவிய ஈடுபாடுடையவர்கள் இணைந்து “43 குமுவினர்” என்ற ஓவிய இயக்கத்தை ஆரம்பித்து நடத்தினர். இலங்கையின் ஓவிய வரலாற்றில் இக்குழுவினர் முக்கிய இடம் பெறுகின்றனர். புகழ் பெற்ற காட்டூனிஸ்ட்டான ஏ.சி.கொலேட், றிச்சாட் கிபிரியேல், சீ- ஏப்பிரகாம், ஜோர்ச் கீட், மஞ்சுசிறீ என்பவர்களுடன் யாழ் ஓலியர்களான எஸ்.ஆர்.கே, கந்தர்மடம் கனகசபாபதியும் “43 குழுவில்” அங்கம் வகித்தனர்.

இலங்கையில் நவீன ஓவிய மரபை இவர்கள் துணிச்சலுடன் புகுத்தி வெற்றி கண்டனர். கொழும்பில் லயனல் வென்ற் (Lionel Wendt), கலாபவனம் (Art Gallery) முதலான இடங்களில் பல ஓவியக் கண்காட்சிகளை வெற்றிகரமாக நடத்தி

நவீன ஓவிய மரபை இrங்கையில் அறிமுகப்படுத்திய பெருமை இவர்களையே சாரும்.

( மூலம் : “தற்கால யாழ்ப்பாணத்து ஓவியர்கள் ” 1997 – பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா, யாழ் பல்கலைக்கழகம்).

ஈழத்து நாழிதல்களில் அதிலும் விசேடமாக ஞாயிறு சஞ்சிகை இணைப்புகளில் கோட்டோவியங்கள் சிறுகதைகளுக்கும் தொடர்கதைகளுக்கும் 70களில் தலைகாட்டத் தொடங்கின. அச்சுக்கலையில் ஏற்பட்ட நவீன மாற்றங்கள் ஈழத்து சஞ்சிகைகளிலும் கோட்டாவியங்களுக்கு வாசலை திறந்து விட்டன.

நாளிதழ்களில் கோட்டோவியங்கள் வரைந்தவர்களின் பட்டியலோ அவர்களின் பின்னணியோ ஆவணப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. எனினும் மொறாயஸ், ரமணி, வி.கே, சிரித்திரன் சுந்தர், மூர்த்தி போன்றோரின் பெயர்கள் ஓவியர் ‘செள’ உடன் கூட்டாக சமகாலத்தில் பயணித்தன என்பது உண்மை.

தனது ஆரம்பக் கல்வியை மட்டுநகர் மெதடிஸ் மத்திய கல்லூரியில் கற்று பின் ஒரு விஞ்ஞானப் பட்டதாரியாக பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினார். இலங்கையின் பல பாகங்களில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றியது மட்டுமல்லாமல் 80 களில் கொழும்பு கல்வித் திணைக்களத்தில் இணைந்து கணிதம், விஞ்ஞான, சமய நெறிமுறைகளுக்கு பாடநூல்களும் எழுதி வெளியிட்டார். இந்நூல்களிலும் இவரது விளக்க ஓவியங்கள் அலங்கரிக்க தவறவில்லை. இன்றும் ‘செள’ வரைந்த விளக்க ஓவியங்களுடன் கல்வித் திணைக்கள பாடப் புத்ததங்கள் அச்சிடப்படுவதாய் அறிகிறேன்.

இக்காலங்களில் ரூபவாகினி தொலைக்காட்சியின் கல்வி ஒளிபரப்பான E.T.V இல் தோன்றி கணிதம் கற்பித்த நாட்களும் உண்டு.

80களில் நைஜீரியாவிற்கு விஞ்ஞான ஆசிரியராக சென்று ஜந்து வருடங்கள் கடமையாற்றி பின் அங்கிருந்து அமெரிக்காவிற்கு தன் முதுநிலை பட்டப் படிப்பை தொடர குடியேறினார். படிப்பை முடித்ததும் இவரது ஆழ்ந்த கிறிஸ்தவ மத ஈடுபாடு இவரை முழு நேர தேவனின் ஊழியராக மாற்றியது. இத் துறையையும் முறையாக கற்று மேற்கு வேர்ஜீனியா மானிலத்தில் ஒரு ஆலயத்தின் குருவாக (பாஸ்டர்) ஆறு வருடங்கள் பணியாற்றினார். ‘சௌ’ இன் மனைவியும் இரு செல்வங்களும் இவருடன் மகிழ்ந்திருந்த இன்பமான நாட்கள் இவை.

‘செள’ இன் தூரிகை தொட்ட கைகள் இங்கும் ஓயவில்லை. பல ஓவியங்களை தீட்டியது மட்டுமல்லாமல் தமது சபையோருக்கு கோட்டோவியங்கலாலேயே வேதாகமத்தை விளக்கினார்.

தமது 52வது வயதிலேயே நோயுற்றவரை இறைவன் ‘எனக்கும் கொஞ்சம் வரைந்து தா’ என நவம்பர் 1992ல் அழைத்துக் கொண்டான்.

எப்போதும் மலர்ந்த முகத்துடனும் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் தோழமையுடனும் வாழ்ந்த ‘சௌ’ இன் இழப்பு ஓவிய உலகின் இழப்பு என்றே கூறலாம்.

60 பதுகளில் வெளிவந்த சுதந்திரன் பத்திரிகையிலும் மற்றும் விவேகி, இளம்பிறை போன்ற இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிவந்த இவரது ஓவியங்கள் காலத்தால் அழியாதவை.

இந்நாட்களில் எழுத்தாளர் எஸ்.பொ சுதந்திரனில் எழுதிய ‘சடங்கு’ தொடர்கதைக்கு வரைந்த கோட்டோவியங்கள் கதை நகர்த்த உதவிற்று.

செங்கை ஆழியானின் கேலித்தொடரான ‘ஆச்சி பயணம் போகிறாள்’ கதைக்கு வரைந்த ஓவியங்களின் நளினம் கதாபாத்திரங்களை வாசகனின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திற்று. கதை நாயகன் சிவராசாவிற்கும் காதலி செல்விக்கும் இடையிலான ஊடலை விரசமின்றி தம் கோடுகளால் உயிர்ப்பித்தார் ‘செள’.

மகாகவியின் ‘குறும்பா’ நூலிவில் வந்து குந்திக்கொண்ட ‘சௌ’ வின் ஐம்பது கேலிச்சித்திரங்கள் பாக்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்தன.

இந்நூலுக்கு விமர்சனம் எழுதிய தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் நா.பார்த்தசாரதி இப்படி சொல்லிப் போனார்: “குறும்பாவைப் போல் இன்னும் பல புதுப்புது இலக்கிய உத்திகளைத் தமிழ்த்தாய்க்கு அளிக்கும் ஊக்கம் உங்களில் வளர வேண்டும் என்பது என் ஆசையாய் இருக்கிறது. பொன்னுத்துரையைப் போல் நயமறிந்து முன்னுரை கூறவல்லவர்களும், ‘சௌ’ வைப்போல் ஓவியம் வரைய வல்லவர்களும் துணையிருந்து உதவும் போது உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்றே எனக்கு தோன்றுகிறது.”

இதைவிட நான் சொல்ல ஒன்றுமில்லையே!

(முற்றும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.