Featureகட்டுரைகள்

எழுத்தும் வாழ்க்கையும்!… ( இரண்டாம் பாகம் ) ….. அங்கம் -07….. முருகபூபதி.

மெல்பன் நகரைச் சுற்றிப்பார்த்து கதைகள் எழுதிய ஆரம்ப காலம் !

முருகபூபதி.

மேற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து என்னையும் இதர பயணிகளையும் ஏற்றிவந்த அந்த அன்ஸட் பயணியர் பஸ், 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் மெல்பன் ஸ்பென்ஸர் வீதி ரயில் நிலையத்திற்கு அருகில் நீண்ட பெருமூச்சுடன் தரித்து நின்றது.

நீர்கொழும்பிலிருந்து பெப்ரவரி 06 ஆம் திகதி முற்பகல் நான் புறப்பட்டபோது, அன்பர் இராஜரட்ணம் , மெல்பன் Laverton இல் வசிக்கும் தனது மூன்றாவது மகன் ரஞ்சன் வைத்தியநாதனின் முகவரியையும் தொலைபேசி இலக்கத்தையும் தந்துவிட்டிருந்தார்.

மெல்பனுக்கு வந்து இறங்கிவிட்டதாக ரஞ்சன் வீட்டு தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு சொன்னேன். மறுமுனையில் அவரது மனைவி மாலினி பேசினார்.

நான் வரவிருப்பதை ஏற்கனவே பேர்த்திலிருந்து அவர்களுக்கு தெரிவித்திருந்தேன்.

அன்று சனிக்கிழமை . ரஞ்சன் வேலைக்குப் போயிருந்தார். அக்காலப்பகுதியில் அவர் Toyota கார் தயாரிக்கும் பணிமனையில் வேலையில் இருந்தார்.

திருமதி மாலினி ரஞ்சன், ஸ்பென்ஸர் வீதியில் ஒரு டாக்ஸியில் புறப்பட்டுவருமாறு சொன்னார்.

மெல்பனிலிருந்து அந்த அகலவீதியில் அந்த டாக்ஸி விரைந்தது. வழியில் தென்பட்ட சமிக்ஞை விளக்குகள் தொடர்ந்து பச்சையை உமிழ்ந்தது.

நான் ஊருக்குப்புதுசு என்பதை தெரிந்துகொண்ட அந்த டாக்ஸி சாரதி, உங்கள் வருகைக்கு சிக்னல் தொடர்ந்து பச்சை நிறத்தை காண்பித்து நல்வரவு கூறுகிறது என்றார்.

ஊரை, நாட்டை, குடும்பத்தினரை, நண்பர்களை விட்டு வந்த எனக்கு அந்த சாரதியின் வார்த்தைகள் உற்சாகமூட்டின.

ரஞ்சன் வீட்டு வாசலில் இறங்கும்போது, இருபது அவுஸ்திரேலியன் வெள்ளிகளை சாரதி கேட்டு கொடுத்தேன். இது முப்பத்தியைந்து வருடங்களின் முன்னர். இன்று அந்தத் தொகையில் மெல்பனிலிருந்து அவ்வளவு தூரம் செல்ல முடியாது.

சனிக்கிழமையும் ஞாயிறு மாலை வரையிலும் ரஞ்சன் வீட்டிலிருந்து இலங்கைப் புதினங்கள் பேசிக்கொண்டிருந்தேன்.

ஞாயிறு மாலை ரஞ்சனின் தம்பி சிவநாதன் என்னைச் சந்திக்க வந்தார். அக்காலப்பகுதியில் அவர் மெல்பனில் Hoppers crossing இல் வசித்தார். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அவரையும் அன்றுதான் சந்திக்கின்றேன். அவர் மூலமாக ரஞ்சன் West Brunswick என்ற இடத்தில் எனக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார்.

சிவநாதன் என்னை இந்த ஊருக்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியவர்தான் சாம் ஆறுமுகசாமி . இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். ரஞ்சன் – சிவநாதன் சகோதரர்களின் தந்தையார் இராஜரட்ணம் அவர்களும் பின்னர் மெல்பன் வந்து சில ஆண்டுகளில் மறைந்துவிட்டார்.

West Brunswick இல் ஒரு படுக்கை அறை குடியிருப்பு வீட்டுக்கு அழைத்துச்சென்ற சிவநாதன், அங்கிருந்த சாம் ஆறுமுகசாமியை அறிமுகப்படுத்தி, ” சாம், இவர் நாங்கள் வசித்த நீர்கொழும்பூரிலிருந்து வருகிறார். இவரை உங்களுடன் தங்கவைத்திரும். ஒரு வேலையையும் தேடிக்கொடுத்துவிடும். ” எனச்சொல்லிவிட்டுச் சென்றார்.

இவ்வாறுதான் எனது புகலிடவாழ்வில் மெல்பன் பெருநகரத்தில் முதல் அத்தியாயம் தொடங்கப்பட்டது. அன்று நான் சந்தித்த, ” சாம் அண்ணன் ” என்ற ஆறுமுகசாமி என்னைவிட வயதில் குறைந்தவர்.

இலங்கையில் வடமராட்சி பிரதேசம் தமிழ் ஈழ அரசியலில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. இங்கு வல்வெட்டித்துறையில் 1955 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிறந்தவர்தான் “சாம்” ஆறுமுகசாமி. விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது அவருக்கு அபிமானம் அதிகம்.

தனது ஆரம்பக்கல்வியை வல்வெட்டித்துறை சிதம்பராவிலும் பின்னர் மேற்கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியிலும் தொடர்ந்தவர்.

தொழில் நுட்ப அறிவுகொண்டிருந்த அவர் சிறிதுகாலம் ஈரான் நாட்டிலும் பணிபுரிந்தவர்.

1983 இல் இலங்கை கலவரத்தையடுத்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்கா, கனடா மற்றும் அய்ரோப்பிய நாடுகளை தங்கள் புகலிடமாக்கிக்கொண்டபோது, ஆறுமுகசாமி அவர்களின் தெரிவு அவுஸ்திரேலியாவாக இருந்தது.

வல்வெட்டித்துறையிலிருந்து பாக்குநீரிணையூடாக இந்தியக்கரையை நீந்தித்தொட்ட முத்துக்குமாரசாமி, ஆழிக்குமரன் ஆனந்தன் ஆகியோருடன் பரிச்சியம் கொண்டிருந்தவர். இங்கிருந்துதான் பல தமிழர்கள் ஒரு படகில் அமெரிக்க எல்லையை தொட்டிருந்தார்கள். இதுபற்றி லண்டனில் வதியும் பத்திரிகையாளர் ஈ.கே.ராஜகோபால் கப்பலோட்டிய தமிழர்கள் என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.

இதுபற்றி நான் அறியாத பலகதைகளை எனக்குச்சொன்னவர்தான் ஆறுமுகசாமி. அவருக்கு மெல்பனில் பெயர் சாம். பல்தேசிய கலாசார நாடான இந்த கங்காரு தேசத்தில் நாம் உட்பட அனைத்து இனத்தவர்களும் எளிதாக அழைக்கத்தக்கவகையில் தனது ஆறுமுகசாமி என்ற இயற்பெயரை சாம் என சுருக்கிவைத்துக்கொண்டார்.

அன்று 1987 இல் அவரை முதலில் கண்டது தொடக்கம் ” சாம் அண்ணன்” என்று நான் அழைத்தாலும், அவருக்கு என்னைவிட நான்குவயது குறைவு. அவர் என்னையும் நான் அவரையும் பரஸ்பரம் அண்ணன் என்று அழைத்துக்கொள்ளும் விசித்திரமான நட்புறவே எம்மத்தியில் நீடித்தது.

நான் இந்த நாட்டில் வந்திறங்கியபோது எனது தலை ஹிப்பித்தலைதான். நண்பர் சிவநாதன் என்னை அவரிடம் விட்டுச்சென்றபின்னர், ” அண்ணே நாளை திங்கட்கிழமை. நாளைக்கு உங்கட முதல் வேலை, பக்கத்திலிருக்கும் சலூனில் உந்த ஹிப்பித்தலையை மாத்திரதுதான்.” என்றார். மறுநாள் காலை அவரே என்னை அங்கு அழைத்துச்சென்றார். அதன்பின்னர் நாமிருவரும் வேலை தேடும் படலத்தில் இறங்கினோம்.

ஒரு பஸ்ஸில் ஏறி சிட்னி ரோடுக்கு வந்தோம். அந்த இடம் Brunswick. அங்கிருந்த ஒரு வங்கிக்கு அழைத்துச்சென்று எனக்கு புதிய கணக்கினை திறந்துகொடுத்துவிட்டு, Albert Street இற்கு அழைத்துவந்தார்.

அந்த வீதியிலிருந்தது Australian Textile Printing Company. அதனைப்பார்த்துவிட்டு, ” அண்ணை இங்கே போய் வேலை கேட்போம்” என்று சொன்னவாறு எனக்கு முன்னே நடந்து அந்தக்கட்டிடத்தின் வாசலில் கடமையிலிருந்த பாதுகாப்பு ஊழியரிடம் ஆங்கிலத்தில் “வேலை ஏதும் இருக்குமா?” என விசாரித்தார்.

சாம் அண்ணரின் ஆங்கில உச்சரிப்பு வித்தியாசமாக இருந்தது. அவுஸ்திரேலியா உச்சரிப்பிற்கும் அமெரிக்க – பிரித்தானிய ஆங்கில உச்சரிப்புக்கும் இடையே நீடிக்கும் வித்தியாசத்தை அறிவீர்கள். இந்த மூன்று நாடுகளிலிருந்தும் தயாரிக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்களை பார்க்கும் உங்களுக்கு அந்த வித்தியாசம் எளிதாக விளங்கும்.

அந்த பாதுகாப்பு ஊழியர் எம்மை மேல்மாடிக்கு அனுப்பிவைத்தார். அங்கிருந்த Personal Manager எம்மைப்பார்த்து, “என்ன வேலை தெரியும்?” எனக்கேட்டார்.

சாம் அண்ணர் தனக்கு தொழில் நுட்ப அறிவு இருக்கிறது என்றார். நான் எனக்கு Graff Printing தெரியும் என்றேன். உண்மையிலேயே எனக்கு பேப்பரையும் பேனையையும் விட்டால் ( தமிழ்ப் பத்திரிகையில் ஊடகத்தொழில் ) வேறு எதுவும் தெரியாது.

சாம் அண்ணரை சந்தித்ததும், அவர் வசிக்கும் இடத்தில் ஏதும் அப்பிள் தோட்டம் இருக்கும். அங்கே அப்பிள் பிடுங்கியாவது சீவிக்கலாம் என்றுதான் நம்பிக்கொண்டு வந்திருந்தேன்.

அதற்கு தொலைவுக்குச் செல்லவேண்டும். முதலில் இந்த நகரத்தில் ஏதும் வேலை தேடுவோம் என்று சொல்லி என்னை அழைத்துச்சென்றவர் அந்த Australian Textile Printing Company யின் பெயர்ப்பலகையைப்பார்த்தும், பூபதி அண்ணே, உங்களிடம் என்ன தெரியும் எனக்கேட்டால், “Graff Printing தெரியும்” என்று சொல்லச்சொன்னவரும் அவர்தான்.

அந்த முகாமையாளர் எம்மை அந்த தொழிலகத்தின் அனைத்துப்பிரிவுகளுக்கும் அழைத்துச்சென்று நடக்கும் வேலைகளைக் காண்பித்தார்.

எனக்குத் தலைசுற்றியது. நான் சாம் அண்ணரின் முகத்தை பார்த்தேன். குறிப்புணர்ந்த அவர், எனது கையைப்பற்றி காதுக்குள் ” யோசிக்கவேண்டாம். பயிற்சி தருவார்கள்” என்று கிசுகிசுத்தார்.

சம்பளம் பற்றி கேட்டறிந்தார். அவர்கள் தரவிருந்த சம்பளம் அவருக்கு திருப்தி தரவில்லை. எனக்கு அந்த வேலை கிடைத்தது. மறுநாளே நான் வேலையை தொடங்கிவிட்டேன். சாம் அண்ணர் அச்சமயம் மற்றும் ஒரு வேலையிலிருந்தவாறே என்னையும் அழைத்துக்கொண்டு புதிய வேலை தேடி வந்தவர்.

அங்கிருந்து, சிட்னி வீதியில் தனது அலுவலகத்தை நடத்திவந்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் அவர்களிடம் வந்தார். என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி, எனது அகதி விண்ணப்பத்தை தயார் செய்து குடிவரவு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கச்சொன்னார். இதுபற்றி நண்பர் சிவநாதனும்

அவரிடம் ஏற்கனவே சொல்லியிருந்தமையால் அந்த வேலையும் சுலபமாக ஆரம்பமானது.

இவ்வாறு தொடங்கிய நண்பர்கள் வட்டம் படிப்படியாக விரிந்தபோது என்னைப்போன்று மேலும் பலர் நாம் இருவரும் வசித்த அந்த ஒரு படுக்கை அறை வீட்டுக்கு வந்தனர். ஏற்கனவே அவருடன் இருந்த பாலச்சந்திரன் என்ற பாலா அண்ணர், சில நாட்களில் அவருக்குப் பிடித்தமான கணக்காளர் வேலையுடன் இடம்பெயர்ந்தார். வடமராட்சியைச்சேர்ந்த ஆயுள்வேத மருத்துவர் குணரட்னம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பட்டதாரிகளான செல்வேந்திரன், வரதலிங்கம், பென்ஹர் என்ற இளைஞர், ருத் இந்துமதி என்ற இளம் யுவதி, லண்டனிலிருந்து வந்து சேர்ந்த பிரேம்குமார் கோப்பாயிலிருந்து வந்திருந்த தயாளன் என்ற எங்களையெல்லாம் விட வயதால் குறைந்த இளைஞர், குவின்ஸ்லாந்திலிருந்து வந்திருந்த பொறியியலாளர் வாகீசன் ( இவர் கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் கந்தசாமியின் மகன் ) ஆகியோர் படிப்படியாக வந்து சேர்ந்தனர்.

(பென்ஹர், ருத் இந்துமதி ஆகியோர் பின்னாளில் நோய் உபாதைகளினால் அற்பாயுளில் மறைந்தனர்.)

இவ்வாறு வந்தவர்களையெல்லாம் அரவணைத்தவர்தான் சாம் அண்ணன் ஆறுமுகசாமி. வருபவர்களுக்கு இடம்காண்பிப்பது, வேலை தேடிக்கொடுப்பது, வாடகை வீடு பார்ப்பது, அதற்காக ஏஜண்டுகளிடம் அழைத்துச்செல்வது, வங்கியில் கணக்குத்திறப்பது, சட்டத்தரணிகளிடம் அறிமுகப்படுத்துவது, அவர்களுக்காக கதை சொல்வது, தனது நண்பர்களை அறிமுகப்படுத்துவது முதலான ஊர்க்கிராம சேவகர் தொண்டினை முகம்கோணாமல் சிரித்தவாறு செய்தவர்.

அந்த ஒரு அறைபடுக்கை வீட்டிலிருந்து நாமெல்லாம் கண்ட கனவுகள் ஆயிரம். திங்கள் முதல் வெள்ளிவரை வேலைக்குச் செல்வதும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் ஊர்சுற்றுவதும் வீட்டிலிருந்து வீடியோவில் திரைப்படங்கள் பார்ப்பதும் தமிழர் சம்பந்தப்பட்ட பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்வதுமாக எங்கள் அனைவரதும் பொழுது கழிந்தது. வீட்டையும் நாட்டையும், குடும்பத்தையும், சொந்த பந்தங்களையும் விட்டுவிட்டு வந்து ஏக்கப்பெருமூச்சுக்களை விட்டுக்கொண்டு , எதிர்காலக்கனவுகளில் லயித்திருந்த எம்மை உற்சாகப்படுத்துவதும் சாம் அண்ணரின் பொதுத் தொண்டாகவே மாறியிருந்தது.

வெள்ளி இரவு மெல்பனில் அச்சமயம் விக்ரோரியா இந்து சங்கம் Pirahan Migration Center இல் வெள்ளி தோறும் மாலைவேளையில் கூட்டுப்பிரார்த்தனையும் வழிபாடும் நடத்திவந்தது. அக்காலப்பகுதியில் இன்றிருக்கும் கரம்டவுண்ஸ் ஶ்ரீ சிவா விஷ்ணு ஆலயம் இருக்கவில்லை. எம்மை அந்த பிரார்த்தனைக்கு அழைத்துச்செல்லும் சாம் அண்ணர், ஞாயிறு

தினம் எங்கள் குடியிருப்பில் பெரிய மதியபோசன விருந்தையே தயார் செய்வார். அவருக்கு விஷ்ணுபக்தி அதிகம். விஷ்ணுவின் தினம் ஞாயிற்றுக்கிழமை என்பது அவரது நம்பிக்கை. முதல்நாள் சனிக்கிழமை காலையிலேயே அவரது இராஜாங்கம் தொடங்கிவிடும்.

” பிள்ளைகாள் இன்று சனிக்கிழமை. யார் மார்கட்டுக்கு வருகிறீர்கள், யார் வீட்டிலிருந்து துப்பரவு பணிகளை தொடங்குகிறீர்கள்? ஆள் மாறி ஆளாக உங்கள் உங்கள் உடைகளை துவைத்து காயப்போடுங்கள், ஊரில் உங்கள் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதுங்கள்” என்று கட்டளைகள் பிறப்பிப்பார்.

அதனால் அவருக்கு நாம் கட்டளைத் தளபதி என்றும் ஜமீந்தார் என்றும் பெயர் சூட்டி அழைப்போம். சனிக்கிழமை மாலை Heidelberg இல் Burgundy Street இல் அமைந்திருந்த தர்மசேகரம் அண்ணரின் கடைக்கு அழைத்துச்சென்று தமிழ்த்திரைப்பட கஸட்டுகளும் பலசரக்கு சாமான்களும் வாங்கிவருவார்.

ஞாயிறு விடிந்ததும் வீடு மீண்டும் அமர்க்களமாகும். குறைந்தது ஏழு – எட்டு கறிவகைகளுடன் சமையல் நடக்கும். அனைவரும் குளித்து முடிந்ததும், சமைத்தவற்றை படையலாக வைத்து, தரையில் ஒரு கம்பளம் விரித்து அனைவரையும் வட்டமாக அமரச்செய்து சிறிய மெளனப்பிரார்த்தனையுடன் விருந்தை தொடங்குவார்.

மாலையானதும் St. Kilda வில் கடற்கரைக்குச்சமீபமாக அமைந்துள்ள ஹரோகிருஷ்ணா ஆலயத்திற்கு அழைத்துச்செல்வார்.

அவ்வாறு ஒவ்வொரு வார விடுமுறை நாட்களும் ஓடிக்கோலன் போன்று மறைந்துவிடும். கோடை விடுமுறை காலத்தில் பலரட்டில் தங்கச்சுரங்கம், பிலிப் ஐலண்டில் பெங்குவின் சரணாலயம், அப்வே என்ற இடத்தில் புதர்க்காடுகள் எங்கும் அழைத்துச்செல்வார்.

சாம் அண்ணருடன் அவ்வாறு பயணித்த நான், அந்த அனுபவங்களின் பின்னணியில் திருப்பம், இயந்திரங்கள், புதர்க்காடுகளில் முதலான சிறுகதைகளையும் எழுதியிருக்கின்றேன். தனக்கு ஒரு நாடகம் எழுதித்தருமாறு நீண்ட நாட்களாகக்கேட்டுக்கொண்டிருந்தவரின் விருப்பத்தைத்தான் என்னால் பூர்த்தி செய்யமுடியாமல் போய்விட்டது.

அவருக்கு நாடகங்களில் நடித்த அனுபவம் அவர் பிறந்து வளர்ந்த வல்வெட்டித்துறையிலேயே தொடங்கியிருந்தது. பின்னாளில் அவர் மெல்பனில் சில சரித்திர – சமூக நாடகங்களிலும் நடித்தார். மருத்துவர் பொன் சத்தியநாதன் எழுதி இயக்கிய அப்பவே சொன்னாளே நாடகத்திலும் நடித்தவர்.

இந்திய அமைதிப்படை ( ? ) இலங்கை வந்தபின்னர் நடந்த சம்பவங்கள் பற்றி நாம் விவாதிப்போம். சாம் அண்ணர் அதன் பின்னணியிலும் என்னை

ஒரு சிறுகதை எழுதுமாறு தூண்டினார். அவ்வாறு எழுதப்பட்ட கதைதான் ஆண்மை. இலங்கை இந்திய இதழ்கள் அதனை ஏற்று பிரசுரிக்கவில்லை. எனினும், சாம் அண்ணரின் தூண்டுதலால் மெல்பன் 3 EA வானொலியிலும் பிரிஸ்பேர்ண் தமிழ் ஒலி வானொலியிலும் ஒலிபரப்பாகி, மலேசிய இதழ் ஒன்றிலும் வெளியானது. பின்னர் எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி சமாந்தரங்கள் நூலிலும் இடம்பெற்றது.

சாம் அண்ணரின் மனைவி ரேணுகா குழந்தைகளுடன் வரவிருக்கும் தகவல் கிடைத்ததும், தனது குடும்பத்தினருக்காக வீடு தேடும்படலத்தில் இறங்கினார். எனினும் நண்பர்களின் தேவைகளையும் கவனித்தவாறு இருந்தார்.

குடும்பத்தினர் வந்து சில மாதங்களில் மனைவியாரை ஊக்குவித்து கலாஞ்சலி நடனப்பள்ளியை தொடங்கவைத்தார். அந்தப்பள்ளியில் பயிற்சி பெற்ற குழந்தைகள் எமது தமிழர் ஒன்றியம், இலங்கை தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆகியன நடத்திய நிகழ்ச்சிகளில் மேடையேறினர்.

பின்னாளில் பலர் அரங்கேற்றமும் கண்டனர். அந்தக்குழந்தைகள் இன்று குழந்தைகளுக்கும் தாய்மாராகிவிட்டார்கள். கடந்துவிட்ட மூன்று தசாப்த காலத்துள் எம் அனைவரதும் வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள் நேர்ந்துவிட்டன.

சாம் அண்ணரின் மகளும் அரங்கேற்றம் கண்டார். கலாஞ்சலி ஆடற்கலையகம் தொடர்ந்தும் நடனக்கலையை வளர்க்கிறது. நடன நர்த்தகி ருக்மணிதேவி அருண்டேல் அவர்களையும் திருமதி ரேணுகா ஆறுமுகசாமி நினைவுகூர்ந்து நடன நிகழ்ச்சிகளை நடத்தி அந்த நாட்டிய மேதையை இந்தத் தேசத்தில் கௌரவித்தார்.

ரேணுகா நடனம் பயின்ற கலாஷேத்திராவின் ஸ்தாபகர்தான் ருக்மணிதேவி அருண்டேல்.

நாம் இந்த நாட்டிற்குள் பிரவேசித்த காலப்பகுதியில் எம்மவர் பலருக்கும் வாடகை குடியிருப்புகளை தேடிக்கொடுத்த சாம் அண்ணர், பின்னாளில் தாமே சொந்தமாக வீடுகளை நிர்மாணித்து விற்பனை செய்யும் நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர்.

எப்பொழுதும் நண்பர்கள் தம்மைச்சூழ இருக்கவேண்டும் என விரும்புபவர்தான் சாம் அண்ணர். அதற்காக சந்திப்பு ஒன்றுகூடல் விருந்துகளையும் ஏற்பாடு செய்வார். எப்பொழுதும் கலகலப்பான உரையாடலை விரும்புவார். பயணங்களில் ஆர்வம் கொண்டவர். தல யாத்திரைகளும் மேற்கொள்வார்.

அவரது குடும்பம் வருவதற்கு முன்னர் அவரிடம் மஞ்சள் நிறத்தில் ஒரு சிறிய கார் இருந்தது. அதனை அவரே வண்டு என்றுதான் அழைப்பார். அந்த வண்டுக்காரில்தான் நாம் மெல்பனைச் சுற்றிப்பார்த்தோம்.

அவருடைய நீண்ட நாள் விருப்பமான ஒரு நாடகம் எழுதித்தருமாறு விடுத்த வேண்டுகோளைத்தான் என்னால் நிறைவேற்றமுடியாமல் போனது.

 

( தொடரும் )

letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.