இலங்கை மலையக மக்களின் எதிர்பார்ப்புகள்!…. எம். வாமதேவன்.
மலையக மக்கள் இலங்கையின் சனத்தொகையில் 4.4 வீதமானவர்கள். ஏனைய பிற சமூகங்களான சிங்களவர் இலங்கை தமிழர் முஸ்லீம்களைப் போல தனித்துவ அடையாளம் மிக்கவர்கள். மொழி மற்றும் கலாச்சார ரீதியில் இலங்கை தமிழர்களோடு ஒத்தவர்களாக காணப்பட்டாலும், புவியிட வதிவிடம், வரலாறு, பொருளாதாரம், சமூக நிலை , அரசியல்நிலைப்பாடு என்ற அடிப்படையில் வேறுபட்டவர்களாக காணப்படுகின்றனர்.
இம்மக்களின் எதிர்பார்ப்புகளாக, ஒரு சமத்துவமான நிலையில் ஏனைய சமூகங்களுக்கு இணையாக உரிய உரிமைகளை முழுமையாக அனுபவித்து தேசிய நீரோட்டத்தில் ஒருங்கிணைதல் என சுருக்கமாக வரையறுக்கலாம். இதிலிருந்து பின்வரும் மூன்று கருத்துகளை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
1. சமத்துவமற்ற நிலை.
2. உரிமைகளை முழுமையாக அனுபவித்தல்
3. தேசிய நீரோட்டத்தில் ஒருங்கிணைதல்
சமத்துவமற்ற நிலை என்பதை பின்வருவம் குறிகாட்டிகளை நுணுகி நோக்கினால் மிக இலகுவாக தெளிவு படுத்தலாம்.
1 வறுமையும் போசாக்கின்மையும்
2 வீடமைப்பு வசதிகள்
3. சுகாதார நிலை
4. கல்வி
5. அரச சேவை
· அரச சேவைகளை பெற்று கொள்ளல்
· மொழி ரீதியிலான தடைகள்
· தபால் சேவை
· அரச சேவையில் உள் நுழைதல்
6. வீட்டுரிமையும் நிலவுரிமையும்
1 வறுமையும் போசாக்கின்மையும்
சர்வதேச மட்டத்தில் 2000 ஆம் ஆண்டளவில் புத்தாயிர அபிவிருத்தி இலக்குகளில் (Millennium Development Goals) பிரதானப்படுத்தப்பட்டதாக வறுமை ஒழிப்பு பேசப்பட்டவேளை தோட்டப்புறத்து வறுமை நிலை நகர மற்றும் கிராமிய துறைகளை விட அதிக அளவில் காண்பட்டதால் தோட்ட சமூக அபிவிருத்திக்கான தேசிய நடவடிக்கை திட்டமொன்று (2006-2015) உருவாக்கப்பட்டது. இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாது போனதுடன் வறுமையும் போசாக்கின்மையும் ஒப்பீட்டளவில் ஏனைய துறைகளை விட தொடர்ந்து உயரிய நிலையில் இருப்பதை புள்ளிவிபரங்கள் எடுத்துகாட்டிக் கொண்டிருக்கின்றன
2. வீடமைப்பு வசதிகள்
தொழிலாளர் சமூகத்தின் பெரும்பாலோர் சுகாதாரம், வெளிச்சம், காற்று இடவசதி குறைவான வசதிகள் உள்ள லயன் வரிசை வீடுகளிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். தனி மலசல கூட வசதிகள் பாதுகாப்பான குடிநீர் வசதிகள் இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை 200;000 குடியிருப்புகளில் .தனிவீடுகள் 45;000 குடும்பங்களுக்கே கிட்டியுள்ளன.
3.சுகாதார நிலைமை.
400 இற்கு மேற்பட்ட மருந்தகங்களும் வார்ட்டுகள் உள்ள 60 வைத்தியசாலைகள் மூலமாக மக்களின் வைத்திய தேவைகள் மருத்துவ உதவியாளர்களால் குறைமட்ட நிலையில் வழங்கப்பட்டு வருகின்றன. தோட்ட முகாமையினரால் நிர்வகிக்கப்படும் இம்முறைமையினை அரசாங்கம் பொறுப்பேற்க 2002 இல் தீரமானிக்கப்பட்டிருந்தாலும் அது முழுமையாக நிறைவேறாத நிலையில். மீண்டும் 2021 ஆம் ஆண்டு இறுதியிலும் அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இப்போது இப்பொறுப்பேற்றல் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
4 கல்வி
800 இற்கு மேற்பட்ட தோட்டப் பாடசாலைகள் 1972 இலிருந்து அரச முறைமையின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஆரம்ப கல்வி வழங்கல் ஓரளவு திருப்தியை தந்தாலும் இரண்டாந்தர கல்வி கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் போன்ற பாடங்களை பொறுத்தவரை இன்னும் முழுமை நிலையை அடையவில்லை. உயர்கல்வியை பொறுத்தவரை தொழில்நுட்பம் மற்றும். பல்கலைக்கழக கல்வி இன்னும் இவர்களுக்கு முற்றிலும் கிடைக்க கூடியதாக இல்லை. ஏனைய சமூகத்தினரின் தேவைகளுக்காக வட ,கிழக்கு,தென்கிழக்கு பிராந்தியங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களை போன்று இம்மக்கள் செறிவாக வாழுகின்ற நுவரெலிய மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் ஒன்றினை அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி எப்போது நிறைவேறும் என்று ஆவலோடு எதிர்பார்பார்த்த வண்ணமுள்ளனர்.
5..அரச சேவை.
கர்ப்பம் முதல். கல்லறை வரை தோட்ட நிர்வாகமே வழங்கி வந்த நிலையில் அரசினால் வழங்கப்படுகின்ற அனைத்து சேவைகளும் இவர்களை போய்ச் சேரவில்லை. எடுத்துகாட்டாக,பிரதேச சபைகள் சட்ட.ரீதியாக தோட்டங்களில் தங்களது சேவைகளை வழங்க முடியாதிருந்தன. நாட்டிலே ஏனைய பிராந்தியங்களில் 8000 பேருக்கு ஒரு பிரதேச சபை என்ற நிலையில் நுவரேலிய மாவட்டத்தில் 250,000 பேருக்கு ஒன்று என்ற சமத்துவமற்ற நிலை காணப்பட்டது.
ஏனைய பகுதிகளில் தபால்கள் தனித்தனியாக உரியவர்களின் முகவரி அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் தோட்டநிர்வாகம் தபால் பொதியை பெற்று மக்கள் ஒன்று கூடுகின்ற இடமொன்றில் நேரடியாக அல்லது ஏனையவர்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்தது. இந்தக் குறையை நீக்க 2006இல் தோட்ட தபால் சேவகர்கள் 300 பேர் நியமனம் செய்யப்பட்டாலும் இந்தக் குறை இன்னும் முற்றிலும் தீர்க்கப்படவில்லை.
அரசமொழி சிங்களமும் தமிழும் என்றிருந்தாலும் அரசாங்க காரியாலயங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக சிங்களம் தெரியாத தோட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர். இச்சிரமங்களை போக்க தோட்ட சமூக தொடர்பாடல் வசதியாளர்கள் 300 பேர் 2006 இல் நியமிக்கப்பட்டாலும் இம்மொழிப் பிரச்சனை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
குடியுரிமை மற்றும் உரிய கல்வித் தகுதிகள் இல்லாத காரணத்தால் அரச சேவையில் உள்நுழைவோர் மிக குறைந்தே காணப்பட்டனர். தற்போது ஆசிரிய பதவிகள் குறிப்பிடத்தக்களவு காணப்பட்டாலும் உயர்மட்ட பதவிகளில் எண்ணிக்கை பூச்சியமாகவே காணப்படுகின்றது.
வீட்டுரிமையும் நிலவுரிமையும் மிக அதிகமாக பேசப்பட்ட விடயங்களாகும். லயங்களில் மற்றும் தனிவீடுகளில் தொழிலாளர்களாக இருக்கும் வரை வசிப்பிட உரிமை இருந்தது. ஆனால், தெளிவான உரித்து தனிவீடுகளை பெற்றுக்கொண்ட சிலருக்கே கிடைத்துள்ளது. 2015 இற்குப்பின்னர் பல்வேறு சிரமங்களை கடந்தே இந்த உரித்துகளை பெற்றுகொள்ளக் கூடியதாக இருந்த வீடுகளை தவிர்த்து காணி உரிமை இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.
உரிமைகளை முழுமையாக அனுபவித்தல்
இம்மக்கள் 1948 இல் குடியுரிமை மற்றும் வாக்குரிமைகளை இழந்த நிலையில் 1954 இல் நாடற்றவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
1964 மற்றும் 1974 இலங்கை இந்திய ஒப்பந்தங்களின் கீழ் நாடற்றவர்கள் நிலை நீக்கப்பட்டாலும் 2003 குடியுரிமை திருத்த சட்டத்தின் படி இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டு நாடற்றவர் நிலை முற்றாக நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய 50 ஆண்டுகளாக குடியுரிமையற்று நாடற்றவர் என்ற நிலையில் பல்வேறு உரிமை மறுப்புகளை எதிர்நோக்கினர்.
நாட்டில் வாழும் அனைத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வாக்காளர்கள் என்பதை குறிக்க அட்டையில் பெயரை அடுத்து v என்ற எழுத்து சேர்க்கப்பட்டது. ஆனால் வாக்குரிமை இல்லாத மலையக மக்களின் அட்டையில் x என்ற எழுத்து சேர்க்கப்பட்டு ஏனையவர்களிடமிருந்து பிரித்து காட்டப்பட்டனர். இதன் விளைவுகள் பாரதூரமாக அமைந்திருந்தன.
இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பித்து தகுதி இருந்தும் நாடற்றவர் நிலை 2003 வரை நீடித்தருந்த காரணத்தினால் நிலம் போன்ற சொத்துகளை வாங்கும் போது வெளிநாட்டவர் செலுத்த வேண்டிய பெறுமதியில் 100% வீத வரியை செலுத்த வேண்டியிருந்தது. அரசாங்க வேலை வாய்ப்புகள் முற்றிலும் மறுக்கப்பட்டன.
1972 இல் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டதை தொடர்ந்து தோட்டங்களில் மாற்று பயிர் செய்கையை ஊக்குவிக்க தேசிய விவசாய பன்முகப்படுத்துதல் மற்றும் குடியமர்த்துதல் (National Agricultural Diversification and Settlement Authority – NADSA) என்ற அதிகார சபை ஒன்று நிறுவப்பட்டது. நட்சா என்று அழைக்கப்பட்ட இந்த அதிகார சபை தோட்ட நிலங்களை காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து மாற்று பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்பட்டது. இந்த செயற்திட்டங்களில நாடற்ற தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு நிலமற்ற கிராம மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இந்த நிலப்பங்கீட்டில் தோட்டத்தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் ஆய்வாளர்களால் பதிவு செய.யப்பட்டுள்ளன.
1980 களில் 100,000 இற்கு சற்று அதிகமாக காணப்பட்ட தேயிலை சிற்றுடமையாளர்கள் தற்போது 400,000 இற்கு மேற்பட்டதாக
காணப்படுவதற்கு இத்தகு நிலப்பங்கீடுகள் காரணமாக அமைந்திருக்கலாம்.
1977 இல் தேர்தலுக்கு சற்று முன்னர் நுவரேலியா மாவட்டத்தில் 7000 ஏக்கர் தோட்ட நிலங்கள் கிராம விஸ்தரிப்பிற்காக பொறுப்பேற்க எடுக்கப்பட்ட முயற்சிகள் மக்கள் எதிர்ப்பினால் சிவனு லட்சுமணன் என்ற தோட்ட இளைஞன் சுடப்பட்டு இறந்ததோடு முடிவிற்கு வந்தாலும், தோட்ட தரிசு நிலங்கள் கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
தேசிய நீரோட்டத்தில் ஒருங்கிணைதல்
ஒருங்கிணைதல் என்பது தமது அடையாளத்தைப் பேணி தேசிய நீரோட்டத்தில் இணைதல் ஆகும்.
அரசியல் ரீதியில் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் வாக்காளர்களின எண்ணிக்கை அதிகரிப்போடு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அதிகரிக்க தொடங்கியது.1977 இல் ஒருவரே தெரிவு செய்யப்பட்ட நிலை மாறி தற்போது ஒன்பது பிரதிநிதிகள் நுவரேலியா (5), பதுளை (2,) கண்டி (1) கொழும்பு (1) என காணப்படுகின்றனர். இந்தத் தொகை உண்மையில் அதிகமாக காணப்படவேண்டும். இம்மக்கள் சனத்தொகையில் 4.4 % மாக கணக்கிடப்பட்டாலும், பலர் தங்களை இலங்கை தமிழர்களாக அடையாளப்படுத்திகொண்ட நிலையில் அவர்களையும் கணக்கிலெடுத்தால் இவர்களது வீதம் 7.2 % மாக இருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன்படி 225 பேர் உள்ள பாராளுமன்மன்றத்தில் 15 பேர் அங்கம் வகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.
அரசாங்க கட்டமைப்பில் பாராளுமன்ற பிரதநித்துவ அதிகரிப்பை ஒட்டி தேசிய கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் சட்ட நிறைவேற்றலுக்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கும் சிறிய கட்சிகளின் ஆதரவு அவசியம் என்ற நிலையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உருவாகின.
இந்த வகையில் இம்மக்களுக்காக பிரத்தியேக அமைச்சொன்று 1997 இல் உருவாக்கப்பட்டமையை குறிப்பிடலாம். தோட்ட உட்கட்டமைப்பு , வீடமைப்பு சமுதாய அபிவிருத்தி என ஆரம்பிக்கப்பட்ட அமைச்சு பெயரில் சிற்சில மாற்றங்களோடு செயற்பட்டு 2010 இல் பொருளாதார அமைச்சின் கீழ் உள்வாங்கபட்டு, தன்னுடைய தனித்துவத்தை இழந்த பின்னர் 2015 இல் ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து, தனது ஆரம்பப் பெயரை மீண்டும் பெற்று அதே ஆண்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சு என்ற பெயரோடு ஒரு புதிய பரிமாணத்தை பெற்றது. ஆனால், 2020 இல் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் மீண்டும் தோட்ட உட்கட்டமைப்பு என்ற ஆரம்பப் பெயரை பெற்றமையும் அது தனது அமைச்சரவை அந்தஸ்தை இழந்து இராஜாங்க அமைச்சாகியமை ஒரு வகையில் பின்னடைவே. தற்போதைய அரசில் இந்த மக்களின் அரசியல் பேரம்பேசும் சக்தி பலவீனப்பட்டுள்ளமையை இது எடுத்துக் காட்டுகிறது எனலாம்.
1997-2020 காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட ஆசிரிய நியமனங்கள் உள்ளிட்ட தொழில் வாய்ப்புக்கள், பாதை, மின்சார வசதி மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகள் என்பன குறிப்பிடத்தக்கன. அத்தோடு பிரதேச சபைகள் சட்ட ரீதியாக தடையின்றி செயற்படக்கூடியமை, பிரதேச சபைகள். பிரதேச செயலகங்கள் என்பவற்றின் எண்ணிக்கை நுவரேலிய மாவட்டத்தில் அதிகரித்தமை மற்றும் மலைநாட்டு புதிய
கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கம் என்பன குறிப்பிடதக்கன.
பொருளாதார ரீதியில் தோட்டத்துறையில் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூபா 1000/= வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முகாமைத்துவத்திற்கும் தொழிற்சங்கங்களுக்குமான பேச்சுவார்த்தையில் இணக்கம் காணாத நிலையில் அரசாங்க சார்பில் தொழில் ஆணையாளர் தலையிட்டு இத்தொகை வழங்கப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. தோட்டக் கம்பனிகள் இதை வழங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில் சில கம்பனி தோட்டங்களில் இந்தத் தொகை முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதே வேளை கம்பனிகள் இந்த அரசாங்க தீர்மானத்திற்கெதிராக நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையிலுள்ளது.
இதற்கிடையில், வெளிவாரி உற்பத்தி முறை ஒன்றை சில கம்பனிகள் அறிமுகம் செய்துள்ளன. இதன்படி தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவதற்கு வாரத்தில் சில நாட்கள் வேலை வழங்கி ஏனைய நாட்களில் தோட்ட நிலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது குறிப்பிட்ட தேயிலை செடிகளுடன் கூடிய பகுதியை குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகை முறைமை போல வழங்கி அதில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்தை ஒரு குறிக்கப்பட்ட விலைக்கு தோட்ட நிர்வாகம் வாங்கிக் கொள்ளும் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த முறைமையில் திருப்தி காணாத தொழிற்சங்க அரசியல் தலைமைகள் தற்போது மாற்று கோரிக்கையாக
தொழிலாளர்களை சிற்றுடமையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன. இந்த முறைமை நடைமுறைப்படுத்துமிடத்து தர்க்க ரீதியில் இதுவரை இருந்து வந்த
தோட்ட முகாமைத்துமுறையிலிருந்து தொழிலாளர்கள் விடுபடுவர். அத்தோடு கம்பனிகள் தேயிலை உற்பத்தியில் (Cultivation) ஈடுபடாது தேயிலை பதப்படுத்தலில் (Processing) மாத்திரம் ஈடுபடுகின்ற நிலமை தோன்றலாம்
தேயிலை உற்பத்தியில் 4 இலட்சத்திற்கு மேற்பட்ட சிற்றுடைமையாளர்கள் ஈடுபட்டு, அவர்கள் மொத்த உற்பத்தியில் 70 % இற்கு மேல் வகை கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் ஒன்றரை இலட்சங்களால் கூடக்கூடிய சாத்தியங்கள் உருவாகலாம்
இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் ஆராயப் படவேண்டியன. சாதகமாக அமையுமெனில் சொந்த வீடுகள் —சிற்றுடமையாளர்கள் – மலைநாட்டு புதிய கிராமங்கள்
என்ற கவர்ச்சி மிக்க சமன்பாடு உருவாக வாய்ப்புள்ளது.
புதிய அரசியல் கோரிக்கை
சமீபத்தில் அனைத்து தமிழ்கட்சிகளும் சேர்ந்து இந்திய அரசிற்கு சமர்ப்பிப்பதற்காக 13 ஆவது அரசிலமைப்பு திருத்தம் குறித்த ஆவணமொன்றை தயாரிப்பதில் ஈடுபட்டனர்.
பின்னர் இணைந்திருந்த மலையக கட்சிகள் தாங்கள் தனித்து ஒன்றை தயாரித்து அதனை இலங்கை, இந்திய அரசாங்கங்கள் உட்பட பல நாடுகளுக்கு சமர்ப்பிக்க முனைந்துள்ளனர்.
இந்த ஆவணத்தில் முக்கிய கோரிக்கையாக அமைவது நிலத்.தொடர்பற்ற சமூக சபை ஒன்றை அமைப்பது ஆகும். அரசியல் யாப்பு திருத்தம் ஆலோசிக்கப்படும்போது இது கவனத்தில் எடுக்கப்படும் என எதிரபார்க்கப்படுகின்றது. இந்தச் சபையில் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகள் மாகாண சபை உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளடங்குவர். இது அரச கட்டமைப்பில் எத்தகைய பங்கு வகிக்கும் ஏனைய அரச அதிகார மையங்களோடு எத்தகு தொடர்பினை பேணும் என்பன நிச்சயம் விவாதத்திற்கு உட்படுத்தப்படும்.
இது ஏற்றுகொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் மலையக மக்கள் அரசியல் ரீதியாக வலுப்படுத்தப்படுவதோடு, தேசிய நீரோட்டத்தில் ஒருங்கிணையும் செயற்போக்கை துரிதப்படுத்தும்.
நிறைவாக இம்மக்களின் மேலே குறிப்பிட்ட எதிர்பார்க்கைகள் நிறைவேற சில நேரொத்த நடவடிக்கைகள் (Affirmative ) அவசியமானவை என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை.
——————-+++++++++++++++++——————-