கட்டுரைகள்

அறிவாளிகளே மக்களை முட்டாளாக்குகிறார்கள்!… ஏலையா க.முருகதாசன்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தவுடன் தமிழக மக்களுக்கு விழிப்புணர்ச்சி தரும் கருத்துக்களை கூட்டங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியிட்டு வந்தார்கள்.1965களில் நான் அப்பொழது நீர்கொழும்பு கொச்சிக்கடையிலிருந்தேன்.எனது மாமா எனது அண்ணன் ஆகிய இருவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் ஆதரவாளர்கள்.நானும் கழகத்தின் முற்போக்கு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவன்தான்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சார அச்சு ஊடகங்களான முரசொலி,திராவிடநாடு,கோம்லண்ட் என்ற ஆங்கிலப்பத்திரிகை ஆகிவற்றுடன் கலைஞர் நடத்திய முத்தாரத்தையும் மாமாவும் அண்ணையும் வாங்கி வருவார்கள்.பின்னாட்களில் கவிஞர் கண்ணதாசன் வெளியிட்ட முல்லை சஞ்சிகையுடன் தனிநூல்களையும் வாங்கினார்கள்.

ஆட்சியிலிருந்த கட்சிக்கு எதிராகவும் தமிழக மக்களை முட்டாள்களாக அறியாமையுள்ளவர்களாக வைத்திருக்கிறார்களே என்பதற்கான பிரச்சாரங்களில் ஒன்றாக அவர்கள் கக்கூஸ்களில் ஆண் பெண் படத்தை வரைந்து ஆணுக்குரிய கக்கூஸ் என்றும் பெண்ணுக்குரிய கக்கூஸ் என்றும் தமிழக மக்களின் அறியாமையை வளர்த்துவிடுகிறார்கள் என்று திமுகவினர் பிரச்சாரம் செய்தார்கள்.

ஆணுக்குரிய கக்கூஸில் ஆணின் படத்தையும் பெண்ணுக்குரிய கக்கூஸில் பெண்ணில் படத்தையும் வரைந்து அதனைப் பயன்படுத்துபவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நடைமுறைப்படுத்திய திட்டத்தை,மககளின் அறியாமையை வளர்த்துவிடுகிறார்கள் என்று திமுகவினர் தமது அறிவுசீவித்தன பிரச்சார உத்தியால் மக்களை முட்டாளாக்கினார்கள் என்பதற்கூடாக அறிவாளிகளே மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.

திமுகவினரின் இத்தகு பிரச்சாரங்களை மாமாவும் அண்ணையும் சிலாகித்து மகிழ்ந்து உரையாற்றுவார்கள்.அவர்களின் உரையாடல்களை நான் உள்வாங்குபவனாக இருந்தேன்.

இந்த இடத்தில் இதை அப்படியே உலகை நோக்கி பார்ப்போமானால் உலக நாடுகள் அனைத்திலும் விமான நிலையங்கள் உட்பட பொது இடங்கள் அனைத்திலும் பயன்படுத்துபவர்களுக்கு சுட்டிக் காட்டுவதற்காக ஆண் பெண் என்ற எழுத்தைவிட ஆண் பெண் படங்களே அதகளவில் இடம்பெற்றிருப்பதை காண முடிகின்றது.

விமான நிலையங்களில் ஆண் பெண் கழிப்பறைகளை சுட்டிநிற்றலுக்காக அது அமைந்திருக்கும் இடத்தை நோக்கி ஆண் பெண் படத்துடன் அறிவிப்பை தொடர்ச்சியாக காண்பிப்பதைக் காண முடிகின்றது.

இன்று வரையும் அதுதான் சரியானது என உலகம் கைக்கொண்டு வருகின்றது.திமுகவினர் அன்று சொன்னது போல மலசலகூடங்களின் வெளிப்பக்கத்தில் ஆணுக்குரிய மலசலகூடம் பெண்ணுக்குரிய மலசலகூடம்

என்பதற்காக ஆணின் படத்தையோ பெண்ணின் படத்தையோ வரைந்திருப்பது மக்களை அறியாமையில் வைத்திருப்பதற்கேயெனில் இன்று உலகநாடுகள் எங்கும் கைகொள்ளும் முறையால் மக்களை அறியாமையில் வைத்திருப்பதற்காகத்தான் இதனைக் கையாள்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?.

தமிழக விமான நிலையங்கள் உட்பட பொது இடங்களில் உள்ள மலசலகூடங்களை ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக பெரும்பாலான இடங்களில் ஆண் பெண் படங்களை இட்டிருக்கிறார்களே,அதுதான் சரியான முறை என்பதனால்தானே அது தொடர்கிறது.

அன்று மிக இயல்பாக மக்கள் புரிந்து கொண்ட ஒன்றை தவறானது என மக்களை, „ஆமா அவங்க சொல்றது சரிபோலத்தானே இருக்குது’ என மக்களை குழப்பியதன் மூலம் அறிவாளிகளே மக்களைக் குழப்புகிறார்கள் என்பது உறுதியாகின்றது.ஆண்களுக்கான மலசலகூடத்தினையும் பெண்களுக்கான மலசலகூடத்தினையும் வேறுபடுத்தி ஆண் பெண்ணுடைய படங்களை வரைவதில் தவறு இல்லையென்பது திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் மிகத் தௌவாகவே தெரியும்.ஆனால் மக்களின் அறியாமையை வளர்க்கிறார்கள் என்ற பொய்ப் பிரசாரத்திற்காக இதனைக் கையாண்டார்கள் என்பதே உண்மை.

இது போன்ற இன்னொரு விடயம் இலங்கையிலும் இடம்பெற்றது.அதைச் செய்தவர் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராகவும் அக்கட்சி சார்பாக நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்குகொண்டவருமான காலஞ்சென்ற திரு.வி.பொன்னம்பலம் அவர்களே.

அவரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், அவர் வேறு வேறு இடங்களில் பிரச்சாரக் கூட்டங்களில் பிரச்சார உரையாற்றிவிட்டு வருவதற்கிடையில் அவர் ஏதோ ஒரு கூட்டத்தில் உரையாற்றிய போது பதிவு நாடாவில் பதிந்து வைத்த உரையை ஒலிபரப்புவார்கள்.

அதைக் கேட்பதற்காகவே மக்கள் கூடுவதும் உண்டு.நான் அவரின் பிரச்சாரக் கூட்டங்கள் பலவற்றில் அதைக் கேட்டிருப்பது போல எனது ஊரான தெல்லிப்பழையில், எனது குறிச்சியான அம்பனையில், கொல்லங்கலட்டி வீதி அமைந்திருந்த அம்பனைச் சந்திக்கருகாமையில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இந்த நாடா ஒலிபரப்ப பட்ட போது அதனைக் கேட்டிருக்கிறேன்.

அவர், ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் தேவையற்ற விதத்தில் பணத்தைச் செலவழிக்கிறது என்பதற்கு ஒரு உதாரண எடுத்துக் காட்டாக பின்வருமாறு சொல்வார்;:-„இந்த அரசாங்கம் முப்பது இலட்சம் ரூபாய்க்கு மலம் துடைக்கும் ரிசுப் பேப்பரை இறக்குமதி செய்திருக்கின்றது.இலங்கையர்கள் ரிசுப் பேப்பரிலா மலத்தைத் துடைக்கின்றனர்.பணம் வீண் விரமயமாக்கப்படுகின்றது’ எனக் கூற மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய , அந்தக் கைதட்டலும் பதிவு செய்யப்பட்ட நாடா ஒவ்வொரு கூட்டத்திலும் ஒலிபரப்பப்பட அதைக் கேட்ட மக்களும் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்.

இலங்கைக்கு மேற்கத்தைய சுற்றுலாப் பயணிகள் வந்து போவதும் அவர்கள், விமான நிலையம், புகையிரதங்கள், புகையிரத நிலையங்கள் உட்பட அவர்கள் சுற்றுலாச் செல்லும் போது பொது மலசலகூடங்களை பயன்படுத்துவார்கள் என்பதும், அவ்வாறு பயன்படுத்துகையில் மேற்கத்தைய சுற்றுலாப் பயணிகள் தமது நாடுகளில், நாளாந்தம் பழகிக் கொண்ட மலம் கழித்தலுக்கு பின்னரான சுத்தப்படுத்தலுக்கு இத்தகு ரொய்லற் தாளையே பயன்படுத்துவார்கள் என்பதோ,அதற்காகத்தான் அரசாங்கம் அவர் சொன்ன ரிசு என்ற ரொய்லற் தாளை இறக்குமதி செய்திருக்கின்றது என்பதை ரஸ்ய மொழி உட்பட பலமொழிகளைக் கற்ற அறிவுசீவியான திரு.வி.பொன்னம்பலம் மிக மிக தெளிவாக அறிந்தவரே ஆவார்.

இருந்தும், மக்கள் சிந்திக்காத ஒரு விடயத்தை அல்லது மேற்கத்தைய சுற்றுலாப் பயணிகள் ரொய்லற் தாளைப் பயன்படுத்துவதை அறிந்திராத மக்கள் மத்தியில் „முப்பது இலட்சத்துக்கு ரிசுவா’ என திகைக்க வைப்பதன் மூலம் தமக்கான வாக்கினை பெற்றுக் கொள்ளவதற்கான தந்திரமான உரை மட்டுமல்ல ஆட்சியிலிருக்கும் அரசை மாற்றுவதற்குமாகும்.

மேற்கத்தைய சுற்றுலாப் பயணிகளுக்காகத்தான் ரொய்லற் தாள் இறக்குமதி செய்யப்படுகின்றது என்ற அறிதலை மக்களிடம் செல்ல விடாது தடுத்திருக்கிறார் என்றுகூட கருத இடமுண்டு.

இலங்கை மக்கள் தண்ணீரினால் கையின் உதவியுடன் மலவாசலை சுத்தப்படுத்துகிறவர்கள் என்பதற்காக,மேற்கத்தைய சுற்றுலாப் பயணிகளிடம் வாளிகளில் தண்ணீரைக் கொடுத்து, நீங்களும் கைகளால் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்ல முடியுமா.

அறிவாளிகளும், புத்திசீவீகளுமே மக்களை அறியாமை இருட்:டில் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு மேலே சொன்னவை ஒரு உதாரணமே.

இலங்கையில் தமிழர்களின் அரசியல் என்பதும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் அரசியலாகவே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அரசியல் என்பது மக்களுக்கான தொண்டு என்பதை மறந்து அரசியலுக்காக அரசியல் செய்யப்படுகின்ற நிலையை எட்டி பலவாண்டுகளாகிவிட்டன.சனநாயகவழி அரசியல்வாதிகள் தொடங்கி ஆயுதவழியில் தீர்வுகாண முற்பட்டவர்கள் வரை சுலபமான வழிகளில் தீர்வு காண வழி இருந்தும் இழுத்தடித்தரசியல் செய்து மக்களை ஏமாற்றினார்கள் என்பதே உண்மை.

மக்களை வேண்டுமென்றே ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் அறிவாளிகள் என்று சொல்லப்படுபவர்களே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.