சிறையில் இருந்து ஒரு காதல் கடிதம்!…. (சிறுகதை ) …. நடேசன்.
இளமைப் பருவத்தில் நடந்த சம்பவங்கள் வயதான காலத்திலும் நமது நினைவுகளில் கடற்கரையோர மணல் பாதங்களில் ஓட்டிக்கொண்டுவருவதுபோல் நம்முடன் வந்துகொண்டேயிருக்கும்.
முதல் முத்தம் – திருமணத்திற்கு முன்பான உடலுறவு – சிறுவயதில் குடித்துப் புரைக்கேறிய மதுபானம் – இருமலை உருவாக்கிய முதல் சிகரெட்டு என பல சம்பவங்களை நினைத்துப் பார்ப்போம். அதேபோல் வாழ்வின் நெடும்சாலையில் பலரை எதிர் கொண்டாலும் ஓரு சிலர் அடிமனதில் அழிசாட்டியமாக எமது மனங்களில் ஒட்டிக் கொண்டுவிடுவார்கள். எதுவித முயற்சியாலும் அவர்களை அகற்ற முடியாது போய்விடுகிறது. ஆனால் மற்றவர்கள் நதியில் கலந்த ஒரு குடம் நீர் போலாகிவிடுவார்கள்.
இது எப்படி சாத்தியமாகிறது?
சில வருடங்கள் முன்பாக மூன்று மாதங்களே எனது அலுவலகத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டவள் ஏமி. மேற்கு அவுஸ்திரேலியாவில் ஏதோ சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்ததாகவும் மெல்பனில் தனது தாய் இரண்டாவது திருமணம் செய்திருப்பதால் இங்கு வந்ததாகவும் சொல்லியதுடன் செல்;லப்பிராணிகளோடு வேலை பார்ப்பதற்கிருக்கும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி தனக்கு வேலை தரும்படி கேட்டாள்.
ஐந்தரைக்கு அடிக்கு மேலான உயரமும் தரமான மேற்கு அவுஸ்திரேலிய கோதுமையின் போசாக்கில் செழிப்பாக வளர்ந்த அங்கங்களுடன் இருந்தாள். இதைவிட அவளிடம் பிடித்தது அவளது முகம். பால்பவுடர் டின்னில் உள்ள குழந்தையின் வாழிப்பான வட்டமுகம்.இதற்கு மேல் நகரத்தன்மையற்ற மொழியில் தெரிந்த அப்பாவித்தனமும் அவளுக்குதனி அழகைக் கொடுத்தது.
‘என்னிடம் இருப்பது மாலை நேரத்தில் நான்கு மணிநேரம் மட்டும் செய்யும் பகுதி நேர வேலை இதில் கிடைக்கும் வேதனம் உனது வாழ்க்கைக்கு போதாது. உனக்கு இஷ்டமாக இருந்தால் வேலைக்கு வா’ என்றேன்.
அதற்கு அவள் சம்மதம் தெரிவித்ததும் ஏற்கனவே முழு நேரவேலை செய்யும் மேரியிடம் ‘இவளுக்கு வேலையை பற்றி சொல்லி கற்றுக்கொடு. மூன்று மாதங்கள் எப்படி வேலை செய்கிறாள் எனப் பார்ப்போம் எனச் சொல்லிவிட்டேன்.
அவுஸ்திரேலியாவில் முதல் மூன்று மாதங்களில் ஒருவர் ஒழுங்காக வேலை செய்யாவிடில் இலகுவாக நீக்கிவிடமுடியும் அதன் பின்பு ஏதாவது வலுமான காரணங்கள் இருந்தால் மட்டுமே வேலைநீக்கம் செய்யமுடியும்.
ஏமி வேலை செய்யத் தொடங்கியதும் பல தவறுகள் தெரிந்தாலும் அதைபொறுத்துக்கொண்டேன். ஒரு நாள் வேலைக்கு பிந்திவந்தபோது கோல்ஸ் சுப்பர் மார்க்கட் நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொன்னாள்.
‘இரண்டு வேலையிலும் உனக்கு தேவையான பணம் கிடைக்கும் அல்லவா?’
‘எனக்கு பணத்தேவையுள்ளது. எனது போய்பிரண்ட் ஜெயிலில் இருக்கிறான்.’
‘என்ன குற்றம் செய்தான்;?’
‘பலதடவை காரை அனுமதிக்கப்பட்டதிலும் பார்க்க அதிக வேகமாக செலுத்தியும் பலமுறை சிவப்பு சமிக்ஞையை மீறியதால் வந்த தண்டப்பணத்தையும் செலுத்தாததால் இறுதியில் ஒருவருட சிறைத்தண்டனை கிடைத்தது. சிறையில் தற்போது ஆறுமாதமாக இருக்கிறான். அவனது தண்டப்பணத்தை நான் செலுத்தினால்; அவனது சிறைத்தண்டனையை குறைத்து வெளியே அவனைக்;கொண்டு வரமுடியும்.’
ஒருவிதத்தில் ஆச்சரியமாக இருந்தாலும் அவளது காதலின் ஆழத்தை புரிந்து கொண்டேன்
ஏமி வேலைக்குச் சேர்ந்த சில கிழமைகளில் எனது அலுவலக விலாசத்திற்கு பல அமெரிக்க வெளிநாட்டு கடிதங்கள் வரத்தொடங்கின.
காலையில் மேரி தபாலை எடுப்பது வழக்கம். எனது கடிதத்தை மட்டும் என்னிடம தருவாள். ஒருநாள் தற்செயலாக வாசலில் வைத்து தபால்காரர் என்னிடம் தந்தபோது அதில் ஒரு கடிதத்தில் அனுப்பிய விலாசத்தை பார்த்தபோது அதில் மத்தியசிறைச்சாலை அங்கோலா லூசியானா என இருந்தது.
‘என்ன ஏமிக்கு அமெரிக்க சிறைச்சாலையில் இருந்து கடிதம் வருகிறது. அவளது காதலன் அவுஸ்திரேலியாவில்தானே சிறை வைக்கப்பட்டடிருக்கிறான்? என ஆழ்ந்து யோசித்தேன். எனது யோசனையை மேரியுடன் பகிர்ந்துகொண்டேன்.
‘உங்களுக்குத் தெரியாதா?
‘என்ன?’
‘சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கடிதம் எழதுவது ஏமியின் வழக்கம்”
‘உண்மையாகவா?”
ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலமான லூசியானாவில் உள்ள சிறைச்சாலையே அமெரிக்காவில் மிகவும் பெரியது. அதிக கைதிகளை மட்டுமல்ல கொலைத்தண்டனைக்காக எராளமான கைதிகளை அங்கு தடுத்து வைத்திருப்பார்கள். இதை “புவியின் நரகம்”; எனக் கூறுவார்கள். அவ்வாறு ஓப்பிடப்பட்டதனால் கலிபோர்னியாவிற்கு அருகே இருந்த தீவில்
இருந்து தற்பொழுது மூடப்பட்டு உல்லாசப்பிரயாணிகளின் காட்சிப்பிரதேசமாக வைக்கப்பட்டிருக்கும் மிகவும் மோசமான அல்கற்ஸ்(Alcatraz) போன்றதென“தெற்கில் உள்ள அல்காற்ஸ”என்பார்கள்.
இப்படியான சிறையில் இருந்து கடிதம் ஏமிக்கு வந்திருப்பது அவளது தனிப்பட்ட விடயமாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. பத்தொன்பது வயதும் நிறைவுறாத- இந்த ரீன்ஏஜ் பருவத்தில் எனக்கு மகள் இருக்கிறாள்.
நிச்சயமாக நண்பகல் வேலைக்கு வந்ததும் இதைப்பற்றி எமியிடம் கேட்பது எனத் தீர்மானித்துவிட்டேன்.
அன்று மாலையில் இரண்டரை மணியளவில் ஏமி வேலை தொடங்கியபோது இது பற்றி பிரஸ்தாபித்தேன்.
சுடு நீரில் அமுக்கிய இறால்போல் அவளது முகம் சிவந்தது. எனது மேசையருகே வந்து மவுனமாக அந்தக் கடிதத்தை என்னிடம் தந்தாள்
அந்தக் கடிதம் இப்படி இருந்தது.
அன்பின் ஏமி
உனக்கு ஆயிரம் முத்தங்கள். கடந்த முறை நீ அனுப்பிய புகைப்படத்தால்தான் நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன். எனது வக்கீல் தனது கவர்னர் மேல்முறையீடுதான் இன்னமும் மரணதண்டனையில் தப்புவதற்கு காரணம் என சொல்லக்கூடும். அது எனது உடலைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கலாம். என் உயிரை உடலில் வைத்திருப்பதற்கு நான் உள்ளே இழுக்கும் உயிர்க்காற்று ஏமி ஏமி என உனது பெயரைத்தான் சொல்லுகிறது. நான் பெண்களைத் தழுவிய காற்றையே நான் சுவாசிக்காமல் கடந்த பதினொருவருடமாக வாழ்ந்து வருகிறேன். என்னைச் சுற்றியும் வாழும் ஆண் சிறைக்கைதிகளின் மலசலம் வேர்வை விந்து என்பவற்றின் துர்நாற்றம் எனது
மூச்சைமட்டுமல்ல ஐம்புலன்களையும் அடைத்துவிடுகிறது. உனக்குத் தெரியாது. லுசியானாவில் கோடை மிகவும் வெப்பமானது மட்டுமல்ல புழுதியும் கலந்தது. எனது சொந்த ஊரான நியு ஜேர்சி போன்று புல்வெளிகளும் காடுகளும் தரும் நறுமணம் கொண்டது அல்ல.எனக்குத் தெரியும் மிகவும் இளம் பெண்ணாகிய நீ பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருந்து கடிதமும் படத்தையும் அனுப்புவதன் முலம் எனக்கு ஒரு மனச்சாந்தியளிக்கும் மருந்தாக நினைக்கிறாய். ஆனால் உனது அழகிய முகம் எனக்குள் ஓரு பூகம்பத்தை தொடர்சியாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனது தற்போதைய கனவுகள் எல்லாம் மெல்பனைச் சுற்றியும் அவுஸ்திரேலியாவிலும் நடக்கிறது. என்ன விந்தை பார்த்தாயா? அமெரிக்காவை விட்டு எங்கும் செல்லாத எனக்கு கனவுகளில் புது உலகத்தை தந்து அதைச் சுற்றுவதற்கு நீ பறக்கும் கம்பளத்தை தந்து உதவுகிறாய் என்பது உனக்குத் தெரியுமா? தயவு செய்து உனது முழு உருவப்படத்தை அடுத்தமுறை அனுப்பு. அதில் உனது அழகிய உருவத்தை இரசிக்க விரும்புகிறேன்.
அன்புடன்
மைக்கேல் சிமித்.
‘அடபாவமே இவ்வளவு காதலுடன் எழுதியிருக்கிறானே? என்ன குற்றம் செய்தான்? எனக்கேட்டேன்.
ஏமி சிரித்தபடி ‘ தனது மனைவியையும் அவளின் சகோதரியையும் கொலை செய்துள்ளான். இப்பொழுது மரண தண்டனைக்கு காத்திருகிறான். எல்லா மேன்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. கவர்னரிடம் கருணைமனு கொடுக்கப்பட்டிருக்கிறது. குடியரசுக்கட்சி கவர்னர். இப்படியான குற்றங்களில் கடுமையாக நடக்கவேண்டும் என்று சொல்லியே தேர்தலை
வென்றவர் என்பதால் மரணதண்னை நிச்சயமாகிறது.’ என்றாள்.
‘இவனுக்கு ஏன் கடிதம் போட்டாய்?” எனக்கேட்டேன்.
ஏமி முட்டாளைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்துவிட்டு ‘கொலைத் தண்டனைக்கு காத்திருப்போரில் இவனது மரணம்தான் மிக அருகில் உள்ளது. மேலும் எனது போய்பிரண்டை சிறையில்போய் பார்த்தபின்பு சிறையில் இருப்பவர்களுக்கு எப்படி என்னால் உதவி செய்ய முடியும் என நினைத்துப் பார்த்துவிட்டு இதைச் செய்கிறேன்.
‘எமி நீ செய்வதில் உள்ளர்த்தத்தைப்;பார்க்கவும் அதில்; உள்ள
மனிதாபிமானத்தை என்னால் உணரவும் முடிகிறது. ஆனால் இந்தக் கடிதங்களை உனது சொந்த விலாசத்துக்கு வரவழைப்பது நல்லது. புரிந்து கொள்வாய் என நம்புகிறேன்’
‘இனிமேல் அதை செய்கிறேன் ” என்றாள்.
இந்த வயதில் இவளது சிந்தனை செயல் எல்லாம் தெளிவாக இருக்கிறதே எனஆச்சரியப்படுவதைத் தவிர்க்க என்னால் முடியவில்லை.
——
மெல்பனில் இரண்டு தமிழர்கள் விடுதலைப்புலி குழுவை சேர்ந்தவர்கள் என கைது செய்யப்பட்டதால் அக்காலகட்டத்தில் தமிழ் மாதப் பத்திரிகை நடத்திய என்னிடம் அவுஸ்திரேலியா ஊடகங்களான தொலைக்காட்சிகள் பத்திரிகைகள் மற்றும் வானொலிகள் என்பன மாறி மாறி கேட்டபடியே இருந்தார்கள். அன்று ஒருநாள் முழுவதும் நான் தொலைபேசியில் பேசியபடி இருந்தேன். அடுத்தநாள் மாலை சன்ஹெரால்ட் பத்திரிகையுடன் இரண்டரை மணிக்கு ஏமி வந்து எனது மேசையில் வைத்து அதில் ஒருவர் ரொக்கட்லோஞ்சருடன் இருக்கும் வண்ணப்படத்தை காண்பித்து ‘இவர்களை உங்களுக்குத் தெரியுமா?’ எனக் கேட்டாள்.
நான் சிரித்துவிட்டு ‘நண்பர்கள் என கூறமுடியாது. ஏனென்றால் இவர்கள் இயக்கத்தின் கருத்துகளுடன் என்னால் ஓத்துப்போக முடியாது. ஆனால் எனது சமூகத்தவர்கள் என்பதால் இவர்களுடன் நான் பேசிப்பழகி இருக்கிறேன்’ என்று சொல்லிட்டு விட்டு எனது வேலையை தொடர்ந்தேன்.
அடுத்த நாள் ஏமி வேலைக்கு வரவில்லை. வழக்கம்போல் சுப்பமார்க்கற் வேலையிலிருந்து தாமதமாக வருவாள் என எதிர்பார்த்தேன். கடைசிவரையும் அவள் வரவில்லை.
அடுத்த நாள் மேரி சொன்னாள் ‘இனிமேல் ஏமி இங்கு வேலைக்கு வரமாட்டாள்.’
‘ஏன்….? அவளுக்கு நாம் எதுவும் சொல்லவோ செய்யவோ இல்லையே?’
‘இரண்டு நாட்கள் முன்பு பொலிசால் கைது செய்யப்பட்ட அந்த தீவிரவாத இயக்க ஆதரவாளர்களுடன் நீங்கள் அறிமுகமானவர் என்று நீங்கள் அவளிடம் சொல்லியது அவளை அதிர்சிக்குள்ளாகியிருக்கிறது. அவளால் அன்று தூங்கமுடியவில்லை. இரவில் துப்பாக்கிகளையும் வெடிமருந்துகளையும் நினைத்து அவள் பயந்து விட்டாள். இப்படியான ஒரு இடத்தில் தன்னால் நிம்மதியாக வேலை செய்யமுடியாது என எனக்கு கைத்தொலைபேசியில் குறும்செய்தி அனுப்பியிருந்தாள்.
மேரிக்கு என்னால் எதுவித பதிலும் சொல்ல முடியவில்லை.