அந்நியமற்ற உறவுகள்!….. ( சிறுகதை ) ….. முருகபூபதி.
“ மெட்டில்டா..? “
நினைவுக்குக் கொண்டு வர எடுத்த சிரமம்.
பெயர் மறந்து உருவம் மட்டும் மனதில் நிலைத்து விடுவதால் ஏற்பட்டுவிடும் தவிப்பு.
அப்பாடா…. இப்பொழுதாவது ஞாபகத்துக்கு வந்ததே. இல்லையென்றால் அவளிடமே போய் நின்று ஞாபகம் இருக்கிறதா..? என்று கேட்டு, பெயரை மறந்து விட்டேன் என்று சொல்லி அவமானப்பட்டு அசடு வழிய நிற்க வேண்டி வந்திருக்கும்.
கால ஓட்டம் சிலசமயம் பெயரை மறக்க வைக்கிறது அல்லது உருவத்தை. மெட்டில்டா. இவள் எங்கே இங்கிருக்கிறாள்? மெயின் ரோட்டில் புதிதாகக் கல் பதித்து, தார்போடும் வேலை நடப்பதால் அந்தக் குறுக்குப் பாதையால் வர நேர்ந்தது. அதனால்தானே அவளைக் காணமுடிந்தது. நெடுஞ்சாலைகள் திணைக்களத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். சைக்கிளை நிறுத்திக் கதைத்திருக்கலாம்.
அவனுக்கு அதிர்ச்சி. அவள் காணவில்லை. காரியத்தில் மூழ்கியிருந்தாள்.
எட்டு மணியானதும் முனிசிப்பல் நீர் விநியோகத்தை நிறுத்திக் கொள்ளும். மீண்டும் பகல் பன்னிரண்டு மணிக்குத்
தான். அவள் துணிக் குவியலுக்குள் தண்ணிரும் சோப்புமாக நின்ற காட்சி மீண்டும் மீண்டும் வந்து தொல்லைப்படுத்து கிறது.
கந்தோர் பியோன் கொண்டுவந்து வைத்த டீயும் ஆறிப் போய்விட்டது.
ஆசனத்தில் வந்தமர்ந்து வேலையை ஆரம்பிக்கு முன்னர் பழக்க தோசத்தில் எடுத்துப் பார்க்கும் அன்றைய தினசரியில் சூடான செய்திகள் எத்தனை இருந்துமென்ன, மெட்டில்டாவே சிந்தனையைச் செய்திக்குள் ஊடுருவ விடாமல் தடுத்துக் கொண்டிருந்தாள்.
” டீ ஆறிப்போய்க்கிடக்கு. குடிக்க இல்லியா? “
பியோன் மீண்டும் வந்து கேட்டபோதுதான் டீ ஏற்கனவே வந்துவிட்டதைக் கண்டான் அவன்.
“மல்லித் தண்ணீர் குடிச்சிட்டு வந்தன். தடிமன் பிடிச்சிருக்கு. அதை ஊத்திப்போட்டு கழுவி வை. “ பொய்யொன்று சொல்லிவிட்டதில் அவனுக்குத் திருப்தி.
பியோன் தன் அலுவல்களைக் கவனிக்கப் போய்விட்டான்.
“ நாளைக்கும் அந்தக் குறுக்குப் பாதையால் தான் வரவேண்டும். கொஞ்சம் முந்தியே வீட்டைவிட்டு வெளிக்கிட வேண்டும். அப்பதான் அவளைக்கண்டு கதைக்கலாம். அவள் நிற்பாளா? நிற்காவிட்டால் என்ன ? நாளை அல்லது மறுநாள். அதுவுமில்லையென்றால். அடுத்த நாள். “ அன்று அவளோடு கதைக்க எத்தனை நாள் காத்திருந்திருப்பேன். காத்திருத்தல். அதன் கொடுமை.
“மெட்டில்டா “ அவளின் வீடு நிச்சயம் அந்தத் தெருவோர “பைப்” புக்குக் கிட்டத்தான் இருக்க வேண்டும்.
இன்றைய பொழுது கரைவதற்கு ஏன் இத்தனை தாமதம்.?
கைக்கடிகாரமும் சுவர்க்கடிகாரமும் கடமை நேரத்தில் கண்களின் தரிசனத்திற்குப் பலமுறை கிட்டியிருக்கும்.
மெட்டில்டாவை மீண்டும் சந்திப்பதால் என்ன நன்மை?
உறவைப் புதுப்பித்துக் கொள்ளவா? அது தகுமா? அவள் உருவத்தைப் பார்த்தால் குறைந்தது இரண்டு பிள்ளை களுக்காவது தாயாகி இருப்பாள். புருஷன் என்ன தொழில் செய்வான்? என்னைப் போல் லோங்ஸும் சேர்ட்டும், சப்பாத் தும் அணிந்து இப்படி ஒரு அலுவலகத்தில் பைல்களைப் புரட்டிக்கொண்டிருக்கமாட்டான் என்பது மட்டும் நிச்சயம்.
அப்போ….!?
” கடலின் அக்கர போனோரே… “ மெட்டில்டாவிடம் முதல் அடிகளை மட்டும் ராகத்தோடு பாடி அடுத்த வரி தெரியாமல், கட்டாயம் பாருங்க. டியூஷனுக்கு போறதெண்டு சொல்லிவிட்டு கூட்டாளிமாரோடு “மெட்னி ஷோ” பார்த்திட்டு வந்தான்.
பாஷைகள் வேறாயினும் , வாழ்க்கை வேறல்ல அவர்களுக்கு என்ற எண்ணத்தில் அன்று சொல்லும் அளவுக்கு சிந்தனை வளராவிட்டாலும், இப்போது அந்த எண்ணம் சரிதான்.
சந்திப்பு அறுந்து எத்தனை வருடம்….? திரைப் படம் வந்த வருடமே நினைவில் இல்லையே.
மேல் படிப்பு பிறந்த ஊரில் இல்லாது போனதால் ஊர் விட்டு ஊர் சென்று, வீடுகள் பல மாறி, காலந்தான் வேக மாக ஓடியிருக்கிறது. நினைவுகள் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்து நீடித்துவிடுகிறது.
ஸ்கூல் விட்டு வரும்போது, டொபிகளை அவள் கையில் திணித்து, விடை பெறுகையில், ” உறையைச் சாப்பிட வேண்டாம். உள்ள இருக்கிறதைச் சாப்பிடுங்க.”
மறுநாள் அவளின் பதிலடி கைநிறைய செறி
பழங்களைத் தந்து “ நெட்டிகளைச் சாப்பிடவேண்டாம், பழத்தை மட்டும் சாப்பிடுங்கோ… “
——–
” என்னப்பா இன்றைக்கும் இந்த ரோட்டால போறிங்க.”
“ மெயின் ரோட்டில சைக்கிள்ள போக ஏலாமல் கிடக்கு. தார் போடுறாங்கள். எலக்க்ஷன் வரப்போகுதாக்கும். ரோட்ல புளக். இதால் போனால் கெதியா போகலாம். “
மனைவிக்குப் பதில் சொல்லவும் சாமர்த்தியம் இருக்கவேண்டும்.
மூத்தவள் “ அப்பா… டாட்டா… “ என்றாள்.
“ டாட்டா குஞ்சு. தங்கச்சி பாப்பாவை பார்த்துக் கொள்ள வேணும். பிள்ளைக்கு வரும்போது சொக்கலேட் கொண்டு வாரன்.”
பெடலை வேகமாக உந்தி மிதித்து குறுக்குப் பாதையால் திரும்பி வரும்போது, ‘ அதிர்ஷ்ட தேவதை என் பக்கம்தான்’ குறுக்கே ஓடிய பன்றிக்குட்டியும் ஒரு சாட்டாகிவிட்டது “பிரேக்” போடுவதற்கு.
“ மெட்டில்டா… “ ஒரு துள்ளல். சைக்கிளை ஒரமாக்கி பாரில் சாய்ந்து ” என்ன… தெரியுதா..? ” அவன் பரவசத்துடன் கேட்டான்.
“ நீங்க….ஒ….ஒ…..இங்கயா…. இப்ப…. என்ர சோமல மாதாவே…..அடையாளமே தெரிய இல்ல. ”
அவன் தலையாட்டினான். அவள் அதிர்ச்சி நெளியச் சிரித்தாள். ‘ அடையாளம் தெரியாமல் மாறிட்டீங்க.’ நிச்சயம் உருவத்தைத்தான் சொல்கிறாள்.
மனதை அல்ல. இரட்டை அர்த்தத்தில் பேசத் தெரியாத அப்பாவி அவள். நான்தான் பாவி.
“வீடு கிட்டவா இருக்கு? “
“ இந்த முடுக்கால போனா….தொங்கல்ல வார குச்சில். உங்கட வீடு.? “ -அவள் கேட்டாள்.
“ பெரேரா பிளேஸ். மையப் பிட்டணிக்கு பின்பக்க ரோட்டால போய்த் திரும்ப வேணும். “
முன்னைய நினைவுத் தடங்கள் நெஞ்சில் குறுக்கு நெடுக்காக ஒட, சலனம் எதையும் காட்டாமலே கதைத்தான்.
” எப்படி என்னைக் கண்டீங்க.
“நேற்றைக்கும் இந்த ரோட்டாலதான் போனன். உங்களைக் கண்டு திடுக்கிட்டுப் போனன். முதல்ல ஒரு சந்தேகம். நீங்க மெட்டில்டா தானா என்று. உங்கட மேல் உதட்டு மச்சம் நீங்கதான் என்று காட்டிக் கொடுத்திட்டுது…
அவள் வாய்விட்டுச் சிரித்தாள். அந்தக்கன்னத்தில் அதே குழி. கையிலிருந்த சோப்பை நழுவவிட்டாள்.
“ ஒவ்வொரு நாளும் காலையில் முதல் வேலை இது தானாக்கும் “ என்று அவன் கேட்டான்.
“ என்ர கடைக்குட்டி மூண்டு வயசாகியும் ராவில பேய்ஞ்சிடுறான். எட்டு மணிக்குப் பிறவு தண்ணி வராது. அதுதான் காலையிலயே துவைச்சிப் போடுறன். இப்ப…. எங்க வேலைக்குப் போறா. போங்கோ. நேரம் போகுது… ”
விடைபெற மனமில்லாமல் அவன் விடைபெற்றான். கந்தோருக்கு வந்தும் நினைவுகளைவிட்டு விடைபெற முடியாமல் தவித்தான்.
சகலதையும் மறந்துவிட்டாளோ…? காணாமலேயே இருந்திருக்கலாம். அப்படிக் கண்டதன் பின்பும் கதைக்காம லேயே இருந்திருக்கலாம்…சாதாரணமாக இருக்க முடிய வில்லையே. அவளால் முடியுமா….? அவள் பேசும் தோரணையைப் பார்த்தால் அவளால் முடியும் போல் தெரிகிறதே..
அவள் புருஷனைப் பற்றி விசாரிக்காமல் வந்தது இப்போது தவறாகப்பட்டது அவனுக்கு.
” கடைக்குட்டி “ என்றாள். அப்போ அவளுக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கும்..? இனி அவளைக் கண்டால்…. இல்லை. இன்றே வீடு திரும்பியவுடன் அவளைப் போய்ப் பார்க்க வேண்டும். பைப்புக்குக் கிட்ட. முடுக்கால போனா. தொங்கல்ல வார குச்சில்.
கல் வீட்டில் குடியிருக்க அவளுக்கு இன்னமும் காலம் வரவில்லையோ…?
உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் அவளின் மேலுதட்டு மச்சம், சிரித்தால் குழி விழும் கன்னம். இன்னும் அப்படியே. என்றும்…. எப்பொழுதும் உடலோடு அழிந்து போகும் அங்கமாக.
“ இந்த மச்சம்தான் உங்களுக்கு அழகாக இருக்குது. “
“அப்ப…. வேற ஒண்டும் இல்லையா? “ துடுக்குத்தனமாக அவள் கேட்டதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் திணறிய அந்த நாட்கள்.
காலையில் எழுந்து படித்தால் மனதில் நிற்கும் என்று சொன்ன அம்மாவின் வாயில் சீனி போட வேண்டும். காலையில் எழுந்து கண்டதால் – சிரித்ததால் மனதில் அவளும் பதிந்தாளோ?
அடிமனதில் எங்கோ உறங்கிக் கிடந்தவள் ஏன் இப்போது விழித்தாள்..?
விறாந்தை மேசையில் இருந்து படிக்கும் போது, தெரு வோரமாகக் கடற்கரையில் இருக்கும் பொது மலகூடத்திற்குத் தன் தோழிகளோடு கம்பாயத்தைப் போர்த்தியபடி அக் காலை வேளையில் போய் வந்தவள், காலப் போக்கில்.
கம்பனின் கவித்திறன் அனுபவத்தால் வந்ததோ.
அண்ணலும் நோக்கினான் – அவளும் நோக்கினாள் !
முதல் நாள் கண்டு, அடுத்த நாள் கண்டு, தொடர்ந்து கண்டு, காண்பதற்காகவே விறாந்தையில் பேருக்குப் புத்தகமும் கையுமாக இருந்து….
ஊரை விட்டுப் போகாதிருந்திருந்தால்…. அனைத்தும் அம்பல மாகி. ஊர் இரண்டுபட்டிருக்கும்.
மீண்டும் திரும்பி இந்த ஊருக்கே வருவேன் என்று யார் கண்டது?
அவன் மனக்குழப்பத்துடன் வீடு திரும்பியபோது,
“அப்பா…. சொக்கலேட்.” வாசலில் ஏறியதும் மகள் ஞாபகத்தோடு கேட்டாள்.
“ பிள்ளைக்கு ஒன்று, மற்றது யாருக்காம்….? ” பேக்கில் இருந்த மற்றொன்றைப் பார்த்துவிட்டு அக்கறையோடு மனைவி கேட்டாள்.
“ என்ர ஃபிரண்ட் ஒருத்தனைப் பார்க்கப் போக வேணும். அவன்ர பிள்ளைக்கும் சேர்த்துத்தான் வாங்கி வந்தன். இப்ப போக வேணும் “
” அதென்ன…. வேலையால் வந்ததும் வராததுமா…? போறதெண்டால் இவளையும் கூட்டிக் கொண்டு போங்கோ. சின்னவளைப் பார்க்கிறதா….? இடியப்பம் அவிக்கிறதா….? நேர காலத்தோட திரும்புங்க…. போடி….. நீயும் அப்பரோட ஊர் சுத்துறதுக்கு.”
மகளைத் தள்ளிவிடும் மனைவியின் செயல் எரிச்சலூட்டியபோதும், மெட்டில்டாவைப் பார்க்க வேண்டுமென்ற அவசரத்தில் அவன் நிதானமாக இருந்தான்.
இருந்தாலும் ஏதாவது சொல்லத்தான் வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது.
“ காலையில இருந்து பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு தானே இருக்கிற. இப்பமட்டும் என்ன வந்ததாம். “
பேச்சை வளர்க்க விரும்பாமல் மூத்தவளை அழைத்துக் கொண்டு மெட்டில்டாவின் வீட்டைத் தேடிச் சென்றான் அவன். வீட்டைத் தேடிப் பிடிப்பது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.
மகள் சைக்கிள் பாரில் அமர்ந்து ஹெண்டிலை இறுகப் பற்றிக் கொண்டாள்.
தெருவிலிருந்த மின்கம்பம் உமிழ்ந்த வெளிச்சம் அந்த ஒழுங்கையினூடே. சிறிது ஒளி பரப்பியிருந்தது.
ஒரு கிழவி வந்தாள். அவன் விசாரித்தான். ” பலாக்கா விக்கிற மெட்டில்டாவா..? “ அந்தக் கிழவியின் வினா வேறும் மெட்டில்டாக்கள் அப்பகுதியில் வசிப்பது போல்பட்டது அவனுக்கு.
“ மெட்டில்டா “ தான் என்று உதடும் – ” பலாக்காய் விற்கிறாளா.? .” என்று உள்ளமும் பேசிக் கொண்டன.
” யாரது. வந்திரிச்சியது….? என்று கேட்டுக் கொண்டு வந்த குரலை அவன் இனங்கண்டான்.
“ நான் தான் “
“ வாங்கோ…சைக்கிளை மரத்தில சாத்திட்டு வாங்கோ. இது யாரு மகளா..? குழந்தையின் தலையில் தடவினாள்.
மெட்டில்டாவின் குடிசைக்குள் குனிந்து நுழைந்த போதிலும் கதவு நிலை இலேசாக இடித்தது.
உள்ளே இருந்த குப்பி விளக்கை அவள் கொண்டு வந்தாள்.
” எங்கே… உங்கட பிள்ளைகள்? “ கொண்டு வந்த சொக்கலேட்டை நீட்டியபடி அவன் விசாரித்தான்.
“ எல்லாம் ஆச்சம்மையோட டெலிவிஷன் பார்க்கப் போயிரிச்சுதுகள். “
” எல்லாம் எண்டா… எத்தனை பிள்ளைகள்? ”
வலது கையை உயர்த்திப் பெருவிரலை மட்டும் மடித்துக் காட்டினாள்.
“ நாலு பிள்ளைகளா? “
“ மூன்று சிறுக்கன். ஒரு சிறுக்கி. உங்களுக்கு எத்தனை ? ”
“ இரண்டு. இவள் மூத்தவள். மற்றவளுக்கு ஆறு மாதம். “
“ இரண்டும் சிறுக்கிகளா? “ அப்படி அவள் கேட்டதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“ உங்கட அவர் எங்கே…? “ கணவனை அறியத் துடித்தான் அவன்.
பதிலை எதிர்பார்த்துக் கேட்டான். பதில் உடன் வரவில்லை. பதில் உடனே வராதது சுகமாகவும், அதே சமயம் சங்கடமாகவும் இருந்தது அவனுக்கு.
“ உக்காருங்கோ. “ நீளமான வாங்கைக் காட்டினாள்.
மகளை மடியில் இருத்தி அவன் அமர்ந்தான்.
“ உங்களுக்கு அவரைத் தெரியாது எலா…. இருங்க காட்டுறன் “ உள்ளே சென்று வேலிச் சுவரில் செருகியிருந்த பிரேம் போட்ட படத்தை தூசி தட்டி எடுத்து வந்து காட்டினாள்.
அவள் குப்பிலாம்பை உயர்த்திப் பிடிக்க அவன் படத்தைக் கூர்ந்து பார்த்தான். பல நினைவுகள் சுமையாக மனதில் அழுத்த, ” படத்திலயும் உங்கட மேலுதட்டு மச்சம் நல்ல தெளிவாத் தான் இருக்குது. “
எதுவித சலனமும் இன்றி அவள், ” இப்ப எல்லாம்
கலியாணப் படங்கள் கலரில எடுக்கியாங்க. நல்ல வடிவா இரிச்சுது. நாங்கலெல்லாம் கட்டக்குள்ள கலர்ப்படம் இல்ல. “ என்றாள்.
” ஒமோம்.. … எப்படி தொழில் நிலைவரம். அவரும் இருப்பார் என்றுதான் பார்க்க வந்தேன். “
“ என்ர சோமலே. நான் செல்ல மறந்திட்டன் எலா….. உங்களுக்குத் தெரிஞ்சிரிச்சும் எண்டு. அவர் செத்துப் போய் ரெண்டு வருஷம் இரிச்சும். “
“ ஒ. மை கோட் “ அவன் கத்தினான். மடியிலிருந்த பிள்ளை பயந்து “ அப்பா “ என்றது.
” என்ன நடந்தது….? “ தொண்டை அடைத்த நிலையில் அவன் கேட்டான்.
கோயில் முனைக்குத் தொழிலுக்குப் போனம் எலா…. அங்க அவருக்கு நாய் ஒண்டு கடிச்சிது. ஊசி எல்லாம் போட்டு சுகமாகத்தான் ஈந்தார். பிறகு ஒரு வீட்டில பண்டி இறைச்சியோட சாப்பிட்டு அரக்கும் குடிச்சார். புத்தளம் ஆஸ்பத்திரியில இரண்டு நாள் வைச்சிருந்தோம். செத்துப் போனார்.
சோகமான கதை ஒன்று கேட்டு முடிந்தது போல் இருந்தது அவனுக்கு.
இலேசாக பனித்த கண்களைத் தூசி விழுந்து கசக்குவது போல் கசக்கி விட்டான்.
“ பயஸ்கோப்பில….. வார மாதிரி எல்லாம் முடிஞ்சு போச்சு… “ பெருமூச்சுடன் சொன்னாள் மெட்டில்டா.
“ மரணம் சொல்லிக் கொண்டா வரும். அவர்ட
கவனயீனத்தாலதான் அப்படி நடந்திருக்கு. நீங்களாவது நாய் கடிபட்ட அவரைப் பத்திரமாகப் பார்த்திருக்க வேணும். “
“ எல்லாம் முடிஞ்சு போன கதை எலா… இனி அதைச் செல்லி என்ன செய்ய.”
அவளது பதில் அவனுக்குச் சாட்டையா? அவன் கை விரல்கள் மெட்டில்டாவின் திருமணப்படத்திலேயே ஊர்ந்து கொண்டிருந்தன.
“ பயஸ் கோப்பில மாதிரி எலா.” மீண்டும் சாதாரணமாகவே அவள் சொன்னாள். “
“ என் மேல் கோபமா மெட்டில்டா… “ கேட்க வேண்டும் என்று தொண்டைக்குள் தவித்து நின்றதைக் கக்கிவிட்டான்.
“ ஏன் கோவிக்க வேணும். காலையில உங்களைக் கண்ட புறவு பழசெல்லாம் ஞாபகம் வந்திச்சி. அது ஒரு காலம்… சோமல மாதாவே… “
“ திருமணம் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது என்று உங்கட சமயத்தில சொல்லியிருக்கிறது அர்த்தமுள்ள தாகத்தான் எனக்குப்படுது. “
” யாரோ சென்னதை வைச்சி துக்கப்பட வேணாம். கண்டோம்…. கதைச்சோம்…. சிரிச்சோம்….. விரும்பினோம்….. பிரிஞ்சோம்…. இப்ப…. பிள்ளை குட்டிகளோட ஒருத்தரை ஒருத்தர் பார்க்கியோம் “ மெட்டில்டா வேகமாகச் சொல்லி முடித்தாள்.
கண்களில் முட்டிக் கொண்ட கண்ணீரை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான் அவன்.
அவனது கையிலிருக்கும் படத்தை ஒன்றும் புரியாமல் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மகள்.
எதுவும் புரியாதவரையில் கவலைகளே இல்லை என்று பட்டது அவனுக்கு.
மெளனத்தில் சில நிமிடங்கள் கரைந்தன.
“ ரெண்டாவது பிள்ளைக்கு எத்தனை வயசு…? “- மெட்டில்டா மெளனத்தைக்கலைத்துக் கேட்டாள்.
” ஆறு மாதம் என்று சொன்னேன்.”
“ இனிப் போதும். இங்க பாருங்களேன். எனக்கு நாலை தந்திட்டு அவர் போயிட்டார். நான் படுகிற கஷ்டம்.”
“ வரும்போது அந்த ஆச்சி கேட்டா. யாரு பலாக்காய் விக்கிற மெட்டில்டாவா எண்டு. அது யாரு….? நீங்கதானா..? “
“ ஓமோம்…. அது றோசலீன் அக்கா. வயசுதான் ஆச்சம்மை மாதிரி. எல்லாரும் றோசலீன் அக்கா எண்டுதான் செல்லியது.
புறத்தால இரிச்சிய வூட்டுக்கு அரக்கு குடிச்சியத்துக்கு வாரது. லூர்த்து மாத கோயிலடியில பலாக்கா விச்சியன். சீவியத்துக்கு வேணுமே. ஒரு நாளைக்கு. பதினைஞ்சு இருவது ரூபா மட்டில கிடைக்கும். “
” எங்கட காதல் நிறைவேறி இருந்தால் இன்றைக்கு உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது இல்லையா..?”
தயக்கமின்றி வார்த்தைகளை அவன் உதிர்த்தான்.
” விரும்பினதெல்லாம் கிடைச்சியதில்லை எலா. அதுக்காக கிடைச்சயில்லியே எண்டு துக்கப்படியதால கிடைச்சாதது கிடைச்சிடுமா…? செல்லுங்க…. பார்த்தது நெசம். விரும்பியது நெசம். இப்ப பிள்ளை குட்டிகளோடு நாம பார்க்கியதும் நெசம். “ உணர்ச்சியோடு, ஆனால் அர்த்தத்தோடு அவள் பேசுவதாகப் பட்டது அவனுக்கு.
அவளே தொடர்ந்தாள். “ பழசையெல்லாம் இப்ப நினைச்சவேணாம். இத்தனை வருஷத்துக்குப் பிறவு ஒருத்தரை ஒருத்தர் பார்க்கியதுக்கு கிடைச்சுதே. அதுக்காக ஆண்டவருக்கு தோத்திரம் செல்ல வேணும். எங்கட காலம் எல்லாம் போச்சுது…. இனி நாங்கள் எங்கட பிள்ளைகளுக்காக சீவிக்க வேணும். எங்கட சீவியம் இனி எங்கட பிள்ளைகளுக்குத்தான்…. எங்களுக்கில்லை. ”
அர்த்தங்கள் அற்றுப் பேசத் தெரியாத அவளின் பேச்சுக்கள் இப்பொழுது அர்த்தமுள்ளனவாக புலப்பட்டன அவனுக்கு.
மடியில் இருந்த மகள் விடும் கொட்டாவிகளைப் பார்த்து விட்டு ” மகளுக்குத் தூக்கம் வருது. அப்ப போயிட்டு வாங்கோ… “ என்றாள் மெட்டில்டா.
அவன் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு எழுந்தான்.
“கொஞ்சம் பொறுங்கோ. “ உள்ளே சென்று ஒரு பார்சலுடன் திரும்பினாள்.
“ என்ன? “ அவன் கேட்டான்.
” உங்கட பொஞ்சாதிக்குக் கொடுங்கோ… பலாக்காய் பாதி. பிள்ளைக்கு பால் குடுக்கிய அம்மையெல்லாம் பலாக்காய் ஆக்கிச் சாப்பிடவேணும். கண்ட கண்ட பால் மா வாங்கிக் கொடுக்க வேணாம். பலாக்காய்க்கு நல்லா பால் ஊறும். “
மெட்டில்டா தந்த பலாக்காய் பார்சல் ஒரு கையிலும் , மகள் மறு கையிலும் கனப்பது போன்ற உணர்வு.
தென்னை மரத்தோடு சாத்தியிருந்த சைக்கிளை நோக்கி அவன் நடந்தான்.
( மல்லிகை 1986 )