முகிழ்த்தது முத்து

ஒரு மழைக்கால இரவு!….. ( சிறுகதை ) ….. தாமரைச்செல்வி.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக இலக்கியப் பிரதிகள் எழுதிவரும் தாமரைச்செல்வியின் புதிய நாவலான 550 பக்கங்களைக்கொண்ட உயிர்வாசம் நூலுக்கு  இம்முறை இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஆறு நாவல்களும் நான்கு கதைத் தொகுதிகளும் எழுதியிருக்கும் தாமரைச்செல்வி, அவற்றுள் சிலவற்றுக்கும் முன்னர் விருதுகள் பெற்றவர்.

தாமரைச்செல்வியின்  முதல்  நாவல்  சுமைகள்   வீரகேசரி  பிரசுரமாக வெளியாகும்போது  அவருக்கு 24  வயதுதான்.    

1970 களில்   இலங்கை  வானொலியில்  இசையும்  கதையும் எழுதிக்கொண்டிருந்த இவர்,     ஒரு வருட காலத்திலேயே   அதிலிருந்து  மீண்டுவிட்டார்.

இவருடைய  முதல்  சிறுகதை  ஒரு  கோபுரம்  சரிகிறது  வீரகேசரியில்    1974  ஆம்  ஆண்டு  வெளியானது. அதனைத்தொடர்ந்து  இலங்கையிலும் தமிழ்நாட்டிலும்   வெளியான  இதழ்களில்  தாமரைச்செல்வியின் சிறுகதைகள்   வெளிவரத்தொடங்கின.

ஆனந்தவிகடன்,   குங்குமம்,   மங்கை   முதலான  இதழ்களிலும் இவருடைய  படைப்புகளை   காண  முடிந்தது.

ஒரு மழைக்கால இரவு ,  வடக்கில் போர்க்காலத்தில் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வை சித்திரிக்கும் சிறுகதை.

 

ஒரு மழைக்கால இரவு ( சிறுகதை ) …. தாமரைச்செல்வி

மாலை நான்கு மணிக்கு அந்தப் பேரூந்து கிளிநொச்சியை அண்மித்துக் கொண்டிருந்தது. அதுவரை இருந்த பொறுமை அவனை விட்டு விலகத் தொடங்கியது.

நித்தியானந்தன் ஒருவித பரபரப்புடன் யன்னல் வழியாக வெளியே பார்த்தான்.

பல்கலைக்கழக விவசாயபீடப் பெயர்ப்பலகை விர்ரென்று தாண்டிப் பின்னே போனது.

தெருவின் இரு பக்கத்திலும் புதிதாய் முளைத்திருந்த குடிசைகள். சிறியதும் பெரியதுமான கடைகள்.

தெருவில் விலத்த முடியாத அளவுக்கு மக்கள்…. அவன் முன்பு பார்த்ததிலும் விட மாற்றமடைந்திருந்த கிளிநொச்சித் தெரு நீளம் சனங்கள்…..

முகங்களில் கவலையுடன்… ஏக்கத்துடன்…. எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புக்களுடன்….

எப்படி இவர்கள் இரவு பகலாய் வலிகாமம் விட்டு நடந்து வந்து சேர்ந்தார்கள்.

மழைக்குள்ளும் எறிகணை வீச்சுக்கு நடுவிலும் இவர்கள் வந்ததில் எத்தனை கஷ்டம் நேர்ந்திருக்கும்….

நந்தினி குழந்தையையும் தூக்கிக் கொண்டு இவர்களில் ஒருத்தியாகத்தானே வந்திருப்பாள்.

நந்தினியை நினைத்ததும் நெஞ்செல்லாம் அடைப்பது போல இருந்தது. வயிற்றுக்குள் ஏதோ பிசைந்தது.

அவளுடைய கடிதம் பார்த்து இரண்டு மாதத்துக்கும் மேலாகிறது. நினைத்தும் பார்க்க முடியாத அந்த இடப்பெயர்வுச் செய்தியை அவனுக்கு முதலில் தொலைபேசி மூலம் சொன்னவன் விஜயகுமார்.

அன்று அவன் சவூதியின் ரியாட்டிலிருந்து நானூறு கிலோ மீற்றர் தூரத்தில் வெளிக்கள வேலை ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். இரவு எட்டு மணிக்கு விஜயகுமார் தொலைபேசியில் சொன்னான்.

“நித்தி…. வலிகாமத்திலயிருந்து சனமெல்லாம் எழும்பி தென்மராட்சிக்கு வருகுதுகளாம். பிரச்சினை பெரிசாய் வரப்போகுது போலக் கிடக்கு” அவனுக்கு ‘பகீ’ரென்றது.

“இது என்னண்டு சாத்தியப்படும்?”

“இல்லையடா நித்தி. விஷயம் உண்மைதான். இப்ப எல்லா செய்தியளிலும் இதுதான் விஷயம். வீட்டாரை நினைக்கக் கவலையாய் இருக்குது.”

அந்த நிமிடத்திலிருந்து நந்தினியை, குழந்தையைப் பற்றிய கவலை மனதைப் பாரமாய் அழுத்தத் தொடங்கிவிட்டது.

கண்காணாத தேசத்திலிருந்து கொண்டு ஏற்கனவே இவர்களை நினைத்து நினைத்துப் பட்ட கலக்கம்…

அங்கும் இங்குமாய் வாழ்வது எத்தனை பெரிய துன்பம்…

விமானக் குண்டு வீச்சிலும் எறிகணை வீச்சிலும் எத்தனை கலவரப்பட்டிருப்பார்கள். குழந்தை எப்படிப் பயந்து போயிருப்பான்.

இங்கே நாங்கள் தனிய இருந்து கஷ்டப்படும் போது நீங்கள் சவூதியில் இருந்து உழைத்து என்ன பலன். வேலை வேண்டாம். நீங்கள் வந்தாலே போதும் என்று ஏக்கத்துடன் நந்தினி கடிதம் எழுதும் போதெல்லாம் மிகவும் வேதனையாக இருக்கும்.

நந்தினியை உயிராய் நேசித்து இரு பக்கப் பெற்றோரையும் எதிர்த்து திருமணம் செய்ததில் அவர்கள் எந்த உதவியுமின்றித் தனித்தே இருந்தார்கள்.

மற்றவர்களின் முன்பாக வசதியாக வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற வெறியில்தான் அவன் இரண்டு வருஷம் முன்பு சவூதி போனான்.

குழந்தை சுதன் பிறந்திருந்த நேரம் அது.

நந்தினிக்கு அவன் தங்களைவிட்டுப் போவதில் அவ்வளவு விருப்பமில்லை.

“ரெண்டு மூண்டு வருஷம் இருந்து உழைச்சுக் கொண்டு வாறன் நந்தினி. பிறகு இங்க வந்து அந்தக் காசைக் கொண்டு ஏதும் தொழில் செய்யலாம்” என்று எவ்வளவோ சமாதானம் சொல்லிவிட்டுதான் போனான்.

நன்கு பழகிய சிவபாலன் குடும்பத்தினரோடு கொக்குவிலில் அவளை இருக்கச் செய்து விட்டுத்தான் போனான்.

ஆனால் இங்கு நடக்கின்ற பிரச்சினைகளினால் அங்கும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

எந்த நேரமும் நெஞ்சில் கலவரத்துடனேயே இருக்க நேர்ந்தது.

அதனால்தான் மூன்று மாதத்துக்கு முன்பாகவே தான் எல்லாக் கணக்கு வழக்கும் பார்த்துக் கொண்டு வேலையைவிட்டு நிரந்தரமாகவே திரும்பிவரப் போவதாகவும் வெளிக்கள வேலைகளுக்காகத் தூர இடங்களுக்குப் போவதால் கடிதம் போடவேண்டாம் என்று நந்தினிக்குக் கடிதம் போட்டுவிட்டான்.

அவள் அதைப்பார்த்து நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பாள். அவன் நினைத்ததுக்கும் மாறாக அந்த வேலை இந்த வேலை என்று இத்தனை நாள் இழுபட்டு விட்டது.

இந்த இடப்பெயர்வு நடந்தே இரண்டு மாதத்துக்கும் மேலாகிவிட்டது.

அவன் வருவான் என்று நினைத்ததில் நந்தினியும கடிதம் போடவில்லை.

முழு அலுவல்களையும் முடித்துக் கொண்டு இரண்டு நாள்களுக்கு முன்புதான் கொழும்பு வந்திருந்தான்.

அதற்கு முதல் நந்தினியின் இருப்பிடம் தெரியாததால் வட்டக்கச்சியில் இருக்கும் சித்தப்பாவுக்கு நந்தினி, குழந்தையைப் பற்றி விசாரித்து வைக்கும்படி இரண்டு கடிதங்கள் போட்டு விட்டிருந்தான்.

இப்போது அலுத்துக் கொண்ட முகங்களோடு திரிகின்ற இந்தச் சனங்களைப் பார்க்கையில் நந்தினி பற்றிய கவலை அதிகமாக மனதை அழுத்தியது.

ஒரு மாதக் குழந்தையாகக்கண்ட சுதன் இப்போது குடுகுடுவென்று ஓடித்திரிவான். அப்பா அப்பா என்று செல்லம் கொஞ்சுவான். கடவுளே… பிள்ளையுடன் கழிக்க வேண்டிய இரண்டு வருஷ சந்தோஷங்களையெல்லாம் இழந்து விட்டேனே என்று மனம் தவித்தது. இனிமேல் கஞ்சியோ கூழோ குடித்தாலும் ஒன்றாகவே இருந்து விட வேண்டும் என்ற தீர்மானம் வலுத்தது.

கிளிநொச்சிப் பேரூந்து நிலையத்திற்கு வந்து சேர மாலை நாலே கால் ஆகிவிட்டது.

அவன் தன் பிரயாணப் பையுடன் இறங்கிக் கொண்டான். அந்தப் பைக்குள் நந்தினிக்கும் சுதனுக்கும் ஆசை ஆசையாய் வாங்கிய பொருள்கள்….

அங்கு நின்ற ஒரு மோட்டார் சைக்கிளை வாடகை பேசி அதில் வட்டக்கச்சிக்குப் புறப்பட்டான்.

சிலவேலை சித்தப்பா வீட்டுக்கே நந்தினி வந்திருக்கவும் கூடும் அல்லது அவர் அவளைப் பற்றி விசாரித்து தங்கள் வீட்டுக்குக் கூட்டி வந்திருக்கவும் கூடும்.

மனம் படபடத்தது.

இவ்வளவு நாள்களாக எத்தனையோ மணி நேரங்கள் பொறுத்துக் கொண்டிருந்தவனுக்கு இன்னும் ஒரே ஒரு மணி நேரம் பொறுக்க இயலவில்லை.

முன்பு இந்த வட்டக்கச்சிப் பாதை அவ்வளவு நடமாட்டமின்றி அமைதியாக இருக்கும்.

இப்போது போவோரும் வருவோருமாக … புழுதி பறந்தது. தை மாத நாட்களாய் இருந்தாலும் காற்றில் வெம்மையும் தூசும் அதிகம் இருந்தன.

பெரிய பெரிய காணிகளில் புதிதாக முளைத்திருந்த குடிசைகள். ஒவ்வொரு முற்றங்களிலும் கூட்டமாய்ச் சனம்.

சித்தப்பா வீட்டிற்குப் போய் இறங்கியதும் அவன் கண்கள் ஆவலோடு சுழன்றன.

“தம்பி…வாரும்.. இப்பதான் வாறீரே…”

சித்தப்பர் வாசல் கேற் வரை ஓடி வந்தார்.

“இப்பதான் வாறன்… நந்தினி..”

“முதல்ல உள்ள வாரும். இஞ்சேரப்பா… நித்தி வந்திருக்கு…”

“நந்தினியும் பிள்ளையும்…”

“நானும் தெரிஞ்ச ஆட்கள் மூலம் விசாரிச்சனான். எங்க அவள் இருக்கிறாள் எண்டு தெரியேலை. இங்காலை வன்னிக்கும் வரேலை.

கிளாலியால வாற சனத்தை நல்லூரில வச்சுப் பதிஞ்சவைதானே அந்த லிஸ்ற் பார்த்தனான். அதில நந்தினியின்ர பேர் இல்லை.”

ஏமாற்றம் அவன் மனதை அழுத்தியது.

அதையும் மீறி ஒரு பயம்.

“அப்ப நந்தினி எங்க போயிருக்கும்.”

“வன்னிக்கு வராட்டி, தென்மராட்சியிலோ இல்லை வடமராட்சியிலோதான் இருக்க வேணும்.”

“அய்யோ… அவளுக்கு அங்க ஒருத்தரையும் தெரியாதே…”

அவன் அவசரமாய்ச் சொன்னான்.

“வெளிக்கிட்ட ஐந்தரை லட்சம் சனத்துக்கும் அங்க இங்க எண்டு ஆட்கள் இருக்கவே போகினம். ஏதோ ஒரு இடத்தில இருக்க வேண்டியதுதான்!”

அதுவரை இருந்த நூலளவு நம்பிக்கையும் அறுபடப் புதிதாய்க் கவலை பிடித்துக்கொண்டது.

“யோசிக்காதயடாப்பா வந்து முகம் கழுவி உடுப்பு மாத்தி முதல்ல சாப்பிடு. நான் எனக்குத் தெரிஞ்ச ஆட்களிட்ட விசாரிக்கச் சொல்லிவிட்டனான். நேற்றுத்தான் அறிஞ்சனான். கொக்குவிலில நீங்கள் இருந்த வீட்டுக்காரர் வந்து உருத்திரபுரத்தில இருக்கினமாம்.”

“ஆர் சிவபாலண்ணை குடும்பமோ?”

“ஓம். நான் அவையிட்டப் போய் விசாரிப்பம் எண்டு நினைக்க நீ வந்து நிற்கிறாய்.”

“சித்தப்பா எனக்குப் பசிக்கேலை. என்னால சாப்பிடவும் ஏலாது. நான் குளிச்சிட்டு வாறன். ஒருக்கா இப்பவே உங்கட மோட்டார் சைக்கிளில உருத்திபுரத்துக்குப் போய்ப் பார்த்திட்டு வருவம்.”

அவனின் தவிப்பு அவருக்குப் புரிந்ததால் அவர் மறுப்புச் சொல்லவில்லை.

சூரியன் மறைகின்ற நேரம் இருவரும் மோட்டார் சைக்கிளில் உருத்திபுரம் புறப்பட்டார்கள்.

வழியில் வயல் நிலமெல்லாம் வரண்டு போய்க் கிடந்தது. வாய்க்காலில் சிறிதளவு தண்ணீரே பாய்ந்து கொண்டிருந்தது.

“பசளை இல்லாமல் வயலும் அவ்வளவாய்ச் சனம் விதைக்கேலை இந்த முறை மழையும் குறைவு. விதைச்சவைக்கும் விளைச்சல் குறைவு.”

அவர் பேச்சில் அவன் மனம் பதியவில்லை. பலவித யோசனைகளினால் மனம் குழம்பிப் போயிருந்தது.

“இந்த வீடுதான். வீட்டில ஒரு பக்கத்தில பத்தி இறக்கி இருக்கினமாம்.”

இருவரும் இறங்கி உள்ளே போனார்கள்.

முற்றத்தில் நின்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு புறத்தே மாமர நிழலில் அடுப்பு மூட்டி மா வறுத்துக் கொண்டிருந்தார்கள்.

பக்கத்தில் நின்ற பெண் சிவபாலனின் மனைவி.

“வாங்கோ தம்பி விஜிதன் ஓடிப்போய் அப்பாட்டை நித்தி மாமா வந்திருக்கிறார் எண்டு சொல்லிக் கூட்டி வா” என்று விளையாடிய சிறுவனை விரட்டினாள்.

“இருங்கோ தம்பி. இவர் பின்னால வேலி கட்டுகிறார்”

அதற்குள் சிவபாலன் வந்து விட்டான்.

“அன்ரி…. உங்களோட நந்தினி வரேலையே…”

“எங்களோடதான் நந்தினியும் குழந்தையையும் தூக்கிக் கொண்டு வந்தது. நல்லூர் கடந்து வரேக்க சரியான மழை. அதால குழந்தை நனையப் போகுதே எண்டு அங்க ஒரு வீட்டு முற்றத்தில நந்தினி நிண்டிட்டுது. எங்கட குகதாசண்ணையின்ர குடும்பமும் அங்க நிண்டது. தன்னால நடக்க ஏலாமல் கிடக்கு எண்டும், அவையளோட தான் வாறன் எண்டும் எங்களைப் போகச் சொல்லிச்சு. பின்ன நாங்கள் சனத்தோட நடந்து வந்திட்டம்.”

அவனுக்கு நெஞ்சுக்குள் வலித்தது. குழந்தையுடன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள்.

“நீ ஒண்டும் யோசிக்தாத நித்தி. குகதாசண்ணை கொடிகாமத்தில் இருக்கினம் எண்டு கேள்விப்பட்டனான். அவையோடதான் நந்தினியும் இருக்கக்கூடும். அங்க போனாத் தெரியும்” என்று இதமாகச் சிவபாலன் சொன்னான்.

இப்போது மனதில் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது.

அடுத்த நாளே அவன் கொடிகாமம் புறப்பட்டான். நல்லூர் போனதும் படகில் ஏறிக் கிளாலிக் கடல் தாண்டியதும் அந்த இரவு நேரம் எங்கு போவது என்று தெரியாமல் ஒரு கடை வாசலில் விடியும் வரை நின்றதும் கனவு மாதிரி இருந்தது அவனுக்கு.

இந்த நந்தினி நேராய் வட்டக்கச்சிக்குச் சித்தப்பா வீட்ட வந்திருக்கலாமே… பெற்றவர்கள் தள்ளி வைச்சிருந்தாலும் சித்தப்பா அவர்களுடன் சுமுகமாகவே இருந்திருக்கிறார். நந்தினி இதை யோசிக்காமல் என்ன கஷ்டப்படுகிறாளோ.

கொடிகாமம் சந்தி விடிவதற்கு முன்பாகவே கலகலப்பாகி விட்டது.

கடைகள் வீதிகள் எல்லாம் நிறைந்து நிறைந்து வழிய மக்கள்…

சன நெரிசலூடே அந்த விடிகாலைப் பொழுது தன் புதிய நாளை ஆரம்பித்தது

அவன் வெறும் தேநீர் மட்டும் குடித்து விட்டு சிவபாலன் சொன்ன அடையாளத்தை வைத்துக்கொண்டு குகதாசன் இருந்த வீட்டைத் தேடிப் போனான்.

அந்தச் சிறிய வீடும் நிறைந்து போன ஆட்களால் திணறிக் கொண்டிருந்தது.

கலைந்த தலையும் கசங்கிய உடையுமாய் வந்த அவனைக் கண்டு அவர்களுக்கு ஆச்சரியம்.

“வாரும் தம்பி… எப்ப வந்தனீர். நந்தினியைப் பிள்ளையைக் கண்டனீரே… இப்ப எங்க இருக்கிறீங்கள்.”

அவனுக்குத் ‘திக்’கென்றது.

“நான் நந்தினியைத் தேடித்தான் வந்தனான் அண்ணை. நல்லூரில இருந்து உங்களோடதான் வந்தவளாம்.”

அவன் குரலில் பதட்டம் இருந்தது.

“ஓம் தம்பி நல்லூரில இருந்து யாழ் வளைவு வரைக்கும் எங்களோடதான் நடந்து வந்தவள். பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வந்ததால கனக்கச் சாமான் ஒண்டும் கொண்டு வரேல எண்டு கவலைப்பட்டுக் கொண்டு வந்தவள். நாவக்குழிக்கு கிட்ட வரச் சரியான சனம் தம்பி. நேரமும் சாமமாப் போச்சு. அங்கால பொம்பர் சுத்துது. ஷெல் அடி நடக்குது. அதுக்குள்ள மழை. சன நெரிசலுக்குள்ள ஆளையாள் தெரியேலை. அதுக்குப் பிறகு நந்தினி எங்களோட வரேலை. சனத்தோட சனமாய் பாலம் கடந்து இங்கால வந்திருக்கும் எங்கையாவது தெரிஞ்ச வீடுகளில இருக்கும்.”

மனதுக்குள் கலவரம் அதிகமானது.

“உமக்குக் கடிதம் போடேல்லயே … இரண்டு மாதத்திற்கும் மேலாச்சுது.”

“நான் வாறதாய் இருந்ததால கடிதம் போட வேண்டாம் எண்டு எழுதினான். இப்ப எங்கே எண்டு தேடுறது அண்ணை. கையில காசும் இருக்கோ தெரியேலை. என்ன கஷ்டப்படுறாளோ.

“நீர் கவலைப்படாதையும் தம்பி இப்பிடித்தான் ஆளை ஆள் தேடுற நிலைமை. இதுக்கு ஒரு வழி இருக்கு. என்ர வீட்டு விலாசம் குடுத்துப் பேப்பரில அறிவிப்புக் குடுப்பம். கண்டு பிடிக்கிறது சுகம்.”

அன்று மாலையே மூன்று பத்திரிகை அலுவலகத்துக்கும் போனார்கள். மறுநாள் பத்திகைகளில் அந்த அறிவிப்பு வந்திருந்தது.

சவூதியில் இருந்து திரும்பியிருக்கும் நித்தியானந்தன் தன் மனைவி நந்தினியையும் மகன் சுதனையும் தேடுகிறார்.

கீழ்காணும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.

பத்திரிகைகளில் அறிவிப்பு வெளிவந்தது மனதுக்குக் கொஞ்சம் தெம்பாக இருந்தது.

நந்தினி பார்த்துவிட்டு தகவல் கொடுப்பாள். அல்லது தேடி வருவாள்.

அந்த நம்பிக்கை இரண்டாம் நாள் மெல்லத் தகர்ந்து நான்காம் நாள் முற்றிலும் அழிந்தது.

நெஞ்சில் நெருப்புப் பிடித்துக் கொண்ட உணர்வு, “என்னண்ணை ஒரு தகவலும் தெரியேலை. ஆமியிட்ட அம்பிட்டிருப்பாளே…” மனதில் ஏற்பட்ட திகிலுடன் கேட்டான்.”

“சீச்சி அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. எங்களோடதானே நடந்து வந்தவள். எப்படியும் இங்கால வந்திருப்பாள். கொஞ்ச நாள் பொறுத்துப் பார்த்திட்டு இன்னொருக்காப் பேப்பரில போடுவம்.”

பொறுத்துப் பார்த்தார்கள். மறுபடி பத்திரிகைகளில் போட்டார்கள்.

காத்திருந்தார்கள்.

அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தென்மராட்சி, வடமராட்சித் தெருக்களில் திரிந்தான்.

Keukenhof Gardens Desktop Background

சனக்கூட்டங்களின் நடுவில் தேடினான்.

இத்தனை பேர்களில் ஒருவருக்காவது நந்தினியைப் பற்றி தெரிந்திருக்காதா… என்று மனம் ஏங்கியது.

பதினைந்து நாள்கள் போனதும் மனதில் நிரந்தரமாக ஒரு கலவரம் ஏற்பட்டது. மனமும் உடலும் பதறியது.

அவன் திகைப்பும் அழுகையுமாக,

“எனக்குப் பயமாயிருக்கு அண்ணை. என்ர நந்தினிக்கும் என்ர குஞ்சுக்கும் என்னவோ நடந்திட்டுது. நான் என்ன செய்ய நான் எங்கே போய்த் தேட….” என்று தழுதழுத்தான்.

கண்களில் நீர் முட்டி நின்றது.

“ஒண்டும் நடந்திராது தம்பி. கவலைப்படாதையும் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்பம்..”

அவனின் தோளைத்தட்டி ஆறுதலாய்ச் சொன்னார்.

“அய்யோ… இல்லை அண்ணை… என்ர மனம் பதறுது. அதுகளுக்கு என்னவோ நடந்திட்டுது… கடவுளே… என்ன நடந்திருக்கும் அண்ணை? என்ர குஞ்சுகளுக்கு என்ன நடந்தது? கண் விளிம்பில் திரண்ட நீர் உடைத்துக் கொண்டு கீழே இறங்கியது.

மழையும் குளிரும் திகிலும் நிறைந்த அன்றைய இரவு……

சனங்கள் அலையாய் அலைமோத நடுவில் நந்தினி குழந்தையைத் தோளில் இறுக்க அணைத்துக் கொண்டு நாவற்குழிப் பாலத்தை நெருங்கினாள். பாலம் திணறிக் கொண்டிருந்தது. அந்த மழை இருட்டில் அவள் சனத்தோடு சனமாய் பாலத்துக்குப் பக்கத்தால இறங்கி தண்ணீரும் சேறுமாக இருந்த வெளியூடாக நடந்தாள்.

விடாத எறிகணை வீச்சும் தூர விமானத்தின் ஓசையும் தந்த பதட்டத்தில் சேற்றுக்குள் இருந்த விளிம்பில்லாத மண் கிணற்றுக்குள் அவள் குழந்தையுடன் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை.

சேற்றுக்குள் அவர்கள் புதைந்த செய்தியை நித்தியானந்தனுக்கு சொல்வதற்கும் யாரும் இல்லை. அவனுடைய வாழ்நாள் முழுவதும் விடை அறிய முடியாத ஒரே ஒரு கேள்வியை அவன் கேட்டுக் கொண்டே இருக்கப்போகிறான்.

 

—-0—

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.