அவன் ஒரு அகதி!…. ( சிறுகதை ) ….. நடேசன்.
வழமையான இடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியுடன் கடையை நோக்கிச் சென்றேன். சிகை அலங்கார நிலையத்திற்கும், மில்க்பார் என அழைக்கப்படும் கடைக்கும் இடையில் அமர்ந்திருக்கிறது இந்த ஸ்பைஸ் சொப். எமது நாட்டு பலசரக்கு சாமான்களை விற்கும் இடம் வாரம் ஒருமுறை சென்று இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட மளிகைச் சாமான்களையும், தமிழ் நாட்டின் புதிய கலாச்சார வடிவங்களாக இறக்குமதியாகும் தமிழ் வீடியோக்களையும் வாடகைக்கு எடுத்து வருவது எமது வாராந்த கடமையில் ஒன்று.
கடையை அண்மித்தபோது, முன் கண்ணாடி ஊடாக கவுண்டரில் புதிய இளைஞன் நிற்பது தெரிந்தது. வழமையான கடைகாரன் இன்று இல்லைப்போல இருக்கிறது என நினைத்துக் கொண்டே கடைக்கு வெளியில் நின்றுகொண்டு மனைவியிடம் ”உள்ளே நிற்கும் இளைஞனின் முகத்தைப் பார்த்தால் எங்களோடு படித்த ஒருவரின் ஞாபகம் வரவில்லையா?”
”யாரை சொல்லிறீங்க?”
”பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ………….சந்திர சிறி நினைவு இல்லையா?”
உண்மைதான். அப்படியே முகம் இருக்கிறது. ஆனால் எங்களோடு படித்த சந்திர சிறிக்குக் குறைந்தது நாற்பத்தி எழு அல்லது நாற்பத்தி எட்டு வயதாவது இருக்கும். இவனுக்கு இருபது வயதுக்குமேல் இராதே?
எனது கருத்தில் உண்மை இருந்தாலும், ஆதாரம் கிடையாது எனச் சுட்டிக் காட்டினாள்.
”எங்களது மகனின் வயதுதான் இருக்கும். சரி எதுக்கும் அவனிடமே கேட்போம்” எனக் கூறிக்கொண்டு உள்ளே சென்றோம்.
எனது கூற்றிற்கு ஆதாரம் தேடும் ஆவல் அதிகரித்தது. மனைவி உள்ளே சென்று பொன்னி அரிசி, முருங்கக்காய் ரின்னுடன் கருவேப்பிலையும் கொண்டுவந்து மேசையில் வைத்தாள். நான் ஏதாவது புதிய தமிழ் படம் வந்து இருக்கிறதா எனக் கடையில் இருந்த பிளாஸ்ரிக் பைலை விரித்துப் பார்த்தேன்.
எல்லா தமிழ்ப்படங்களும் தற்பொழுது குப்பையாகத்தான் இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம் ஆனாலும் குப்பைகளை பார்த்துவிட்டு குப்பை என்பதில் எனக்கு அலாதி திருப்தி. தற்பொழுது மூன்றாம்தர தெலுங்குப் படங்களையும் டப்பண்ணிவிட்டு வீடியோவாக்கிய பின் புதிய தமிழ்ப்படம் என கடைகளுக்கு வந்து சேரும். இவை நித்திரை வராமல் திணறுபவர்களுக்கு தூக்கமாத்திரையாக அமையும்.
என்னால் புதிய படம் ஒன்றைத் தெரிவு செய்ய முடியாமல் கடைக்கார இளைஞனிடமே உதவி கேட்பது என முடிவுக்கு வந்தேன்.
”ஏதாவது புதிய தமிழ்ப்படம் வந்திருக்கிறதா?” என ஆங்கிலத்தில் கேட்டேன்.
”புதிதாக வந்திருக்கிறது’ ஆனால் ரஜனியின் பழய படம்” என யாழ்ப்பாணத் தமிழில்.
”என்ன, இப்பதான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததா” என நட்பு கலந்த குரலில் கேட்டேன்.
”ஆம் இரண்டுநாள்தான். ‘ரேவில்’ படிக்க வந்திருக்கிறேன்.” குரல் பவ்வியமாக வந்தது.
”என்ன படிக்கப்போகிறாய்.?”
”குக்கிங் அன்ட் ஹொஸ்-பிராலிட்டி” என சொல்லும்போது சிரித்தபடியால் கடைசிப் பற்களும் வெளியே தெரிந்தன.
”உண்மையில் படிக்க விருப்பமா? அகதி விண்ணப்பம் போடுவதற்கு விருப்பமில்லையா?” என நேரடியாகக் கேட்டேன்.
எனது கேள்வி சிறிது அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும்.
”இல்லை அண்ணே, அகதி கேட்கத்தான் ஆனால் படிக்க எண்டுதான் விசா எடுத்தனான்.” குழைந்தபடியே கூறினான்.
”அது பரவாயில்லை, பெயர் என்ன?”
”அகிலன்”
‘என்னை ஞாயிற்றுக்கிழமை மாலை வந்து சந்திக்கவும். என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன’; எனக் கூறி எனது விலாசத்தைக் கொடுத்துவிட்டு விடை பெற்றேன். நாகரீகம் கருதி விசாரிக்க நினைத்த விடயத்தை விட்டுவிட்டேன்.
மேல் நாட்டவரைப்போல நேரம் தவறாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். தேநீரைக் கொடுத்து உபசரித்துவிட்டு, ”இப்ப உன்கதையை சொல்லு” எனக் கூறிவிட்டு பேனாவைத் திறந்தேன்.
‘என்கதை விசித்திரமானது”
”அப்படியா? நான் கேட்கத்தயார்.”
”முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரக் கிராமத்தில் நினைவு தெரிந்த காலம் தொடக்கம் அன்னம்மா பாட்டி என்னை வளர்த்தாள். கிராமத்து பாடசாலை இராணுவத்தினரின் ‘செல்’ பட்டு அழிந்துவிட்டது, மாதாகோயிலுக்கு முன்பு உள்ள மாமரத்தின் நிழலில் செகிட்டு வாத்தியார் பாடசாலை என்ற பெயரில் நடத்திவந்தார். பாடசாலை முடிந்ததும் இயக்கத்தினர் ஆயுதங்களுடன் வந்து அவற்றை துடைத்தும், பொருத்தியும், ஊர் பிள்ளைகளுக்கு காட்டுவது வழக்கம். அவர்களது உடைகளையும் ஆயுதங்களையும் பார்த்து எனது படிப்பைக் கோட்டை விட்டுவிட்டேன். இறுதியில் பள்ளிக்குப் போகாமலே அவர்கள் பின்னால் சுற்றித் திரிந்தேன்.
நான் சிறுவனாக இருந்ததால் ஆரம்பத்தில் திரத்தினார்கள். காலம் செல்ல ஆமி காம்பில் இருந்து வெளியேறுவதை தெரிந்து கொள்வதற்கு என்னை ரக்கியாகப் பாவித்தார்கள். பல அராக்கிற்கு (Attack) உதவி செய்த பின்பு என்னை இயக்கத்தில் சேர்த்து பயிற்சி அளித்தார்கள். படதடவை போரில் கலந்து கொண்டேன்.
இக்காலத்தில்தான் இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் நிறுத்தம் வந்தது. யாழப்பாணத்துக்கு அரசியல் வேலைகளுக்காக அனுப்பப்பட்டேன். காட்டுப்பகுதியில் பதுங்குகுழிகளின் உள்ளே வாழ்ந்த எனக்கு யாழ்ப்பாணம் புதிய அனுபவமாக இருந்தது, காட்டுமுள்ளுகள் ஏறிக் காய்த்த பாதங்களுக்கு தார்ரோடுகள் இதமாக இருந்தன. போர் மீண்டும் ஆரம்பமாகும் என நினைத்துக் கொண்டிருந்தாலும் இடைப்பட சமாதான காலத்தை அனுபவிக்க நினைத்திருந்தேன்
ஒருநாள் வாக்கி டோக்கியில் அழைப்பு வந்தது.
”அகிலன், உன் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை. சீரியஸ் எனச் சொல்கிறார்கள். உன்னை உடனடியாக வரட்டாம்” என சகதோழன் சாந்தனின் குரல்கேட்டது.
”கிழவி போனமாசம் நல்லாத்தானே இருந்தது! இப்ப என்ன நடந்தது?
”அது எனக்குத் தெரியாது. சாவகச்சேரிவரையும் பஸ்ஸில் வா. இஞ்சால வாகனம் ஒழுங்கு பண்ணுகிறோம்.”
—-
குடிசையின் முன் வாகனம் நிறுத்தப்பட்டதும் அகிலன் உள்ளே பாய்ந்தான். சாக்கு கட்டிலில் அன்னம்மா பாட்டி கிடத்தப்பட்டிருந்தாள். ”ஆச்சி, எனக் கூறியவாறு எலும்பும் தோலுமாக இருந்த கால்களைப் பற்றினான். போர்க்காலத்தில் சிதறிய மனித உடல்களையும், சிந்திய இரத்தங்களையும் பார்த்துப் பழகியவனுக்கு கண்ணீர் வரவில்லை, ஆனாலும் கிழவியின் சேடம் கேட்பதற்குப் பரிதாபமாக இருந்தது,
கண்களை விழித்த அன்னம்மா கிழவி அகிலனை நோக்கி கையசைத்தாள். அருகில் சென்ற அகிலனின் கரங்களை ஒருகையால் இழுத்தபடி சுற்றி நின்றவர்களை வெளியே செல்லும்படி மறுகையால் சைகை காட்டினாள்.
அகிலன் மட்டும் தனியே விடப்பட்டான்.
”தம்பி ராசா, நான் சாகப்போறதுக்கு முன்பு ஒருவிடயம் சொல்லவேணும். அதுதான் உன்னை அவசரமாக வரச்சொன்னேன் எனக் கூறும்போது இருகண்களிலும் இருந்து கண்ணீர் வடிந்தது.
அகிலன் பதில் சொல்ல முடியாமல் விழித்தான்.
”தம்பி நீ இந்த நாட்டை விட்டு எங்காவது ஓடிவிடு” எனக் கூறியபடி அகலனின் கைகளைத் தனது கன்னத்தில் வைத்தாள்.
”ஏன் கிழவி பிசத்துகிறாய்? சாகப்போகும் போது மூளை குழம்பி விட்டதா? எனக்கூறிக் கொண்டு கைகளை இழுத்துக் கொண்டு கட்டிலை விட்டு ஒதுங்கினான்.
”’எட துலைவானே, நான் சொல்வதைக் கேள். இதைச் சொல்வதற்காகத்தான் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்”.
”சரி கேட்கிறேன்” எனக் கூறியபடி கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தான்.
—
”80ஆண்டுகளில் நீர்கொழும்பு பகுதியில் இருந்து மீன் பிடிப்பதற்கு வந்த சிங்களக் குடும்பங்கள் கடற்கரையில் வாடிபோட்டாலும் சமையல் சாமான்கள் வாங்குவதற்கு ஊருக்குள் வருவார்கள். சீசன் காலத்தில் ஆயிரக் கணக்கில் கூடுவார்கள். ஊரே கலகலக்கும். சீசன் முடியிற காலத்தில் ஒரு சில குடும்பங்கள் மட்டும் இருந்த ஒருநாள் இரவு, இயக்கப் பொடியள் வந்து எல்லாச் சிங்களக் குடும்பத்தினரையும் லொறிகளில் ஏற்றிக்கொண்டு போய் விட்டார்கள். அந்த இரவு ஊரே பதகளித்துப் போனது. சனம் எல்லாம் விளக்கை அணைத்துவிட்டு வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டார்கள். நடுஇரவில் வீட்டுக்குப் பின்னால் வெளிக்கு போக நான் போனபோது, தெற்கு கோடியில் உள்ள தென்னை
மரத்தின் கீழ் மயக்கமாகக் கிடந்த உன்னைக் கண்டு எடுத்து வந்தேன். அப்போது உனக்கு வயது இரண்டு இருக்கும். ஊர் ஆட்களுக்கு என் பேத்தியின் பிள்ளை என்னோடு வளருது எனச் சொல்லி வந்தேன். அந்தக் காலத்தில் நீ என்னை அம்மே என அழைத்தாய். இதன்மூலம் நீ சிங்களக் குடும்பத்தில் பிறந்தவன் எனத் தெரிந்து கொண்டேன். உண்மையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் என் தொண்டைக்குள் சிக்கிய சூடை மீன் முள்ளுப்போல் வைத்திருந்தேன். இந்த இருபது வருடங்கள் நான்பட்டபாடு. அந்த வற்றாப்பளை அம்மனுக்குத்தான் தெரியும். கடைசியில் சாகிறதுக்கு முன் உனக்குச் சொல்லாவிடில் எனது கட்டை வேகாது”. என மூச்சு விடாமல் கூறிவிட்டு அன்னம்மா கிழவி மூச்சை விட்டுவிட்டாள். அகிலன் பிரமை பிடித்தவன் போல் நின்றான்.
—–
”இதுதான் எனது கதையண்ணே. இதற்குப்பின் நான் எப்படி இயக்கத்தில் இருக்கிறது? சில நண்பர்கள் மூலமாகக் கொழும்புக்கு வந்து, அவுஸ்திரேலியாவுக்கு ஸ்ருடன்ட் விசா மூலம் வந்து சேர்ந்தேன். எனக்கு அகதி அந்தஸ்து கிடைக்குமா?”
”அகிலன், அகதிக்கே வரவிலக்கணம் நீதான். உனக்கு கிடைக்காமல் யாருக்குக் கிடைக்கும்” எனக் கூறிவிட்டு அகிலனின் கதையை வெள்ளைத்தாளில் எழுதினேன்.