கட்டுரைகள்

விளிம்பு நிலையில் இருக்கும் தமிழரும் தமிழ் தேசியத்தின் அவசியமும்….. தொடர்… 7….. சங்கர சுப்பிரமணியன். 

இன்னும் சற்று விரிவாகப்பார்க்கலாம். உலகம் முழுக்க விரிந்து பரந்நு வாழ்ந்த இனம் ஆசியாவுக்கு தெற்கே குமரிக் கண்டம்வரை எல்லையை கொண்டிருந்தது. இயற்கைச் சீற்றத்தாலும் புலம்பெயர்ந்து வந்த வேற்றினத்தவர்களால்
தெற்காசிய தீபகற்பத்தில்
விந்தியமலைக்கு தெற்கேயும் கடல் சீற்றத்தால் குமரிக்கண்டம் அழிந்து இலங்கையிலும் தமிழர் முடக்கப்பட்டனர். அந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைவரை தமிழரே இருந்தனர். அதற்கும் முன் இந்தியா முழுக்க தமிழரே இருந்தனர் என்பதை வரலாறு பலவழிகளில் பதிவு செய்தே வந்திருக்கிறது.

ஆதலால் தான் இந்தியத் தமிழரும் இலங்கைத் தமிழரும் வெவ்வேறு அல்ல என்று ஆணித்தரமாக கூறமுடிபிறது. ஒரே நிலப்பரப்பாகவே இருந்திருக்கிறது.
அரசியல்வாதிகளும் தனிப்பட்ட மனிதர்களுமே இதில் ஏதோ ஒரு ஆதாயத்தின்பால் பிளவு படுத்துகிறார்கள். பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு அதில் ஒரு இன்பம்.

ஆனால் பெரும்பாலான தமிழர்களின் உணர்வு பிளவில்லா நிலையை உணர்த்தக் கூடியதாகவே உள்ளது. இதை விளக்க வேண்டுமானால் சமீபத்தில் வந்த மேதகு திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியிலிருந்து உணரலாம். இளம் பெண்ணும் ஒருதாயும் உள்ள வீட்டிற்குள் விசாரணை என்ற பெயரில் நுழைந்த போலீஸ் இளம்பெண்ணை சீண்டுகிறான். அப்போது அப்பெண்ணின் பாவாடையைக் காட்டிஅதை எங்கு வாங்கினீர்கள் என்கிறான். அதற்கு அப்பெண் ராமேசுவரத்தில் வாங்கியது என்கிறாள். போலிஸின் விசாரணைக்குப் பயந்தாவது அப்பெண் கொழும்பில் வாங்கியது என்று சொல்வதாக காட்சிப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் அப்படிச் செய்யவில்லை. செய்யவும் முடியாது. ஏனென்றால் யதார்த்த நிலையைத்தான் சொல்லமுடியும். மேலும் ஈழத்தமிழர் பலரிடம் ஆலோசனை கேட்டு அதன் அடிப்படையில் இப்படம் தயாரிக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இல்லாவிடில் அப்படம் இன்னொரு பேமிலிமேன்2 ஆக உருவாகியிருக்கும். ஒட்டு மொத்த தமிழினமே இப்படத்தை கொண்டாடுகிறது. அதனால் ஈழப்போரின் இறதிப்பாட்டை வைத்தோ அப்போது நடந்த அரசியலைவைத்தோ அரசியலுக்கு அப்பாற்பட்டும் தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு நிற்கும் புனிதமான தொப்புள்கொடி உறவை களங்கப்படுத்திவிட முடியாது.

ஆகையால் எதிர்வரும் காலங்களில் தமிழரே தமிழ்நாட்டை ஆளும் நிலை வந்தாலும் திராவிட கழகங்கள் தமிழ்நாட்டுக்கு செய்த தமிழர் விரேத நிலைப்பாடுகளை எடுத்துவிடக்கூடாது. அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜ் போன்று நாட்டு நலனில் மட்டுமே அக்கறை உள்ளவர்களாய் இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டை எதிர்வரும் காலங்களில் ஆள நினைப்பவர்களுக்கு இது சவாலான காலமாகவே இருக்கும். காரணம் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழக ஆட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. பத்து ஆண்டுகளாக திமுக-வை அப்புறப் படுத்தியதற்கு காரணம் லஞ்சமும் தமிழர் நலம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றாததும் என்பது அவர்களுக்கும் நன்றே தெரியும். எல்லோரும் போதும் போதும் என்று சொல்லும்வரை தமக்கும் தம் வாரிசு மற்றும் உறவினர் அனைவருக்கும் சொத்து பல தலைமுறைகளுக்கு சேர்த்தாகிவிட்டது.

எனவே ஓரளவு நல்லாட்சி தருவார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும் வேற்று மொழியினர் ஆட்சி அதிகாரங்களல் இருந்து கொண்டு தமிழர் வாழ்வையும் வளங்களையும் அட்டைபோல் உறிஞ்சிக் கொண்டுருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக உலகில்வாழும் பன்னிரெண்டு கோடித் தமிழருக்கும் தெரிந்துவிட்டது. ஆதலால் இனிமேல் மொழியை வைத்து அரசியல் பண்ணமுடியாது. இனிமேல் தமிழ்நாட்டை தமிழரே ஆண்டாலும் கத்திமேல் நடப்பது போன்றது. ஈழப்போரின் தோல்வி எல்லோரையும் தோலுரித்துக் காட்டிவிட்டது.

இப்போது முன்போல் கண்ணில் மண்ணை எளிதாக தூவிவிட முடியாது. சமூக ஊடகங்களின் வளர்ச்சி எதையும் எளிதாக கடந்து செல்லமுடியாது. ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒன்றே போதும் இனி என்ன நடக்கும் என்பதை சொல்ல.  தமிழ் மக்களை இனி தமிழைச் சொல்லி ஏமாற்ற முடியாது. ஈழப்போராட்டத்தின் மூலம் சூடு பட்ட பூனையாகிவிட்டார்கள்.

திமுக-வின் ஒவ்வொரு அசைவையும் தமிழரும் மாற்று ஆட்சியைக் கொண்டுவர நினைப்பவர்களும் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். முதலாவதாக பதவி ஏற்கும்போது முதல்வர் ஸ்டாலின் “திராவிடன் ஸ்டாக்” என்று சொன்னது. நான் தமிழன் என்று சொல்லாமல் விட்டது. இதை தமிழர்கள் எளிதாக கடந்து செல்லமாட்டார்கள். எப்படி? பா.ஜ.க-வினர் தமிழகத்தில் (திராவிட)கழகங்கள் அற்ற ஆட்சியைக் கொண்டு வருவோம் என கொக்கரித்தனர்.

அவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் தொணியில் “திராவிடன் ஸ்டாக்” என்று சொல்லி இருக்கலாம். எந்த பின்னணியில் அதைச் சொன்னார் என்பது அவருக்கும் திமுக-வினருக்கும் மட்டுமே தெரியும். இதை முன்புபோல் இருந்தால் தமிழர் அவ்வளவாக கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றம் என்று சொல்லித்தானே தமிழ்நாட்டை ஆண்டுவந்திருக்கிறார்கள். தமிழர் முன்னேற்றம் என்று சொல்லி ஆளவில்லை அல்லவா?

இப்போது தமிழர் தெளிந்து விட்டார்கள். திமுக-வினர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் உற்று நோக்கத் தொடங்கிவிட்டனர்.அவர்கள் தவறினாலும் மாற்று ஆட்சி வேண்டும் என்று விரும்பும் நாம் தமிழர் கட்சியும் தமிழ் தேசிய அமைப்புக்களும் சமூக ஊடகங்களும் உலகளாவிய தமிழினமும் சும்மா விட்டுவிடாது.

இதன் அறிகுறிகள் தான் திராவிடன் ஸ்டாக், ஏழுபேர் விடுதலைக்கு குட்டையை குழப்பும் வகையில் குடியரசுத் தலைவருக்கு கடிதம், சட்டப்படி தமிழக சட்டசபை அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யும் அதிகாரம் இருந்தும் மத்திய அரசுடன் மோதாமல் தவிர்ப்பது, மோடியே கொரோனா விசயத்தில் அந்தந்த மாநிலங்களே அவரவர்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று கையை விரித்தபின் தடுப்பூசிக்கு உலகளாவிய அளவில் ஏலமெடுப்பதன் மூலம் பெரிய பிம்பமாக காட்டிக் கொள்வது, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், நீட் தேர்வு என பல பல தடைகள் தடைகளப் போட்டிக்கு தயாராக வைக்கப் பட்டுள்ளன.

எனவே இனி எளிதாக கும்மியடித்து விட்டுச் செல்லமுடியாது. கரணம் தப்பினால் மரணம்தான். போதாக் குறைக்கு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல் நாங்கள் வேற்றுமொழியினர்தாம் ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிப்பவர்களே நாங்கள்தான் என்றுகூறி சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டியாக வேற்றைமையின்றி வாழ்ந்த தமிழரின் கொம்பைச்சீவி விட்டு கூர்மைப் படுத்தி விட்டார்கள்.

நாம் மொழியை எண்ணி மகிழ்ந்திருந்தபோது தமிழ்மொழியைக் காட்டியே நம்மிடமிருந்து பலவற்றை உருவினர். தமழருக்கு எதிரான திட்டங்கள் பல தமிழ் மண்ணில் அரங்கேறின. தமிழரின் ஆட்சி அதிகாரங்கள், வியாபாரம், வேலை வாய்ப்பு எல்லாம் பறிபோயின. வேற்று மொழியினர் சொந்த நாட்டில் வாழ்வதுபோல வாழ தமிழ் நாட்டினர் அவர்களது சொந்தநாட்டில் உரிமைக்கு போராடும் நிலை ஏற்பட்டது.

தமிழ்மீதும் தமிழ்நாட்டின்மீதும் பற்றோடு இருக்கிறார்கள் என்று எண்ணிவந்த நம் எண்ணத்தில் மண்ணைப் போட்டார்கள். இதுவரை திரைமறைவில் இருந்தவர்கள் தேர்தல் வெற்றிக்குப்பின் தங்கள் இன அடையாளத்தை வெளிப்படுத்தி நாளிதழ்களில் திமுக வெற்றியை விளம்பரப்படுத்தி கொண்டாடினர். தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத செயல் இது. அது மட்டுமா? பதவி ஏற்பு விழாவில் தமிழ்நாட்டு சட்டசபைக்கு முதல் மந்திரியாகப் போகும் முதல்வர் தன்னை
தமிழர் என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை மாறாக தன்னை திராவிடன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இதைவிட வேறு கொடுமை தமிழினத்துக்கு வேண்டாம்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *