மலையகத்தில் கொவிட் நெருக்கடி காலத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பணிகள்!

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 33 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2021 ) ஏற்பாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நிதிக்கொடுப்பனவு இவ்வாண்டும் அண்மையில் வழங்கப்பட்டது.
![]()
கடந்த காலங்களில் இலங்கையில் வடக்கு – கிழக்கில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றோரை, குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவிய இலங்கை மாணவர் கல்வி நிதியம், மலையகத்தில் முன்னைய மண்சரிவு முதலான அநர்த்தங்களினாலும் தந்தையை இழந்தும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களுக்கும் தற்போது உதவி வருகிறது.
![]()
நுவரேலியா மாவட்டத்தில் நானுஓயா நாவலர் கல்லூரி, டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயம், கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மகளிர் பாடசாலை (Our Lady’ School ) , ஆரம்ப பாடசாலை முதலானவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் (Plantation Community Development Organization) அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பாக இயங்கிவருகிறது.
![]()
இந்த அமைப்பு, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், மலையக தாய்மாருக்கான விழிப்புணர்வு , பாடசாலை மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல், முன்பள்ளி உதவிகள், பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மாதிரி பரீட்சை வினாத்தாள் வழங்குதல், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான கள ஆய்வுகள் முதலான வேலைத்திட்டங்களில் ஆக்கபூர்வமாக இயங்கிவருகின்றது.
![]()
அண்மையில் நடைபெற்ற மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சி, மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு. கே. அரியமுத்து அவர்களின் தலைமையில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் தாய்மார் முன்னிலையில் நடைபெற்றது.
![]()
சமகால கொரொனோ தொற்று நெருக்கடியினால் பாடசாலைகள் இலங்கையில் மீண்டும் கடந்த மார்ச் மாதம் முதல் இயங்கவில்லை. எனினும் பல பாடசாலைகளில் மேல் வகுப்பு மாணவர்களுக்கு மெய்நிகர் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அனைத்து மாணவர்களுக்கும் கணினி – கைத்தொலைபேசி வசதிகள் இல்லை.
இந்தப்பின்னணியில் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப்போராட்டங்களும் கவன ஈர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
![]()
எனினும் மாணவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களை கடந்த காலங்களில் விநியோகித்த மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம், அண்மையில் அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதியுதவிகளை தமது கண்காணிப்பிலிருக்கும் மாணவர்களுக்கு வழங்கியது.
![]()
இம்மாணவர்களின் தேவைகளை அவதானித்துவரும் செல்வி பாமினி செல்லத்துரை, இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியை முன்னர் பெற்று கல்லூரி கல்வியையும் பல்கலைக்கழக கற்கை நெறியையும் பூர்த்தி செய்து, தற்போது நுவரேலியா கல்வி வலயத்தின் உதவிப்பணிப்பாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
![]()
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் இணையத்தளம் : www.csefund.org.au
![]()