கட்டுரைகள்

நீங்கா நினைவுகள்!… பகுதி 3 …. எம்.ஏ.ரகுமான்.

பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் தினகரன் ஆசிரியராகவே எனக்கு அறிமுகமானார். என் சகா நண்பர் ஆர் கனகரத்தினம் எனக்கு முன்பே அவருடன் நல்ல தோழமையுடன் இருந்தவர்.
தினகரனில் நீண்ட காலம் ஆசிரியராக பணியாற்றியவர் விகேபி நாதன் அவர்கள். அவர் பழமைவாதி. தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் ஆக்கங்களே அதில் நிரம்பி வழிந்தன. சுபேர் இளங்கீரன் அவர்கள் மட்டுமே அதில் விதிவிலக்காக இடம்பெற்றார்.
கைலாசபதியும் மு வ போன்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்களோடு சிதம்பர ரகுநாதன் போன்றோரையும் இணைத்து புதுமையை காட்டினார்.
ஆர் கனகரத்தினம் என்னிடம் ஒரு சிறுகதை பற்றிக் கூறினார். அது என் எஸ் எம் ராமையா அவர்களால் எழுதப்பட்ட சிறந்த கதை. அதன் தலைப்பு ஒரு கூடைக் கொழுந்து. அதை நான் கைலாசபதி அவர்களிடம் கொடுத்து பிரசுரிக்க வேண்டினேன். அதுமட்டுமல்ல அதன்பிறகு நான் சிபாரிசு செய்த கதை கட்டுரை கவிதைகளை அவர் பிரசுரித்து மகிழ்வித்தார்.
தினகரன் பத்திரிகை வளர்ச்சிக்காக தமிழகத்திலிருந்து சிவாஜி கணேசனும் முரசொலி மாறனும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இதற்கு முற்போக்கு வட்டம் எதிர்ப்பு தெரிவித்ததோடு கைலாசபதி அவர்களையும் விமர்சித்தார்கள். இது கைலாசபதி அவர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்திருக்க வேண்டும். என்னிடம் மிகவும் வருந்தினார். முதலாளித்துவ நிறுவனம் வியாபார நோக்கோடு செயல்பட நான் எதிர்வினையாற்ற முடியுமா என்று கேள்விக் கணை தொடுத்தார். நான் அவருக்கு ஆதரவாக இருந்து ஆறுதல் கூறினேன். பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற அந்த விழாவிலும் கலந்து கொண்டேன். சிறிது காலத்தில் சகஜ நிலை திரும்பியது. முற்போக்கு வட்டம் மீண்டும் தன் ஆதிக்கத்தை செலுத்தியது. இளங்கீரன் அவர்களின் நாவலோடு பிற ஆக்கங்களும் வெளிவந்தன.
ஏலவே எங்கள் இலக்கிய வட்டத்தைப் பற்றி கூறியிருக்கிறேன்.2 பேர் மட்டுமே நினைவிலிருந்து குறிப்பிட்டேன். அதில் கம்யூனிஸ சிந்தனையுள்ள இரு இளைஞர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் கு ராமச்சந்திரன் மற்றவர் எம்எஸ்எம் இக்பால். இதை படிக்கும்போது என் நண்பர்கள் தங்கள் பெயர்களை பிரகடனப் படுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இச்சந்தர்ப்பத்தில் தேவையை கருதி நானும் நண்பர் கனகரத்தினமும் இலக்கிய ரசிகர் குழுவின் அமைப்பாளர்கள் ஆக பணியாற்றினோம்.
இதுபற்றி எஸ் பொ கூறிய கருத்தினை இங்கு பதிவிடுகிறேன்.
” இலக்கிய ரசிகர் குழு துவங்கி செயற்பட்ட முறையை நான் அறிவேன். அதனுடைய உயிர் இழையாக எம் ஏ ரஹ்மானே செயற்பட்டார். மரகதம் சஞ்சிகையின் வளர்ச்சி கருதி ரசிகர் குழு சிறுகதைப்போட்டி ஒன்றினை நடத்தியது. மரகதம் நான்கு இதழ்களுடன் தன் ஆயுளை முடித்துக்கொண்டது இந்நிலையிலும் அறிவித்தபடி சிறுகதைப் போட்டியை நடத்துவதில் ரஹ்மான் தீவிரம் காட்டி தினகரன் வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் உதவியுடன் அதை நிறைவேற்றினார். ஒரு காலத்தில் கைலாசபதி ரஹ்மானுடன் மிகுந்த நேசம் பாராட்டிப் பழகினார். ரசிகர் குழு நடத்திய
சிறுகதைப்போட்டியில் பரிசுக்குரிய கதைகளை தேர்ந்தெடுப்பதற்கு அவரும் ஒரு நடுவராக பணிபுரிந்தார். இஃது அந்த நேசத்தின் அடையாளமே.”
பேராசிரியர் கைலாசபதி தினகரன் ஆசிரியர் பதவியிலிருந்து விலகியபோது யாரும் பாராட்டுவிழா நடத்த முன்வரவில்லை. அந்த சமயத்தில் முற்போக்கு வட்டத்தின் இடர்ப்பாடுகளை நான் நன்கு அறிவேன். அவர்கள் எழுத்தாளர் மாநாடு நடத்துவதற்கு 2 ஆண்டுகளாக முயற்சி எடுத்தார்கள். பணமும் வசூலித்து வந்தார்கள். பொறுப்பாளராக இருந்து செயற்பட்டவர் பிரேம்ஜி ஞானசுந்தரம். பொருளாளர் புரட்சிக் கனல் ராமநாதன். என்ன நடந்ததென்று தெரியவில்லை. ராமநாதன் பணத்தை இழந்து தவித்தார். ஒரு கட்டத்தில் என் பிரஸில் ஒளிந்து கொள்வார். இந்த நிலையில் அவர்கள் எவ்வாறு கைலாசபதி பாராட்டு விழா நடத்துவர் என்பதை நானும் கனகரத்தினமும் புரிந்துகொண்டு நாமே ஏன் நடத்தக்கூடாது என்று யோசித்து தீர்மானித்து களத்தில் இறங்கினோம்.
எங்களுக்கு தெரிந்த தெரியாத பல எழுத்தாளர்களையும் சந்தித்தோம். ஆதரவு பெருகியது. மகிழ்ச்சியோடு செயற்பட்டோம். இலக்கிய நேசர் ஆ.குருசாமி அவர்கள் நல்லாதரவு தந்ததோடு ஒரு நல்ல கருத்தினையும் வழங்கினார்கள். பரிசுப்பொருள் வழங்காமல் நாணயமாக வழங்கினால் நல்லது என்பதே அவர் கருத்து. அதன்படி இரு தங்க நாணயங்களை பரிசாக அளித்து விழா கொண்டாடினோம். வழக்கமான இலக்கியக் கூட்டங்களுக்கு சரியான இடம் கிடைப்பதில்லை. டைம்ஸ் கே பாலச்சந்திரன் அவர்கள்தான் முதன் முதலில் தப்ரபேன் எனும் ஸ்டார் ஹோட்டலில் இலக்கிய கூட்டங்கள் நடத்தினார். அவர் என் நெருங்கிய நண்பர் அவரது அறிமுகத்துடன் நானும் அதே ஹோட்டலில் பல கூட்டங்களை நடத்தினேன். கைலாசபதி விழாவிற்கு அந்த ஓட்டல் கிடைக்காததால் முதல்முறையாக புதிய ஹோட்டல் ஆன ஹோட்டல் மெட்ரோபோலில் முதல் மாடியில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். அது மிக விசாலமான மண்டபம். நூற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா பத்திரிகைகளை சேர்ந்தவர்களும் ஒரே இடத்தில் கூடிய கூட்டம் அதுதான் என்று அன்று எல்லோராலும் பாராட்டப்பட்டது.
இதனால் நாங்கள் நிறைய எழுத்தாளர்களையும் அறிஞர்களையும் சந்தித்து பழகும் வாய்ப்பு கிட்டியது. உதாரணத்திற்கு சேம்பர் ஆஃப் கொமர்ஸ் செயலாளராக இருந்த எம் எம் உவைஸ் அவர்களை கோட்டையிலே சந்தித்தோம். அவர் நல்லாதரவு தந்ததோடு ஆலோசனைகளையும் வழங்கினார். இவ்வாறு நிறைய இலக்கிய நண்பர்கள் கிடைத்தது எங்களுக்கு கிடைத்த பெருபேறாகும்.
அன்பர்களே! சில நண்பர்களை தேடி ஏங்கிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து தெரிந்தால் எனக்கு அவர்களின் தொலைபேசி எண்ணை அறியத்தாருங்கள்.
1 . கலாநிதி சி. தில்லைநாதன்
2 . ஏசிஎம் சுபியான் (கல்விக்கந்தோரில்
பணியாற்றியவர்)

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *