இலக்கியச்சோலை

வாழ்நாள் சாதனை படைத்தவருக்கு வானமுதம் வானொலியில் நான் வழங்கிய வாழத்துச் செய்தி!… சங்கர சுப்பிரமணியன்.

தேனீ போன்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் திரு. முருகபூபதி அவர்கள் இம்மாதம் ஜூலை பதிமூன்றாம் நாள் எழுபதாவது அகவையை தொட்டிருக்கிறார். இவரை நான் ஆங்கிலேயர் ஆட்சியுடன் ஒப்பிடுகிறேன்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக நீங்களாகவே எண்ணிக் கொண்டால் அது முற்றிலும் தவறு என்பதை நீங்களே உணர்வீர்கள்.

ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதவன் மறைந்ததில்லை என்று ஒரு சொல் வழக்கில் இருந்ததுண்டு. அதாவது ஆங்கிலேயர் பெருவாரியான நாடுகளைக் கைப்பற்றி ஆண்டபோது ஒரு நாட்டில் ஆதவன் மறைந்தாலும் இன்னொரு நாட்டில் ஆதவன் தோன்றிவிடுவானாம். அதைப்போலவே இவரது படைப்பு ஏதவது ஒரு தளத்தில் வந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு பலரால் நன்கு அறியப்பட்ட திரு. முருகபூபதி அவரகளுக்கு பலர் பலவிதமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் வானமுதம் வானொலியும் இன்பத்தமிழ் வானொலி ஊடாகவும் ஜூலை இருபத்தேழாம் நாள் மெல்பனில் இரவு எட்டுமணி முதல் ஒன்பது மணிவரை வாழத்துச்செய்திகளை வழங்கி கௌரவித்தது. இந்த வாழ்த்துச் செய்திகளை மிகவும் செம்மையான முறையில் வானொலி அறிவிப்பாளர் திரு. வில்லியம் ராஜேந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

பல முத்துக்களைக் கோர்த்து அளித்த வாழ்த்து மாலையில் நானும் ஒரு முத்தாக இருந்தது அவர் எனக்களித்த கௌரவமாக எண்ணி மகிழ்கிறேன். அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை அக்கினிக்குஞ்சு வாசகர்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

வானமுதத்தி்ல் நான் வழங்கிய பிறந்தநாள் வாழ்த்து:

அன்னைத் தமிழை அலை கடலுக்கு அப்பாலும் அரியணையில் ஏற்றி அணிசெய்து அழகு பார்க்கும் அன்புத் தமிழரில் ஒருவர் திரு. முருகபூபதி.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்ற ஔவைப் பிராட்டியின் கருத்திற்கிணங்க வள்ளுவனும்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்று வழிமொழிகிறான். இதிலிருந்து உலகுவாழ் மக்களுக்கு கணிதநூலும் எழுத்து நூலும் எவ்வளவு இன்றியமையாதது என்பது வெள்ளிடை மலை. எழுத்து நூல் என்பது வேறொன்றுமில்லை. இலக்கணத்துடன் இலக்கியமாக அரசியல், பொருளியல், கவிதை, காப்பியங்கள், சமயம், தத்துவம், மருத்துவம் என பலவற்றை உள்ளடக்கியதாகும்.

புலம்பெயர் தமிழர் எங்கு சென்றாலும் தமிழையும் எடுத்துச் செல்கின்றனர். மாந்தருக்கு எண்ணும் எழுத்தும் கண் என்பதைப்போல தமிழுக்கு கலையும் இலக்கியமும் அழகாகும். ஆனால் தமிழருக்கோ கலையும் இலக்கியமும் உயிர் மூச்சாகும். இந்த உந்துதலே இருபது ஆண்டுகளுக்கு முன் திரு. முருகபூபதி போன்ற இலக்கிய ஆர்வலர்கள்  ஒன்றினைந்து ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்ற அமைப்பை நிறுவ வழிவகுத்தது.

தமிழர் எந்த ஒரு செயலையும்
சிந்திக்காமல் செயலாற்ற விரும்புவதில்லை. எண்ணித் துணிக கருமம் என்பதற்கமைய முன்னெடுக்கப்பட்ட இச்சங்கம் இருபது ஆண்டுகளில் எத்தனையோ செயற்கரிய செயல்களை செய்து சிறந்து விளங்குகிறது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் என்னை தமிழ் ஆர்வலர் திரு. ஆவூரான் சந்திரன் அவர்கள் திரு. முருகபூபதி அவர்களிடம் அறிமும் செய்து இவ்வமைப்பில் இணைத்தார்.

திரு. முருகபூபதி அவர்களைப்பற்றி தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இருப்பினும் நேரடித் தொடர்பு அப்போதுதான் எனக்கு கிடைத்தது. பூவுடன் சேர்ந்த நாறும் மணம்பெறும் என்பதைப்போல் அவர்மூலமாகவும் மற்றும் அவருடன் சங்கத்தின் முதுகெலும்பாக இருந்து செயலாற்றும் அன்பர்கள் மூலமாகவும் அச்சங்கத்தில் தலைவராக இருந்து பணியாற்றிய நான் தற்போது துணைத்தலைவராக இருந்து வருகிறேன்.

சாதாரணமனிதர்களுடன் பல ஆண்டுகள் பழகியும் பெறமுடியாத நற்பண்புகளை அவரிம் பழகிய சில ஆண்டுகளிலே பெற்றேன். பழகுவதற்கு மட்டும்
எளிமையானவர் அல்ல அவரே எளிமையானவர். உண்மையை ஓழித்துப் பேசா உயர்குணமுடையவர். சிலரைப் பார்த்திருப்போம். அவர்கள் கடந்தகால வாழ்க்கை பூத்துக் குலுங்கினால் மட்டுமே மற்றவர்களுடன் பகிர்வார்கள். இவர் தாம் எழுதிய நூலொன்றில் தனது இளமைக்கால வறுமையைப் பற்றி கூறும்போது அதை வாசிக்கக்கூடிய திடமான மனத்தினரையும் மனத்தில் பாதிப்பு ஏற்படுத்தி கண்களில் இருந்து கண்ணீரை உதிர்க்க வைக்கும்.

நானும் அவரைவிட மோசமான வறுமையை இளமையில் சந்தித்திருப்பதால் அவரது எழுத்து அப்படியே திரைப்படமாக என் கண் முன் விரிந்தது. வறுமையை சந்தித்த எழுத்தாளர்கள் எல்லாம் எழதினாலும் அவ்வெழுத்துக்கள் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு இருக்குமா? என்பது ஐயப்பாடே. ஏனெனி்ல் நூலில் பதிந்திருக்கும் எழுத்து எழுத்தாக மட்டுமின்றி அது நம்முடன் பேசவேண்டும். நம் உணர்வுகளை அசைத்துப்பார்க்கவேண்டும். சிந்திக்க வைக்கவேண்டும் அழவைக்கவும் சிரிக்கவைக்கவும் கோபமடையத்தூண்டவும் வேண்டும்.

இந்த வழமைகளெல்லாம் வளமாகப் பெற்றிருந்ததால் அவரால் சாகித்திய அகாடமி விருதினைப் பெறவைத்தது. இவர் சாகித்திய விருது பெற்றவரா என்று வியப்படையவைக்கும் அலட்டிக் கொள்ளாத அற்புத மனிதர். எழுத்துலகைத் தாண்டி இலங்கைவாழ் ஏழை மாணவர்களின் மீது இரக்கம் கொண்டு பல சமூகப்பணிகளை கையில் எடுத்துள்ள இவர் இம்மாதம் ஜூலை 13ம் தேதி எழுபதாவது அகவையில் தடம் பதித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாடும் இவரைப்பற்றி காலவரையின்றி பேசிக் கொண்டே செல்லலாம். இத்தருணத்தில் இவரை வாழ்த்தி இவருக்காக ஒரு கவிதையை திரை இசை மெட்டில் வழங்குகிறேன்.

அமிழ்தைப்… பொழியும்… தமிழில்…..
தமிழ் அமுதைப் பொழிபவர் பூபதி…..
அமுதைப் பொழிபவர் பூபதி…..

அமிழ்தைப் பொழியும் தமிழில்
தமிழ் அமுதைப் பொழிபவர் பூபதி
அமுதைப் பொழிபவர் பூபதி

அமிழ்தைப் பொழியும் தமிழில்
தமிழ் அமுதைப் பொழிபவர் பூபதி
அமுதைப் பொழிபவர் பூபதி

எத்தனை எழுத்தாளர் இங்கு இருப்பினும்
என்னைக் கவர்ந்தவர் இவரே
எத்தனை எழுத்தாளர் இங்கு இருப்பினும்
என்னைக் கவர்ந்தவர் இவரே

இவரின் எளிமை எழுத்தின் வலிமை
இவரின் எளிமை எழுத்தின் வலிமை
மாந்தரை ஈர்த்து மேதை என்றிட

அமுதைப் பொழிபவர் பூபதி
அமுதைப் பொழிபவர் பூபதி

அமிழ்தைப் பொழியும் தமிழில்
தமிழ் அமுதைப் பொழிபவர் பூபதி
அமுதைப் பொழிபவர் பூபதி

எழுத்தை வழியாய் கொண்டவர் இவரும்
இரக்கமும் கொண்டவரானார்
எழுத்தை வழியாய் கொண்டவர் இவரும்
இரக்கமும் கொண்டவரானார்

இலங்கை மாணவர் கல்விநிதியத்தின்
இலங்கை மாணவர் கல்விநிதியத்தின்
தலைவராய் இருந்து தகைமை செய்தே

அமுதைப் பொழிபவர் பூபதி
அமுதைப் பொழிபவர் பூபதி

அமிழ்தைப் பொழியும் தமிழில்
தமிழ் அமுதைப் பொழிபவர் பூபதி
தமிழ் அமுதைப் பொழிபவர் பூபதி

இக்கவிதையுடன் நிறைவு செய்து விடைபெறுகிறேன். நன்றி.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *