கட்டுரைகள்
நீங்கா நினைவுகள்!… பகுதி 2 …. எம்.ஏ.ரகுமான்.

என் முதல் பகுதியை படித்த நண்பர்கள் தொடர்ந்து எழுதும்படி உற்சாகம் அளித்தார்கள். அவுஸ்ரேலிய நண்பர் அக்கினிக் குஞ்சு பாஸ்கர் இன்னும் எழுதி இருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார். என் முதல் சந்திப்பை பற்றி மட்டுமே எழுதினேன்.
நண்பர் சிவகுமாரன் ஆங்கிலத்தில் எழுதுவதிலும் வல்லவர். எனது “பூ” சிறுகதை பற்றி ஆங்கில ஏட்டில் அவர் எழுதிய விமர்சனம் மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது. நான் தமிழ்நாடு வந்த பின்னர் எங்களிடையே தொடர்பு இல்லாது போயிற்று.
2000ம் ஆண்டில் அவர் சென்னை வந்த போது எஸ் பொ அவர்களை சந்திக்க மித்ராவுக்கு வந்தார். எனது அச்சகத்துக்கு அடுத்தது தான் மித்ர வெளியீடு. அங்கு என் மூத்த மகள் ஜஹான் ஆரா பணியாற்றினார். அங்கு வந்த சிவகுமாரன் தான் யார் என்று சொல்லாமல் என்னை அழைத்து வரப் பணித்தார். நான் சென்று பார்த்தபோது சிவகுமாரன் என்பதை தெரிந்து கொண்டேன். அடையாளம் காண முடியாத அளவுக்கு தலை எல்லாம் வெள்ளை முடியாக இருந்தது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டின் பின் சந்தித்து அளவளாவினோம். அதன் பின்னர் ஆண்டுதோரும் புத்தக கண்காட்சிக்கு வரும்போதெல்லாம் சந்தித்து இலக்கிய சம்வாதம் புரிவோம்.
இன்னொரு சுவையான சம்பவம்.
என் இளைய மகள் ரோஷன் ஆரா திருமணத்திற்கு நீண்ட வாழ்த்து கடிதம் தமிழிலே எழுதியிருந்தார். அக்கடிதம் கிடைத்திருந்தால் இங்கு பதிவு செய்திருப்பேன்.
2013இல் எனது 5 நூல்கள் வெளியிடுவதற்காக அபுதாபி சென்றிருந்தேன். அந்த நேரம் பலருடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஃபேஸ்புக்கில் இணையுமாறு என் இளையமகள் வேண்டினாள். நான் முதலில் அதெல்லாம் எனக்கு தெரியாது வேண்டாம் என்றேன், மகள் விடவில்லை. அது இருந்தால் தான் உங்களால் எவருடனும் சுலபமாக தொடர்பு கொள்ள முடியும் என்று கூறவே ஒப்புக்கொண்டேன்.
அங்கு நான் இருந்த சமயத்தில் ஒரு நாள் சிவகுமாரன் தொலைக்காட்சியில் தோன்றியதாக மகள் கூறினாள். உடனே நான் அவருடன் தொடர்பு கொண்டேன். தொலைபேசியில் பேசும்போது நீங்களும் ஃபேஸ்புக்கில் வாருங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் ஐயோ அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்கள் மெயிலில் வாருங்கள் என்றார்.
இன்று சிவகுமாரன் ஃபேஸ்புக்கில் தவறாது வந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். நான் என்றோ ஒரு நாள் வருகிறேன்.
காலத்தின் கோலம்
2014இல் நான் கத்தாரில் இருந்து இலங்கை வழியாக சென்னை திரும்பும் நேரத்தில் நண்பர் கவிஞர் ஜின்னா ஷரிபுத்தீன் அவர்களின் அன்பு கட்டளைக்கிணங்க கொழும்பிலே எனது ஐந்து நூல்கள் அவரது இல்லத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. அக்கூட்டத்தில் சிவகுமாரன் கலந்து கொண்டார். இலங்கையில் அவருக்கு மட்டுமே பார்சலில் நூல்கள் அனுப்பி இருந்தேன். இருந்தும் அவர் நிகழ்ச்சியில் கலந்து எனக்கு பெருமை சேர்த்தது இன்றும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்று நாங்கள் இருவரும் பேஸ்புக்கில் தொடர்பு கொள்வது ஆச்சரியமும் அதிசயமும் அல்லவா!
ஒரு திருத்தம்:
தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் என்பது தவறு. சோ சிங்கார வேலன் என்பதே சரி
![]()