பராரி!…. ( சிறுகதை ) ….. அண்டனூர் சுரா.
கறந்தபால் முலைப்புகா, கடைந்த வெண்ணைய் மோர்ப்புகா, உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா, விரிந்தபூவும், உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா, நான் மட்டும் குதம் புகுவேனா, எனக் கேட்பதைப் போலதான் அந்நரகல் இருந்தது. நாற்றத்தில் மீப்பெருநாற்றம், நரகல் நாற்றம். எம்மாம் பெரிய பூட்டென்ன, முள், பத்தை, புதர்களைக்கொண்டு அடைத்தென்ன? இனி போடுவதாக இருந்தால், ஆசனவாய்க்குத்தான் பூட்டுப்போட வேணும். அதற்கு மனப்பூட்டைத் தவிர ஏது வேறு பூட்டு?.
உதிரி பனைப் பூவைப்போல, மலங்கள் சுற்றிலும் கறுத்துக் காய்ந்துக் கிடந்தன. சுற்றுவட்டார வீடுகளில் வளர்க்கப்பட்ட கோழிகள், அதைக் கால்களால் சீய்க்கவும், ஒரு கொத்துக்கொத்தி, அதைப் பாதித் தின்னவும், மிச்சத்தை உதறுவதுமாக இருந்தன. கோழி உதறுவதைப் பார்த்து காக்கைகள் கிசுகிசுத்துக்கொண்டன. காக்கை பாஷை மனிதர்களுக்குப் புரியாது, ஆனால் கோழிகளுக்குப் புரிந்தது. அனைத்துண்ணியென எங்களைச் சொல்கிறார்கள், இந்த மகாத்திண்ணி மாமனிதர்கள்,.. அதைக் கேட்டு கோழியும் குஞ்சுகளும், விக்கல் எடுப்பதைப்போல சிரிக்கச் செய்தன.
ஊருக்கும் ஒதுக்குப் புறத்தில்தான் அந்தக் கழிப்பறை இருந்தது. அதுவாகவே கட்டிக்கொண்டிருந்தால்கூட, நன்றாகத் தன்னை கட்டிக்கொண்டிருந்திருக்கும். ஒப்பந்தக்காரர்கள் கட்டிய கழிப்பறை அது. அண்டவாசல் ஆயிரம், பிரசண்ட வாசல் ஆயிரமென ஆங்காங்கே, மனிதக் கண்களுக்குத் தென்படாத ஓட்டைகள் இருந்தன. இடகலை, பிங்கலை, சுழுமுனையென மூச்சுக்காற்று வாங்க, சுவற்றில் தாறுமாறான விரிசல், வெடிப்புகள்.
“என்னே சார் இப்படிக் கட்டியிருக்கிறீங்க, விரிசலும் விரிப்புமா?” ஊழியர் ஒருவர், நின்று பதமாகக் கேட்டார். அவருக்கு இது வேண்டாத வேலை. கேட்க வேண்டிய இடத்தில், கேட்காது நிற்பது பெருங்குற்றம், எனப் பட்டதால் அதை அவர் கேட்டிருந்தார்.
“ஏ யாரப்பா நீ, மனுசனுக்கே ஒன்பது ஓட்டைகள்” என்றார் கழிப்பறையைக் கட்டியவர்.
“உன்னைத் தண்ணீயில்லாத காட்டுக்குத் தூக்கி அடிக்கணும்”
“இப்ப எந்த ஊரில்தான்தான் சார் தண்ணீர் இருக்கிறது?” எனக் கேட்டு, உள்ளுக்குள் புழுங்கவும் செய்தார் அந்த ஊழியர்.
படுக்கப் பாய்க்கொடுத்து, தானும் கூட படுக்க வேணும் கதைதான், வங்கார ஓடையின் கதை. நல்ல வேளை குளத்தில் ஆண்டு முழுக்கவும், கால்கை கழுவிக்கொள்ளத் தண்ணீர் கிடக்கிறது. இல்லையேல், நிலஅபகரிப்பாளர்களால் இது பூங்காநகரோ, மகாத்மா நகரோ, கோல்டன் நகரோ. என்றாகி ‘ குளத்தைக் காணோம்’ எனப் புலனத்தில் வலம் வந்திருக்கும். இந்தக் குளத்துக் கரை மட்டும் இல்லையென்றால் இங்கே பள்ளிக்கூடும் ஏது, பால்வாடி ஏது? கரையைச் சுற்றிலும் அரசுக் கட்டிடங்கள்.
கிழக்குக்கரை மேனிலைப் பள்ளி, தெற்குக் கரை தொடக்கப்பள்ளி, மேற்குக் கரையில் வெறும் கான்கிரீட் கூடுகளாக அரசுக் கட்டிடங்கள்.
வட்டார வள மையம், அங்கன்வாடி அலுவலகம், சிமெண்ட் குடோன், கிராமப்புற கிளை நூலகம், சமுதாயக்கூடம்,…இத்தனைக்கும் அக்குளம்தான் இடம் கொடுத்திருந்தது. இத்தனையும் கொடுத்து, திறந்தவெளி கழிப்பறையாகவும் அந்தக் குளம் இருந்தது.
ஊருக்கும் வெளியே சற்றே தூரத்திலிருக்கும் இந்த சமுதாயக்கூடத்தை மக்களும் அதிகாரிகளும் பயன்படுத்தாததற்கு ஒரே காரணம், அதைச்சுற்றி மூட்டமாக எழும் நாற்றம்தான். தாருகாவனத்து ரிஷிகள் யாகத்தீயிலிருந்து ஏவிய யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து இடுப்பில் ஆடையாக அணிந்துகொண்ட சிவனே வந்தாலும், இந்த நாற்றத்தை இந்தக் குளக்கரையிலிருந்து உரித்துப் பிரித்துவிட முடியாதளவிற்கு அதன் நாற்றமிருந்தது. இன்னும் மழைக்காலத்தில் பள்ளிக்கூடம், அங்கன்வாடியில் உட்கார்ந்துப் பார்க்க வேண்டுமே?
குளத்தின் கரையில் ஒன்றுக்கு இரண்டு அரச மரங்கள். ஆற்றாங்கரை அரசமரம் வேரோடு வீழும், என்பது முதுமொழி. இது குளத்தாங்கரை என்பதால் என்னவோ, கஜா புயலுக்குப் பிறகும் இவ்விரு மரங்களும் கிளையை மட்டும் புயலுக்குக் கொடுத்து, வேரோடு விடைத்து நின்றன. ஒன்றின் கீழ் பிள்ளையார்க்கோவில். மற்றொன்றில் ஐயப்பன் கோவில். பிள்ளையார் கோவிலுக்கும் பின்னே, ஒருவன் எழுதி வைத்துச்சென்றான். “இது புனிதமான இடம். இங்கு அசுத்தம் செய்யாதீர்கள்” என்று. ‘கோயிலாவது ஏனடா, குளமாவது ஏனடா’, மறுநாள் முக்கால் வயிற்றை ஒருவன் இறக்கி வைத்துச்சென்றிருந்தான். எழுதியவன் அதைப் பார்த்து திகைத்து நின்றுப் போனான். எந்தக் கையில் எழுதினானோ, அதே கையால் அழிக்கவும் செய்தான். ஆகம விதி கோவிலுக்குள் பொருந்தும், குளத்தாங்கரைக்குப் பொருந்துமா?
ஏகக் குளத்தங்கரையும் ஒரே நாற்றம்தான். அந்த நாற்றத்தையெல்லாம் தூக்கிச்சாப்பிட்டு ஏகாந்தமாக ஏப்பவிடும் நாற்றமாக இருந்தது அந்தக் கழிப்பறையின் நாற்றம். சமுதாயக் கூடத்திற்குச் சொந்தமான அக்கழிப்பறை, மழையால் நனைந்து, நைந்து, உதைத்தால் அண்டம் பிண்டமாய் உடையுமளவிற்கு இருந்தது. காலை, மாலை எந்நேரமும் அடைஅடையாக ஈக்கள். மூட்டம் மூட்டமாக கொசுக்கள்.
மூச்சை அடங்கி வாழ்ந்தால், மூன்று யுகம் வாழலாம். அப்படியாகத்தான் அலுவலக ஊழியர்கள் வாழப் பழகியிருந்தார்கள். மூச்சை அடக்குதல் ஒரு பெருங்கலை. அவர்கள் அடக்கலாம், அவர்களைப் பார்வையிட வரும் அதிகாரிகளால் அடக்க முடியுமா? ஊழியர்களை மோப்பம் பிடிக்க வரும் அவர்கள் மூச்சைப் பிடித்தால் என்னாகும்? பார்வையிட வந்த ஓர் அதிகாரி, தூய்மை இந்தியாவில் இப்படியொரு நாற்றமா? பார்வை ஏட்டை எடுத்து, விரித்து, பச்சைமையால் வரி வரியாக எழுதிச் சென்றார். சுத்தம் என்கிற சொல்லுக்கு இங்கு அகராதியிலும் பொருளில்லை.
பச்சைக்கென்று ஒரு சக்தி இருக்கிறது. பச்சை மை சும்மா இருக்குமா? அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மை இந்தியா ஊழியர்களானார்கள். இரண்டு கடைநிலை ஊழியர்கள் நாசியோடு சேர்த்து வாயையும் இறுகக் கட்டிக்கொண்டு, பக்கத்திலிருந்த வங்கஓடையில் குடம் குடமாக தண்ணீர் எடுத்து, ஊற்றி, இறைத்து, விளக்குமாற்றால் அடித்துச்சாத்திக் கழுவி, குளோரின் தெளித்து, அதற்கொரு பெரிய பூட்டொன்று போட்டுவிட, கடைக்கு ஓடினார்கள். திரும்பிவந்து பார்க்கையில், அதற்குள் ஒருவர் ‘முக்கிய ’ வேலையில் இருந்தார்.
“ உனக்கு அறிவிருக்காய்யா, நீ ஆம்பளே தானே, காட்டுவெளிக்குப் போனால் உன் காலுல என்ன பாம்பாப் பிடுங்கிடும்”
“பாம்பெதுவும் பிடுங்கிடுமெனுதான், இங்கே உட்கார்ந்தேன்”
“நாறித் தொலையுதில்ல”
“நாறாத நரகல் எங்கே இருக்கு?”
கிழியாத சட்டை எங்கு இருக்கு, எனக் கேட்பதைப்போலதான் அதை அவர் கேட்டிருந்தார். குளத்தடிக்குச் சென்று, கால் கழுவிக்கொண்டு பிட்டத்தோடு தொடைகளைத் துடைத்துக்கொண்டு, விட்ட இடத்திற்கே வந்தார். “என்ன சொன்னீங்க?”
“எட்டிப் போனா என்னனு கேட்டேன்”
“கழிப்பறை கட்டுனது எதுக்காம்?”
“பேழுறதுக்குத்தான். தண்ணீயோடப் பயன்படுத்தினால் நாங்க ஏன் கேட்கப் போறாம்”
“தண்ணீ இருந்தா பயன்படுத்த மாட்டோமா?”
இனி பேச என்ன இருக்கிறது! மரத்தை வைத்தவன், தண்ணியும் ஊத்திருந்திருக்கணும்! ஊழியப் பெண்கள் உதட்டோடு சேர்த்து நாசியைச் சுழித்துக்கொண்டு, அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். அவர் வேட்டியால் கால், கைகளைத் துடைத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து நழுவினார்.
மறுநாள் ஊராட்சி மன்றம், அதற்கு குழாய்ப் பதித்து, தண்ணீர் வசதி செய்துகொடுத்தது. தண்ணீர் கத்திப் போன்றது. அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் நாலாபுறமும் உடைக்கவும், பெருக்கெடுக்கவும், பள்ளம், குழிகளில் தேங்கி, சாலையில் ஓடுவதாக இருந்தது. யார் அதற்குத் தண்ணீர் வசதி செய்துகொடுத்தார்களோ, அவர்களே அதைத் துண்டிக்கவும் செய்தார்கள்.
பழைய நாற்றம் திரும்பவும் தொற்றிக் கொண்டது. பச்சைப்புழு குளவியாக மாறுவதைப்போல, அதிகாரி எழுதிச் சென்றிருந்த பச்சை மை மாறச் செய்தது. நாற்றத்தைப் போக்க, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், என விளக்கம் கேட்டு, மெமோ வந்தது. மறுநாள் ஊழியர்கள், அலுவலகத்திலிருந்த அரிவாள்மனை, களைக்கொட்டுகளை எடுத்தார்கள். சுற்றிலுமிருந்த முட்புதர்களை வெட்டிக்கொத்தி, கழிப்பறைக் கதவை இறுக அடை, அடையென அடைத்தார்கள். மலக்குடம் மீதினில் மஞ்சள் பூசியென்ன, சவ்வாது பூசியென்ன, குடம் நாறத்தானே செய்யும். சனி, ஞாயிறு கழித்து திங்கள் அலுவலகம் திரும்புகையில், பழையக் குருடி, கதவைத் திறடி, எனக் கழிப்பறைக் கதவு திறந்து கிடந்தது.
ஊராட்சி மன்றம் தாண்டி, புகார் ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்றது. நான்கைந்து துப்புரவாளர்கள் அவ்விடத்திற்கு வந்தார்கள். அன்றைய தினம் முழுக்கவும் அதைச் சுத்தம் செய்தார்கள். மலக்குடலையும், சலக் குழியையும் சுத்தம் செய்யும் மருத்துவர்கள் போலதான் அவர்களின் தூய்மைப் பணி இருந்தது. இவ்வளவு பெரிய பூட்டை இந்தக் கதவின் கொண்டித் தாங்குமா எனப் பாராது, அதில் பூட்டைத் தொங்கவிட்டார்கள். மறுநாள் கதவும் கொண்டியும் வெல்டிங் செய்ய வேண்டியிருந்தது. ஒருநாள் விடுத்து மறுநாள் வந்து பார்க்கையில், கதவு வெளியே கழண்டுக் கிடந்தது.
“சுத்தம் செய்வதுதான் எங்க வேலை. அதை சுத்தமாக வைத்திருப்பது யாரோட வேலை சார்?” அதிகாரியிடமே ஒரு துப்புரவு பெண் கேட்கச் செய்தார்.
“அதிகாரியிடம் இப்படியெல்லாம் பேசாதேடி”
“அங்குசம் யானையை அடக்கும். யானைப்போடுற விட்டையை அடக்குமா?”
“என்னடி நான் சொல்லிட்டேன், பழமொழியெல்லாம் கட்டுற”
“அப்ப நீயே சொல்லு, கழிப்பறையைச் சுத்தமாக வச்சிக்கிறது யாரோட பொறுப்பு?”
“உனக்கென்னடி வந்தது, பணம் கொடுக்கப்போறாங்க, நாம சுத்தம் செய்யப்போறோம்”
பயன்பாட்டிலுள்ள எதையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கழுவலாம், துடைக்கலாம். பயன்பாட்டிலில்லாத ஒன்றைக் கழுவி என்ன பயன்? அதன்பிறகு, கூப்பிட்டாலும் அக்கழிப்பறைப் பக்கம் அவர்கள் போவதாக இல்லை.
வேறு என்னதான் வழி, ஊழியர்கள் நாற்றத்துடன் வாழப் பழகிக்கொண்டார்கள். நாற்றத்தை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடிந்தது. இதற்கென்று எத்தனையோ வாசனைத் திரவியங்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன. ஏன் பத்தி ஒன்று போதாதா? வாசனைக்கு மாற்று உண்டு. அடைஅடையாக, சடைசடையாக வரும் கொசு, ஈக்களைத்தான் அவர்களால் தடுக்க முடியவில்லை. என்ன செய்யலாமென்று யோசிக்கையில்தான், பராரி போன்றொருவர் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். குறுகிச் சிறுத்த உருவத்தினராக, முதுமையினால் உலர்ந்த சறுகு போல இருந்தார். அவரது ஆடை கந்தல்கோலமாக, களைந்த தலைமயிர்களுடன் முதிர்ந்த பைத்தியத்தின் உருவகமாக இருந்தார். வந்தவர், அங்கன்வாடி அலுவலகத்தின் ஜன்னல் வழியே கை நீட்டி நின்றார்.
சிலர் அவரை விரட்டி அடித்தார்கள். ஒருவர், “ அவர் பார்க்கப் பாவமாக இருக்கிறாரடி”, எனச் சொல்லி ஒரு உரூபாய் நாணயத்தை எடுத்து அவரிடம் நீட்டினார். கொடுத்துமென்ன, நீண்டக் கை நீண்டபடியே இருந்தது. ஊழியர், ஜன்னல் வழியே குனிந்து நின்றவரின் முகத்தைப் பார்த்தார். மூங்கல் கழியைப்போல முன்பல் தூக்கல். வக்கை நாடி, ஒட்டகச்சிவிங்கியைப் போல நீண்ட கழுத்து, உடம்பெங்கும் மயிர்கள் முளைத்தப் பெருங்காடு. கருத்தவரா, வெளுத்தவரா, சிவந்தவரா, அவர் குளித்தால் அல்லது குளிப்பாட்டினால் தெரியக்கூடும்.
அவருக்குக் கொடுத்துப் பழகினால், தினமும் கை நீட்டுவாரே, என்கிற பயம் அவர்களுக்கு. ஆனால் ஒன்று புரிந்தது. பசிக்கிறது என நீளும் கைக்கும், எதையேனும் கொடுங்கள் என நீளும் கைக்கும் வித்தியாசம் தெரிந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். பசிக்கிறதென நீளும் கை விரிந்திருப்பதில்லை. அவரது கை , அவரது வயிற்றைப் போலவே குழி விழுந்துபோயிருந்தது.
ஒரு ஊழியர், குளத்திற்கு ஓடினார். ஒரு தாமரை இலையைப் பறித்துவந்து அதில் இரண்டு பிடி சோறு வைத்து, நீட்டினார். அதை வாங்கிக்கொண்டவர், அந்த இடத்திலிருந்து நழுவி, கழிப்பறையொட்டியுள்ள புளியமரத்தடியில் ஒதுங்கினார்.
அவருக்கென்று தனியே வயிறு இருந்ததைப்போல, அவருக்கென்றும் ஒரு முடிச்சு இருந்தது. தலை அளவிற்கான முடிச்சு அது. அம்முடிச்சு தலை மயிற்று நிறத்திலேயே இருந்தது. அது தவிர, இரண்டு கொட்டாங்குச்சிகள் வைத்திருந்தார்.
அலுவலக நாட்களில் அவர் எங்கே சென்றாலும், சாப்பாட்டு நேரத்திற்கு வந்துவிடுபவராக இருந்தார். அவருக்கு அங்கே சோறு கிடைக்க, அலுவலகம், பள்ளிக்கூடம், அங்கன்வாடியென சுற்றிலும் அன்னதான இடங்களாக இருந்தன. ஒரு வேளைதான் அவர் சாப்பிடுபவராக இருந்தார். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் அங்கே இங்கேயெனச் சுற்றித் திரிந்தாலும், அலுவலகம் நாட்களில், புளிய மரத்தடிக்கு வந்துவிடுபவராக இருந்தார்.
தினமும் ஒரு நாள் அவருக்கு உணவு கொடுக்க வேண்டும், என்கிற வரிசைக் கிரமத்திற்கு ஊழியர்கள் வந்தார்கள். இவரால், ஏதேனும் நன்மை கிடைக்கக்கூடும், என்பதாக அவர்கள் நம்பினார்கள். அவர் ஜன்னல் பகுதிக்கு வருகையில், ஒருவித நாற்றத்தை நுகர்ந்திருந்த அவர்கள், அவரை அருகினில் வரவிடாது, அவர் உட்கார்ந்திருக்கும் இடத்திற்குச் சென்று உணவு வழங்கி வர செய்தார்கள்.
ஒரு நாள் அடை மழை. மதியம்வாக்கில் தொடங்கியிருந்த அம்மழை, மாலை வரைக்கும் விடாது பெய்துகொண்டிருந்தது. அவர், முடிச்சைத் தூக்கித் தலையில் வைத்தவராய், கிளை நூலகக் கட்டிடம், பள்ளிக்கூடத்தின் வெளிக்கூரை, வளமையம் வாயில், அங்கே இங்கேயென ஒதுங்கி, முழுதாக நனைந்து, தொப்,தொப்பென அங்கன்வாடி அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்டிருந்தார்.
ஊழியர்கள் இரண்டு பேர், அவரை அலுவலகத்தை விட்டு வெளியே விரட்ட முயன்றார்கள். இரண்டு பேர் பாவம் நின்றுவிட்டு போகட்டும், என்றார்கள். அவர் ஒற்றைக் காலில் கொக்கைப் போல நிற்கலானார். ஒரு கால் அவரையும் அறியாமல் காலில் மொய்த்துக்கொண்டிருந்த ஈக்கள், கொசுக்களை விரட்டுவதாக இருந்தது. அவரிடமிருந்து வந்திருந்த துர்நாற்றத்திற்கு அந்தக் கால்ப்புண்ணே காரணமாக இருந்தது.
ஐந்து மணிவாக்கில், மழை விட்டு தூவானமாகத் தூவியது. அலுவலர்கள், ஜன்னல் கதவுகளைச் சாத்தத் தொடங்கியதும், அவராகவே அந்த இடத்திலிருந்து வெளியேறினார். அவர், அங்கே இங்கேயென ஒதுங்கி, பிறகு கழிப்பறைக்குள் மெல்ல நுழைந்துவிட்டிருந்தார்.
கழிப்பறையின் இருண்மையும், குறுகலான அடைசலும், அவரது திறந்த உடலுக்கு இதமாக இருந்திருக்க வேணும். அதற்குள் நுழைந்துகொண்டவர், அதன்பிறகு அவர் அதை விடுத்து வெளியே வருவதாக இல்லை. வெளிக்குச் செல்ல மட்டும், அவர் வெளியே வருவதாக இருந்தார். அதற்காக அவர் நீண்ட தூரம் சென்று வருபவராக இருந்தார். அப்படியாகச் சென்று திரும்புகையில், கீழே கிடக்கும் பெரிய கல், உடைந்த பானைகள், கொட்டாங்குச்சி, விறகு,..எனப் பலதையும் பொறுக்கிவந்து அந்தக் கழிப்பறைக்குள் பதுக்கச் செய்தார். ஒரு நாள் அவர் எங்கேயிருந்தோ, ஒரு நாய்க்குட்டியைத் தூக்கி வந்திருந்தார்.
கழிப்பறை யாரோ ஒருவரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது, என்கிற செய்தி ஊராட்சி அலுவலர்களின் காதுக்குச் சென்றது. அவர்கள், அக்கழிப்பறையைப் பூட்ட, படைசூழ வந்தார்கள். அவர்களால் அதைப் பூட்டமுடியவில்லை. அவரது கையைப் பிடித்து வெளியே இழுக்கச் செய்தார்கள். அவர் கீழே கிடந்த கற்களை எடுத்து, அவர்கள் மீது விட்டெறிய செய்தார். அவர் தூக்கிவந்திருந்த அந்த சின்னஞ்சிறிய நாய்க்குட்டி, அதிகாரிகளைப் பார்த்து பெருங்குரையென குரைக்கச் செய்தது.
ஒரு நாள் அதன்வழியே மாவட்ட ஆட்சியர் வருவதாக இருந்தார். சித்தார்த்தன் யாத்திரைக்காக, பிச்சைக்காரர்களை அங்கேயிருந்து அகற்றிய லும்பினி நிர்வாகம் அளவுக்கு, ஊராட்சியின் நிர்வாகம் இறங்கியது. அவசரமாக சமுதாயக்கூடத்தைத் திறந்து, கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்தார்கள். அவர்களின் கவனம் சாலை, அலுவலகம், ஆக்கிரமிப்புகள் மீது திரும்பியது. கழிப்பறைக்குள் குடியிருந்த பராரி,
அவர்கள் கண்களை உறுத்தச் செய்தார். இவரை எப்படியேனும் வெளியேற்றிட வேண்டுமென்கிற முடிவுக்கு வந்தார்கள். அதற்காக, காவல்துறையினரை அழைத்துவந்தார்கள்.
காவல்துறையினரைப் பார்த்ததும், அவர் நடுங்கச் செய்தார். கழிப்பறைக்குள் நுழைந்து, அவரது மூட்டை முடிச்சுகளை எடுத்து வெளியே வைத்து, கதவை இறுக அடைத்து குறுக்கே, சட்டக்கம்பிகளால் அடைத்தார்கள். அந்தப் பராரி ஒதுக்கப்பட்ட ஒரு ஜீவனாக, ஒரு குப்பையைப் போல அதிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஒரு நாள் முழுக்கவும், அந்த அறையைப் பார்த்தபடி, உட்கார்ந்திருந்தார். இரக்கத்தால் காலாவதியாகி விட்டவராகவே அவர் இருந்தார். அன்றைய தினம் அவர், எதையும் சாப்பிடவோ, வயிற்றுக்காக கையேந்தவோ இல்லை. பிறகு அவர் என்ன நினைத்தாரோ, அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்டு, நரவடிவாய், அந்த இடத்திலிருந்து வெளியேற செய்தார்.
மறுவாரம், திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் வந்து இறங்கினார். ஒரு வாரத்தில் அந்த கழிப்பறை பழையபடி நாற்றமெடுத்திருந்தது. அதிலிருந்து கொசுக்களும், ஈக்களும் மூட்டம் மூட்டமாக வெளியேறவும், கண், வாய்களிடத்தில் மொய்க்கவும் ஆலவட்டமடிக்கவும் இருந்தன. அவர், வாகனத்திலிருந்து இறங்கியதும் அவரையும் அறியாமல் ஒரு கை, கைக்குட்டையுடன் நாசிக்குச் சென்றது. அங்கேயே நின்றபடி சுற்றும் முற்றும் பார்த்தார். அவரது பார்வைக்கு வங்கார ஓடை குளமும், குளக்கரையும், மக்கட்தலைகளும் தெரிந்தன. நாசியைக் கைக்குட்டையால் இறுகப் பொத்தியவாறு, குளக்கரை அலுவலகங்களை ஒரு சுற்று வலம் வந்தார். அலுவலகத்தின் உட்கூடு ஓரளவு சுத்தமாக இருந்தது. ஒரு பக்க வெளி குளக்கரை என்பதால், அங்கு பன்றி, நாய்கள் மேயவும், கரை முழுவதும் மனித விட்டைகளாக இருந்தன.
அவர் தொடக்கப் பள்ளியைப் பார்வையிட்டு, வட்டார வளமையம், நூலகக் கட்டிடம், சிமெண்ட் கிடங்கு, சமுதாயக் கூடம்,… அலுவலகங்களைப் பார்வையிட்டு, அங்கன்வாடி அலுவலகத்தை வந்தடைந்தார். குழந்தைகள், தாய்மார்கள், சாமானிய மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய அலுவலகம் என்பதால் இருக்கையில் அமர்ந்தும், நின்றும், நடந்தும் அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டார். அலுவலகத்தின் ஒரு மூலையில், புகைந்துகொண்டிருந்த பத்தி வாசனையை மீறி, ஒரு வித துர்நாற்றம், அவரது நாசியை அடைக்கச் செய்தது.
“என்ன நாற்றம்?” இருக்கையிலிருந்து எழுந்து, ஜன்னல் வெளியைப் பார்த்தவாறு கேட்டார். அவரது கேள்விக்கு, அவருடன் வந்திருந்த ஊழியர்களும், குளத்துக்கரை அலுவலக ஊழியர்களும் ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள். அதை அவர் காதுக் கொடுத்துக் கேட்பதாக இல்லை. அங்கன்வாடி அலுவலர்கள் இதற்கும் மேல் எதையும் கேட்டுவிடக்கூடாது, எனக் கைகளைப் பிசைந்துகொண்டு நின்றார்கள்.
பார்வையாளர் குறிப்பேட்டை எடுக்கச் சொன்னார். அவரது பச்சை மை, மூன்று பக்கங்களைத் தாண்டி ஊர்ந்தது. “துர்நாற்றத்தைப் போக்க, எடுக்க வேண்டிய துரித நடவடிக்கை’க் குறித்து எழுதியிருந்தார். அடுத்த பார்வைக்கு வரும்பொழுது, இந்நாற்றம் இருக்கக்கூடாதென, அதிகாரக் குரலில் எச்சரிக்கை செய்திருந்தார்.
ஊராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான அந்தக் கழிப்பறையை, அங்கன்வாடி அலுவலக ஊழியர்கள், கையில் எடுத்துக்கொண்டார்கள். தினமும் ப்ளிச்சிங் பவுடர், கிருமி நாசினியென அள்ளி வீசினார்கள். ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கைக்காசு போட்டு, வெளியே ஒரு தண்ணீர்த்தொட்டி அமைத்து, நீர் வசதி செய்து கொடுத்தார்கள். நீர்த்தொட்டியை, ஊரார்கள் நாசம் செய்திருந்தார்கள்.
பெரிய பூட்டு, கருவை, சூரப்பத்தை முட்களை வெட்டிவந்து திரும்பவும் இறுக அடைத்தார்கள். என்ன செய்தும், அந்தக் கழிப்பறை தொடர்ந்து நாறிக்கொண்டே இருந்தது. பிறகு என்ன செய்யலாமென்று யோசித்தார்கள். அவர்களுக்கு கொஞ்ச காலம் இக்கழிப்பறையில் தங்கியிருந்த பராரி நினைவுக்கு வந்தார். அவரை எப்படியேனும் தேடிப்பிடித்து, அழைத்துவந்து, அதில் தங்க வைக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கினார்கள். அவர் பக்கத்து நகரையொட்டிய, ஒரு குக்கிராமத்தில் ஊருக்குள் கட்டப்பட்ட ஒரு பொதுகழிப்பறைக்குள் தங்கியிருக்கும் செய்தியை ஒருவர் மூலமாக கேட்டறிந்தார்கள்.
இரண்டு பேர், அவரை அழைத்துவர ஒரு ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். ஊர் பொதுக் கழிப்பறைக்கும் வெளியே, ஒரு நாய்க்குட்டி படுத்திருந்தது. ஆட்டோ அந்நாய்க்குட்டியையொட்டி நின்றதும், வாலை விடைத்துக்கொண்டு குரைத்த அக்குட்டி, ஆட்டோவிலிருந்து இரண்டு பேர் இறங்கியதும், வாலைச் சுருட்டிக் கொண்டு அவர்களிடம் குலாவவும், அவர்களைச் சுற்றி வரவும் செய்தது. வெளியில் நின்றபடி, அவர்கள் கழிப்பறையை எட்டிப் பார்த்தார்கள். அவ்வளவு பெரிய கட்டிடத்தில், குட்டிக்குட்டியாக பல கழிப்பறைகள் இருந்தன.
துருப்பிடித்துப் போயிருந்த ஒரு கதவைத் திறந்து பார்த்தார்கள். இருளும் புழுதியும் மண்டிப் போயிருந்த அந்த அறைக்குள், அந்த பராரி கால் மேல் கால் கிடத்திக்கொண்டு படுத்திருந்தார். அவருக்குக் கேட்கும்படியாக கைகளைத் தட்டியதும் அவர் எழுந்து உட்கார்ந்தார். அவர் முன், தின்பண்டங்களை நீட்டியதும், நைந்து போய், இற்றுப் போயிருந்த கறுப்பு நிற ஆடையை ஒரு கையால் தட்டிக்கொண்டு, கொசகொசத்த தாடியைச் சொறிந்தபடி வெளியே வந்தார். பிசுக்கேறிய அவரது கரங்கள் அழுக்குப் படிந்தும், நகக் கணுக்களில் கருமை படர்ந்தும் காணப்பட்டன. அவருக்கு முன்பாக, அந்த நாய்க்குட்டி ஆட்டோவில் ஏறிக்கொண்டு, வெளியே எட்டிப் பார்த்துக் குரைத்தது. அக்குட்டிக்கு கட்டுப்பட்டவரைப் போல அவர், தன் முடிச்சை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறினார்.
ஆட்டோ வந்து நிற்கும் அரவம் கேட்டு, ஊரார்கள் நான்கைந்து பேர் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். என்ன, ஏது, யாரென்று விசாரித்தவர்கள், இவரை அழைத்துப்போக வந்தவர்கள் எனத் தெரிந்ததும் ஆட்டோவை மறித்தார்கள்.
“ ஒரு வருசமாகவே கழிப்பறைக்குத் தண்ணீர் வரத்தில்லை. ஒரே நாற்றமாக இருந்தது. இவர் வந்து இதற்குள் தங்கியப் பிறகுதான், இதிலிருந்து நாற்றம் வருவது நின்றிருக்கிறது. எங்கள் ஊரில் ஒருவரென இவர் ஐக்கியமாகிவிட்டார். அவர் விரும்பும் வீட்டில் சோறு வாங்கிச் சாப்பிடுகிறார். அவரை நாங்கள் உங்களிடம் அனுப்பப் போவதில்லை ” என்பதாக வாதம் செய்தார்கள்.
அந்த பராரி, அந்த நாய்க்குட்டியை மடியில் வைத்துக்கொண்டு, ஊரார்களின் ஆவேச பேச்சை வேடிக்கைப் பார்த்தபடி ஆட்டோவில் உட்கார்ந்திருந்தார். அவர்கள், கேட்டுக்கொண்டும் அவர் ஆட்டோவை விட்டு கிழே இறங்குவதாக இல்லை. ஆட்டோ புகையைக் கக்கிக் கொண்டு கிளம்புகையில், அவரது மடியிலிருந்த அந்த நாய்க்குட்டி, ஆட்டோவிலிருந்து வெளியே குதித்தது. குட்டிக் குதித்ததும், அவர் அகோரமாகச் சத்தமிட்டார். அவரது சத்தத்தைக் கேட்டதும், விலகி நின்ற ஊரார்கள் ஆட்டோவைச் சுற்றிக் கொண்டார்கள். அவர் ஆட்டோவிலிருந்து வேகமாக குதித்து, நாய்க்குட்டியைத் தேடிக்கொண்டு அந்தக் கழிப்பறைக்குள் ஓடினார். அந்நாய்க்குட்டி, அவரை விடுத்து வேறெங்கும் சென்றுவிடுமோ, எனப் பயந்தவராய், வெளிக்கதவு இரண்டையும் இறுக அடைத்துக்கொண்டு அதற்குள் பதுங்கிக் கொண்டார்.
கதவுகளைத் திறக்கச் சொல்லி, நீண்ட நேரம் அவர்கள் தட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் கதவுகளைத் திறப்பதாக இல்லை. ஆமை, தனது முதுகிலிருக்கும் ஓட்டுக்குள் பதுங்கிக் கொள்வதைப் போல, அவர் அந்தக் கழிப்பறைக்குள் ஒடுங்கிக் கொண்டார்….
நன்றி – உயிர் எழுத்து.