முகிழ்த்தது முத்து

மூன்றாம் பிறைகள்!…. ( சிறுகதை ) …… . யாழ்.எஸ். பாஸ்கர்.

பிறை ஒன்று.

தொலைபேசி அலறியது.

”ஹலோ” குரல் கொடுத்தேன்.

“தம்பி, நான் வீரசிங்கம் மாஸ்டர் பேசுறன்.”

“ஓம் மாஸ்டர் சொல்லுங்கோ”

“நீர் இரவு விழாவுக்கு வந்திட்டுப் போகும்போது சாமுவேலையும் ஒருக்கா ஏத்திக் கொண்டு போக ஏலுமே? அவர் உங்கட வீட்டுக்கு கிட்டத்தானே இருக்கிறார்?”

“பிரச்சினை இல்லை மாஸ்டர். நான் ஏத்திக் கொண்டு வந்து விடுகிறன்.”

சாமுவேல் அண்ணர் என் வீட்டுக்கு அண்மையிலேதான் வாழ்கிறார். தனி வாழ்க்கை. நான் மெல்பேர்ணில் குடியேறி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவரைப் பொது நிகழ்ச்சிகளிலே பார்ப்பது மிகவும் அபூர்வம். யார் எப்படி இருந்தால் நமக்கென்ன? உதவி என்று கேட்டால் ஏலுமெண்டால் செய்யுறதுதானே….

விழா மண்டபத்தை சரியான நேரத்தில் அடைந்தேன். வாசலில் வீரசிங்கம் மாஸ்டர் எல்லோரையும் வரவேற்கிறார்.

“வாரும் தம்பி”

“வணக்கம்”

பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியவாறு அவர் கையில் என் அன்பளிப்பைத் திணிக்கின்றேன்.

“உள்ளே போய் நீங்கள் விரும்பின இடத்திலை இருங்கோவன்.”

மண்டபத்துக்குள் என் பார்வையை மேய விடுகின்றேன். ஒவ்வொரு மேசையைச் சுற்றியும் பத்துப்பேர்கள் உட்காரக்கூடியதாக கதிரைகள் போடப்பட்டிருந்தன. தெரிந்த முகங்கள் குறைவு. ஒவ்வொரு மேசையிலும் மதுபானங்களும் குளிர்பானங்களும் இருந்தன.

வீரசிங்கம் மாஸ்டரின் எழுபத்தியைந்தாவது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. முப்பது ஆண்டுகளாக மெல்பேர்ணில் வாழ்கிறார். எல்லாக் கட்சிகளிலும்

சங்கங்களிலும் அங்கத்துவம் உண்டு. யாரையும் பகைத்துக் கொள்வதில்லை. தன்னுடைய பிரபலத்திலேயே எப்பொழுதும் ஒரு கண் வைத்துக் கொள்ளுவார். அதனாலேதான் இந்தக் கூட்டம் என நான் நினைத்துக் கொள்கிறேன்.

“முரளி” என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்க்கிறேன். அந்த மேசையில் சுரேஷ். அங்கே சில காலியான கதிரைகள்.

“வந்து இப்படி உட்காரு மச்சான்.”

மறுக்காது  சென்று அவனருகில் அமர்கிறேன். புதியவர்களை அக்கறையுடன் அறிமுகப்படுத்தினான்.

“எப்படி வேலைகள்?”

“அது தன் பாட்டில் போகுது”

“என்ன எடுக்கிறாய்? ஸ்கொட்ச்சா… பியரா?”

“நான் கோக் மட்டும் எடுக்கிறன்.”

“ஏன் எல்லாத்தையும் விட்டிட்டியோ?”

“இல்லை. நான் தூரம் போக வேணும். அதோடை இன்னுமொரு காயையும் கூட்டிக்கொண்டு போக வேணும். இண்டைக்கு சனிக்கிழமை வேறு. இந்த அறுவான்கள் இடையில் மறித்து ஊதச் சொன்னால் வில்லங்கமாய்ப் போயிடும்.”

“மச்சான்.. ஒரு பியர் எடுத்திட்டு சாப்பிட்டால் ஒண்டும் காட்டாது” என்று கூறியவாறே என் கிளாசில் பியரை நிரப்புகிறான்.

கார் ஸ்டியரிங் பிடிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாதவர்கள் ‘ஸ்கொட்ச்’ எடுத்துக் கொண்டு ஞானப்பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

வீரசிங்கம் மாஸ்டர் ஒவ்வொரு மேசையாக வந்து சாப்பிட வருமாறு சம்பிரதாயமாக அழைக்கிறார்.

“சுரேஷ்… எல்லாரும் சாப்பிட போகினம். நாங்களும் சாப்பிடுவோம்.”

“இப்ப போனால் கியூவிலை நிற்கவேணும். இன்னொரு ரவுண்ட் எடுத்திட்டுப் போவம்.”

“எனக்குப் போதும் மச்சான். நீங்கள் எடுங்கோ”

அனைத்தும் சிறப்பாக முடிந்து எல்லோரும் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“அப்ப மாஸ்டர் நான் வரப் போறன்”

“நல்லது தம்பி வந்தது மெத்தச் சந்தோசம். சாமுவேலை கவனமாக வீட்டிலை விட்டிருங்கோ. அவருடைய துக்கம் அவருக்கு. கொஞ்சம் கூட எடுத்திட்டார் போல…”

சாமுவேல் அண்ணரையும் எனது காரில் ஏற்றிக் கொண்டேன்.

“தம்பி”

“ஓம் சொல்லுங்கோ”

“தம்பி பாரும்… நானும் நீரும் கிட்டக் கிட்ட இருக்கிறம். ஆனால் ஆளை ஆள் பார்க்கிறதே குறைவு.”

“என்ன செய்யுறது? இங்கத்தைய வாழ்க்கை இப்படித்தான்.”

“என்ன வாழ்க்கை… வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையே? நான் எப்படி ஊரிலை இருந்தனான். இப்ப அனாதை மாதிரி தனியாக் கிடக்கிறன்.”

“என்ன செய்யுறது? எல்லாம் தலையெழுத்து”

“என்ன தலையெழுத்து… இவங்கட சட்டங்களால வந்தது. என்ர கதை உமக்குத் தெரியுமே?”

’தெரியாது’ என்பது போலத் தலையாட்டுகிறேன்.

“நீர் என்ரை கூடப்பிறந்த தம்பி மாதிரி. உம்மிட்டை என்ர குடும்பப்பிரச்சினையை சொல்வதில் ஒரு குறையுமில்லை.”

கடந்த மூன்று நான்கு வருடங்களில் நானும் இந்த சாமுவேலும் எழெட்டுத்தடவை சந்தித்திருக்கக் கூடும். அதுவும் சொப்பிங் சென்ரலிலைதான். தலையாட்டு, புன்சிரிப்பு மாத்திரம்தான். ஆனால் இன்று அவருக்குள்ளே செரித்துக் கொண்டிருக்கும் ஸ்கொட்ச் என்னை தம்பி ஆக்கிவிட்டது.

“தம்பி கேட்கிறியளே?”

“ஓம் சொல்லுங்கோ”

“பட்டப்படிப்புக்காக இங்கே ஸ்கொலஷிப்பில் வந்தனான். படிப்பை முடித்து ஊர் நிலைவரத்தைக் காட்டி P.R எடுத்து உத்தியோகமும் பார்க்கத் துவங்கினேன். சிட்டிஷன்சிப்பும் எடுத்து சொந்தத்தில் வீடும் வாங்கி என்ரைபாட்டிலை சோக்காக வாழ்ந்து கொண்டிருந்தனான். கால்கட்டு போட வேண்டும் என்ற நினைப்பில ஊரிலை இருந்த ஒருத்தியை என்ரை தலையிலை என்ரை அண்ணர் கட்டி வைச்சார். அவருடைய மனிசியின்ரை ஊரைச் சேர்ந்தவளாம். கல்யாணம் செய்த நாளிலிருந்து டைவர்ஸ் வரைக்கும் பிரச்சினையான வாழ்க்கைதான் ஓடிச்சுது.”

“அண்ணை… குடும்பம் எண்டால் பிரச்சினை வரத்தானே செய்யும். அதுகளையெல்லாம் சமாளிச்சுப் போறதுதானே

இங்கே எந்தக் குடும்பத்திலைதான் பிரச்சினை இல்லை.”

“பிரச்சினை இல்லாத குடும்பம் இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. எனக்குப் பிரச்சினைதான் வாழ்க்கை என்றாகிப் போய் விட்டது. அவள் மல்லிகா அவுஸ்திரேலியா வந்து இரண்டு நாள் தன்ர அண்ணன் வீட்டில நிண்டாள். மூன்றாம் நாள் ஹரேகிருஸ்ணா ஆலயத்தில் சமய சம்பிரதாயப்படி அவள் கழுத்தில் தாலிகட்டி என்ர சொந்த வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தனான். கேட்டியே புதினத்தை….முதல் இரவண்டைக்கே என்னோடை சண்டை பிடிச்சுக் கொண்டு தனியாத்தான் படுத்தவள். பிறகு அண்ணன் பொஞ்சாதியும் மற்றவையளும் சொன்னதுக்குப் பிறகு நொண்டியடிச்சுக் கொண்டு ‘ஊருக்காக’ ரண்டு வருஷம் குடும்பம் நடந்தது. புடிபுடியெண்டு சிற்றிஷன்சிப் எடுத்துக் கொண்டு உத்தியோகமும் பார்க்கத் துவங்கினாள். பிறகுதான் எல்லாம் அம்பலத்துக்கு வந்தது. அவளிண்ட பல்கலைக்கழக காதலன் இங்கே இருக்கிறானாம். அவனோடை அந்த தோறை…” என்று இந்த நிலையிலும் தனது கீழ் உதட்டை கடித்துக் கொண்டார் சாமுவேல் அண்ணை.

திடீரென அவர் உரத்த குரலிலே “தம்பி 0.05 செக் பண்ணுற பொலிஸ்காரங்கள். கவனம். வெள்ளி, சனி எண்டாலே இவங்கள்ட தொல்லைதான்.”

நான் காரின் வேகத்தை குறைக்கிறேன்.

எங்களுக்கு முன்னால் நகர்ந்த காரையும் எங்களையும் போகும்படி பொலிஸ் சைகை காட்டியது. காருக்குள் சற்று மெளனம்.

சாமுவேல் அண்ணர் இதுவரையில் சொல்லிவந்த அவரது சுயபுராணம் ஏற்கனவே மெல்பேர்ண் வாழ் தமிழர் சிலர் அறிந்ததுதான். ஆனால் அவரது இரண்டாம் தாரத்து மனைவி சம்பந்தப்பட்ட புராணத்தில் ஊகங்களே அதிகம். அவரது வீட்டில் அவரை இறக்கும் வரையில் எஞ்சிய கதையையும் கிளறிப் பார்க்க விரும்பினேன்.

“அண்ணை… குறுக்கே கதைக்கிறன் என்று குறை விளங்கப்படாது. முதல்தாரம் டைவேர்ஷில் போனபிறகாவது, இரண்டாவது தெரிவிலாவது நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் தானே.”

கார் ஒரு சிக்னலில் நின்றது.

சாமுவேல் அண்ணர் செருமிக் கொண்டு தொடர்ந்தார்….

பிறை இரண்டு.

“தம்பி… எந்தப் புத்துக்குள்ள எந்தப் பாம்பு இருக்கும் எண்டு யார் கண்டது? நோய் மாட்டை வித்துப் போட்டு பேய் மாட்டை வாங்கின கதையாப் போச்சுது தம்பி. கள்ளப் புருஷனைத் தேடி இங்கே வந்த அந்த யாழ்ப்பாணக்காரிக்கு பாடம் படிப்பிக்க வேணும் எண்ட வீம்பில இந்தியாக்காரி ஒருத்தியிட்ட மாட்டுப்பட்டுக் கொண்டன்.

சென்னையில் அந்த ஓட்டோக்காரன் என்னை வேண்டுமெண்டே அந்தச் சிக்கலில் மாட்டிவிட்டான் எண்டும் சொல்ல முடியாது. பாரிஸ் கோணரிலிருந்து தி.நகருக்கு நான் தங்கியிருந்த லொட்ஜுக்கு வரும்போதுதான் அந்த ஓட்டோக்காரனிடம் மாட்டுப்பட்டேன்.

நான் அதில் ஏறி உட்கார்ந்ததுமே ‘சார்… ஸ்ரீலங்காவா?’ என்று பவ்வியமாக கேட்டான்.”

”எப்படித் தெரியும்?”

”சாரிண்ட பேச்சில்தான். ஊரில சண்டையெல்லாம் எப்படி?”

“அதொன்றும் எனக்குத் தெரியாது. நான் ஸ்ரீலங்காவை விட்டு வெளியிலை போய் கனகாலம்.”

“சார்… ‘பொரீனா’? எந்த நாடு?”

”நான் அவுஸ்திரேலியா குடிமகனாகிவிட்ட சமாச்சாரத்தை அவனிடம் சொன்னேன். அவன் தொடர்ச்சியாக கேட்ட பல கேள்விகளுக்கு நான் சொன்ன யதார்த்தமான பதில்களினால் ஓரளவு என்னை புரிந்து கொண்டான். நான் அவுஸ்திரேலியா பிரஜை. அரச உத்தியோகம். தாரம் இழந்தவன். பிள்ளைகள் இல்லை. இவ்வளவும் என் வாய் மூலமாக அறிந்து கொண்டவன் உஷாராகிவிட்டான்.

“இன்னொரு கலியாணம் செய்யவேண்டியதுதானே சார்” என்றான்.

”அதுக்கும் காலம் நேரம் வரவேண்டாமா?”

“கல்யாணத்துக்கு காலம் நேரம் ஏன் சார்? வசதியாக வாழ்ந்தால் கல்யாணப்பொம்பிளைகள் கியூவிலே நிக்கும் சாரே…”

“முதலாவது கோணலாகிப் போச்சுது”

“தமிழ்நாட்டுப்பெண்கள் ஸ்ரீலங்கா பெண்களைப் போல இல்ல சார். மெரீனா பீச்சில கண்ணகி சிலையை பாத்தீங்கதானே… சாருக்கு இப்போ எத்தனை வயது?”

“ஐம்பத்திரண்டு…”

“இது ஒரு வயசா சார்? உங்களைப் பார்த்ததும் நாப்பதுக்குள்ளதான் இருக்குமென நினைச்சன். சார்… இந்த ஓட்டோ மேலே சத்தியமாச் சொல்றன். உங்களை எனக்குப் பிடிச்சுப் போச்சு. நீங்க சரியெண்டு சொல்லுங்க சார்… ரம்பா, சினேகா போல அழகான பொம்பிளைகள் உங்க முன்னால நிக்கச் சொல்லுறன்.”

எனது மனம் மீண்டும் கல்யாண ஆசைக்கு உந்தப்பட்டது. என் முதல் மனிஷி என் கண்பட எனக்குத் தெரிய தாலியோடு இன்னொருவனுடன் வாழுகிறாள். அவளிலும் பார்க்க அழகான ஒருத்தியை இளையவள் ஒருத்தியை கல்யாணங்கட்டி காண்பித்து அவளிண்ட திமிரை அடக்கும்படி வாழ்ந்து காட்டினால் என்ன? என்று பல யோசனைகள் என்னை வட்டமிட்டன.

நான் அப்போது சற்று யோசனையில் ஆழ்ந்தேன்.

அந்த ஓட்டோக்காரன் விடுறதா இல்லை.

“சார் எதுக்கும் யோசிக்காதீங்க… எனக்குத் தெரிந்த கல்யாண புரோக்கர் ஒருத்தர் இருக்கிறார். நாளைக்கே உங்களை அவரிடம் கொண்டுபோறன். அவர் பல பொம்பிளைகளின் படங்கள் காட்டுவார். எது பிடிக்குதோ அந்தக் குடும்பத்துடன் சில நாட்களுக்கு பழகிப் பாருங்க. பிடிச்சிருந்தா கட்டிக்கவேண்டியதுதானே.”

நான் மெளனமானேன்.

பிறகு, “லொட்ஜுக்கு பக்கத்தில நிறுத்து” என்றேன்.

“என்ன சார் நான் சொன்னது பிடிக்கல்லையா?” என்று கேட்டான்.

“இரண்டுநாள் அவகாசம் தா. இன்றிரவு வேளாங்கன்னி மாதா கோயிலுக்கு போறன். நாளை மறுநாள் காலை வந்திடுவன். இங்கே என்னை விசாரி.”

அவனது கையில் இரண்டு நூறு ரூபா தாள்களைத் திணித்தேன்.

“103 ஆம் நம்பர் அறை. சாமுவேல் என் பெயர். சாம் என்று கேள். சொல்வாங்க. சந்திப்பியா?”

“கண்டிப்பாக சார்.”

வேளாங்கன்னி தரிசனம் முடிந்து வந்தபின்பு அந்த ஓட்டோக்காரன் சொன்னதுபோல ஒரு கல்யாண புரோக்கருடன் வந்தான்.

பெண் பார்க்கும் படலத்தை நான் நீட்ட விரும்பவில்லை.

எனக்கு வாஸந்தியை பிடித்துவிட்டது. நடுத்தரக் குடும்பம். பட்டப்படிப்பு முடித்திருந்தாள். சிவந்த நிறம். அவளது வனப்பான அழகும் எனக்கு பிடித்திருந்தது. மல்லிகாவுக்கு போட்டியாக இவள் எனக்கு வெற்றி தருவாள் என்று மகிழ்ந்தேன்.

கல்யாணம் எளிமையாக நடந்தது. அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்காக படங்கள் எடுக்கப்பட்டன. மறுநாளே புதுடில்லிக்கு புறப்பட்டோம். தேனிலவும் அங்குதான்.

பின்பு சென்னையில் அவளுடன் பத்துநாட்கள் தங்கினேன்.

அவுஸ்திரேலியா திரும்பியதும் உஷாராக அலுவல் பாத்தேன். வாஸந்தி மூன்றே மாதத்தில் இங்கு என்னிடம் வந்துவிட்டாள்.

பிறை மூன்று.

“தம்பி… நாங்கள் கிட்ட வந்திட்டமே?”

“இல்லை அண்ணை. இன்னும் இருபது நிமிட ஓட்டம் பாக்கியிருக்கு.”

“கதைப்பிராக்கிலை றோட்டை மாறவிட்டிடக்கூடாதல்லோ?”

“மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப்பாயாது. நீங்கள் கதையைச் சொல்லுங்கோ.”

“வாஸந்தியை நான் பூப்போலத்தான் பாத்தனான். மேற்படிப்பு வேண்டுமென்றாள். ஒழுங்கு செய்தனான். படிப்பு முடிந்தது. அவளுக்கும் சிற்றிஷன்சிப் கிடைத்தது. நல்ல உத்தியோகமும் கிடைத்தது. அதுக்குப்பிறகுதான் அவவின்ர கெப்பர் கூடிச்சுது. சென்னைக்கு நீண்டநேரங்கள் போன் கார்டில் பேசினாள். ஒருநாள் மின்னாமல் முழங்காமல் தன் சூட்கேஷுடன் புறப்பட்டு நின்றாள். எவ்வளவு தடுத்தும் கேளாமல் போய்விட்டாள். அவள் உண்மையிலேயே கெட்டிக்காரிதான். எல்லாவற்றையும் அசுக்கிடாமல் செய்து முடித்துவிட்டாள். சில வாரங்களிலேயே டைவர்ஸ் கேட்டு தனது சொலிஸிட்டர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தாள். என்னுடைய வீடு மற்றும் சொத்திலும் அரைவாசி அப்புக்காத்து வைத்துப்பேசி எடுத்துக் கொண்டாள். போதுமடா சாமி. கலியாணங்கட்டி பட்ட

கிலிசுகேடு போதும். அதனால் ஸ்ரீலங்கா போய் அங்கேயே செட்டில் ஆகிடலாம் எண்டு முடிவெடுத்திட்டன்.”

“அங்கே போய் என்ன செய்யப்போறியள்?”

“அங்கைதானே பிரச்சினையெல்லாம் முடிஞ்சுபோச்சு. எனக்கு ஊரில நிறைய காணிகள் இருக்குது. என்ரை அண்ணரும் தன்ர காணிகளை எனக்குத் தந்திட்டார். அங்கைபோய் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிற எங்கட சனங்களுக்கு உதவலாம் எண்டிருக்கிறன். கடைசிகாலத்திலாவது இனசனத்தோட கழிக்கலாம். திடீரென்று செத்துப் போனாலும் சொந்த மண்ணில் சாகிறது நிம்மதிதானே.”

”அண்ணை, நீங்கள் நினைக்கிறமாதிரி அங்கை பிரச்சினை முற்றாகத் தீரவில்லை. எப்ப என்ன பிரச்சினை வரும் என்று உறுதியாகச் சொல்ல ஏலாது.”

“அங்கை இனிப் பிரச்சினை வாறதுக்கு என்னதான் இருக்கு. எல்லா நாடுகளின் காலைக் கையைப் பிடிச்சு சுத்தமா துடைச்செறிஞ்சுபோட்டான்கள். இனி நாங்கள் பார்க்கவேண்டிய உருப்படியான வேலைகளைப் பார்க்க வேண்டுமே தவிர சும்மா பேய்த்தனமாக வெளிநாடுகளில் இருந்து கத்துவதோ அறிக்கைகள் விடுவதோ அவைக்குதவாது.”

“அப்ப வெளிநாடுகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடு கடந்த தமிழீழம் எண்டெல்லாம் வாக்கெடுப்பு நடத்தினம் சும்மாவே?”

“அங்கை ஒண்டும் நடக்காமல் வெளிநாடுகளில் என்னத்தைச் செய்தும் என்ன பயன்? இங்கை உள்ளவங்கள் தங்கட விலாசம் எழுப்புறதுக்காக எடுக்கிற எடுப்புகள்தானே தவிர வேறு ஒண்டுமில்லை.”

“சரி, அப்பிடியெண்டால் நீங்கள் என்ன சொல்ல வாறியள்?”

“இப்ப வெளிநாடுகளில் இருக்கிற நாங்கள் செய்யவேண்டிய முதல் வேலை எங்கடை நிலங்களை பாதுகாப்பதுதான். மற்றது பாதிக்கப்பட்ட மக்களை பொருளாதார ரீதியிலும் கல்வியிலும் முன்னேற்றுவதற்கான அலுவல்களைப் பார்க்க வேணும். இல்லையெண்டால் அவங்கள் தங்கட ஆட்களை தமிழரிண்ட காணிகளில் குடியமர்த்திப் போடுவான்கள். ஏன் இங்கை இருக்கிற சில சீனாபுலிகளும் அங்கே தமிழரிண்ட காணிகளை கூடுதல் விலை கொடுத்து வாங்கத் தெண்டிக்கினமாம். இதெல்லாம் என்ரை காதிலை விழுந்த செய்திகள். நாங்கள் இந்த முப்பது வருடமாக போருக்காக ஆயுதங்களுக்கு கொடுத்த பணத்தில ஒவ்வொரு பரப்புக்காணியாக வாங்கியிருந்தால் இப்ப ஸ்ரீலங்காவில் அரைவாசி எங்கட ஆக்களிட்ட இருக்கும்.”

“இதையெல்லாம் இங்க இருக்கிற எங்கட ஆக்களிட்ட ஒருக்கா சொல்லிப் பாருங்கோவன்.”

“சொல்லத்தான் வேணும். தம்பி வீடு வந்திட்டுது. ஓரமா நிற்பாட்டும். இறங்கிறன்.”

சாமுவேல் அண்ணை இறங்கிக் கொள்கிறார். ஆள் கொஞ்சம் கூடத்தான் அடிச்சிட்டார். நடையிலை சற்று தளம்பல்.

“அப்ப வாறன் அண்ணை. உங்கடை இந்தக் கருத்துக்களைச் சொல்ல எப்ப கூட்டம் போடுவோம்?”

“பார்ப்போம். நான் வீட்டுக் கதவைத் திறக்குமட்டும் ஒருக்காப் பார்த்துக் கொண்டு நில்லும் தம்பி.”

சாமுவேல் அண்ணர் கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்.

“ஓசி விஸ்கியில் ஞானம் பிறக்கும். படுத்து எழும்பும்போது தலையிடி பெருகும்.” என்று யாரோ சொன்னது எனது நினைவுக்கு வந்தது. யார் அப்படிச் சொன்னது என்று எனது மூளை குடையும்போது எனது கார் எனது வீட்டை நோக்கி நிதானமாக ஓடுகிறது…..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.