“முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்”
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் நாள் வரையான காலப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை “முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக” தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தேசமெங்கும் பரவியிருக்கும் தமிழ் உறவுகளால் மே12ம் நாள் புதன்கிழமையில் இந்த நினைவேந்தல் வார நிகழ்வுகள் தொடங்குகின்றது.
இந்த நாட்களில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு, தமது இன்னுயிர்களை இழந்த எது உறவுகளையும், சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும், இந்நாட்களில் நினைவேந்தி வணக்கமும், அஞ்சலியும் செய்வோம்!! நாளை ஆரம்பமாகின்ற முள்ளிவாய்கால் தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் வாரத்தில், அனைவரும் ஒற்றுமையாக, எந்த பேதங்களிமின்றி இணைந்து நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைவேந்தல் வாரத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடித்துப் பதைபதைத்து போன, துன்பகரமான இந்நாட்களை, ஆடம்பரகளையும்/ களியாட்ட நிகழ்வுகளையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட உறவுகளின், சொந்தங்களின் வலிகளிலும் நாம் பங்கெடுத்துக் கொள்வது தன்மானமுள்ள அனைத்து உறவுகளின் கடமையாகும்.
மே 18ம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகப் பரப்பெங்கும் உங்களுக்கு அருகில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, இறுதித் தருணத்தில் எந்தவித அஞ்சலிகளும், சடங்குகளும் இன்றி உயிரிழந்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கொள்ளவேண்டும். இதற்காக எல்லோரையும் அன்புடனும், உரிமையுடனும் அழைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் இறை நம்பிக்கை உடையவர்கள், தங்கள் உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காக / ஆத்மசாந்திக்காக கோயில்கள், தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தலாம். கூட்டுணர்வுடன் கூடிய நினைவேந்தல்கள், தலைமுறைகள் தாண்டி நீடித்து நிலைக்கக் கூடியவை. அவை, சார்ந்த சமூகங்களுக்கான கடப்பாடுகளை மீள மீள வலியுறுத்தி வருவன. அதனை தக்க வைத்தல் என்பதே வரலாற்றில் வெற்றியை உறுதி செய்யும். ஒப்பீட்டளவில் இத்தருணத்தில் தாயகத்திலுள்ள மக்களுக்கு உணர்வுபூர்வமாக பெரும் ஆறுதலை, புலம்பெயர் சமூகம் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். இங்கு ஆறுதல் என்பது வலிகளைப் பகிர்ந்து கொள்வது மாத்திரமல்ல. தாயகத்திலுள்ள மக்கள் எதிர்கொண்டு நிற்கும் வாழ்தலுக்கான சவால்களையும் பகிர்ந்து கொள்வதாகும், அத்துடன் அநியாயமாக இழக்கப்பட்ட இந்த உறவுகளுக்காக, நீதிவேண்டி தொடர்ந்து எம்மால் முடிந்தளவு போராட வேண்டும்.
நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய், உள்வாங்கி நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதிபூண்டு கொள்வோம்!!
——————————————————–
இத்துடன் ஓஸ்ரேலியா மெல்பேர்ன் நகரில் நடைபெறவுள்ள “மே18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்” பற்றிய விபரங்கள் ஊடக அறிக்கை, விளம்பரப் பிரசுரமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவு செய்து ”மெல்பேர்ன், மற்றும் ஓஸ்ரேலிய பெருநகர சிட்னி இன் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள்” சம்பந்தமான இச் செய்தியையும் மற்றைய அறிவித்தல்களையும் உங்கள் ஊடகங்களில் வெளியிடுவதோடு உங்களிற்கு தெரிந்த நண்பர்களிற்கும் மின்னஞ்சல்களுாடாக தெரியப்படுத்தவும்.
தயவுசெய்து அந்நாளின் முக்கியத்துவம் மற்றும் வலிகள் அறிந்து உங்களினால் முடிந்த ஆதரவினை நல்குவதோடு, மேமாதம் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை மெல்பேர்னில் மாலை 6.30 மணிக்கு, Wantirna, Hungarian Community Centre மண்டபத்திலும், சிட்னியில் மாலை 6.30 மணிக்கு, Blacktown Bowman Hall மண்டபத்திலும், முழுக்குடும்பத்துடன் வந்து இந்நிகழ்வுகளில் பங்குகொண்டு,ஆயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளை மீட்டி, தொடரும் இலட்சிய பயணத்தில் இணைந்து கொள்வோம்!! 2009யில் எம் தமிழ்மக்கள்மீது இடம்பெற்ற அப்பேரவலத்-தையும், போர்குற்றத்தையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துவோம்!!!!!!!!!! உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றிகள்!!
—–