ஜேர்மனியில் வாழும் ஒரு ஈழத்திருநங்கையின் சுயசரிதை!…. எனது பார்வை….. ஏலையா க.முருகதாசன்.

படித்தோம் சொல்கின்றோம்!…
ஜேர்மனியில் வாழுகின்ற ஈழத்தைச் சேர்ந்த திருநங்கை தனது வாழ்வு பற்றி „ஈழத்திருநங்கையின் வாழ்வும் போராட்டமும்’ என்ற தனது சுயசரிதையை வெளிப்படையாக எழுதியிருக்கின்றார்.
341 பக்கங்கள் கொண்ட இந்த சுயசரிதை என்ற நூலுக்குள் ஆண் என்ற தான் எப்படித் திருநங்கையாக மாறினேன் என்பதை அவர் எழுதியதை வாசித்த போது எனக்குள் இந்நூல் பற்றிய பலதரப்பட்ட விமர்சனங்களும் சிந்தனைகளும் ஏற்பட்டன.
ஈழத்திருநங்கை ஆரம்பத்தில் வாழ்ந்த நகரத்தை அவர் இந்நூலில் தெரிவித்து இறுதியில் இந்நூலை எழுதி முடிக்கும் போது வாழ்வதாகக் குறிப்பிட்ட நகரத்தில் இப்பொழுது அங்கு இல்லை என்பதும் , அவர் வேறொரு நகரத்தில் வாழுகிறார் என்பதை நான் மிகச் சரியாக அறிந்த போதும் அறம் சார்ந்து அந்நகரத்தை நான் இங்கே குறிப்பிடவில்லை.
பொதுவாக திநங்கைகள் என்றால் அவர்கள் சமூகத்தால் அலி, அரவாணி என்ற ஏளனச் சொற்களால் விளித்து பேசப்படுபவர்களாகவும் சமூகத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும் உட்படுபவர்களாகவுமே இருந்து வருகிறார்கள்.
திருநங்கைகள் பற்றிய அறிதல் என்பது „ஒதுக்குப்புறம்’ என்ற அடையாளம் தாங்கிய ஒரு மனநிலையை பொது மனிதர்கள் கொண்டிருக்கிறார்கள்.திருநங்கைகள் என்பவர்கள் உலக இனங்கள் அனைத்திலும் இருப்பவர்களே.
ஒளவையாரின் பாடல்களில் மானிடர் பிறப்புப் பற்றி அவர் கூறும் போது „அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது,அதிலும் அரிது கூன், குருடு,செவிடு,பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று அப்பாடல் தொடர்கிறது.
இதில் பேடு என்பது முழுமையாக ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்காத பிறப்பாகும்.ஆணாகப் பிறக்கும் ஆண்குழந்தையின் ஆணுறுப்பு குழந்தைப் பருவத்திலிருந்து வயது ஏற எற அது வளர்ச்சியடைந்து இனவிருத்திக்கு உரிய ஆரோக்கியமான ஆணுறுப்பாக வளர்ச்சி பெறுகின்றது.
அதே போன்று பெண்ணாகப் பிறக்கும் குழந்தை வயது ஏற ஏற பெண்ணுறுப்பின் வளர்ச்சி அதற்கேற்ற வளர்ச்சியைப் பெற்று பூப்பெய்தி தொடர்ச்சியான மாதவிடாயின் மூலமாகவும்,உடலியற் கூறு வடிவாகவும் கருவுறக்கூடிய கருமுட்டைகளைத் தாங்கி இனவிருத்திக்குரியவளாக மாறிவிடுகிறாள்.
ஆனால் ஆணாகப் பிறந்து ஆணறுப்பின் வளர்ச்சி மிகக் குன்றி ஆணுக்குரிய காமவேட்கை கொள்ளாது பெண்ணுணர்வும் பெண்ணுக்குரிய காமவேட்கையைக் கொண்டவனாக மாறுவதோடு ஆண் உடலில் இருக்கும் பெண்தன்மை கொண்டவளாகி ஆண்கள் மீதான காம இச்சை உருவாகின்றது.இத்தகையவர்கள் திருநங்கையாவார்கள்.
அதே போல பெண்ணாகப் பிறந்த போதும் பெண்ணுறுப்பின் வளர்ச்சியின்மை,பூப்பெய்தாமை போன்றவற்றால் அப்பெண்ணுள் ஆணுக்குரிய காமவேட்கை எழுகின்றது.எனவே இத்தகையவர்கள் பெண்களுடனான காம இச்சை இவர்களிடம் ஏற்படுகின்றது.இவர்கள் திருநம்பிகள் ஆவார்கள்.
ஆணாகப் பிறக்கும் ஒருவருக்கு இயல்பான பெண்ணுக்குரிய பெண்ணுறுப்பில் இருக்கும் கிளியோட்ரஸ் என்ற உறுப்பிலும் பார்க்க மிகச் சிறியதளவேயான ஆணுறுப்பு இருக்குமாயின் நாளடைவில்; அத்தகைளயவர்களிடம் பெண்களிடம் உற்பத்தியாகும் கார்மோன்கள் இவர்களிடமும் உற்பத்தியாகி இவர்கள் உணர்ச்சிகள் உணர்வுகள் நடை உடை பாவனை மூலம் பெண்ணியல்புடையவர்களாக மாறுகின்றனர்.
திருநங்கைகளைத் தூற்றுபவர்களே,தமது காம வேட்கைகளை திருநங்கைகள் மூலமாக தீர்ப்தற்காகத் தேடிப் போகிறவர்களும் உண்டு.
பொதுவாக திருநங்கைகள் என்னென்ன பிரச்சினைகளைச் சந்தித்தார்களோ அத்தனையையும் ஜேர்மனியில் வாழுகின்ற ஈழத்திருநங்கை சந்தித்திருக்கின்றாள்.
போரினால் புலம்பெயர்ந்து குடும்பத்துடன் சிறுவனாகவே தமிழகத்துக்கு குடியேறிய ஈழத்திருநங்கை,பெண்ணுர்வு கொண்ட சிறுவனாக தனது தமக்கையாரின் உடைகளை அணிவதிலும், பெண்களைப் போலவே உதட்டுச் சாயம் பூசுவதிலும் ஈர்ப்ப தன்னை ஒரு பெண்ணாக உணர்வதில் திருப்திப்பட்டுக் கொண்டு வளரத் தொடங்கியிருக்கின்றான்.
தமிழகத்தில் சிறுவனாக இருந்த காலத்திலேயே அவன் படித்த பாடசாலையில் வயதில் மூத்தவர்களினதும் அவனுடைய நண்பர்களினதும் காம இச்சையைத் தீர்க்கும் கருவியாக மற்றவர்களுக்கான தன்னின சேர்க்கையாளனாகவம் மற்றவர்கள் சுய இன்பம் பெறுவதற்கான ஏதுவாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறான் துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறான்.
வயது ஏற ஏற தான் ஆணாகப் பிறந்தும் ஆணுக்குரிய ஆண்குறி வளர்ச்சியடையவில்லையே என்ற கவலை அவனுக்கு மனநோயைக் கொண்டு வரும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கின்றது.
இந்த ஈழத்திருநங்கையின் சுயசரிதையில் உள்ள அத்தனை விடயங்களையும் சில பக்கங்களுக்குள் ஆய்வு ரீதியாகவோ பார்வை ரீதியாகவோ அடக்கிவிட முடியாது.இச்சுயசரிதையின் அத்தனை பக்கங்களிலும் சம்பவங்கள் விரவிக் கிடக்கின்றன.இந்த ஈழத்திருநங்கையின் காம வேட்கை சிறுவயதிலேயே அபரிதமாகத் தூண்டிவிடப்பட்டிருக்கின்றது.
தமிழகத்திலிருந்து ஜேர்மனிக்கு வந்து கொழும்பில் தங்கியிருந்த போது சலங்கை கட்டி உதட்டுச் சாயம் பூசி பெண்ணுடையில் இருந்த போது மாமன் முறையான ஒருவரால் „நீ திருந்தவே மாட்டாயா’ என உதைத்துத் துன்புறத்தப்பட்டவராலேயே, ஆணுறுப்பு சிகிச்சை மூலம் அறுத்தெறியப்பட்டு புணர்ச்சிக்கு ஏற்றவாறு திருநங்கை என்ற பெண்ணாகி இலங்கைக்கு சுற்றுலா சென்ற போது தன்னை காலால் உதைத்து வேதனைப்படுத்திய மாமன் முறையானவர் விடுதியில் வைத்துத் தன்னைப் புணர்ந்தார் என்ற வரிகளை வாசித்த போது நான் துணுக்குற்று அருவருப்படைந்தேன்.
ஒளிவு மறைவின்றி எழுதப்பட்ட இந்தச் சுயசரிதையில் இலங்கையில் அவர் சந்தித்தவர்களின் பெயர்கள், ஜேர்மனியில்; சந்தித்தவர்களின்; பெயர்கள்,அவர்களின் நகரங்கள் தமிழகத்தில் அவர் சந்தித்தவர்களின் பெயர்கள், கனடாவில் சந்தித்தவர்களின் பெயர்கள்,கொலண்டில் சந்தித்தவர்களின் பெயர்கள் சுவிற்சலாந்தில் சந்தித்தவர்களின் பெயர்கள் எனப் பலரின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு சந்தித்த அனைவருடனும் நிர்வாணம் என்று பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்னரும் பின்னரும் சுய இன்பத்திற்காகவும் தன்னினச் சேர்க்கை வழியிலும் புணரப்பட்டும் உள்ளதை பல இடங்களில் ஒருபுறம் மகிழ்ச்சியடனும் இன்னொரு புறம் வேதனையுடன் சொல்லியிருக்கின்றார்.
இவர் தனது சுயசரிதையில் பூடகமாக எதையும் சொல்ல முயற்சிக்கவில்லை.மிகவும் துணிவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லியிருக்கின்றார்.
ஐரோப்பிய புலத்தில் வாழும் திருநங்கைகளோ அல்லது இந்தியாவில் வாழும் திருநங்கைகளோ அல்லது ஐரோப்பிய புலம் தவிர்ந்த, இந்தியப் புலம் தவிர்ந்த வேறு எந்த நாடுகளில் உள்ள திருநங்கைகளாவது தமது சுயசரிதையை வெளிப்படையாக எழுதியிருந்தால் அது ஆச்சரியப்படுவதற்குரிய விடயம் அல்ல.ஏனென்றால் பூசி மெழுகலோ போலித்தனமோ இல்லாத இலக்கியங்கள் இங்கேதான் உருவாகின்றன.
உண்மைகளை ஊமைகளாக்கி பூசி மெழுகி இலக்கியம் படைக்க முயல்பவர்கள் இந்த ஈழத்திருநங்கையின் சுயசரிதையை வாசிப்பார்களானால் இப்படியும் எழுதுவார்களா என அதிர்ச்சியடையலாம்.
ஆனால் ஒரு திருநங்கை என்பவள் எப்படியெல்லாம் மனதைக் கொன்று வலிமிகுந்த வாழ்க்கை வாழ்கிறாள் என்பதை அறியாதவர்கள் ஈழத்திருநங்கையின் பயணமும் போராட்டமும் என்ற அவரின் சுயசரிதையை வாசித்து அறிந்து கொள்ளலாம்.
பல திருநங்கைகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.ஆணாகப் பிறந்தும் பெண்ணாக மாறுபவர்களையும், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுபவர்களையும் குடும்பத்தாரே வெறுத்து ஒதுக்குவதும் அதனால் அத்தகையவர்களின் மனங்கள் உழன்று வேதனைப்பட்டு துடிப்பதை யாருமே மறுக்க முடியாது.பெற்றோரால் சகோதரங்களால் வெறுக்கப்பட்டு „அலி’என்று முத்திரை குத்தப்படும் போது அதற்குட்படுபவர்களுக்குத்தான் தெரியும் அந்த வேதனை.
இதற்கு இந்த ஈழத்திருநங்கையும் விதிவிலக்கல்ல.அவரை வாட்டி வதைத்த துன்பத்தின் எல்லையில் ஒரு ஆணின் மீது காதல் கொண்டு அது எட்டாத போது,அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை வரை சென்றவரை அவரது சகோதரன் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று காப்பாற்றுகிறான்.
இச்சுயசரிதையில் குடும்பத்தில் உள்ள மற்றவர்களால் வெறுத்து ஒதுக்கபட்ட போதும், இத்திருநங்கையின் அக்கா அவரை உணர்ந்தவளாக இறுதி வரை ஆதரவாகவே இருந்திருக்கிறார்.
ஓவ்வொரு தருணத்திலும் அவரை மனதால் வேதனைப்படுத்தப்படுத்தப்படும்,சூழ்நிலைகளிலிருந்து மீள்வதில் ஒரே முனைப்பாக தான் முழுமையான பெண்ணாக மாறிவிட வேண்டும் என துடியாகத் துடிக்கிறார்.
ஜேர்மனியில் கேர்ளின் நகரில் பாலியல் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை செய்யும் துருக்கிய மருத்துவரால் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு,புணர்ச்சிக்குரிய துவாரம் கொண்ட முழுமையான பெண்ணுறுப்புக் கொண்ட பெண்ணாக மாறிய போது அளவுகடந்த மகிழ்ச்சியடைந்ததாக கூறும் இவர், தனது சகோதரி, தாயார், அவரின் சிறிய தாயார் ஆகியோர் தன்னை மருத்துவமனையில் வந்து பார்த்ததையும் குறிப்பிட்ட அவள் தனது சகோதரி தனது பெண்ணுறுப்பு சரியாக அமைந்திருக்கிறது என்று தனது தாயாருக்கும் சிறிய தாயாருக்கும் சொல்லியதையும் பதிவிட்டிருக்கிறார்.
தனது மகனின் நிலையைச் சரியாகப் புரிந்து கொண்ட தாயார்.தனது மகளாக மாறியவரின் பெண்ணுறுப்புத் துவாரத்தைச் சுத்தப்படுத்தியும், அது சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இறப்பராலான ஆணுறுப்பை மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க அதற்குள் செலுத்தி அதன் ஆரோக்கியத்தைப் பேண உதவி செய்ததையும் தனது சுயசரிதையில் நன்றியோடு குறிப்பிட்டிருக்கிறார்.
பெண்ணுறுப்புத் துவாரத்திலிருக்கும் உடலுறவுக்கு ஏதுவான மெதுமையான சதையுடன்கூடிய பெண்ணுறுப்புச் சத்திரசிகிச்சை இவருக்கு செய்ப்பட்ட போதும், இயல்பாகவே பெண்ணுறுப்பில் உற்பத்தியாகும் ஈஸ்ரோஜன் திரவகம் இத்திருநங்கையின் பெண்ணுறுப்பில் உற்பத்தியாகாது, உடலுறவின் போது மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு களிம்பை இத்திருநங்கை பயன்படுத்தியிருக்கிறார்.
திருநங்கைகள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் பல கட்டுரைகளை இணையத்தளங்களில் வாசித்திருக்கிறேன்.அவர்கள் எப்படியெல்லாம் பெற்றோராலும் சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டார்களோ அதனை இந்த ஈழத்திருநங்கையும் அனுபவித்திருக்கிறாள்.
ஒரு மனிதப் பிறவி முழுமையான அவையங்களுடன் ஆணாகப் பிறக்க வேண்டும் அல்லது பெண்ணாகப் பிறக்க வேண்டும்.அனால் இத்தகு மூன்றாவது பாலினமாகப் பிறக்கும் போது அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் படும் வேதனை, நிம்மதியின்மை போற்றவற்றை அப்படியான பிறப்பெடுத்து வாழ்ந்தால்தான் புரியும்.அது சொல்லி மாளாது.இத்திருநங்கையின் வேதனை அளவுகடந்தது.ஆனாலும் படிப்பில் கெட்டிக்காரராகவும்,தனது நகரத்து
கடையொன்றில் வேலை செய்த போதிலும் சரி,இனிப்புத் தொழிற்சாலையில் வேலை செய்த போதிலும் சரி ஒரு ஆளுமை உள்ள தொழிலாளியாக தன்னைக் காட்டியிருக்கின்றார்.
விமானப் பணிப் பெண்ணாக வரவேண்டும் என்ற ஆசையில் விமான நிறுவனங்களிடம் பலமுறை நேர்முகத் தேர்வுக்குப் போயும், அப்பணிக்குரிய ஆங்கில அறிவு இருந்தும் திருநங்கை என்ற காரணத்தால் தான் நிராகரிக்கப்பட்டதையும் கூறியிருக்கின்றார்.
சுவிற்சலாந்தில் சக திருநங்கை பணக்காரருடன் உறவு கொண்டதையும் அதைத் தான் நேரிலே பார்த்ததையும் குறிப்பிட்ட இவர் அங்கு தமிழர் ஒருவருடன் தான் உறவு கொண்டதையும் குறிப்பிடுகின்றார்.
இச்சுயசரிதையில் சமூகத்தின் மீது கோபமும், தன் மீது கோபமும் இப்படிப் பிறந்துவிட்டேன என்ற வேதனையும், காமமும் காதலும் கலந்தொரு வேட்கையும் கொண்ட இவர் சுவிற்சலாந்து, ஜேர்மனி,கனடா,கொலண்ட், பிரான்ஸ் என்று எல்லா நாடுகளிலும் சந்தித்த பெரும்பாலான ஆண்களுடன் ஈடுபட்டமை அவருக்குள் எனது பாதை இதுதான் என்பதான தேர்வுக்கு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார் என்பதாயும் இருக்கலாம்.
குடிகாரத் தந்தையிடம் அடியும் உதையும் வாங்கி,பெற்ற தாயாரால் எரிச்சல் மிகுந்த பாராமுகத்துடன் ஒதுக்கப்பட்டு, சகோதரனின் கோபத்துக்குள்ளாகி பொன்ஸ் என்று கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வீட்டுக்குள்ளேயே நிம்மதியிழந்து, வெளியிலும் படித்த பாடசாலையில் சக மாணவர்களால் கிண்டலுக்கு உள்ளாகி எங்கும் ஒரு போராட்டத்தையே இந்த ஈழத்திருநங்கை நடத்தியிருக்கிறாள்.அதே வேளை சில மாணவிகளும் ஆசியர்களும் இத்திருநங்கையின் மனதையும் மனவுளைச்சலையும் உளவியல் ரீதியாக புரிந்து கொண்டு பலவழிகளிலும் உதவி செய்திருக்கிறார்கள்.
ஜேர்மனிக்கு வருவதற்கு முன்பு கொழும்பில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த ஒரு சிங்கள நடுத்தர வயதானவரால் தனது வயிற்றுப் பகுதி அவரின் காம இட்சையை தீர்க்கப் பயன்பட்டதையும் இச்சை தீர்ந்ததும் அந்த மனம் ஒப்பாத விரும்பத்தகாத அவரின் செயலால் அருவருப்படைந்து தான் அழுதழுது குளித்து தன்னைச் சுத்தப்படுத்தியதையதையும் வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.
இந்தக் கட்டுரையை எழுதும் போது அவன், அவள் என்ற விளித்தலையம் திருநங்கை என்ற விளித்தலையும் எந்தெந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பது பெரும் சிக்கலாகவிருந்தது.அதனால் திருநங்கைஅல்லது அவர் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றேன்.
ஆணாக இல்லாமலும் பெண்ணாக இல்லாமலும் தனக்குள் ஏற்பட்ட பெண்ணுணர்வின் காரணமாக கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி மனமுழன்று வாழ்வதைவிட பெண்ணாக உடலாலும் மனதாலும் மாறுவது என்ற முடிவெடுத்து பெண்ணறுப்புக்கான சத்திரசிகிச்சை செய்து மாறிய போதிலும் உடலின் வடிவமைப்பில் பெண்ணுடலாக வேண்டும் என்பதற்கான மாத்திரைகளுக்கான சிட்டையை மருத்துவரிடம் சென்று பெற்றுக் கொண்ட திருநங்கை இம்மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்கியதும் அவரின் உடல் பெண்களுக்குரிய உடலாக வடிவமைப்பு எடுத்ததைக் கண்டு தான் மகிழ்ச்சியடைந்ததற்கு அளவே இல்லையென்பதையும் இச்சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார்.பெண்களுக்குரிய மார்பகத்தை தனதுடல்: பெற வேண்டும் மென்பதற்காக தாய்லாந்தில் சிலிக்கன் மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் பெற்று இன்னும் மகிழ்ந்திருக்கிறார்.
இத்திருநங்கை சிலிக்கன் மார்பகத்தைப் பெற்றிருந்த போதும் புணர்ச்சிக்கு ஏற்ற பெண்ணுறுப்பைப் பெற்றிருந்த போதும் இவரால் கருத்தரிக்க முடியாது என்பதை மட்டுமல்ல,இவரின் அழகிலும் கட்டுக் கோப்பான உடலமைப்பிலும் ஈர்க்கப்பட்டு காதல் கொண்ட ஒருவர் தனக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுத்தருமாறு கூறியதை ஆதங்கத்துடன் குறிப்பிடுகின்றார்.
பல ஆண்கள் இவரை அனுபவிக்க வேண்டுமென்று அவாக் கொண்டதை இச்சுயசரிதையில் பெரும்பாலான இடங்களில் விரவி நிற்கின்ற மதுவுடன் கூடிய உடலுறவுச் சம்பவங்களை விபரித்தலில் இருந்து அறிய முடிகின்றது.ஆனால் இச்சுயசரிதையில் திருநங்கையின் வேதனை இழையோடிப் பரந்து நிற்கின்றது.
கொலண்டில் ஏதோ ஒரு வேகத்தில் ஒரு இளைஞன் தனக்குத் தாலியாக மஞ்சள் கட்டிய மஞ்சள் கயிறைக் கட்டுவதும் பின்னர் அறித்தெறிந்தையும் குறிப்பிடுகின்றார்.
தான் பெண்ணாகப் பிறந்து முழுவளர்ச்சியடைந்த பெண் என நம்பி தமக்கு இலகுவாக ஒரு பெண் தமது காம வேட்கைக்கு கிடைத்திருக்கிறாள் என நம்பி தன்னோடு புணர முடியாது போய் தான் ஒரு திருநங்கை என்பதை அறிந்து வெறுத்து ஒதுக்கியதை வேதனையுடன் தனது சுயசரிதையில் குறிப்பிடுகின்றார்.
திருநங்கைகள் தமக்குள் தாய் பேத்தி சித்தி போன்ற உறவு முறைகளை வரித்துக் கொண்டமையும் பேத்தி முறையில் வரித்துக் கொண்டவர்களையோ தாயாக வரித்துக் கொண்டவர்களையோ சந்திக்கும் போது „பாம்படுத்தி’என்று சொல்வதும், அவர்கள் „ஜியோ’ என்று சொல்வதையும் வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.பாம்படுத்தி என்பது உங்கள் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் என்பதையும் ஜியோ என்பது நல்லாயிரு என்பதையும் குறிக்கின்றது.
இந்தத் திருநங்கை தானும் பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதித்தாகச் சொல்வதோடு, பெண்ணுறுப்பு சத்திரசிகிச்சைக்குப் பிறகு ஏற்படுத்திக் கொண்ட உடலுறவின் போது ஒரு பெண் அடைந்த மகிழ்ச்சியையும் பெண்ணுக்குரிய தாம்பத்திய மகிழ்ச்சியாகக் குறிப்பிடுகின்றார்.இச்சத்திர சிகிச்சையானது நரம்பு மண்டலங்களுடனும் இரத்த நாளங்களுடனும் தொடர்புடையதாகவும்; இருக்கும் பட்சத்திலேயே இன்பம் துய்த்தல் சாத்தியமாகும்.இந்தச் சத்திர சிகிச்சை அதற்குரிய சாத்தியத்துடனேயே செய்யப்பட்டிருக்கின்றது.
திருநங்கைகளின் நிர்வாணம் என்று சொல்லுகின்ற சடங்கானது நவீன சத்திரசிகிச்சையைத் தவிர்த்து தாயம்மா என்ற திருநங்கையொருவராலும் வளர்ச்சியடையாத ஆணின் விதையையும் ஆணுறுப்பையும் வெட்டி எறிந்து பெண்ணாக மாற்றுவதேயாகும்.திருநங்கைகள் கூத்தாண்டவர் என்ற தெய்வத்தை வழிபடுபவர்கள்;.
திருநங்கைகள் பாலியல் தொழிலுக்குள் தாமாகச் சென்றார்களா அல்லது சமூகத்தால் தள்ளிவிடப்பட்டவர்களா என்பதை கண்டறிய முடியாதபடி சமூக நிர்ப்பந்தமும் தம்மனப் போக்கும் இரண்டறக் கலந்திருப்பதை இச்சுயசரிதை சுட்டி நிற்கின்றது.இத்திருநங்கையுடன் தொடர்பு கொண்டவர்களில் ஒரு சிலரைத் தவிர மிகுதி அனைவரும் தமது காம வேட்கையை தணிப்பதற்கான வடிகாலாகவே இவரைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
திருநங்கைகளின் வாழ்வு நிலையை தன்னிலைக்கூடாக இச்சுயசரிதை மிகத் தெளிவாக கூறியுள்ளது.அதே வேளை திருநங்கைகளில் பலர் நல்ல பணிகளில் இருப்பதையும் இத்திருநங்கை கூறியுள்ளதுடன் தானும் பல்மருத்துவத் தாதிக்கு படித்துக் கொண்டிருப்பதையும் கூறி திருநங்கைகள் பாலியல் தொழிலை தொழில் தேர்வாக கொள்ளுதல் தவறு என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
திருநங்கைகளுக்கு கோபம் வரும் போது முகத்துக்கு நேரே இருகைகளையும் கொண்டு வந்து கைதட்டுவது போல தட்டி வேகமாக வலப்பக்கம் இடப்பக்கமாக எடுப்பதாகும்.
நான் சிங்கப்பூரில் வேலை செய்த போது, சிங்கப்பூரில் டெஸ்கா வீதியிலிருக்கும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வு எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தினால் எனது நண்பரையும் அழைத்துக் கொண்டு போய் அவ்வில்லங்கள் வழியாக நடந்து செல்கையில் ஒரு இடத்தில் திருநங்கைகளும் திருநம்பிகளும் கூடிநின்று பேரம் பேசுதலில் ஈடுபட்டதையும் அந்த இடம் சத்தமாக இருந்ததையும் கவனித்தேன்.அங்கும் திருநங்கைகள் முகத்துக்கு நேரே கைகளைக் கொண்டு வந்து தட்டுவதைக் கனித்தேன்.அது ஏன் என்பதை இச்சுயசரிதையில் காண முடிந்தது.
இன்னொன்றையும் பதிவு செய்கின்றேன்.பல ஆண்டுகளுக்கு முன்னர் மித்திரன் பத்திரிகையில் பீட்டர் ரோத் என்ற அமெரிக்கர் எழுதிய இருண்ட கண்டத்தில் இருபது நாட்கள் என்ற கட்டுரையின் தமிழாக்கம் வெளிவந்திருந்தது.
அதில் ஆணாகப் பிறந்தும் ஆணுறுப்பு வளர்ச்சியடையாதவர்களை புணர்ச்சிக்கு ஏற்றவிதமாக மாற்றவதற்காக வளர்ச்சி குன்றிய பாலியல் உறுப்பின் மத்தியில் பெண்ணுறுப்பில் உள்ளது போன்ற துவாரத்தை ஏற்படுத்துவதற்காக கூரான தடியொன்றால் துவாரமிட்டு அப்படித் துவாரமிடப்பட்டவர்கள் வெயிலில் கட்டி வைக்கப்பட்டு புண் ஆறியதும் புணர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டார்கள் என்ற கொடுமையான செயல்பாட்டை வாசித்தறிந்தேன். கிட்டத்தட்ட தாயம்மாவின் செயல்பாடும் அதுவேதான்.
புயலில் சிக்குண்ட கப்பல் போன்று இத்திருநங்கை நிலைதடுமாறினாலும்; போக வேண்டிய சரியான இலக்கான நான் இனிப் பெண்தான் என்ற இலக்கை அடைந்துவிட்டார்.அதே வேளை திருநங்கைகளின் வாழ்வுப் போராட்டங்களையும் வலியையும் புரிய வைத்திருக்கின்றார்.
இச்சுயசரிதை சொல்லியவை உண்மையானவை, அவர் அனுபவித்த வேதனைகள் நிராகரிப்புக்கள், தன்னையும் சக உயிராக அன்பு செலுத்தாமை போன்றவற்றையும், சகல உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கொண்ட ஒரு திரட்டுச் சுயசரிதை நூலாக வெளிவந்திருக்கிறது.
![]()