முகிழ்த்தது முத்து

பருவத் துணிக்கை!… ( சிறுகதை ) … அண்டனூர் சுரா.

நீண்ட நேரம் அழுததில் அழுகையின் களைப்பு அழுகுரலுக்குப் பிந்தைய மூச்சுத் தெறிப்பில் தெரிந்தது. அலறலோ, பெரிய சிணுங்கலோ இல்லாத அழுகை அது. நான் பேருந்தில் ஏறுவதற்கு முன்பிருந்தே அந்தக் குழந்தையின் அழுகை இருந்தது.

பேருந்து, பேருந்து நிறுத்தத் திருப்பத்தில் ஏறி நின்றிருந்தது. அடர், இளம்பச்சை வெளுத்துப்போன அரசுப்பேருந்து. முன் சக்கரங்கள் தார்ச்சாலையில் ஏறி பின் சக்கரங்கள் சகதிக்குள் நின்றன. பேருந்துக்கு வலது புறம் ஒரு தேனீர்க்கடை. ஓட்டுநரும், நடத்துநரும் சூடு பறக்க தேநீர் அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சாவகாசமாக நின்று பேசிக்கொண்டு, தேநீர் அருந்துவதைப் பார்க்கையில், பேருந்தை எடுக்க இன்னும் நேரமிருக்கிறது, என்பதைச் சொல்வதாக இருந்தது.

கடைக்கும் வெளியே கூரையில், திரிகடுசூரணம் என எழுதப்பட்ட ஒரு சிலேட் தொங்கிக் கிடந்தது. அந்தச் சிலேட்டைப் பார்த்தபடி, ஒரு டீ போடச் சொன்னேன். “திரிகடுசூரணமா போடட்டா?” எனக் கேட்டவர், ஒரு கண்ணாடி குவளையை எடுத்து, அதை சுடுநீரால் கழுவி, இலாவகமாக குவளையை வைத்தபடி என்னைப் பார்த்தார்.

நான் தொங்கிய சிலேட்டைப் பார்த்தவனாய், “ இது சுக்குக்காப்பி தானே?” என்றேன்.

” சுக்குக்காப்பி வேற. இது திரிகடுசூரணம்?”

“ அப்படின்னா?”

கடையைச் சுற்றி நின்றிருந்தவர்கள், கடைக்காரரைப் பார்த்தார்கள். அப்படியென்றால் என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வம், அவர்களுக்கும் இருந்தது.

“ சுக்கு, மிளகு, திப்பிலி கசாயக் காஃபி. இரத்தக் கொழுப்பைக் குறைக்கும்” என்றார் கடைக்காரர். அப்படியாகச் சொன்னதும், “எனக்கும் ஒன்னு” என்றார் சாக்குப் பையுடன் நின்றிருந்த ஒரு பயணி. கடைக்காரர் பைப்பைத் திறந்து தண்ணீர் பிடிப்பதைப்போல, சூடு பறக்கும் காஃபியை முக்கால் குவளைப் பிடித்து, இரண்டு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை கலந்து, கரண்டியால் ஒரு கலக்குக் கலக்கி, ஒரு ஆற்று ஆற்றியவர் என் முன்பு நீட்டினார்.

நறுமண ஆவியால் நாசித்துவாரங்கள் கமகமக்க செய்தன. ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தில் ஏறியிருந்தார்கள். கடைக்காரர், என்னிடமிருந்த குவளையை வாங்கி, பேப்பர் குவளையில் ஊற்றி, என்னிடம் நீட்டி, வழி அனுப்பிவைத்தார். நான் திரிகடுசூரணத்துடன் பேருந்தில் ஏறினேன். குழந்தை தேம்பும் அழுகையாக அழுதுக்கொண்டிருந்தது.

ஒரு சீட்டிற்கு ஒருவர் வீதம் பயணிகள் உட்கார்ந்திருந்தார்கள். ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் முகக்கூடு அணிந்திருந்தார்கள். சாமங்கி, சம்பந்தி, அவரைப்பூ, ஆவாரம்பூ நிற முகக்கவசங்கள். யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. வரிசை மாற்றி அமர வைத்த பள்ளி வகுப்பறையைப் போல பேருந்து அத்தனை அமைதியாக இருந்தது.

நான் பின்புற படியில் ஏறி, முன்சீட்டுக்கு வந்தேன். எந்தச் சீட்டிலும் நான் உட்கார்ந்துகொள்ளலாம், என்கிற அளவுக்கு இரண்டு மூன்று சீட்டுகள் காலியாக இருந்தன. நடுபகுதி இருக்கையில், ஒரு மிடற்று காஃபியை உறிந்தபடி அமர்ந்தேன். தூறல் தூவானப் பந்தல் விரித்திருந்தது.

கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அது. பருவம் தவறிப் பெய்த பெருமழையால், பேருந்துகள் வந்து திரும்பி இளைப்பாறும் இடம் நாற்றாங்காலாக இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு, சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக இருந்த பேருந்து நிலையம். கந்தர்வகோட்டை பேருந்து நிலைய நாற்றாங்காலில் நடவு நட ஆட்கள் தேவை, என ஒருவரின் புலனப் பதிவு, முகநூல், டெலிகிராம், எனக் கடந்து தொலைக்காட்சிகளில் வரி செய்தியாக இடம் பிடித்தது. மந்திரியைத் தவிர மற்ற அனைவரும் பேருந்து நிலையத்தை ஒரு சுற்று பார்த்து சென்றிருந்தார்கள். இரண்டு மூன்று லோடு செம்மண், கிராவல் கொட்டி ரசமட்டம் பார்த்ததில், பேருந்து நிலையம் கிழிந்த சட்டையை இஸ்திரி செய்ததைப் போலிருந்தது.

பேருந்து எஞ்சின் நீண்ட தொடர் ஓட்டத்திற்கு தயாராக மூச்சுவாங்கி இரைந்துகொண்டிருந்தது. அந்தப் பேருந்துக்கென நிரந்தர வாடிக்கையாளர் வருகைக்காக நடத்துநர் காத்திருந்தார். ஒரு தனியார் பேருந்து, இப்பேருந்தின் முன்பு நின்று, பயணிகளைக் கொத்தாக இறக்கிவிட்டு, ஒன்றிரண்டு பேரை ஏற்றிக்கொண்டு கிளம்பியதும், ஓட்டுநர் ஹாரன் கொடுத்தார். அந்த ஹாரன் சத்தத்திற்கு நிகராகவே இந்தக் குழந்தையின் அழுகுரல் இருந்தது.

பேருந்து மெல்ல நகர்ந்தது. வாடிக்கையான இரண்டு பேர் பேருந்தில் சாவகாசமாக ஏறினார்கள். நடத்துநரைப் பார்த்து, சிரிக்கவும், ஓட்டுநரை அண்ணே, என விளிக்கவும் செய்தார்கள். அவர்களின் பின்னே மூன்று பேர் அடித்துபிடித்துக்கொண்டு ஏறினார்கள்.

” எங்கேம்மா போகணும்? ”

” செங்கிப்பட்டி, போகும்தானே? ”

” போகும், சில்லறை இருக்கணும் ”

ஓட்டுநர் நடத்துநரின் விசில் சத்தத்திற்கு காத்திருந்தவரைப் போல, விசில் கொடுத்ததும், வண்டியைக் கிளப்பினார். வண்டி குலுங்குகையில் குழந்தை ஒரு கணம் அழுகையை நிறுத்தி, பிறகு முன்னே விடவும் சத்தமாக அழுதது.

நான் அமர்ந்திருந்த இருக்கைக்கும் முன் இருக்கையில்தான் அத்தாயும், குழந்தையும் இருந்தார்கள். மயில் கழுத்து நிற சேலை அணிந்திருந்தாள். அந்தச் சேலைக்கு சற்றும் பொருத்தமில்லாத சாக்கெட் அணிந்திருந்தாள். அதையும் அத்தனை கச்சிதமாக இல்லாமல் ஆண்கள் அணியும் சட்டையைப் போல தொளதொளவென உடுத்தியிருந்தாள். அவளது கணவர் யாரென்று காவல்த்துறையினர் விசாரித்தால், போக்சோ சட்டத்தால் கைது செய்யப்படுகிறவனாக இருக்கக்கூடுவான். எந்த இயற்கணிதத்திற்கும் அவள் வயது பதினெட்டைத் தாண்டிவிடாது. ஓர் அரும்பு, மொட்டு ஆகாமல் மலர்ந்து விட்டவளைப் போலவே அவள் இருந்தாள்.

அவளது கையிலிருந்த குழந்தை அதலை வகை குழந்தையாக இருந்தது. எடுப்பான நெற்றியும், நாசிக்கூடுவாயும், கன்னம் விழிகளுமென இருந்த அக்குழந்தையைப் பார்க்கும் யாரும், “ஏந்தங்கம், ஏம்பவுனு, என் அழகு ” எனக் கொஞ்சாமல் கடந்துவிட முடியாது. பலரும் கொஞ்சத் தகுந்த குழந்தையாகவே அக்குழந்தையின் கன்னமும் நாசி முழியும் இருந்தன.

குழந்தை, தாயின் மடியில் உட்காரவில்லை. கொழுகொம்பைத் தேடும் கொடியைப்போல குழந்தையின் கைகள் நாலாபுறமும் அளாவின. தாயின் இறுக்கமான பிடியை மீறும் குழந்தையாக இருந்தது. தாயின் தலைமயிரைப் பிடித்து, பிய்த்து, உதைத்து எதையோ சொல்லி, குதலை மொழியில் அழுதது. அத்தாயால், அக்குழந்தையின் முதுகைத் தட்டுக் கொடுப்பதைத் தவிர, அவளுக்கு வேறொன்றும் செய்யத் தெரியவில்லை.

” ஏம்மா குழந்த அழுவுது?”

நான் அமர்ந்திருந்த சீட்டிற்கும் இடது புற சீட்டில் அமர்ந்திருந்த தாத்தா வயதையொத்தவர், உரக்க கேட்டார். யாராலும் ஜீரணிக்க முடியாத ஒன்று, குழந்தையின் அழுகை. அதை வெளிக்காட்டும் விதமாகவே அவரது கேள்வி இருந்தது. அவர் கேட்ட நேரம் பார்த்து, நடத்துநர் விசில் கொடுத்தார். விசில் சத்தத்தைக் கேட்டு, குழந்தை தன் அழுகையைச் சற்றே நிறுத்தியது. ஓட்டுநர் ஹாரன் கொடுத்தபடி, பேருந்தை செங்கிப்பட்டி சாலைக்குத் திருப்பினார். குழந்தையின் அழுகையும் எஞ்சினின் இரைச்சலும் ஒற்றைச் சுதியில் இருந்ததில், எதையும் தனியே பிரித்தறிய முடியாதளவிற்கு இரண்டு சத்தமும் இருந்தன.

நான் என் ஆண்ட்ராய்டை எடுத்து, விரல்களை அதில் ஓடவிட்டேன். நடத்துநர் சில்லறைக் காசுகளைக் குலுக்கவும், “ எந்த வூரு, ஒருவா ஆறுரூவா இருக்கா, எத்தன டிக்கெட் ?” எனக்

கேட்டுக்கொண்டு என்னிடம் வந்து நின்றார். திருச்சிக்கு ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டேன். டிக்கெட்டைக் கிழித்து என் சட்டைப்பையில் திணித்தவர், நான் கொடுத்த சில்லறையை எண்ணிப் பார்க்காமல் பைக்குள் போட்டுக்கொண்டார்.

குழந்தை தாயின் மடியை மிதித்து, துவசம் செய்து, கம்பியை இறுகப் பிடித்தபடி என்னைப் பார்த்தது. அதன் கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது. நான் குழந்தையைப் பார்த்து, “அழக்கூடாது” என்றேன். குழந்தை சட்டென அழுகையை நிறுத்தி, வேறொரு சுதியில் அழுகையை மீட்டியது.

” ஏம்மா, குழந்த அழுகுது ?” நான் கேட்க நினைத்த கேள்வியைச் சற்று முன்பு கேட்ட அதே பெரியவர் திரும்பவும் கேட்டார். அவள் அந்தப் பெரியவர் பக்கமாகத் திரும்பினாள். பெரியவரின் கண்கள் கேள்வித் துருத்தலாக இருந்தன. இக்குழந்தையால் தான் அவமானப்படுகிறேன், என அவள் நினைத்திருக்கக் கூடும். குழந்தையை அவள் லப்பென மடக்கி, மடிக்குள் கிடத்திக்கொண்டு, முகத்தை நீளும்கோணலுமாக வைத்துக்கொண்டாள். இப்போது குழந்தை அழுதிருக்கவில்லை. ஓரிரு நொடிகள்தான் அந்த அமைதி. குழந்தை உள்மூச்சு வாங்கி, முன்னே விடவும் அடித்தொண்டையால் அழுதது. கோடைக்கால சில்வண்டு ரீங்கார விசிலுக்கு ஒத்த அழுகையாக அந்த அழுகை இருந்தது.

ஓட்டுநர் பேருந்தின் வேகத்தை சற்றே குறைத்து, பின் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். அவரைப் போலவே பலரும் அவளைப் பார்த்திருந்தார்கள். அவளது முகத்தில் நெருஞ்சி காய்த்திருந்தது.

அவளது அலைபேசி சிணுங்கியது. அவளது மாராப்புக்குள் கையை நுழைத்து, அலைபேசியை எடுத்து காதினில் வைத்தாள். ” போய்க்கிட்டு இருக்கேன் மாமா”

” ஆமாம் மாமா”

” அழுதுக்கிட்டேதான் இருக்காள் ”

” சரி மாமா ”

” இம், இம்” என்றாள். அவளது பதிலில் வார்த்தைக்கும் வலிக்கும்படியான வெறுப்பு இருந்தது.

குழந்தை ஒரு கையால் தாலிக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு, செல்போனை பிடுங்கியது. அவள் மாமாவுடன் பேசிக்கொண்டே குழந்தையை அரற்றினாள். குழந்தை அந்த கணம் திடுக்கிட்டு, ஒரு நொடி மூச்சு அடக்கி, எரிச்சலாக அழுவதைப் போல அழுதது.

பேருந்து தச்சங்குறிச்சியில் நின்று கிளம்பியது. அங்கு ஒரு கிளி ஜோசியர் கையில் கிளிக்கூண்டுடன் ஏறியிருந்தார். அதற்குள் கிளியோ, எலியோ இருந்திருக்கவில்லை. அதன் மீது அவளது பார்வை சென்றது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீட்டுகள் வரிசை கலையாமல் இருந்தன. ஜோசியர், கூண்டைக் கீழே வைத்துவிட்டு, கைப்பிடி கம்பியைப் பிடித்தபடி நின்றார்.

குழந்தை இப்போது ‘நய்ய், நய்ய்’ என்று அழுதது. அவளது கைகளுக்கு பால் டப்பாவை அவள் கொடுத்திருந்தாள். குழந்தை ஒரே மூச்சில் பாலை உறிந்து, பால் டப்பாவை எறிந்தபடி அழச் செய்தது. குழந்தையின் தாய், கிளி இல்லாத கூண்டைக் கவனித்தவளாக இருந்தாள். கிளி கூண்டிலிருந்து பறந்துவிட்டதாக அவள் நினைத்திருக்கக் கூடும். அவளது உதடுகள் நீள்வாக்கில் நெளிந்தன. அவள் உட்கார்ந்திருந்த சீட்டில், முன் நகர்ந்து சீட்டின் நீள்பக்கமாக உட்கார்ந்துகொண்டு, குழந்தையைத் தூக்கி தோளில் கிடத்திக்கொண்டு, முதுகைப் பொத்திக் கொடுத்தாள். குழந்தை தலையைத் தூக்கி என்னைப் பார்த்தது. சீட்டில் உட்கார்ந்திருந்த ஒவ்வொருவரையும் பார்த்தது. யாரையும் பார்க்க சகிக்காதவளாய், உடம்பை வளைத்து தாயின் மடிக்குள் விழுந்தது.

குழந்தை ஏன் இப்படி அழுகிறது, என்னால் யோசிக்காமல் இருக்கமுடியவில்லை. பசிக்கான அழுகை அல்ல இது. பசியின் அழுகை நடுவயிற்றிலிருந்து எழக்கூடியது. இது நோயின் அழுகையும் அல்ல. நோயின் அழுகை நாசியில் தெரிந்துவிடும். எறும்போ, சுள்ளானோ கடித்தால் குழந்தை இப்படி அழாது. அலறும். எதையே சொல்லி குழந்தை அழுவதாக இருந்தது. எதற்கான அழுகை இது? யாரேனும் கண்டுபிடித்து சொன்னால் தேவலாம், போலிருந்தது.

பேருந்தை ஒரு சுற்று பார்த்தேன். ஒரே ஒரு தாய், பெரிய கூடையுடன் உட்கார்ந்திருந்தாள். கூடையை ஈரமான அழுக்குத்துணி மூடியிருந்தது. மீன் அல்லது கருவாடு இரண்டில் ஒன்றாக இருக்கத்தக்க கூடை அது. அத்தாய் குழந்தை அழுவதை சட்டை செய்யாமல், தன் வியாபாரத்தை இந்த பொடித்தூத்தல் கெடுக்கிறதே, எனக் கவலைப்படுகிறவளாக கூடையோடு முகத்தையும் தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

பேருந்து செங்கிப்பட்டி இஞ்சினியரிங் கல்லூரி நிறுத்தத்தில் நின்றது. அங்கு கிளி ஜோசியர் இறங்கிக்கொண்டார். கல்லூரி மாணாக்கர் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு, சிரித்துக்கொண்டு, கதம்பமாக ஏறினார்கள். ஒன்றிரண்டு பேருக்கு உட்கார இடம் கிடைத்தது. மற்றவர்கள், ஆங்காங்கே விரவி நின்றுகொண்டார்கள். அவர்களின் முதுகில் கிடந்த பையை எடுத்து, கிடைவாக்கில் கிடத்திக்கொண்டு, செல்போனை எடுத்து, அத்தனை வேகமாக அதற்குள் மூழ்கினார்கள். பேருந்து ஓரளவிற்கு நல்ல கூட்டத்தில் ஊர்ந்தது. காற்றோட்டம் குறைந்து, வெட்கையும் புழுக்கமுமாக இருந்தது. பேருந்து ஒரு குலுங்கு குலுங்கி, பெரும் இரைச்சலில் உறுமி, வேகத்தடையில் ஏறி இறங்கியது.

பேருந்தில் முன்பு அளவுக்கு அமைதியில்லை. சந்தைக்கடை நசநசப்பைக் கொண்டதாக மாறியது. அத்தனை பேரும் சங்கேதி, சம்பாசனைகளாக இருந்தார்கள். அவ்வளவு பேர் பேசியும் குழந்தையின் அழுகை தனித்துக் கேட்கவே செய்தது.

ஒரு கல்லூரி மாணவி, என்னை உரசிக்கொண்டு நின்றாள். அவளது கையில் செல்போன் இருந்தது. திருமண வயதையொத்தவள். கல்லூரியில் இறுதியாண்டு படிக்க வேண்டும், அல்லது முடித்திருக்க வேண்டும். அதை மீறிய பருவத்தினளாக தெரிந்தாள். அவளது முதுகில் கிடந்த பொதி, என் முகத்தை உரசிக் கிடந்தது.

அவள் முன் உடம்பை வளைத்து, அழுதுகொண்டிருந்த குழந்தையைப் பார்த்தாள். குழந்தை தலையைச் சிலுப்பி தேம்பியது. குழந்தையின் முகத்திற்கு நேரே அவள் தன் முகத்தைக் கொண்டு சென்றாள். உதடுகளை விரித்து, சிரித்தாள். அவளது முகத்திற்கு அந்தச் சிரிப்பு அத்தனை அழகாக இருந்தது. உண்மையாக சிரிக்கையில், கண்களும் பற்களும் சிரிக்கவே செய்கின்றன. அவளது சிரிப்பில், பற்கள் வெள்ளி முலாம் பூசியதைப்போல பளிச்சிட்டன. சலிப்பற்ற, திகட்டாத முகம் அவளுடையது.

அவள் குழந்தையைப் பார்த்து நாக்கைத் துருத்தினாள். அவளது நுனி நாக்கை மட்டும் தனித்து ஆட்டினாள். நாக்கைக் கொடும்புக்குள் கொடுத்து துளைத்தாள். உதடுகளை மடித்து ‘பக்,பக்’ என அடித்தாள். உதடுகளை முத்தம் கொடுப்பதைப் போல குவித்து, “இப்பே” என சத்தம் கொடுத்தாள்.

குழந்தை குமிண் சிரிப்பில் சிரித்தது. குழந்தையைப் போலவே இவள் சிரித்தாள். இவளைப் போல குழந்தையும் சிரித்தது. அவளது உதடுகள், கன்னக்குழிகளும் , முகவாய் அத்தனையும் சிரித்தன.

குழந்தைக்கு ஒரு பக்க காதினைக் காட்டினாள். தோடுடைய செவியளாக தெரிந்தாள். ஒரு சிமிக்கி குழந்தையின் கைக்கு நேரே தொங்கிக்கிடந்தது. தலையை மெல்ல அசைத்தாள். சிமிக்கி ஆடியது. குழந்தை தாயின் பிடியிலிருந்து மெல்ல எழுந்து, சிமிக்கியைத் தாவிப்பிடிக்க கையை நீட்டியது. அந்தப் பெண் தலையை மெல்ல நிமிர்த்த குழந்தையின் கை மேலும் நீண்டது. அவள் தலையை வேகமாக ஆட்டினாள். சிமிக்கி அத்தனை வேகமாக ஆடியது. குழந்தை இரு கைகளையும் தூக்கிக்கொண்டு குதித்தது. அவள் நாக்கை கீழ் உதட்டுக்குள் கொடுத்து, ‘க்ளூக், க்ளூக்’ என்றாள். குழந்தை அதைப்போல செய்ய முனைந்தது.

நான் குழந்தையின் தாயைக் கவனித்தேன். அவளது கவனம் குழந்தையின் மீது இல்லை. அவளது நேர்ப்பார்வைக்கு ஒரு காதல் ஜோடியினர் நின்றிருந்தார்கள். அவனது சட்டை நிறத்தில் அவள் சுடிதார் அணிந்திருந்தாள். சந்தனமும், குங்குமமும் கலந்த கலவையாக அவர்களின் உடை இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் உரசிக்கொள்ளாமல், அதேநேரம் பேருந்து ஒரு வேகத்தடையில் இறங்கி ஏறினால், ஒருவரும் அத்தனை

நெருக்கமாக உரசிக் கொள்ளும்படியான நெருக்கத்தில் நின்றிருந்தார்கள். அவளது வலது பக்க தோள் இடத்தில் முகக்கவசம் அணிந்த அவனது வாய் இருந்தது. அவனது வாய்க்கு பொருந்துபடியாக அவளது காது இருந்தது. அவன் சிரிக்க, பேச இருந்தான். அவனது உதட்டு அசைவிற்கேற்ப அவளது உதடுகள் சிரிக்கவும் வெட்குறவும் செய்தன.

ஒரு பிடி சீரகம் மெல்வதைப்போல அவனது வாய் அசைந்தது. அவனது அசைவிற்கு ஏற்ப அவள் சிரிக்கச் செய்தாள். அவள் எத்தகைய டெசிபலில் சிரிக்கிறாள், என்பதை அவளது புருவமும், காது மடல்களும் காட்டுவதாக இருந்தன. அவள் நீண்ட நேரம் அப்படியாக நின்றிருக்கவில்லை. ஒரு திருப்பத்தில் அவனது முகம் பார்த்து, அவள் திரும்பிக் கொண்டாள். இப்போது இருவரும் இடையில் நடத்துநர் நுழைய முடியாத அளவுக்கு அவர்கள் நெருங்கி நின்றார்கள்.

அவனுக்கும் சேர்த்து, அவள் டிக்கெட் எடுத்தாள். நடத்துநர், “ஒரு ரூபாய், ஆறு ரூபாய் இருந்தா கொடுங்க” என்றதும், அவன் அவளது பேண்ட் பைக்குள் கையை விட்டு, துழாவி, ஒரு நாணயத்தை எடுத்து, முன் பின்னே பார்த்து, இரண்டு ரூபாய் எனச் சொல்லிக் கொடுத்தான். அப்படியாகச் சொன்னது யாருக்கும் கேட்டிருக்கவில்லை. ஆனால், அவன் கொடுத்தது, இரண்டு ரூபாய் நாணயம் என்பதால் அதைத்தான் அவன் சொல்லியிருக்க வேண்டும்.

நான் அந்த காதல் ஜோடியிலிருந்து கண்களை எடுத்து, குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருந்தவளைப் பார்த்தேன். குழந்தையைச் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் இவள் பார்க்க பேரழகியாகத் தெரிந்தாள். உச்சி வகிடெடுத்து சீவியதில் அவளது நீண்ட கூந்தலின் குஞ்சம், கோழிக்குஞ்சின் அடிவயிற்று தூவியாக எனது கையில் விழுந்துகிடந்தது.

இத்தனை நேரம் இல்லாத துள்ளல், குழந்தையின் முகத்தை அப்பிக்கொண்டது. குழந்தையின் ஒவ்வொரு செல்லும், அணுவும் சிரிக்கவே செய்தன. குழந்தையின் சிரிப்பு ஆரோகணத்தில் ஏறிக்கொண்டிருந்தது. குழந்தையின் சிரிப்புக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை, இவளின் சிரிப்பு. இவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தை எத்தகைய ஐஸ்வரியமாக இருக்கப்போகிறது, என்பதை அப்போதைக்கு என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

குழந்தையை இவளுக்குத்தான் எவ்வளவு அழகாக கொஞ்சத் தெரிகிறது. இத்தனைக்கும் அவள் குழந்தையைத் தூக்கவில்லை, தொடவில்லை. மீன்குஞ்சுகளைக் கண்களால் மேய்க்கும் தாய்மீனைப் போல, இவள் கண்களால் குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்தாள். பயணிகள் அத்தனை பேரும் அவளைத்தான் பார்த்திருந்தார்கள். தன்னை பலரும் பார்க்கிறார்கள், என்கிற வெட்கமோ, பெருமையோ அவளிடம் கடுகுக்கும் இல்லை.

அவள் சிரித்தக் குழந்தையை மேலும் மேலும் சிரிக்க வைத்தபடி இருந்தாள். குழந்தை கைகளைக் கொட்டிக்கொண்டு பேருந்திலிருந்த அனைவருக்கும் கேட்கும்படியாக ஒரு சிரிப்பு சிரித்தது. பேருந்தின் ஹாரன் சத்தத்தையும் மீறிய சிரிப்பு அது.

பேருந்து செங்கிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. கல்லூரி மாணாக்கர் அத்தனை வேகமாக இறங்கினார்கள். வல்லம் பேருந்து ஒன்று அருகில் நின்றது. அதை நோக்கி ஒன்றிரண்டு பேர் ஓடினார்கள். கொஞ்ச பேர் வேறொரு பேருந்திற்காக ஒதுங்கி நின்றார்கள்.

குழந்தையைச் சிரிக்க வைத்த அந்தக் கல்லூரி பெண், குழந்தையின் கன்னத்தைக் கொத்தாக அள்ளி, முத்தம் கொடுத்துக்கொண்டு வேகமாக இறங்கினாள். அவளைத் தொடர்ந்து அந்தக் காதல் ஜோடியும் இறங்கினார்கள். அவளது முதுகில் கிடந்த பையை, அவளது காதலன் வாங்கி தன் முதுகில் கிடத்திக்கொண்டான். அவள் முன்னே நடக்க, அவள் நடையொற்றி இவன் பின்னே நடந்தான்.

பேருந்து ஒரு சீட்டுக்கு ஒருவர், என்கிற அளவுக்குக் குறைந்திருந்தது. குழந்தை பேருந்தை நாலாபுறமும் துழாவிப் பார்த்தது. அவளைக் கொஞ்சிய சிமிக்கிப் பெண்ணைத் தேடியது. நீண்ட நேரம் தேடியும், குழந்தையின் பார்வையில் அந்தச் சிமிக்கிப்பெண் சிக்கிவிடவில்லை. குழந்தை தேடலைப் போலதான், குழந்தை தாயின் தேடலும் இருந்தது. அவளது நேர்ப்பார்வைக்கு அந்தக் காதல் ஜோடி நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களையே அவள், வைத்தக் கண் எடுக்காமல் பார்த்திருந்தாள். காலதர்கள் ஒரு கடை மறைவில் அத்தனை நெருக்கமாக உரசி நின்றிருந்தார்கள். அவன் மீது அவள் தோளிட்டிருந்தாள். அவனது தலையைக் கொண்டு அவளது தலையை முட்டினான். அப்படியாக முட்டுகையில், பேருந்தில் அமர்ந்திருந்தவள் தலையை வெடுக்கென உள்ளிழுத்துக்கொள்ள, அவளது முகம் வெட்கத்தால் சிவந்தது. தன் செய்கையை நினைத்து, உள்ளுக்குள் ரசித்தவள், தன்னை யாரேனும் கவனித்துவிட்டார்களோ, என ஒரு சுற்று பார்க்கச் செய்தாள்.

பேருந்து நிறுத்தத்திலிருந்து கிளம்பியது. வெயில் திரவமாக சன்னல் இடுக்குகளில் ஒழுகியது.

குழந்தை, தன் தேடலை நிறுத்தவில்லை. தேடலில், குழந்தைக்கு களைப்பு வந்தது. குழந்தை சோர்ந்து தாயின் மடிக்குள் சுருண்டது. பேருந்து திருச்சி மேம்பாலம் ஏற்றத்தில் ஏறி ஒரு குலுங்கு குலுங்கியது. குழந்தையின் தாய், குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு, சன்னலில் தலையை சாய்த்தபடி, கண்களை மூடினாள். ஏக்கம் பொதிந்த பெருமூச்சால் அவளது முதுகு ஏறி இறங்கியது. அவளது பின்தலை, சீட்டின் கம்பியில் சாய, பேருந்து குலுங்குவதற்கேற்ப அவளது தலை அசைந்துகொடுத்தது.

குழந்தையின் கண்களைத் தூக்கம் தழுவியிருக்க வேண்டும். அவள் அழவோ, சிணுங்கவோ, சிரிக்கவோ இல்லை. குழந்தையின் அமைதியால், பேருந்து, வெள்ள வடிகால் நீரைப்போல அத்தனை அமைதியாக ஊர்ந்துகொண்டிருந்தது.

பேருந்து துவாக்குடி சுங்கச் சாவடிக்குள் நுழைந்து கீழ்மூச்சு வாங்கி நின்றது. அப்போது கேவுதலுடன் கூடிய அழுகைக் குரல் கேட்டது. நான் மெல்ல எழுந்து, அழுவது குழந்தைதானோ, எனப் பார்த்தேன்.

குழந்தைதான் அழுதது. அவளும் ஒரு குழந்தைதானே!…

– அண்டனூர் சுரா

மகாத்மா நகர்

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை – மாவட்டம்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.