முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நினைவேந்தல்!…. 18 மே 2021.
சிறிலங்காவில் தலைதூக்கும் சர்வாதிகார ஆட்சியில் தமிழ் மக்களுக்கெதிரான அட்டூழிய குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
பிரித்தானிய தமிழர் பேரவை அதன் சகோதர அமைப்புக்களுடன் இணைந்து எதிர்வரும் 18/05/2021 அன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாளை நினைவு கூறுகின்றது. இந் நினைவுகூரலானது மாலை 5 மணி முதல் மாலை 7 மணிவரை இடம்பெறும். அத்துடன் சரியாக மாலை 18:18 மணிக்கு (6:18 பி.ப.) சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்படும்.
போரின் உச்சகட்டத்தில் சிறிலங்கா அரசானது தமிழ் மக்கள் மீது பலத்த குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டதோடு அவர்களை பட்டினிச்சாவிற்கு உட்படுத்துவதற்காக அனைத்து உணவு வழங்கல்களையும் நிறுத்தியது, இதனால் மக்கள் உப்புக் கஞ்சியை மட்டும் உணவாகக் கொண்டு உயிரைத் தக்க வைத்துக் கொண்டார்கள். 2009 இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் வாழ்ந்த மக்களின் துயர வாழ்க்கையை நினைவுகூருமுகமாக, உப்புக்கஞ்சி பரிமாறுதல் இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒரு அங்கமாக இடம்பெறும். தலைமுறை தலைமுறையாக இக் குறியீட்டு நிகழ்வை தொடர்வதன் மூலம், எம் இனத்தின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளை யாராலும் மறுத்து விட முடியாத சரித்திரமாக பேணப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை வருங்கால சந்ததி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான தார்மீக பொறுப்பை தக்க வைத்துக் கொள்ளும்.
கடந்த காலங்களைப் போலவே இவ்வாண்டும் இந் நினைவேந்தலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், உலகளாவிய அரசியல் தலைவர்கள், நிபுணர்கள், முக்கியமான மனித உரிமை அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்வார்கள்.
இலங்கையில் மோசமடைந்து வரும் இன ஒடுக்குமுறைகளை தடுப்பதற்கான நிரந்தரமான ஓர் பாதுகாப்புப் பொறிமுறை தேவை என்பதனை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைத்து அவர்களை அதனை நோக்கி நகர வைத்ததில் பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் அதன் சகோதர தமிழ் அமைப்புக்களின் பங்கு காத்திரமானது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையரினால் 27/01/2021 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை தடுக்க எவ்வித நடவடிக்கையும் சிறிலங்கா அரசு எடுக்காததனால் அவை மீண்டும் உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
23/03/2021 அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகத்தின் சிறிலங்கா மீதான தீர்மானம் (A/HRC/46/L.1/Rev.1) மூலம் சாட்சியங்கள் மற்றும் தடையங்களை சேகரிப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்படவுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற ஒட்டுமொத்தமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களிற்கு எதிரான மோசமான அத்துமீறல்கள் குறித்த எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தப்பியவர்களிற்குமாக வாதாடுதல், உறுப்பு நாடுகள் உட்பட இக் குற்றங்களை விசாரிக்கும் தகுதி வாய்ந்த அதிகார வரம்புடைய பொருத்தமான நீதிமன்ற நடவடிக்கைகளிற்கும் ஏனைய நடவடிக்கைகளிற்கும் இப் பொறிமுறை உதவும்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக, பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் அதன் சகோதர தமிழ் அமைப்புக்கள் எவ்வளவு கடின உழைப்பை மேற்கொண்டு வருகிறார்கள் எனபதற்கு இவை கட்டியம் கூறி நிற்கின்றன.
சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழ் மக்கள் மீது மீண்டும் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்ட “வன்முறைச் சுழற்சிகள்” (cycles of violence) பலரும் அறிந்ததே. சர்வதேச சமூகத்தின் பாராமுகமானது சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதான அட்டூழியங்களை அதிகரிக்க ஊக்குவித்துள்ளது. தமிழ் மக்கள் மீதான கொடுமைகளின் உச்ச வெளிப்பாடாக மே 2009இல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனவழிப்பு இடம்பெற்றது.
சர்வதேச சமூகத்தின் செயலறு நிலையால் அடக்குமுறைகள், மிரட்டல்கள், அதிகரிக்கப்பட்ட கண்காணிப்புக்கள், சமூக செயற்பாட்டளர்களின் கைதுகள், கருத்துச் சுதந்திர உரிமை மறுப்பு மற்றும் ஒன்றுகூடல் உரிமை மறுப்பு ஆகியன சிறிலங்கா அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. நினைவுச் சின்னங்களை அழித்து, போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் உரிமை மற்றும் அவர்களிற்கான அஞ்சலி செலுத்தும் உரிமை என்பன தமிழர்களிற்கு மறுக்கப்பட்டுள்ளன.
ஒரு பாதுகாப்புப் பொறிமுறையை உருவாக்கி சிறிலங்கா வாழ் தமிழ் மக்களிற்கு இழைக்கப்படும் கொடுமைகளிற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்து தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை பெற்றுக் கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டுமென சர்வதேச சமூகத்திடம் பிரித்தானிய தமிழர் பேரவை கோருகின்றது.
தமிழ் மக்கள் 2010 ம் ஆண்டிலிருந்து மே 18ஆம் திகதியை இன அழிப்பு நாளாக பிரகடனப்படுத்தி வருடந்தோறும் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இன அழிப்பின் 12ஆம் வருடத்தில், உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் கொல்லப்பட்ட தம் உறவுகளை நினைவு கூர்ந்து கெளரவிப்பதற்காக, மாலை 6 மணி 18 நிமிடத்தில் (18:18) மெழுகுவர்த்தி அல்லது விளக்கு ஏற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதை உங்கள் வதிவிடத்தில் அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்தில் மேற்கொள்ளலாம்.
நாம் அனைவரும் வீழ்த்தப்பட்ட எமது உறவுகளை நினைவுகூருவதுடன், சிறிலங்கா அரசின் அடக்குமுறையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என உறுதி எடுப்போம்.
மேலதிக விபரங்கள் பின்பு தரப்படும்.
பிரித்தானிய தமிழர் பேரவை.