Featureகட்டுரைகள்

தமிழக தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது?…. சங்கர சுப்பிரமணியன்.

தமிழக மக்களை அவ்வளவு எளிதாக எடைபோட்டு விடமுடியாது. யார் என்ன
கூறினாலும் ஒரு முடிவை எடுப்பதில் பலவற்றை அலசி ஆராயந்தபின் தான் முடிவுக்கு வருவார்கள். திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டன என்ற பரவலான கருத்தை பொய்யாக்கி விட்டார்கள். பணம் பெரிய அளவில் விளையாடி இருக்கிறது என்பதை மறக்க முடியாது. அதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும். ஆனால் பத்து ஆண்டு எதிர்ப்பு அரசியலே இந்த ஆட்சி மாற்றத்துக்கு காரணம்.

பணம் விளையாடியதால்தான் திமுக வென்றது என்று திமுக வெற்றியை குறைத்து மதிப்பிட முடியாது. பணமும் விளையாடியது என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் ஆட்சியில் இருக்கும் அதிமுக-வும் பணத்தை வாரி இறைத்துள்ளது. அத்தோடு அரசு இயந்தரங்கள் அனைத்தும் அதிமுக-வின் கைவசம் இருந்தும் அவர்களால் வெற்றியை ஈட்டமுடியவில்லையே? போதாக்குறைக்கு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் கண்டுகொள்ளா தன்மையும் துணை நின்றும் பெரிதாக ஒன்றும் சாதித்திட முடியவில்லை.

ஆகையாவ் பணம் கொடுப்பவர்களிடம் பணத்தையும் வாங்கிக்கொண்டு அதற்கு மேலும் மக்கள் அரசியல் கட்சியை எடைபோடுகிறார்கள் என்பதே உண்மை.

நடிகர் ரஜனிகாந்த் உட்பட தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை மற்றும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று சொன்னவர்கள் கூற்றையும் இந்த தேர்தல் முடிவு பொய்யாக்கியுள்ளது. திராவிடக் கட்சிகள்
ஆண்டுவருகின்ற தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றால் அந்த இரு கட்சிகளையும் தவிர்த்து நாம் தமிழர், மக்கள் நீதீ மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னணி இவற்றுள் ஏதாவதொன்றை தேர்த்தெடுத்திருக்கலாம்.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மையான வாக்களிக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படும் சூழலை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் மூலம் பணம் படைத்தவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களை பேரம்பேசி விலைக்கு வாங்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கலாம். மாறாக எங்களுக்கு யாரும் அரசியல் சொல்லித் தரவேண்டாம் என்று நடிகர் ரஜனிகாந்த் சொன்னதையும் நடிகர் கமலஹாசன் சொன்னதையும் மக்கள் கேட்கவில்லையா?

அல்லது தமிழ்நாட்டினர் நடிகர்கள் பின்னால் செல்லக்கூடியவர்கள் என்பவர்களின் எண்ணம் தவறானது என்பதைச் சுட்டிக்காட்ட நடிகர் கமலஹாசனையும் கோவில் கட்டி கும்பிடும் அளவுக்கு இருந்த நடிகை குஷ்பு
போன்றவர்களத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டார்களா? என்பதையும் நாம் யோசிக்கவேண்டும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? யாரும் யாருக்கும் அரசியல் சொல்லித் தரமுடியாது என்பதும் அவரவர் அரசியலை அவரவர்தான் தீர்மானிக்கிறார்கள் என்பதும் புரியவருகிறது. அதுசரி, நடிகர் உதயநிதி ஸ்டாலினை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே அவர் நடிகர் இல்லையா என்று அருமை
அண்ணாச்சி மன்னார்குடி மாடசாமி அவர்கள் நக்கலாக சிரிப்பது என் செவிகளில் விழுகிறது.

அண்ணாச்சிக்கு என் பதில் உதயநிதி ஒன்றும் மறைந்ந நடிகர்கள் எம்.ஜி.ஆர், போன்றோ ஜெயலலிதா போன்றோ பெரிய நடிகரில்லயே? என்பதுதான்.

அண்ணாச்சி நடிகர்களும் நம்மைப்போல மனிதர்களே. அவர்களும் தாயின் கருவறையில் பத்துமாதம் இருந்துதான் பிறக்கிறார்கள். ஆதலால் தமிழ்நாட்டினர் நடிகர்கள் பின்னால் செல்கிறார்கள் என்று சொல்பவர்களுக்கு ஒருபதில். நடிகர்கள் என்பதால் மட்டும் அவர்கள் பின் செல்லவில்லை. அதையும் தாண்டி அவர்களிடம் ஒரு அரசியல் ஆளுமை இருந்திருந்ததை குறை சொல்பவர்களாலும் மறுக்க இயலாது. இல்லாவிடில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்தரன் போன்றோரை எல்லாம் அக்காலத்தில் தேர்ந்தெடுத்திருப்பார்கள் அல்லவா?

யார் என்ன சொன்னாலும் என்ன நடந்தாலும் திராவிடக் கட்சிக்கு மாற்றை இன்னும் தமிழ் நாட்டினர் நினைத்துப் பார்க்கவில்லை என்றுதான் தினைக்கத் தோன்றுகிறது. திராவிட கட்சி தொடங்கிய காலத்திலேயே தமிழ்தேசியம் பேசியவர்கள் இல்லாமலில்லை? அவர்களும் இணைந்தே தீண்டாமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, மொழி உரிமை, குலக்கல்வி மறுப்பு மற்றும் அனைவருக்கும் கல்வி போன்றவற்றி்ற்கு போராடியிருக்கிறார்கள். அதையெல்லாம் எளிதில் தமிழ் நாட்டினர் மறக்கத் தயாராயில்லை என்பதையும் இத்தேர்தல் முடிவு உணர்த்துகிறது.

எதனால் திமுக-வை தேர்ந்தெடுத்திருப்பார்கள்? முதலில் தமிழ்நாடு என்று ஒன்று இருக்க வேண்டும். தமிழ்நாடென்று ஒன்று இருந்தால்தான் தமிழ்தேசியத்தை பாதுகாக்க முடியும். அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக, பாஜக-வின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இணங்க தமிழ்நாட்டை துண்டாட தூண்டில் போட்டிருக்கிறது. எனவே அதிமுக கூட்டணியை வெற்றியடையச் செய்தியிருந்தால் எளிதாக அதிமுக துணையுடன் தமிழ்நாட்டை துண்டு துண்டாக்கிவிடும்.

இதை நடைபெற விடாமல் தடுக்கவேண்டுமானால் திமுக, மதிமுக, விடுதலச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்றோர் இணைந்த கூட்டணியால்தான் முடியும். வலிமையான கூட்டணியால்தான் அது இயலும் என்று தமிழ்நாட்டினர் நினைத்திருக்கலாம். சமூக நீதி, குலக்கல்வி மறுப்பின் மூலம் அனைவருக்கும் கல்வி போன்றவை கனவாகிப் போய்விடாமல் தடுக்க விடுதலைச் சிறுத்தையும் மொழியைப் பாதுகாக்க திமுக உதவும் என்ற நம்பிக்கையால் திமுக கூட்டணிக்கு வாக்களித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அப்படியானால் சிஸ்டம் சரியில்லை தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது என்று சொல்லிவந்தவர்களில் ஒருவரான நடிகர் கமலஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யத்தை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை? கமல் அரசியல் எனது தொழில் அல்ல நடிப்புதான் என் தொழில் என்றதால் பகுதிநேர அரசியல் பண்ண நினைப்பவர்
நமக்கென்ன பெரிதாக செய்துவிடப் போகிறார் என்று மக்கள் நீதி மையத்தை தவிர்த்திருக்கலாம். அமமுக கட்சி ஒரு சந்தர்ப்ப வாதத்தால் தோன்றிய கட்சி என்பதாலும் எதற்காக டெல்லி சென்று வருகிறார் என்ற குழப்பம் இருப்பதாலும் தற்போதுள்ள சூழலில் இவர் இப்போது என்ன செய்துவிடப் போகிறார் என்ற சந்தேகத்தில் மக்கள் அமமுக-வைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால் தமிழ் தேசியத்துக்காக அரும்பாடு பட்டுவரும் நாம் தமிழர் கட்சியை ஏன் தவிர்த்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. தாமரை தமிழகத்தில் நிச்சயம் மலராது என்று இருந்த நிலையில்
பாஜக-வுக்கே நான்கு இடம்
கிடைத்திருக்கும் போது நாம் தமிழருக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லையே. ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழவே செய்கிறது. இப்போது தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினை உள்ளது.

இதை சமாளிக்க ஆட்சி அனுபவம்மிக்க ஒரு வலுவான கட்சி தேவைப்படுகிறது. முக்கியமான பிரச்சனை ஸ்டெர்லைட். ஸ்டெர்லைட்டை திறக்க விடமாட்டோம் என்று சொன்ன கட்சிகளெல்லாம் திமுக உட்பட இப்போது திமுக கூட்டணியில் உள்ளது. இப்போது இவர்களுக்கு ஒரு பெரிய சோதனை இதை திமுக கூட்டணி எப்படி கையாளப் போகிறது என்பதை பார்க்க வேண்டும். மேலும் சமூக நீதி, மொழி உரிமை, கல்வி போன்றவற்றிற்கு எல்லாம் பெரிய அச்சுறுத்தல் நேர்ந்துள்ளது.

தமிழரின் வேலை வாய்ப்பு போன்றவை பறிக்கப்பட்டு நிலைமை
படுமோசமாகியுள்ளது. இச்சூழலில் திமுக ஆட்சியைப் பிடித்தால் அறுபதுகளில் தமிழ்நாட்டில் எழுந்த பிரச்சனையை அறபத்தேழில் பதவியேற்ற திமுக சமாளித்ததைப்போல இப்போதும் மீண்டும் உருவெடுத்திருக்கும் பிரச்சனைகளை திமுக சமாளிக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாத திமுக திரும்பவும் தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கையில் திமுக-வைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

என்னதான் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மிகவும் அற்புதமாக இருந்தாலும் அரசியலுக்கு புதியவர்கள். திமுக-வைப்போல தழிழகத்தை பலமுறை ஆண்ட அனுபவம் கிடையாது. திமுக-வைப்போன்ற திருச்சி சிவா, துரைமுருகன், எ.வ. வேலு, பொன்முடி, எ. ரஜா போன்ற அரசியல் அனுபவம் பெற்றவர்கள் கிடையாது. திரு. சீமான் போன்றவர்கள் சிலரே நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார்கள். எனவே இந்த இக்கட்டான சூழலில் திமுக-வைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நம்பவைக்கிறது. மேலும் நாம் தமிழர் கட்சி திமுக எப்படி ஐம்பது அறுபதுகளில் வளர்ந்து வந்ததோ அப்படி இப்போது வளர்ந்து வருகிறது. இப்போது நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தைக்கூட பிடிக்காவிட்டாலும் 6.85 சதவிகித
வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதுதான் திமுக-வுக்கும் நாம் தமிழருக்கும் சோதனைக்காலம். அதிமுக-அவை நிராகரித்து விட்டனர். வரும் ஐந்தாண்டுகளில் தமிழர் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகளை திமுக தீர்த்து வைத்து நல்லாட்சி  தர தவறிவிட்டால் இந்த ஐந்து ஆண்டுகளையும் நல்லபடியாக பயன் படுத்தினால் அடுத்த தேர்தலில் நாம் தமிழருக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கும் என நம்புகிறேன்.


திமுக-வுக்கு எடுத்த எடுப்பிலேயே தமிழ்நாட்டினர் ஆட்சியை கையில் கொடுத்துவிடவில்லை. திமுக தொடங்கி எத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அத்தனை ஆண்டுகளின் கடின
உழைப்பிற்கு பிறகே திமுக-விடம் தமிழக மக்கள் ஆட்சியை ஒப்படைத்தார்கள். அதுபோல தமிழக மக்கள் நாம் தமிழரிடம் ஆட்சியை எப்போது ஒப்படைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போது ஒப்படைப்பார்கள்.

ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் பெருந்தலைவர் காமராஜ் நல்ல ஆட்சியை தந்தபோதும் மொழிப் போராட்டத்தால் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்து திமுக-வை ஆட்சியில் வைத்தனர். அதுபோல் காலம் கனிந்து வரவேண்டும். முதலில் சட்டசபைக்குள் சில உறுப்பினர்களாவது செல்லவேண்டும். அதன் பின்னும் தொடர்ந்து தொய்வில்லாமல் உழைக்க வேண்டும். நடிகர் விஜய்காந்தின் தேதிமுக போல பின்னடைவைச் சந்தித்து விடக்கூடாது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றைப் புரிந்து கொண்டவர்களுக்கு இது நன்கு புரியும்.

எதுவம் எளிதில் கிடைத்து விடாது. இது நாம் தமிழர் கட்சிக்கும் நன்றாகத் தெரியும். இப்போது அதிமுக என்னதான் எதிர்க்கட்சி என்ற தகுதியைப் பெற்றிருந்தாலும் திமுக-வுக்கு சரியான மாற்று நாம் தமிழர்தான். நாம் தமிழர் திமுக-வை மட்டுமே தீவிரமாக எதிர்த்து வந்தார்கள். இப்போது அவர்களே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள்.

பொதுவாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மற்ற மாநிலங்களைவிட தமிழ் நாடு முன்னேறி இருந்த போதிலும் தமிழர் சார்ந்த நலன்கள் பறிபோய் விட்டதாக சொல்லப்படும் கருத்துக்களை ஏற்க வேண்டியதே உள்ளது. குறிப்பாக கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்தது, காவிரி நீரைப் போராடி பெறாதது, நீட் தேர்வு, மொழி உணர்வை நீர்த்துப் போக வைத்தது, ஸ்டெர்லைட், மீத்தேன், கூடாங்குளம் அணுஉலை என்று கேடுவிளைவிக்கும் திட்டத்தை அனுமதித்தது. இதனால் தமிழர் தமிழ்நாட்டை ஆண்டிருத்தால் இதெல்லாம் நடக்குமா என்று பேசும்படி வைத்ததோடு அரசிலும் அரசு இயந்திரங்களிலும் தமிழரின் அதிகப் பங்கீட்டை தவிர்த்தது என்ற நிலையை ஏற்படுத்தியதால் தமிழரின் மனதில் வெறுப்பை சம்பாதித்துள்ளார்கள்.

போராளியை போர்க்களத்தில்தான் சந்திக்க வேண்டும். இப்போது நாம் தமிழருக்கு நல்ல வாய்ப்பு. அடுத்த தேர்தலுக்குள் திமுக தமிழருக்கு நல்லது செய்து கடந்த பத்து ஆண்டுகளில் இழந்த ஆட்சியை தமிழ்நாட்டில் தக்க வைத்துக் கொள்ள அரும்பாடுபட்டாவது முயற்சிக்கும். அப்படி ஏதும் செய்யாது இருந்தாலும் அதிமுக எதிர்க்கட்சியாய்
இருந்து தட்டிக் கேட்குமா என்பது சந்தேகமே. கடந்த பத்து ஆண்டுகள் இவர்கள் செய்யாததை எந்த முகத்தை வைத்துக் கொண்டு தட்டிக் கேட்பார்கள்?

ஆகவே எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் செல்லாவிட்டாலும் வெளியில் இருந்தே திமுக-வை தட்டிக் கேட்கும் அதிகாரம் அதிமுக-வை அடுத்து மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதி நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது. எனவே திமுக செய்யும் ஒவ்வொரு தவறையும் சுட்டிக்காட்டி திமுக திருத்திக் கொள்ளாத பட்சத்தில் நாம் தமிழர் கட்சி அதை தமக்கு சாதகமாக்கி அறுடை செய்யும்.

எனவே அடுத்த ஆட்சி மாற்றம் வந்தால் நாம் தமிழர் கட்சிதான் அரசமைக்கும். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது திமுக செய்யும் தவறுகளைப் பொறுத்தும் அதை தமக்கு சாதகமாக நாம் தமிழர் அறுவடை செய்வதைப் பொறுத்ததுமே அமையும். திமுக தமிழருக்கு எதிர்பாராத அளவுக்கு நல்லவற்றை செய்து ஆட்சியைத் தக்க வைத்தக் கொள்ளுமா? அல்லது நாம் தமிழர் ஆட்சியைப் பிடிக்குமா என்பதை ஐந்து ஆண்டுகள் பொறுத்திருந்துதான்
பார்க்கவேண்டும்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *