நடுகைக்காரி!….தொடர் 15 ….. (குறுநாவல்)…. ஏலையா க.முருகதாசன்.

தொடர் 15 
பாறுவிடம் சோடாப் போத்தலில் கள்ளையும், ஏலக்காய்களையும் வாங்கியவன் கள்ளிருந்த சோடாப் போத்தலை சிங்களப் புத்தகங்கள் இருந்த சாக்குப் பைக்குள் வைச்சு அதைக் காண்டிலில் கொழுவிய போது,’குடிச்சுப் பழக்கமில்லாதனீங்கள், குடிச்சுப் போட்டு வெறியிலை எங்iகையாவது வேலிவிராயிலை விழாமல் கவனமாகப் போங்கள்.விழுந்து போட்டு பெண்சாதி கள்ளைத் தந்து கெடுத்துப் போட்டாள் என்று சொல்லக்கூடாது’ என்று சொல்லிவிட்டு வந்த போதுதான் அவளின் சொண்டுகள் இரண்டும் சிவந்திருந்ததைக் கண்டு பாறுவும் ஞானமும் முத்தமிட்டிருப்பார்களோ என்று தாய் சந்தேகப்பட்டாள்.
சோடப் போத்தலில் கள்ளை வாங்கிக் கொண்டு போன ஞானத்தின் மனதில் பொக்குலிப்பானுக்கு தாய் தகப்பன் குளிர்ச்சிக்கென கள்ளு வாங்கிக் கொடுத்து குடிச்சதை நினைச்சுக் கொண்டான்.
தகப்பன் இரவுச் சாப்பாட்டுக்கு முந்தி ஒரு போத்தல் கள்ளுக் குடிப்பது வழக்கம்.ஆனால் குடிச்சதுக்கான எந்த மாற்றத்தையுமே அவரிடம் காண முடியாது.வெறி ஏறி தளம்பியதும் இல்லை.கள்ளுக் குடிச்சதற்கு பிறகு அவர் நாக்குழறிக் கதைச்சதும் இல்லை.குடிக்காத நேரத்தில் எப்படி இருப்பாரோ அதைப் போல குடிச்ச பின்னும் அவரிடம் நிதானம் இருக்கும்.
குடிச்சுப் போட்டு தூசணம் பேசுபவர்களும்;,கடுகாக இருக்கும் கோபத்தை பெரும் மலையாக்கி சமுதாயப் பிரச்சினையாக்கி சண்டை போடுபவர்களும்,வேலிகளை கதியால்களை வெட்டிவிடுபவர்களும்,உன் பரம்பரையைப் பற்றித் தெரியாதா என்று சொல்பவர்களைப் பார்த்து குடிச்சுப் போட்டுக் கதைக்கிறார்கள்,வெறியிலை கதைக்கிறார்கள் என்றுதான் பலர் நினைக்கிறார்கள்.ஆனால் அது உண்மையல்ல…..
தம்மை மற்றவர்கள் மன்னிப்பார்கள் தாம் நினைத்தவாறு நாக்கைப் பயன்படுத்தலாம் என்று நிசை;சுத்தான் அப்படிச் செய்கிறார்கள.மது குடிச்சதால்; இரத்தத்தின் வழியாக உடல் எங்கும் பரவும் பரவச நிலையில் மனம் மகிழ்வதில் தவறில்லை.ஆனால் அது மற்றவர்களுக்கு கோபத்தையோ மனவேதனையையோ கொடுக்காமலிருக்க வேண்டும் என ஞானத்தின் தகப்பன் பலமுறை பலரிடம் சொல்லியிருக்கிறார்…..
ஞானத்திற்கு கணச்சூட்டு உடம்பு அதற்கு ஒரு பனைக் கள்ளு உடன் கள்ளு வாங்கிக் குடுக்கும்படி பரியாரி செல்லத்துரை சொல்லியதால் பள்ளக்கூட விடுதலையின் போது ஒரு மாதம் அவனின் தாய் தகப்பன் உடன் கள்ளு வாங்கிக் கொடுத்ததால் அவன் அதன் உருசியறிந்திருந்தான்.
வாங்கிக் கொடுக்கும் போது தாய் இதை ஒரு பழக்கமாக்கிப் போடாதை இது மருந்து மாதிரிததான் என்று சொல்லியிருந்தாள்.
பாறுவுடனான பழக்கத்தினாள் கள்ளுக் குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஞானத்திடம் தாயின் உதவியால் மனமில்லாவிட்டாலும் சோடாப் போத்தலில் பாறு கள்ளுக் குடுத்தனுப்பியிருக்கிறாள்.
ஞானம் குடிச்சுப் போட்டு வெறியிலை எங்கையாவது விழுந்தெழும்பி பிரச்சினையாகிவிடுமோ என்ற பயம் ஒரு புறமும்,தன்னைத் தாயார் சந்தேகப்படுகிறாரோ இருட்டிலை நடந்ததை ஊகித்துவிட்டாரோ என்று இன்னொரு புறமுமாகப் பயந்து கொண்டிருந்தாள்; பாறு.
பாலத்தைக் கடந்து வீதியை அடைந்த ஞானம் வீதியின் மேற்குப் பக்கமாகத் தன் சைக்கிளைத் திருப்பி எதிர்பட்ட மதவடியில் சைக்கிளை நிற்பாட்டி ஒரு காலை மதகிலும் இன்னொரு காலை நிலத்திலும் வைச்சு நின்றபடி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டவன் சோடாப் போத்தலை எடுத்து அதற்குள் இருந்த கள்ளை வேகமாக குடிச்சு முடிச்சான்.
தண்ணியைப் போல கள்ளை வேகமாக குடிக்க முடியாது.நொதிக்கும் தன்மையால் ஏற்படும் காற்று தொண்டையை அடைக்கச் செய்யும்.கள்ளுக் குடிப்பவர்கள் விட்டு விட்டு ஆறுதலாகத்தான் குடிப்பார்கள்.
ஆனால் குடிச்சு முடிக்க வேண்டும் என்ற ஆவலாதியில் குடிச்சவன் ஏவறைவிட்டபடி வெறும் போத்தலை மீண்டும் பைக்குள்ளை வைச்சான்.
அவன் மதவோடு இருந்த வெள்ளவாய்க்காலுக்குள் எறிந்திருக்கலாம்.ஆனால் அவன் அதைச் செய்யவில்லை.மதவுக்கு கொஞ்சம் தள்ளி தெற்குப்புற வளவின் வேலியோடு கிளைவிட்டு ஒடிச்சு எடுக்கக்கூடிய உயரத்திலிருந்த மாவிலைகள் நாலைஞ்சை ஒடிச்சு எடுத்தவன் வாயில் போட்டு சப்பு சப்பென்று சப்பித் துப்பிப் போட்டுப் போய்க் கொண்டிருந்தான்.
குடிச்ச கள்ளு தனது வேலையைக் காட்ட ஆரம்பிக்கத் தொடங்கியது.இரத்தத்தில் கலந்த மதுசாரத்தால் அவனின் உடலில் ஏற்பட்ட பரவச நிலையை உணர்ந்தான். 
பாறுவை நினைச்சுக் கொண்டான்.பாறு இயல்பாகவே அழகிதான்.இப்ப அவள் அவனுக்குத் தேவதையாக மனக் கண்ணில் தெரிந்தாள்.தோட்ட வேலையும் வீட்டு வேலையும் செய்து ஊளைச்சதையற்று இறுகிய வாளிப்பன உடல் உடையைச் சேர்த்து அவளை கட்டியணைக்கும் உடையையம் தாண்டி அவனுடைய கைகளும் காதலும் அவனைக் கிறங்கடித்ததை நினைச்சுப் பார்த்தான்.இனிய நினைவுகள் அவனை ஆக்கிரமித்து நின்றன.
மகாஜனக் கல்லூரியைக் கடந்து லிங்கம் கபேயடிக்கு வருகையில், கடை திறந்திருந்ததைக் கண்ட ஞானம், சைக்கிளை லிங்கம் கபே பாலத்தில் நிற்பாட்டியவன் „லிங்கண்ணை வடை இருக்குதா’ என்று அவசரமாகக் கேட்க, என்ன இவன் அவசரமாகக் கேட்கிறான் என்று யோசித்தவாறே’இருக்குது
உழுந்து வடையா இல்லாட்டி கடலை வடையா’ எனக் கேட்ட லிங்கத்திற்கு „மூன்று உழுந்து வடையும் சம்பலும் தாங்கோ என்றவன்’ கொஞ்சம் தண்ணி தாங்கோ வருகிற போது, பூச்சியொன்று வாய்க்குள்ளை போட்டுது, அதைத் துப்பிப் போட்டன், ஆனால் அரையண்டமாக இருக்குது வாயைக் கொப்பிளிச்சால்தான் நிம்மதியாயிருக்கும் என்று கள்ளின் மணம் வரக்கூடாது என்பதற்காக மாவிலையைச் சப்பியதால் அது வாய் முழுக்க ஏதோ செய்ய பூச்சி போனது என்று பொய் சொல்லி லிங்கத்திடம் தண்ணியை வாங்கி சாப்பிட்டிட்டு இலை போடும் இடத்திற்குப் போய் வாயைக் கொப்பளிச்சான்.
ஞானம் தெல்லிப்பழைச் சந்தியை நோக்கிப் போகும் போது ஒரு பொம்பிளைப் பிள்ளையை சைக்கிள் பாரிலை ஏற்றி வைச்சுக் கொண்டு போனதை லிங்கத்துடன் சின்னக்கண்டு கண்டதால் ஞானத்திடமிருந்து கதை பிடுங்குவதற்காக ஞானம் பாலத்தில் சைக்கிளை நிப்பாட்டியதும் அயேன் பொக்ஸை நிமிர்த்தி வைச்சிட்டு „ எனக்கும் ஒரு பிளேன்ரி போடுங்கோ’ என்று சொல்லிக் கொண்டே, சின்னக்கண்டு ஞானம் இருந்த வாங்கு மூலையில் இருந்தார்.
ஞானம் கிழக்குப் பக்கத்து சுவரோடு சாய்ஞ்சு கொண்டு கால்கள் இரண்டையும் வாங்கின் இரண்டு பக்கத்திலும் வைச்சுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
சின்னக்கண்டுவுக்கு பிளேன்ரியைக் கொண்டு வந்து வைச்ச லிங்கத்திற்கு கண்ணால் சாடை காட்டிவிட்டு „சொந்தக்காரப் பிள்ளையோ அப்போதை ஏற்றிக் கொண்டு போன பிள்ளை’ என்று சின்னக்கண்டு கேட்க, பாறுவை யாரென்று அறியிறதுக்காக வேணுமென்றே சின்னக்கண்டு விசாரிக்கிறார் என்பதைத் தெரிஞ்சு கொண்ட ஞானம், வெட்டு ஒன்று துண்டு இணர்டாய் „சொந்தக்காரப் பிள்ளைதான்’ என்கிறான்.
ஞானம் இப்படிப் பதில் சொல்வான் என்று எதிர்பார்க்காத சின்னக்கண்டு அமைதியாக „என்ன ஞானம் ஒவ்வொரு நாளும் தெல்லிப்பழைச் சந்திப் பக்கமாக போறியள் யாருக்கேன் ரியூசன் குடுக்கிறியளோ’ என்று லிங்கம் கேட்க,உங்களுக்கு அது தேவையில்லாத விசயம் என்று சொல்ல நினைச்ச ஞானம்’நான்தான் சிங்களம் படிக்க ஆனந்தா பேக்கறி முதலாளியிட்டை போறனான்’ என்று பதில் சொல்ல,’ அங்கை சந்தியிலை இருக்கிற ரியூட்டோரியில் பத்மசேகரம் மாஸ்ரர் சிங்களம் சொல்லிக் குடுக்கிறாராமே….’ ஏன்று லிங்கம் முடிக்குமுன், „அது போதாது ஆதுதான் அங்கையும் படிக்கிறன்’ என்றவன் சாப்பிட்டு முடிச்ச வாழையிலையைக் கொண்டு போய் கைகழுவுகிற இடத்திலை போட்டிட்டு, வாயைக் கொப்பிளிச்சிட்டு „வாறன் அண்ணை „என்று லிங்கத்திடம் சொல்லிப் போட்டு சைக்கிளையும் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தான்.
„லிங்கம் அவற்றை கதை நடவடிக்கை வித்தியாசமாய் இருந்ததைக் கவனிச்சனீங்களே, கண்ணும் ஒரு மாதிரியாய்த்தான் கிடந்துது, தம்பி ஏதோ பாவிச்சிட்டார் போல, ஆனால் ஆளிலை மணக்கேலை, வழமையாய் கலகலவென்று கதைக்கிற பொடியன் இண்டைக்கு அளந்து அளந்து
கதைக்கிறான்….’ என்று இழுக்க, „எனக்கும் அந்த ஐமிச்சம் இருக்குது மதகிலை இருக்கிறவன்தானே பாவிச்சாலும் பாவிப்பான்’ என்று லிங்கம் நக்கலாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தோட்டத்தாலை வந்த கந்தசாமி ஒட்டுக்கட்டை பாலத்திலை ஒரு பக்கமாக வைச்சிட்டு „மெய்யே லிங்கம் பிள்ளையின்ரை ரியூசன் விசயமாக சுப்பையற்றை கடைசிப் பொடியனை கேட்கச் சொன்னனான் கேட்டனீங்களா,உங்கடை கடைக்கு வந்து போற பொடியன்தானே, நல்ல கெட்டிக்காரப் பொடியனாமே இங்கிலீஸ் நல்லாச் சொல்லிக் குடுப்பானாம்….’ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே’ நான் நினைக்கேலை அவன் ரியூசன் குடுக்க வருவானென்று,யாரோ ஒரு நடுகைக்காரியை சைக்கிளிலை ஏற்றிக் கொண்டு திரியிறான், இப்ப சிங்களமும் படிப்பிக்கிறான் எதுக்கும் அவன்ரை வீட்:டிலை போய் கேட்டுப் பாருங்கோ’ என்று கதையை முடிக்கிறார் லிங்கம்.
வீதியைவிட்டு தன்னுடைய வீடு இருக்கும் ஒழுங்கைக்குள் சைக்கிளை இறக்கிய ஞானம் சட்டைப் பைக்குள்ளையிருந்து ஏலக்காய்களைப் எடுத்து வாய்க்குள் போட்டு சப்பத் தொடங்கினான்.
வீட்டுப் படலையையும் கடந்து முற்றத்திலை சைக்கிளை நிற்பாட்டியவன்,புத்தகம் சோடாப் போத்தல் இருந்த பையை எடுத்துக் கொண்டு அறைக்குள் போக அவனை விறாந்தையிலிருந்து நிமிர்ந்து பார்த்த தாய்,’என்ன ஞானம் இரண்டு கண்ணும் சிவந்திருக்கு’ என்று கேட்க „பூச்சியொன்று கண்ணிலை பட்டிட்டுது இரண்டு கண்ணையும் கசக்கிப் போட்டன் ஆதுதான் சிவந்திட்டுது போல’ என்று அவன் சொன்னதும் அவன் வாயிலையிருந்து ஏலக்காய் வாசம் வர’ ஏலக்காய் வாசம் வருதே ஏன் ஏலக்காய் சாப்பிட்டனி, கள்ளுக்;குடிக்கிறவைதான் மணம் வராமலிருக்க ஏலக்காயை வாயிலை போடுவினம்…’என்று தாய் சொல்லி முடிக்க முந்தி’ „அம்மா தொண தொண என்று கேள்வி கேட்காதை பூச்சி போய் கண் எரியுது ஒரு பக்கம்…..அம்மா சிங்கள படிக்கப் போன இடத்திலை பேக்கறி முதலாளியின்ரை மனுசி லவேரியா என்ற தேங்காய்ப்பூ கித்துள் பாணி கலந்து இடியப்பத்திற்குள்ளை வைச்சு அவிச்ச சிங்களப் பணியாரம் தந்தவ, நிறைய ஏலக்காய் அதுக்குள்ளை இருந்தது, அதோடை இஞ்சி ஏலக்காய் போட்ட ரீயும் தந்தவா அதுதூன் மணக்குது போல’ …என்று சொல்லிக் கொண்டே எப்படிப் போத்தலை அப்புறப்படுத்துவது என்ற யோசனையில் அலுமாரிக்கு பின்னாலை பையை ஒளிச்சு வைச்சவன், முகம் கைகால் கழுவுவதற்காக கிணத்தடியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்……
ஞானம் கிணத்தடியை நோக்கிப் போக அறைக்குள் போன தாய்…..
(தொடரும்)
![]()