Featureகட்டுரைகள்

இலங்கை அரசின் கைக்கு மாறிய புலிக்கொடி!…. ஏலையா க.முருகதாசன்.

இலங்கை அரசின் இராஜதந்திர வியூகத்திற்குள் தமிழினம் சிக்கிக் கொண்டமைக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் புலம்பெயர் தமிழர்களுக்குள் தம்மை அரசியல் அறிஞர்கள் எனச் சொல்லி புலம்பெயர் தமிழர்களை மாயை உலகிற்குள் அமிழ்த்தி வைத்திருப்பவர்களே, புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் என்ற ஒன்றைச் சொல்லிச் சொல்லியே இலங்கையரசுடன் இராஜதந்திரமாக நடப்பதைச் இது சிதைக்கும் செயலாகும்.

எமது உரிமைப் போராட்டத்தில் பெரும் நம்பிக்கை வைத்த காலகட்டமென்பது ஆயுதப் போராட்ட காலகட்டமாகும்.இலங்கையரசுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்திய அரசின் உளவு வேலைகளால் அது காலதாமதமாகியது.

பல காரணங்களில் ஒன்றான இந்தியாவில் மத்திய அரசிற்கெதிரான தமிழகத்தின் எழுச்சியும் ஈழத்தமிழர்களை இந்தியா கையாள்வதற்கு வழிவகுத்திருக்கின்றது.

இலங்கையில் தொடர்ச்சியான அமைதியின்மை இருக்கத்தக்கதாக வைத்துக் கொள்வதன் மூலமே இலங்கை தெளிவான ஒரு அரசியல் நிலைபெற்றலை பெற முடியாதவாறு எந்நாளும் புதுப் புதுப் பிரச்சினைகள் இருக்க வேண்டுமென்பதில் இந்தியா தெளிவாகவே இருக்கின்றது.

தொடர்ச்சியாக இந்தியா இலங்கை சார்ந்த வெளிநாட்டுக் கொள்கையில் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி வருகின்றது.

இலங்கையில் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடைமுறை அரசும்,அந்த நடைமுறை அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதியையும்,பிரதமரையும் இறுதிப் போரில் தமிழர்களைப் படுகொலை செய்ததாக கூறப்படும் இராணுவத் தளபதிகளையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்ற முனைப்புடன் ஈடுபடும் தமிழர் தரப்பும்,போர்க்குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை ஐக்கியநாடுகள் சபையால் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைக்கு தமது முழு ஆதரவையும் சீனா பொறுப்பெடுத்துள்ளமை என இலங்கையில் என்றுமே தீர்க்க முடியாத இனப்பிரச்சினை பிரபஞ்சத்துக்குள் இலக்கற்று ஏவப்பட்ட செயற்கைக் கோள் மாதிரி பயணித்துக் கொண்டிருக்கிறது.

அடிக்கடி தமிழர்கள் புளகாங்கித செயல்பாடுகளில் ஈடுபடுவதும் உடுக்கடித்து சன்னதமாடுவதாகவும் நாடாளுமன்றத்தில் எமது தமிழ்த்தலைமைகளாற்றும் உரைகளைக் கேட்டு பூரித்து மகிழ்வதுமாக எமது பிரச்சினை போய்க் கொண்டிருக்கிறது.

ஈழத்தமிழர்களின் அயுதப் போராட்டத்தின் வெற்றியாக எதையுமே கொண்டாட முடியவில்லை.மாவீரர்களையோ விடுதலைப்புலிகளின் தலைவரையோ என்றும் மறக்க முடியாது என்பது உண்மையே.எனினும் ஆயுதப் போராட்டத்தின் பலாபலனாக வருகிறவன் போகிறவன் எல்லாம் குட்டிப் போட்டுப் போகிற கேலிக்குரியவனின் நிலையில் ஈழத்தமிழினம் தவித்து நிற்கின்றது.ஈழத்தமிழர்களின் பலவீனத்தையும் பலத்தையும் இலங்கையரசு தெளிவாகவே கற்றுணர்ந்துவிட்டது.அதனால் இலங்கை அரசு தமிழர்களக்கென்றே தனியரசியல் வியூகத்தை அமைத்து கையாண்டு வருகின்றது.

ஏதோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று பண்ணையார் வீட்டு வளவின் மூலையில் இருத்தி வைக்கப்படும் குடியானவனாக தாயத்தில் தமிழரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.

தாயக நிலங்களைச் சுற்றி இராணுவ வேலி அமைக்கப்பட்டிருப்பதற்கு விடுதலைப்புலிகளுந்தான் காரணம் என்பதை நாம் உணர வேண்டும்,புத்தர் சிலைகள் நடப்பட்டு வருகின்றமைக்கும் அவர்கள்தான் காரணம் என்பது தெளிவாகத் தெரிந்த போதும் அதைச் சொல்லப் பயப்படுவதற்குக் காரணம் துரோகிப் பட்டம் தந்துவிடுவார்களோ என்பதுதான்.

எதையும் விமர்சிக்கலாம் எதையும் கண்டிக்கலாம் ஆனால் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் பற்றி எவருமே கதைக்கக்கூடாது என்ற அச்சுறுத்தலே இன்று இலங்கை அரசாங்கத்தின் கைகளில் புலிக்கொடி இருப்பதற்குக் காரணமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையில் போர்க்குற்ற உரையாடல்கள் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு மேலாகவும் பேசப்படும்.ஐக்கிய நாடுகள் சபையில் பேசப்படும் பலவிடயங்கள் பேசப்படுவவதற்கு மட்டுமே.கைக்கெட்டிய தூரத்தில் தீர்வை எட்டிவிடலாம்,எட்டிவிடுவோம் என்பது போல தோன்றினாலும் எவடம் எவடம் புளியடி புளியடி என்ற கதையாக இழுபட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.

இலங்கைக்குப் பாடம் படிப்பிக்க வேண்டும் என்பதற்காக போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து அதன் பெறுபேறுகளாக போராளிக் குழுக்களுக்கும் இலங்கை இராணுவத்திற்குமிடையிலான போராக மாறி,படிப்படியாக பல போராளிக் குழுக்கள் அழிக்கப்பட்டு எஞ்சிய தமிழீழ விடுதலைப்புலிகளும் இலங்கை இராணுவத்திற்குமிடையில் போரை ஒன்றை நடத்த வைத்து பலவிதமான ஈர்ப்பு உத்திகள் வாயிலாக தாயகத் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர்களையும் சரி பிழை என எதையுமே கவனத்தில் எடுக்காத அளவிற்கு பிரச்சாரம் வாயிலாக விடுதலைப்புலிகளை நோக்கி அனைவரின் கவனத்தையும் குவியச் செய்து, மாவீரர்களின் தியாகங்களை ஈழத்தமிழர்களின் மனங்களின் அழுத்திப் பதிய வைத்து, ஈழத்தமிழர்கள் அனைவருமே புலிகள் என சிங்கள மக்களின் மனங்களின் நிலைபெறச் செய்து,தமிழனைப் பார்க்கும் சிங்களவன் இவன் புலியாக

இருப்பானோ என சந்தேகப்பட வைத்து சிங்களவர்களும் தமிழர்களும் முட்டுப் பகையாளிகளாக்கிய நயவஞ்சகத்தைச் செய்தது இந்திய அரசே.

இந்தியாவை, இலங்கை அரசு கையாளத் தெரிந்தளவிற்கு தமிழ்த் தலைமைகளுக்கு தெரியவில்லையோ என நினைக்கத் தோன்றுகின்றது.எடுப்பார் கைப்பிள்ளையாகியதுதான் மிச்சம்.

இலங்கையரசின் மீது போர்க்குற்ற விசாரனை நடத்துமாறு தமிழர் தரப்பு மேற்கொள்ளும் நடவடிக்கை இருக்கும் வரை தமிழர் பகுதியில் புத்தர் சிலைகள் நடப்படுவதையோ தமிழர் தாயகத்தை கையகப்படுத்துவதையோ தடுக்கவே முடியாது.

அதன் ஒரு பெறுபேறுதான் காணிக்கந்தோரிலிருந்து காணி உறுதிகளை அள்ளிக் கொண்டு போன நடவடிக்கையாகும்.

உனக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்றால் எனக்கு இதைச் செய்ய வேண்டும் என்று சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கொழும்பு போர்ட் சிற்றி நெடுந்தீவு, நயினாதீவு அனலைதீவு வரை பேரம் பேசி கைப்பற்றிவிட்டது.சீன மொழிப் பெயர்ப் பலகைகள் தீவுப்பகுதிகளில் மட்டுமல்ல யாழ் நகரத்திலும் இடம்பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

போர்ட் சிற்றி என்பது ஒரு மண்திட்டுத்தானே என நாம் நினைப்போமானால் அது தவறேயாகும்.இலங்கை சீனமயமாவதைத் தடுக்கவே முடியாது.சீனர்கள் இந்துக் கடவுள்களையும் வழிபடுபவர்கள்தான் சிங்களவர்களும் தமிழர்களும் சமயத்தால் வேறுபட்டவர்கள் அல்ல.

தமது அரசியலை நடத்துவதற்காக சிங்களவர்களும் தமிழர்களும் வேறானவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் தமிழ்த் தலைமைகளும் சிங்களத் தலைமைகளும் இன ஒற்றுமைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க தாயகத் தமிழர்கள் எந்த நிலைக்குப் போனாலும் பரவாயில்லை, அவர்களுக்காகச் செய்கிறோம் என நடித்துக் கொண்டு தாயகத் தமிழர்களை நிம்மதியற்நவர்களாக்குபவர்களே தம்மை அறிவுஜீவிகள் எனச் சொல்லிக் கொள்ளும் புலம்பெயர் புலிச் செயல்பாட்டாளர்களே.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வால்பிடிக்கிறது என்று தேர்தல் பிரசாரத்தின் போது அனல் பறக்கச் சொல்லியவர்களில் ஒருவரான சட்டத்தரணி மணிவண்ணணன் இப்பொழுது மகிந்தாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு கஜேந்திரகுமார் இயங்குகிறார் என்று சொல்லுகிறார்.

மணிவண்ணன் தொடர்ந்தும் காங்கிரஸ் கட்சியில் இருந்திருப்பாரானால் என்ன மாதிரி நடந்திருப்பார் என ஒரு முறை யோசித்துப் பாருங்கள்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு போர்க்குற்ற விசாரணையைக் கொண்டு போகமாட்டேன் என்று சொன்ன சுமந்திரன் என்ன காரணத்திற்காக சொன்னார் என்பதைவிட சுமந்திரனா சொன்னார் அவர் துரோகி.காகம் கறுப்பென்றா சுமந்திரன் சொன்னார் அவர் துரோகி.சுமந்திரன் மாட்டுக்கு நாலு காலென்றா சொன்னார் அவர் துரோகி இதுதான் இன்றை தமிழரின் அரசியல் இலட்சணம்.

போத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரை ஊர்வலத்தில்கூட கிழக்கு மாகாணத்தில் பிடிக்கப்படாத புலிக் கொடிகளை வடக்கு மாகாணத்தில் ஏன் பிடிக்கப்பட்டது என்பதை யோசிக்க வேணும்.

அரசியல் அணுகு முறையால் தீர்க்கப்பட வேண்டியதை உண்ணாவிரதத்தால் தீர்க்க முடியாது என்பதை அறியாதளவிற்கு புலம்பெயர் அரசியல் செயல்பாட்டாளர்களின் அறிவு சூன்யத்தை என்னவென்று சொல்வது.

அனுதாபங்கள் அரசியல் வெற்றிக்கு இக்காலத்தில் வழிவகுக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.உண்ணாதவிரதம் இருக்கும் தாயாரிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து உண்ணாவிரத்திலிருந்து எழுந்துவிடுங்கள் என்பதே.ஏனென்றால் உங்கள் கோரிக்கையைக் கவனத்தில் எடுக்கிறோம் என்பது வேகமான அரசியல் நடவடிக்கைக்காகவல்ல அது ஒரு சம்பிரதாயம் அவ்வளவுதான்.

ஆர்ப்பரித்தல் அரசியலாகாது.ஆனால் இலங்கை அரசிற்கு தமிழரின் ஆர்ப்பரித்தலும் புலிக்கொடியும் தேவையாக இருக்கின்றது.இன்னும் புலிகள் உயிர்மையுடன் இருக்கிறார்கள் என்பது இலங்கை அரசிற்கு புலிகள் செய்யும் பேருபகாரமாகும்.

ஒரு வேளை புலிச் செயல்பாட்டாளர்கள் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன் போல இலங்கை அரசிற்கு உதவி செய்கிறார்களோ என ஏன் சந்தேகப்படக்கூடாது.

இலங்கை அரசின் ஒற்றர்கள் புலிப் போர்வையில் நீக்கமற நிறைந்து புலிக்கொடிகளை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

புலம்பெயர் புலிகள் தாயகத் தமிழர்களின் தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசிற்கு புலிக்கொடி ஒன்றே போதும் தமிழரைக் கையாள்வதற்கு,தமிழர் நிலங்களைக் கைப்பற்றுவதற்கு,புத்தர் சிலைகளை நாட்டுவதற்கு,தமிழர் நிலப்பரப்பெங்கும் இராணுவ மயப்படுத்துவதற்கு,இராணுவத்தினரின் குடும்பங்கள் இனி வகை தொகையாக குடியிருக்க வருவதற்கு,சிங்களப் பிள்ளைகள் படிப்பதற்காக பாடசாலைகளில் சிங்கள ஆசிரியர்களை நியமிப்பதற்கு.ஆக புலிக்கொடி செய்யப் போகும் கைங்கரியம் இதுதான்.

இலங்கையின் வடமாகாணம் தொட்டு நீர்கொழும்பு வரை தமிழர் நிலங்களாக தமிழர் காணிகளென தமிழில் எழுதப்பட்ட உறுதிகளுடன் இருந்த காணிகள் எவ்வாறு சிங்களவர்களின் காணிகளாகினவோ அது போல இரவோடிரவாக அள்ளிக் கொண்டு போன காணி உறுதிகள் இனி அரச காணிகளாலாகலாம்.

இலங்கை அரசுடன் ஒற்றுமைப்படாத எந்த அரசியலும் வெற்றியளிக்கப் போவதில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *