மெல்லுணர்வு சிறுகதை பற்றிய எனது பார்வை!…. ஏலையா க.முருகதாசன்.




மெல்லுணர்வு சிறுகதை பற்றிய எனது பார்வை!
திரு.நடேசன் அவர்கள் எழுதிய மெல்லுணர்வு என்ற சிறு கதையின் முக்கிய கதாபாத்திரமான பொறியியலாளர் ஆனந்தன் பரிதாபத்துக்கும் கழிவிரக்கத்திற்கும் உரிய மனிதராக கதை முழுவதும் வியாபத்திருக்கின்றார்.
யாழ்ப்பாணச் சமூகம் ஏலம் விடுவதற்காகவும் விலைபேசுவதற்காகவும் தமது ஆண் பிள்ளைகளை மருத்துவராக அல்லது பொறியியலாராக அல்லது பட்டயக் கணக்காளர் என்ற சாற்றட் எக்கவுண்டன்ராக என்ற தகுதிகாண் விலை பேசுதலுக்குள் கோழி மேய்ச்சாலும் கோரணமேந்திலை மேய்க்க வேண்டும் என்பதையும் சேர்த்து அரசாங்க உத்தியோகத்தருக்கும் ஏலம் விடும் சந்தையில் வேலைக்கேற்ற விலைகளை நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள்.பல்லுப் பார்த்து மாடு வாங்குவது போல தமது மகளுக்கு மாப்பிளை தேடும் பெற்றோர் அதற்கான விலைகளுக்கு இன்னொரு பெயரான சீதனம் என்ற பெயரில் வாங்குகிறார்கள்.
இந்தக் கதையை கதாசிரியர் நகைச்சுவை இழையோட தாம்பத்திய உறவு சார் உடல் உறவின் முக்கியத்துவத்தை „தும்பையும் நீக்கி கொட்டையையும் நீக்கி வாய்க்குள் போகக்கூடியதாக பலாச்சுளையை பிரித்துக் கொடுப்பது போல கதையைச் சொல்லியிருப்பது „ஆண்களே என்னைப் போல நீங்களும் ஆகிவிடாதீர்கள்’ என்று ஆனந்தனின் தன்னிலை அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
எனக்கு இந்தக் கதையை வாசித்த போது இன்னொரு சந்தை ஞாபகமும் வந்தது.அது என்னவென்றால் விதம் விதமான பெண்களை அனுபவிக்க வேண்டுமென்ற சுல்தான்கள் தமது அந்தப்புர அடிமைகளாக வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும்
பல்வேறு நாட்டுப் பெண்களை விற்கும் முகவர்கள் மூலமாக வாங்குவது உண்டு.
இவர்களும் வயிற்றைக் கழுவி உயிர் வாழ வேண்டுமென்பதற்காக காமக் கிழத்திகளாக வாழ்வதற்கு மனதால் இல்லாவிட்டாலும் உடலால் அதற்கு இசைந்துவிடுவார்கள்.அப்படி விற்கப்படும் பெண்கள் தரங்காணும் பரிசோதனையான பாலியல் உறுப்பு, முலையின் அளவு அதன் ஆரோக்கியம், தொடையின் அளவு, இடுப்பின் அளவு,, இதழ்களின் செம்மை,பற்களின் செழிப்பு, மொத்த உடல்வாகு என்பனவற்றின் தாற்பரியங்களை அறிந்து அதற்குத் தக்கதாக விலையின் தொகையில் ஏற்றம் இறக்கம் உண்டு.
இது அடிமைப் பெண்களுக்கான நிகழ்ச்சிநிரல்.அதைப் போலத்தான் யாழ்ப்பாணச் சமூகம், மருத்துவ, பொறியியல், பட்டயக் கணக்காளர்,அரசாங்கத் திணைக்களங்களில் வேலை செய்வோர் என அனைவருக்குமான மாப்பிள்ளைச் சந்தையின் நிகழ்ச்சி நிரலை வைத்திருக்கிறார்கள்;.பொறியியலாளர் ஆனந்தனின் தந்தை மகனை வளர்க்கவில்லை.மகனை மாப்பிள்ளைச் சந்தையில் கொண்டு போய் விற்பதற்காக ஆட்டுக்கிடாயை வளர்ப்பது போல வளர்த்திருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது
பொறியியலாளர் ஆனந்தனுக்கு தான் யாராலும் காதலிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல ரெஜீனாவிடம் தனது காதலைச் சொன்ன போது தான் கறுப்பென்றதால்தான் தன்னைக் காறித் துப்பினாளோ என்ற கவலை உண்டு.
ஏதோ சீதன விலைபேசி விற்கப்பட்ட அவர் ஊரிலிருந்த போது அங்கலாவண்யமுள்ள மேனகா என்ற மனைவியை சுகித்து மகிழ்ந்தவருக்கு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் சிவப்பு எச்சரிக்கை விளக்காக மாறியதுதான் அவருக்கு ஏற்பட்ட கொடுமையாகும்.ஊரிலிருந்து புலம்பெயர்ந்து
அவுஸ்திரேலியா வந்தவரின் வாழ்க்கையை அவுஸ்திரேலியா சுனாமிக்குள் அகப்பட்ட படகுமாதிரி எங்கேயோ கொண்டு போய் விட்டிட்டுது.
திருவள்ளுவர் „உள்ளக் களித்தலும்காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு’ என்றார்
அந்தளவுக்கு உடல் உறவின் தேவையை திருவள்ளுவர் பசுமரத்தணி போல பதிய வைத்திருக்கின்றார்.
அவுஸ்திரேலியாவில் பொறியியலாளரான ஆனந்தனுக்கு உடனடியாகவே பொறியியலாளர் வேலை கிடைக்காமல் ராக்ஸி ஓட்டும் வேலை கிடைத்தவுடன் மனைவியுடன் சுகித்தலும் அருகிவிடுகின்றது.வேலையால் வந்தால் அலுப்பாலும் களைப்பாலும் கையைக் காலை எறிந்து குப்புறப்படுத்து நித்திரை கொண்டதே காரணமாகும்.
மனைவி தன் வெளிப்படுத்தா விருப்பத்தை பொறியிலாளர் ஆனந்தனின் உடல் களைப்பு உணர்வதைத் தடுத்து விடுகின்றது.உடல் உறவுக்கான ஒரு ஆணின் உறுப்பின் மீதும் அதன் எழுச்சிமிக்க ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு ஆணுக்குண்டு என்பதை தாம்பத்திய வாழ்வு குறித்துச் சொன்ன நூல்களை பொறியியலாளர் ஆனந்தன் வாசிக்காமல் விட்டிருக்க மாட்டார்.
அவர் பல்கலைக் கழகத்தில் படித்த போது அப்பப்ப இரகசியமாக எத்தனையோ உடல்உறவு சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசிக்காமல் விட்டிருக்க மாட்டார்.
சாடைமாடையாக நண்பர்கள் சொன்ன „அந்தக’; கதைகளைக் கேட்காமலா விட்டிருப்பார்.பல்கலைக் கழகம் என்பது பல கலைகளுக்கான இடந்தானே.
ஆனால் ராக்சி வேலை அவருக்கு சத்திராசியாகி மனைவி குளித்துவிட்டு சுகித்தலுக்கு வந்த போது களைப்பினால் அயர்ந்து தூங்கியதும் தொடர்ச்சியான மெல்லுணர்வு அறியா
காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த ஆவலாதி மட்டுமே உடல் உறவுக்கு மூலதனம் என்ற பொறியியலாளர் ஆனந்தனின் காமம் பற்றிய நுனிப்புல் மேயந்த அனுபவமும் அவரை மனைவியுடனான விவாகரத்துக்கு கொண்டு போயுள்ளது.
அன்றைய அனுபவசாலிகள் பட்டும் படாமல் இளைஞர்களுக்கு பல அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.அவற்றில் எழுச்சி பற்றிக் கூறும் போது மரவள்ளிக் கிழங்கை ஒப்பிட்டுக்கூடச் சொல்லியிருப்பார்கள்.அதிலும் தோட்டக்காரர்களுடன் கூலித் தொழிலாளிகளுடனும் கொஞ்ச நாள் பழகினாலே வாத்சணாயர் சொல்லாத விசயங்களைக்கூட அவர்களிடமிருந்து அறியலாம்.
மனைவி தன்னிடம் இருந்து மெல்லுணர்வு என்ற ஆரத்தழுவும் ஸ்பரிசத்தையும் இலக்கை நோக்கி தன்னையும் சேர்த்து அழைத்துக் கொண்டு போய் பொறி கலங்கி வியர்வைத் துளிகள் முத்தாகி உடல் எங்கும் பரவ அது நடக்கையில் அந்த மெல்லுணர்வின் வாய்க்கால் வழியோடி பாத்தியை நிரப்பும் நுட்பத்தை அறியாது விட்டமையும், ஆனந்த மயமான தாம்பத்திய உறவு உடல் வெறும் ஒப்புக்கானதாய் போய்விட்டது.
பருத்தி விதை போல காய்ந்து இருந்த நேரத்தில் கல்யாணம் செய்த கொடுமையை பொறியிலாளர் தன்வாழ்வின் பிற்பகுதியில் அனுபவித்தமையை பருவத்தே பயிர் விளைவி அறிவுரையை சுட்டி நிற்கின்றது.
காதலுடன் காமமும் கலந்து மெல்லுணர்வு வழி செல்லும் தாம்பத்திய உறவே அதில் ஈடுபடும் இருவருக்கும் மனநிறைவைத் தரும் என்பதை இடித்துரைத்த மேனகாவில் எந்தப் பிழையுமிருப்பதாக தெரியவில்லை.
இறுதியில் தனது எழுச்சியைப் பரிசோதிப்பதற்காக தனது உடலை வாடகைக்கு விடும் பெண்ணிடம் போய் அவர்
பரிசேதித்து அங்கும் தனது எழுச்சிக்கான சான்றிதழைப் பெற்று பத்து வருடங்களுக்குப் பிறகு பாவிக்கப்படாத எழுச்சி இயந்திரத்தை சேராவுடன் இணைந்து பயன்படுத்த நினைத்த போது தேன்நிலவை அனுபவிக்க வேண்டிய விடுதியொன்றில் ரொமன்ஸ் படங்களைத் தொலைக்காட்சியில் தேடிக் கொண்டிருக்கும் நிலைமைக்கு ஆளான பொறியியலாளர் ஆனந்தன் பாவம் ஆனந்தனாய் தவிக்க வேண்டியதாகிப் போய்விட்டது.
காமத்தின் ஒரு முக்கிய பாகம் மெல்லுணர்வு என்பதை கதையாசிரியர் திரு.நடேசன் அவர்கள் வலியுறுத்திச் சொல்லியது மட்டுமல்ல,உடல் சார்ந்ததே வாழ்வு என்பதுடன் காமத்தின் பெரும்பங்கும் உடல்உறவும் நிராகரிக்கப்பட வேண்டியவை அல்ல அது மிக முக்கியமானது அதுவும் ஒரு பசியே என்பதையும் நகைசசுவை இழையோட மெல்லுணர்வு என்ற கதை மூலம் சொல்லியிருக்கிறார்.
இக்கதைக்கு வலுச் சேர்க்கும் வரிகளாக,
„பாவனையில்லாத ஆண்மை…..’
„கலவி செய்வதற்கு காதல் இல்லாமல்…..’
„நாற்பது வயதில் நலமடிக்கப்பட்டு விட்டதாக….’
„ஏலம் விடுவது போல’
„திருமணம் செய்வதற்கு தனது ஆண்மையைப் பரிசோதிக்க……’
„எவ்வளவு காலமாக காய்ந்திருக்கிறீர்கள்’
„மணல் போடாமல் பச்சைப் பயறை வறுத்தது போல’
„தங்கத்திலையா குஞ்சாமணி….’
„பருத்தி விதைபோல காய்ந்து பறக்க இருந்த……’
தங்கத்திலையா குஞ்சாமணி என்பது அது பிரயோசனப்படாதது என்பதேயாகும்.அதே போல எனது தந்தையார் இன்னொரு புத்திமதியை எனக்குச் சொல்வார், அது „பொன்னாலை செய்த கத்தி என்றாலும் அதை வயிற்றிலை குத்திப் பார்க்கக்கூடாது „ என்பதேயாகும்.
பொன்னாலை செய்த கத்தி என்றாலும் அதுவும் காயத்தை ஏற்படுத்தும் என்பது போல,தங்கத்தில் குஞ்சாமணி இருந்தாலும் அதனால் ஒரு சதத்திற்கும் பிரயோசனமில்லை என்பதேயாகும்.இக்கதையில் பத்து வருடகாலமாக பொறியிலாளர் ஆனந்தன் உடல் உறவு கொள்ளாமல் தரிசு நிலம் போல இருந்தார் என்று கதையாசிரியர் சொல்வதை நம்ப முடியவில்லை.ஆகக்கூடியது ஒரு வருடம் என்பதைக் கொஞ்சம் நம்பலாம்,அதுவும் ………
மொத்தத்தில் மெல்லுணர்வும்,காதலும், பொங்கியெழும் காமமும் இல்லா உடல் உறவு பசியைத் தீர்க்காது என்பதை கதை மூலம் வலியுறுத்திச் சொன்ன கதையின் ஆசிரியர் திரு.நடேசன் அவர்களை வாழ்த்திப் பாராட்டுகின்றேன்.
இன்று எமது இளந்தலைமுறையினரிடம் வகைதொகையாக பெருகிவரும் விவாகரத்துகளுக்கு பெரும் காரணமாக இருப்பதுவும் இதுவேயாகும்.
![]()
Dr நடேசனின் “ மெல்லுணர்வு” க்கு நீங்க விமர்சித்த விதம் அபாரம்
Rajam Sivapalasingam ,Australia