கிருஷ்ணன் தூது!…. ( சிறுகதை ) ….. சாந்தன்.
காலையில் வந்து கையெழுத்து வைக்கிறதற்கு அடுத்த வேலை
துடைக்கிறதுதான். லாச்சியைத் திறந்து டஸ்டரை எடுத்து,
வரைபலகையையும் `ட்ராஃப்ரிங் மெஷினை’யும் அழுத்தித் துடைக்க வேண்டியிருக்கும். பியோன்மார் சாட்டுக்குக் கொடுத்து விட்டுப் போயிருக்கக் கூடிய இரண்டு தட்டுதல் போதாது. ஒரு சொட்டு ஊத்தை போதும் – படத்தைப் பாழாக்க.
வெள்ளிக்கிழமை உந்த வேலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சேனாதிபதி கூப்பிட்டான். துடைத்து முடித்து `வாஷ்பேஸி’னில் கையையுங் கழுவிவிட்டு சேனாதியடிக்குப் போனபோது, அவன் அதைக் காட்டினான்.
“என்ன, உது?”
ஒரு அச்சு புறூஃப், சின்னத்துண்டு. `நலன் செய் சங்கம்’ என்று போட்டு, எதிரே கந்தோரின் பெயர் இருந்தது. பிறகு விலாசம், தொலைபேசி எண் கீழே. தலைவர். செயலாளர், பொருளாளர். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உப, உப, உப, சேனாதியின் பெயர். உப-செயலாளர் என்பதற்கு எதிரிலிருந்தது. எல்லாம் இரண்டு மொழிகளில் – தமிழிலில்லை.
சினமாய் வந்தது.
“லெற்றர் ஹெட்தானே?”
சேனாதி தலையாட்டினான்.
“இங்கிலீஷிலை போட்டிருக்கிறதைத் தமிழிலை போட்டால்
என்ன?”
“என்னவோ, அவங்கட வேலை”
“ஆர் அடிப்பிக்கிறது?”
“காரியதரிசி – லயனல்…”
“கேட்கவா?…”
கூப்பிட்டதும் லயனல் எழும்பி வந்தான்.
“விவே, இதுதான் எங்கட லெற்றர் ஹெட். எப்படியிருக்கு?”
“எந்தப் பிரஸ், மச்சான்?” விவேக் கேட்டான்.
லயனல் சொன்ன அச்சுக் கூடம், அதிகமாகத் தமிழ் வேலை செய்கிற இடம்.
“லயனல், இதிலை தமிழையும் நீங்கள் போட்டிருக்கலாமே?”
“இடம்தானே மச்சான், பிரச்சினையாயிருக்கு?”
லயனல் ஒரு நிமிடம் தயங்கிவிட்டு, பிறகு சொன்னான்.
“….இப்பவே பார், பேப்பரிலை கால்வாசி போச்சு!”
“ப்ப அந்த ஆறு பேருடைய பெயரையும் எடுத்திடலாமே?”
“அது அவசியம்.”
“சின்ன எழுத்தாகப் போடுகிறது?”
“கொஞ்சம் பளிச்சென்று இருக்கவேண்டாமோ?”
ஒரு கூட்டம் கூடியிருந்தது. இன்னும், காமினி, கண்டொஸ், ரஞ்சித், சச்சி. சேனாதியிடமிருந்து கண்டொஸ் அந்த புறூஃ.பை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரி. இங்கிலீஷை எடுத்திட்டுப் போடுங்களேன்?”
“இங்கிலீஷா? எத்தினை கொம்பனிகளோட தொடர்பு கொள்ள வேண்டி வரும்? அதை எடுத்திட்டு?”
“எந்தக் கொம்பனியெண்டாலும், பருத்தித் துறைக்கும் டொன்ட்ராவுக்கும் இடையிலை உள்ளதுதானே?.”
“எண்டாலும்-”
“இங்கிலீஷ், இங்கே எத்தினை பேருடைய பாஷை? அதை எடுத்திட்டு அங்கத்தவர்களிலை நாற்பது வீதம் பேருடைய பாஷையைப் போட்டா, என்ன?’ சச்சி கேட்டான்.
“விவே, இதுக்கு முதல் லெற்றர் ஹெட் இல்லை. றபர் ஸ்ராம்ப் தானே பாவிச்சது?” என்றான் ரஞ்சித்.
“ஓ…?”
“அது தனிச் சிங்களத்தில் தானே இருந்தது. அதுக்கெல்லாம் ஒண்டும் பேசாமல் இருந்தீங்களே? இதற்கு மாத்திரம் ஏன்?”
இந்த நேரத்திலும் சிரிப்பு வந்தது. ஒரு பிடி கிடைத்த மாதிரியும் இருந்தது விவேகானந்தனுக்கு.
”அந்த ஸ்ராம்பிலை `தமிழையும் போடு’ எண்டு நாங்கள் கேட்டிருந்தா, அது நடைமுறை சாத்தியமில்லை. இந்த அளவு” – இடது உள்ளங்கையில் வலது சுட்டு விரலால் ஒரு சின்ன வட்டம் போட்டுக் காட்டினான்.
“இந்த அளவு வட்டத்துக்குள்ளை இரண்டு பாஷை போடு, மூண்டு பாஷை போடு – எண்டு நாங்கள் கேட்டிருந்தா, அது முட்டாள் தனம்”
“இது அப்படியில்லை, வடிவாப் போடலாந்தானே?” கண்டோஸ் கேட்டான்.
“இப்ப என்ன செய்யிறது மச்சான், அடிச்சாச்சே?”
“இல்லை. இது புறூப்தான், இப்பவும் வடிவாச் சேர்க்கலாம்.”
பிறகு விவே சொன்னான்.
“மச்சான் இதெல்லாம் நாங்கள் கேட்டு நீங்கள் போடுகிற விஷயமில்லை. நீங்களாகவே உணர்ந்து போடுகிறதுதான் அழகு. இது அரசியலில்லை. குடும்பம் மாதிரி. நல்லுறவுக்கும் சிநேகிதத்துக்கும் ஒரு பரஸ்பர மதிப்பு தேவையில்லையா?. இப்படி சின்ன விஷயங்களில் கூட.”
முடிக்க முதல் மிஸ்டர் பெர்ணாண்டோ வந்து விட்டார்.
“ஐஸே, இப்ப எத்தினை மணி? என்ன செய்யிறீங்கள் எல்லாரும் இங்கை?”
2
அரசமரம் சலசலத்தது. பென்னாம் பெரிய மரம். கந்தோரின் இந்தளவு பெரிய முற்றத்தில் ஒரு பொட்டு வெய்யில் படவிடாது. காற்றடிக்கிற நேரங்களில் பாடும். இப்போது வைசாகம் முடிந்த கையோடு, புதுப்பச்சை இலைகளும் வெள்ளைக் கடதாசிச் சோடனைகளுமாய்ப் பொலிந்து நிற்கிறது.
“எண்டாலும், நீர் அப்பிடி அவனோட பேசியிருக்கக் கூடாது-”
என்றான். சேனாதிராசா.
“எப்பிடி?”
“அவ்வளவு கடுமையா… சண்டை பிடிக்கிற மாதிரி…”
“கடுமையா? சண்டையா?” – விவே திகைத்துப் போனான்.
“அதை அவன் ஒரு சவாலாக நினைக்கலாம். `இப்படிக் கேட்டு போடவோ’ எண்டு.”
“கேளாமலே போட்டிருந்தால் வடிவுதான்”
“சச்சி, நீர் கொஞ்சம் பேசாம இரும்…” – சேனாதிக்குக் கோபம் வரப் பார்த்தது.
“நான் அவனை ஏச இல்லை…. சிநேகிதன் எண்ட முறையிலை அதைக் கூடச் சொல்லக் கூடாதா?.”
“இல்லை அண்ணை, நீங்கள் பேசினதிலை ஒரு பிழையுமில்லை.
இனி என்ன, கெஞ்சிறதா?” விவேயைப் பார்த்து, திரும்பவும் சச்சி
சொன்னான்.
“எண்டாலும்” – மெல்ல, ஆறுதலாகத் தொடங்கினான். சித்திரவேல். சேனாதிக்குப் பக்கத்து மேசை. எல்லாம் வடிவாகக் கேட்டுக்
கொண்டிருந்தவன்.
”தெரியாதே – இப்ப உள்ள நிலைமைகளிலை நாங்கள் கொஞ்சம் பணிஞ்சுதான் நடக்க வேண்டியிருக்கு.”
3
வெள்ளைச் சல்லி பெறாத விஷயம் இப்படியாகி விட்டது. வேலையில் மனம் ஏவமாட்டேன் என்கிறது. அதுவும் முழுக்கச் கல்குலேஷன்கள்.
விசிறி சுழற்றிய காற்றின் வீச்சில் வரைபலகையுடன் பொருத்தியிருந்த கிளிப்பை மீற முடியாமல் படத்து முனை படபடத்தது. இந்தக் காற்றுப் பொல்லாதது – என்னதான் இறுக்கிப் பொருத்தியிருந்தாலும் படத்தாளை அசைத்து விடும். இம்மி அசைந்தாலும் நுணுக்கம் போச்சு – என்ன செய்வது? புழுக்கந் தாள முடியாது. விசிறிக்கு றெகுலேற்றரும் இல்லை. ட்ராஃப்ரிங் மெஷி’னை அரக்கி, தாள் கிளம்பாமல் வைத்தேன்.
என்னில் தான் பிழையா? – இரண்டு நாளாக இதே யோசனை…
ஆனால், யோசிக்க யோசிக்க, அப்படியில்லை என்று படுகிறது. நேற்றும் அப்படித்தான் பட்டது. சொல்லி முடித்த அடுத்த கணங் கூட, ஒரு திருப்திதான் தெரிந்தது. சேனாதியும் சித்திரவேலும் தான் குழப்பிவிட்டார்கள்.
பென்சிலை உருட்டிக் கொண்டிருந்தபோது, சித்திரவேலுவே வந்தான்.
“எப்பிடி விவே?.” அவன் நேரே விஷயத்தில் இறங்கினான்.
“…நான், பிறகு – நேற்றும் முந்தநாளும் – இந்த விஷயத்தை நல்லா யோசிச்சுப் பாத்தன். நீர் சொன்னதிலை ஒரு பிழையுமில்லை எண்டுதான் படுகுது. சச்சி சொன்னது போல, இது கெஞ்சுகிற விசயமில்லைத்தான்-”
பெருத்த ஆறுதலாயிருந்தது.
சித்திரவேலு, சொல்லிவிட்டுக் கொஞ்ச நேரம் மெளனமாயிருந்தான்.
“அப்ப இனி என்ன செய்யலாமெண்டு நினைக்கிறீர்?” விவே கேட்டான்.
“இனியோ? – இத்தறுதிக்கு அடிச்சி முடிச்சிருப்பாங்களே?”
இல்லை அச்சுக் கூடத்திலையிருந்து வாற வெள்ளிக்கிழமை தான் எடுக்கலாம் – இண்டைக்குத் திங்கள் தானே?”
“அப்ப நாங்கள் செயற்குழுவுக்கு ஒரு விண்ணப்பம் எழுதுவம்… அண்டைக்கு சும்மா வாய்ப்பேச்சிலை கதைத்ததை விட, வேற ஒண்டுமில்லைத்தானே?”
நீங்கள் எப்ப கேட்டணீங்கள்? எண்டு பிறகு கேக்க இடம் வைக்கக்
கூடாது.”
“அது நல்ல யோசனைதான்..”
”எழுதி, எல்லா அங்கத்தவர்களும் கையெழுத்து வைச்சுக்
கொடுக்கலாம்.”
4.
”அய்யா நீங்கள் என்ன வேலை செய்திருக்கிறீங்கள்?”
மூர்த்தி கேட்ட விதத்தில் சிவஜோதி கொஞ்சம் பயந்து போய்
விட்டார்.
“ஏன் என்ன? என்ன செய்தனான்?”
“பின்னை என்ன? அந்த லெற்றர் ஹெட் `திருப்தி’ எண்டு கையெழுத்துப் போட்டுக் குடுத்திருக்கிறீங்களே. அதிலை ஒரு வரி தமிழிலையும் போட்டால் குறைஞ்சா போகும்?”
சிவஜோதி திடுக்கிடத்தான் செய்தார்.
“என்ன தம்பி, என்ன தம்பி, அதை ஆர் யோசிச்சது?. அவன் உங்கட லயனல்தான் – கொண்டு வந்து சரியா எண்டு கேட்டான். அந்த லே-அவுட் அதுகளைப் பற்றிக் கேட்கிறானாக்கும் எண்டு நான் நினைச்சேன்… எடடே…”
“உங்கட கொமிற்றியிலை அதுகளைப் பற்றி ஒண்டுந் தீர்மானிக்க இல்லையா?.”
“ஒரு ஐந்நூறு `லெற்றர் ஹெட்’ அடிக்கிறது எண்டுதான் முடிவெடுத்ததொழிய, விபரம் ஒண்டும் தீர்மானிக்கவில்லை.”
“தீர்மானிக்குறதெண்டா, நாங்களும் மூண்டு பேர் இருக்கிறமெல்லா? – நான் சேனாதி மணியத்தார்.”
“மணியத்தார் வாறார்” என்றான், கன்டொஸ்.
சுருட்டுப் புகை முன்னால் வந்தது.
“தம்பியவை, இப்படி நீங்கள் மாத்திரம் தனித் தனிக் கூட்டமாக நிண்டு கதையாதயுங்கோடா. மற்றவர்களுக்கு, பார்க்க ஒருமாதியாயிருக்கும்.”
“அதுக்கு என்னய்யா செய்யுறது?” என்றான் சச்சி.
“இனிமேல் ஒரு பிரச்சியையுமிராது. அடுத்து முறையிலையிருந்து, தனிய இங்லீஷிலைதான் அடிக்கிறது எண்டு நாங்கள் தீர்மானிக்கப் போகிறோம்.” சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் சொன்னார்.
”அய்யா, அவங்களிலை சிலபேர் நினைக்கிற மாதிரித்தான் நீங்களும் நினைக்கிறீங்கள் – சிங்களத்தில் போட்டது எங்களுக்குப் பிடிக்கேல்லை எண்டு! பிரச்சினை அதில்லை! தமிழிலை போடாமல் விட்டதுதான் எங்கட பிரச்சினை! நீங்கள் தனிய இங்கிலீஷிலை அடிக்க வெளிக்கிட்டா, அதை எதிர்க்கிற முதல் ஆளாக நானிருப்பன். இப்ப பாதிப் பேருக்கு உள்ள நட்டத்தை நீங்கள் முழுப் பேருக்கும் கொண்டு வாறன் எண்டு
நிக்கிறியள்.”
6
றொபேட்டைப் பற்றி விவேக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது. பியோன் வேலைக்கு வந்து சேர்ந்தாலும், படித்தவன், அறிவானவன் என்று, அவனுடைய தொழிற்சங்கத்தில் தமிழர்களும் கனபேர் அங்கத்தவர்களாயிருக்கிறார்களாம். அவனோடு ஒரு தரம் தனியாகக்
கதைத்துப் பார்க்க வேண்டுமென்றிருந்தது. றொபேட், நலன் செய் சங்கத்திலும் செயற்குழு உறுப்பினன். சாப்பிட வெளிக்கிட்டுப் போனபோது, றொபேட் யாருடனோ பேசிக் கொண்டு நின்றான். அவ்வளவு சீரியசான பேச்சாகத் தெரியவில்லை. கிட்டப் போனதும்.
“றொபட், வேலையா?” என்று மெல்லக் கேட்டான்.
“இல்லை, ஏன்?”
“ஒரு சின்னக் கதை.”
தள்ளிப் போனார்கள்.
“இந்த விஷயம் என்ன, குழப்பமாகிப் போச்சு. றொபட் என்ன நினைக்கிறீர்?”
அவன் கொஞ்சம் அசட்டுத்தனம் தெரியச் சிரித்தான். பிறகு
சொன்னான்.
“இடம் தான் பிரச்சினையாம். மூண்டு பாஷையிலும் போட, அரைவாசி இடம் போயிடுமே!”
“ஏன் மூண்டு? இங்கிலீஷை விடலாமே?.”
“அதெப்படி? கொம்பனிகளுக்கு.”
7
மத்தியானம் பஸ்சுக்கு நின்றபோதுதான் திடீரென்று அந்த யோசனை வந்தது. விவேகானந்தனுக்கு – வேண்டுகோள் கடிதத்தில், தனிய நாங்கள் மட்டும் கையெழுத்து வைக்கக் கூடாது.
கந்தோருக்கு வந்ததும், முதல் வேலையாக கனகசுந்தரத்தின் ஷெக்க்ஷனுக்குப் போனான்.
“அது நல்ல யோசனை தான்- அடிப்படையிலை இரண்டு பிரிவாகப் பிரிஞ்சு நடக்கிறதைத் தவிர்க்கத்தான் வேணும்.” .கனக்ஸ் சொன்னார்.
“அதுதான், பாருங்கோ… இதிலை இரண்டு விஷயம்: ஒண்டு, அப்படியான பிரிவைத் தவிர்க்க வேணும். மற்றது பிரிவைத் தவிர்க்க
வேண்டும் எண்டதற்காக வலிஞ்சு போகக் கூடாது.”
“ஏன் நிக்கிறீர்? அவசரமே? இரும் இரும் இருந்து கதைப்பம்.” கனக்ஸ், மேசையில் கிடந்த ஃபைல்களை ஒதுக்கி வைத்தார். விவே இருந்ததும் அவர் கேட்டார்.
“நீர் சொல்லுறது சரி. ஆனா, கையெழுத்து வைக்கக் கூடிய ஆக்கள் இருக்கணுமே? ஆரைக் கேக்கிறது?”
என்ன?”
“எங்கட மிஸ்டர். பெர்னாண்டோ இருக்கிறாரெல்லோ..?
“உங்கட பொஸ்?”
”அந்தாள் நல்ல மனுஷன். இப்படியான வேற்றுமைகள் பார்க்கிறதில்லை இடதுசாரி எண்டு சொல்லுறவங்கள்.”
“அவர் மாத்திரம் வைச்சாப் போதுமே?”
“அந்தாள் வைச்சா, அதைப் பாத்திட்டு அதுக்காக வைக்கக் கூடிய ஏழெட்டுப் பேர் எங்கட ஷெக்க்ஷனிலை இருக்கினம்.”
8
“வணககம. எலலாள மகாராஜா”
மூர்த்தி. ஆள் பகிடிக்காரன் என்றாலும் இந்தப் பகிடி அவ்வளவு உவப்பாகத் தெரியவில்லை.
“அலம்பாதையடா!!” என்றான் விவே கோபமாக.
“நான் என்ன செய்ய? உன்னை அப்பிடித்தான் நினைக்கிறாங்கள்
போலிருக்கு.”
“அப்பிடி நினைச்சாலும் ஆச்சரியமில்லை. அது தான் வழக்கம். அப்படிப் பழக்கியிருக்கு.” என்றான் கன்டொஸ்.
“முந்தி சின்னப் பெடியளாயிருந்த காலத்தில் எம். ஜி. ஆரும் வீரப்பாவும் வாள்ச் சண்டை போடுறதென்று சொல்லி நாங்கள் பூவரசந் தடி சுழட்டுற மாதிரி.” விவே சிரித்தான்.
“உங்களுக்காவது இந்தியா இருக்கு . நாங்கள் எங்க போறது? எண்டு மிஸ் அத்தபத்து கேட்டா.” கன்டொஸ் சிரிப்பை அடக்கிச் சொன்னான்.
“ஆண்டவா! இந்த குழப்பத்திலும், மன உளைச்சலிலும் கூட நல்ல பகிடிகள் சந்திக்கின்றன!”
சிரித்து முடித்த பின் அழுதிருக்க வேண்டுமோ என்று பட்டது விவேக்கு.
“எப்ப கதைச்சனி? என்னெண்டு இந்தக் கதை வந்தது?”
“மத்தியானம் சாப்பிட்ட பிறகு கதைச்சுக் கொண்டிருக்கேக்கை.”
“எழுபத்தேழாம் ஆண்டுக் கலவரத்துக்குள்ளை கூட நாங்கள் உங்களை ஒண்டும் செய்யலை. நீங்கள் ஏன் இப்படி நடக்கிறீங்கள் எண்டுங் கேட்டுதுகள்.”
”எல்லாம், அறியாத்தன்மை. அதால் வந்த பயம், நாங்கள்
விளங்கப்படுத்த வேணும்.” என்றான் தொண்டர்.
“எவ்வளவு காலத்துக்கு என்னத்தையெண்டு விளங்கப் படுத்தப் போறீங்கள்? அதுக்கிடையிலை எங்கடபாடு முடிஞ்சிடும்.” சச்சி சொன்னான் கோபமும் சிரிப்புமாய்.
“இங்கிலீஷ் போடுற இடத்திலை தமிழைப் போடுறதாலை பாதகமில்லை என்பதை விளங்கப் படுத்த வேண்டியிருக்கு.”
“சரி நாளை செவ்வாய்க்கிழமைக்கிடையிலை எங்கட கடிதத்தைக் குடுத்திட வேணும். இப்ப எத்தனை பேர் கையெழுத்து வைச்சிருக்கு?”
“இருபத்தொரு பேர் இன்னும் எட்டுப் பேர் வைக்க இருக்கு.”
“கந்தையா?”
“வைச் சிட்டார். ஆனா, சரியா யோசிக்கிறார். இப்பவே பெர்னாண்டோவுக்குக் கொடுக்கிற மரியாதையிலை பாதியாவது அவங்கள்
தனக்குத் தாறதில்லையாம். இதிலை கையெழுத்தும் வைச்சா இன்னும் நல்லாத்தானிருக்கும் எண்டார். எப்படியோ வைச்சுத் தந்திட்டார்.”
”அந்தாள் பாவம். அவங்களுக்கும் பயப்பிடுகுது. எங்களுக்கும் பயப்பிடுகுது.” என்றான் மூர்த்தி.
“சேனாதிபதி”
“பின்னேரம் சொல்லுறன் எண்டார் ஆனா, தான் கொமிற்றிக் கூட்டத்திலை இதைப் பற்றிக் கதைப்பாராம். கதைச்சுத்தான் என்ன நடக்கப் போகுது? கொமிற்றியிலையுள்ள பதினோருபேரிலை இவையள் மூண்டுபேர் தலையளை எண்ணிப் பாக்கிறபோது என்ன செய்யேலும்?”
“சேனாதி ஏன் இப்பிடிப் பின்னடிக்குது?”
”அந்தாளுக்குப் பயம் – புறூஃப் ஏன் மற்ற ஆட்களுக்குக் காட்டினனீ? எண்டு தன்னைக் கேட்பாங்களோ எண்டு.”
9
கந்தோரால் வந்து கணவன் தேத்தண்ணி குடித்துக் கொண்டிருக்கும் போது, கமலா கேட்டாள்:
“இன்னும் உங்கட அந்த இது அடிச்சு முடியேல்லையே?”
“எது?”
“அந்த லெற்றர் ஹெட்?”
“நீரும் ஒரு பக்கம், இதுக்குள்ளை.” சேனாதிபதி சீறினான்.
அதிலை இப்ப காயிதம் எழுதப் போறீரே?”
கமலாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.
“எனக்கென்னத்துக்கப்பா, அதை?. ஏதோ உங்கட பேரும் போட்டு
அச்சடிக்கினம் எண்டு சொன்னீங்கள். அதைப் பார்க்கலாமெண்டுதான்.”
அவள், பலகைத் தடுப்பைத்தாண்டி அடுப்படிக்குப் போனாள்.
10
“மிஸ்டர் பெர்னாண்டோ, இதை ஒருக்காப் பார்க்கிறீங்களா?” சுங்கான் புகை மணத்தை ரசித்தவாறு, மரியாதையாகக் கேட்டான்
கன்டொஸ்.
“என்ன, அது?” நிமிர்ந்து, சுங்கானை மேசையில் வைத்தபடி
அதை வாங்கினார் பெர்னாண்டோ.
நீள நீளமாகச் சுருட்டப்பட்ட பெரிய படங்கள் மேசையில் ஒருபக்கம் முழுவதையும் பிடித்திருந்தன. தடித்த கண்ணாடிக்கடியில் கிடந்த வண்ண வண்ணமான வெளிநாட்டுத் தபால் முத்திரைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான், கன்டோஸ்.
பெர்னாண்டோ படித்தார்:
“எங்கள் நலன் புரிச்சங்கத்தின் செயற்குழு, சங்கத்திற்காகக் கடிதத் தலைப்பு அச்சிடுவதென்று தீர்மானித்து அதற்கான வேலை தொடங்கியிருப்பதாய் அறிகிறோம். குறிப்பிட்ட கடிதத் தலைப்பில், தமிழ் இடம் பெறவில்லை என்பது எங்களை மிகவும் வருந்தச் செய்கிறது.
உறுப்பினர்களுக்கிடையில் நல்லுறவையும், ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கும், சங்கத்தின் சுமுகமான செயற்பாட்டிற்கும் இம்மாதிரியான விஷயங்களில் தமிழுக்கும் உரிய இடங்கொடுப்பது அவசியமென்பதை ஒத்துக்கொள்வீர்கள். இது விஷயமாக ஆவன செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
“நல்லது. எழுதத்தான் வேணும்?” என்றார். பெர்னாண்டோ வாசித்து முடித்ததும்.
பிறகு பழையபடி சாய்ந்து கொண்டு, கண்ணாடியை நெற்றியில் உயர்த்தி விட்டார்.
“இது கொஞ்சம் நுணுக்கமான விஷயம். உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட சங்கதி.”
“ஒமோம்.” என்றான். கன்டொஸ்.
“ஆனா உங்கட வேண்டுகோளை வடிவா எழுதியிருக்கிறீர்கள் – நல்லமாதிரி”
கன்டோசுக்கு சந்தோஷமாயிருந்தது.
“அப்ப இதிலை நீங்களும் கையெழுத்து வைக்கலாந்தானே? ” என்றான்.
“நானா? நான் எதுக்கு?” அந்தாள் இதை எதிர்பார்க்கவில்லை
“நாங்கள் மட்டுந்தான் இதிலை கையெழுத்து வைக்க
வேணுமெண்டில்லையே – இந்தக் கடிதத்திலை உள்ள நியாயத்தை ஒப்புக்கொள்கிற எவரும் வைக்கலாந்தானே?”
“அதுசரி. அதுசரி” பெர்னாண்டோ சமாளித்துக் கொண்டு
சுங்கானைக் கையில் எடுத்தார்.
“அப்படியென்டா, மிஸ்டர் கந்தசாமி இதிலை இன்னுங் கொஞ்சம் மாத்தி, இன்னும் வடிவா எழுதி – எல்லோரும் கையெழுத்து வைப்பம். இப்ப கொஞ்சம் வேலையிருக்கு. பிறகு ஆறுதலாகச் செய்வமா?”
கன்டொஸ் சிரித்துக் கொண்டு திரும்பி வந்தான்.
11
கன்ரீன் வழமைபோல் இருண்டு கிடந்தது. பிசுபிசுக்கிற மேசைகள், சிகரட் புகை, கிளாஸ்கள் அடிபடுகிற ஒசை. இலையான்கள்.
“நீ இந்தளவுக்கு மாறிப் போவாய் எண்டு நான் நினைச்சிருக்கேல்லை.” காமினி சொன்னான்.
அந்தக் குரல் எவ்வளவு அந்நியப்பட்டு ஒலிக்கிறது?
விவேகானந்தனுக்கு வேதனையாயிருந்தது. ஒரு சின்னச் சிரிப்பும் வந்தது.
தேத்தண்ணிக் கிளாஸை வைத்துவிட்டுக் கேட்டான்.
“ஏன் அப்படிச் சொல்லுறாய். காமினி?”
“பின்னை என்ன, இண்டைக்கு இவ்வளவு கோளாறு வந்திருக்கே. நீ தான் அவ்வளவுக்கும் காரணம்.”
“பயங்கரமாய்த் தானிருந்தது. பிறகும் நானா? நானா?”
“நீ தான்.” காமினி சிகரட்டை உறிஞ்சினான்.
“நீ தான். போன வெள்ளிக்கிழமை பகல், லயனல் புறூஃபைக் கொண்டு போய் காட்டின போது சரியெண்டு சொன்ன சிவசோதி, சுப்பிரமணியம் எல்லாருங் கூட, இண்டைக்கு உங்கடை வேண்டுகோளிலை கையெழுத்து வைச்சிருக்கினம்.”
“நான் போய் மேசை மேசையா கன்வஸ் பண்ணினேன் எண்டு
நினைக்கிறியா?”
“அதைப் பிழையெண்டு பேச, நீ முதலிலை புறப்பட்ட பிறகு தான் இவ்வளவும் நடக்குது. இதெல்லாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் எண்டு நினைச்சுப் பார்த்தீங்களா?.”
“எங்களுக்கு எண்டும் ஒரு அடையாளம் இருக்கெண்டைதைக் காட்டினதும், ஏன் இப்படிக் குழம்புறீங்கள், மச்சான்?”
“நாங்கள் குழம்பேல்லை. நீ தான் குழப்புறாய். பார், இண்டைக்கு செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிடையிலை, பிரஸ்ஸிலையிருந்து
அதுகளை எடுக்க வேணும் அதுக்கிடையிலை இது ஒரு குழப்பம்.”
விவே சிரித்தான்.
12
கதவருகில் நின்று மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தார்கள். கல்தேராவும் ரஞ்சித்தும், பெர்னாண்டோ தனது இடத்தில் இல்லை. எங்கோ வெளியில் போயிருக்க வேண்டும். ஹோலின் மற்றத் தொங்கலில் கந்தையா இருந்தார். போனைக் காதில் வைத்தபடி.
“லெப்ற் றைற்… லெப்ற் றைற்…” ஆளுக்கொரு நீண்ட படச்சுருளைத் தோளில் துவக்காகச் சார்த்தி, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இரண்டு பேரும் டக்டக்” கென்று உள்ளே வந்தார்கள். மேசைகளில் படிந்திருந்த பார்வைகளெல்லாம் நிமிர்ந்து அவர்கள் மேல் பதிந்தன.
“லெப்ற் றைற். லெப்.ற் றைற்’ அணி நடை நீளப் போனது `வம் தக்.வம் தக்.”
காமினியின் மேசையருகில் போய் காலை உதைத்து, அற்றென்ஷனில் நின்றார்கள்.
முறுவலித்தபடி வரைப் பலகையின் மேலிருந்த படத்தில் மீண்டும் புலனைச் செலுத்தியபோது. சச்சி சொன்னான்.
“பாருங்கோ. அண்ணை, என்ன மாதிரி, குழந்தைப் பிள்ளையள் போல் விளையாடி முஸ்ப்பாத்தி பண்ணுறாங்கள். ஆனா இந்த விஷயம் எண்டு வந்தவுடன் எவ்வளவு பிடிவாதமும் முரட்டுத்தனமும்.”
தான் நினைத்ததையே சச்சி கேட்டுவிட்டதை விவே உணர்ந்தான்.
“ஒவ்வொருத்தன்ர இயல்பு என்ன மாதிரித் தானிருந்தாலும், இந்த உணர்ச்சி எல்லாரிலும் ஊறிப் போயிட்டுது.”
இதுக்கு அந்த அரசியல்வாதிகள் தான் காரணம் எண்டு எனக்குப் படுகுது. முந்திச் சுகமா அதிகாரத்தைப் பிடிக்கிறதுக்குகாக சனங்களுக்கு வகுப்பு வாதத்தை ஏத்திச்சினம். அது இப்ப நல்லாச் சுவறி விட்டுது. சொல்லிக் குடுத்தவையே வந்து வகுப்புவாதம் கூடாது எண்டு சொன்னாலும் அவையளை சனம் தூக்கி எறியிற அளவுக்கு.”
13
“இந்த பஸ் பெரிய தலையிடி.” என்றான் சச்சி.
“அஞ்சரை மட்டும் இதிலை நிண்டு காயாமல் ஜங்ஷனுக்கு எல்லாரும் முகப்பாத்தியா நடந்து போயிடலாம்.”
நடக்கத் தொடங்கிய போது, பின்னால் யாரோ கூப்பிட்டார்கள்…
கனகஸ.
“நானும வாறன.”
“இந்தாளோட நடந்தா ஜங்ஷனிலை முதல் பஸ் எடுக்கலாம். விடிய.” என்றான் மூர்த்தி.
மரமுகடுகளை, வாகையின் மஞ்சளும், காட்டுத்தீ மரத்தின் சிவப்பும் மூடியிருந்தன. அந்தக் கூடலுக்குள் போய்விட்டால் இந்தப்பாட்டு வெய்யில் முகத்தைச் சுடாது. நடந்தார்கள்.
“எப்படி இண்டைக்கு அந்த லெற்றர் குடுத்திட்டீங்களா?.” என்றார் கனக்ஸ்.
“ஒ… மத்தியானம் குடுத்தாச்சு.”
“மற்ற எல்லோரும் கையெழுத்து வைத்திட்டினமே?”
“இருபத்தெட்டுப் பேர். இ.இ. சிங்க ராயரைவிட. அவர் லீவிலை”
“என்ன நடக்குதெண்டு பாப்பம்….”
“சீ என்ன நிம்மதியில்லாத சீவியம். கொஞ்ச நாளா கந்தோர் கூட நெருடலும், அந்தரமுமான இடமா ஆயிட்டுது. போதாக் குறைக்கு இப்ப இதுவும் ஒரு பிரச்சனை.”
“இதுகள் விளங்காம உபதேசம் பண்ணுகிற எங்கடை ஆக்கள் இன்னும் ஊர்வழிய இருக்கினம். இந்தச் சூடு குளிரிலை ஒரு எப்பனும் அறியாமல் -வெறும் தியறி-உபதேசம்.”
“ஆனா, அவங்கள் புத்திக்காரர்கள். எங்களைப் போலை இந்த
ரண்டுங்கெட்டான் அவலச் சீவியம் இல்லை. எப்ப என்ன வருமோ
எண்டு. வடிவா, கதைச்சுக் கொண்டிருக்கலாந்தானே.”
14
தபாற் கந்தோர் எக்கச் சக்கமா மினைக் கெடுத்து விட்டது. சாப்பிட்டுவிட்டு, அப்படியே வீட்டுக்கு ஒரு மணி ஒடர் தபாலையும் ரெஜிஸ்டர் பண்ணிவிட்டு வர, இவ்வளவு நேரமாயிருகிறது! இரண்டரை மணி.
அவதி ஒருபக்கம், வெய்யில் ஒருபக்கமாக வியர்த்து வடிந்தது. விசிறியைத் தட்டிவிட்டுப் போய் மேசையில் குந்தியபோது, சச்சி சொன்னான்:
“அட, இரண்டு வடையை மிஸ் பண்ணிட்டீங்கள், அண்ணை”
“வடையா?”
“கந்தையர் கொண்டந்தது.” என்றான் கன்டோஸ் பின்னாலிருந்து.
“கந்தையரா? ஏன்?” விவே, திரும்பிப் பார்த்துக் கேட்டான் இதற்கு மறு மொழி சொல்லாமல் கன்டோஸ் கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.
“எல்லோருக்கும் குடுத்தவரா?”
“ஓ! ஷெக்க்ஷன் முழுக்க.”
“ஏன்? என்ன விசேஷம்?” திரும்பவும் கேட்டான்.
“சும்மாதானாம். வீட்டிலை செய்தது எண்டு சொன்னவர். ஆனா, உண்மையிலை அண்டைக்கு அந்த கடிதத்திலை கையெழுத்து வைச்சதுக்குப் பிராயசித்தம்.”
இப்போது சச்சியும் சேர்ந்து சிரித்தான்.
15
உங்கள் கடிதம் செயற்குழுவின் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட கடிதத் தலைப்புகள் இப்போது அச்சிடப்பட்டு விட்டதால், அது பற்றி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். அச்சிடப்பட்டவை முழுவதும் முடிவடைந்ததும், உங்கள் வேண்டுகோளைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது என்று செயற்குழு முடிவெடுத்துள்ளது” – இந்தக் கடிதம், புதுக்கடிதத் தலைப்பில் ஆங்கிலத்தில் ரைப் செய்யப்பட்டிருந்தது. கீழே செயற் குழுவுக்காக என்று லயனலின் கையெழுத்து.
பதில் வரப் பிந்தியதால், ஒரளவு எதிர்பர்த்திருந்தது தான்! பிறகு சேனாதி ஆட்கள் மூன்று பேரும் வந்து சொன்ன சேதி தான் என்றாலும், எழுத்தில் , அச்சிட்ட ஒற்றையில் பார்க்கப் பார்க்க கவலையும் கோபமும்
சேர்ந்து படருகின்றன.
“முடிந்ததன் பிறகு, சேர்த்து அடிக்கிறோம். எண்டாலும் பரவாயில்லை. முடியுமட்டும். எவ்வளவு நாளானாலும் – பொறுக்க நாங்கள் தயார். ஆனால் முடிந்ததன் பிறகு யோசிக்கப் போகினமாம்!”
இ. இ. சிங்கராயர் அதைப் படித்து முடித்ததும் கொஞ்ச நேரம் பேசாமலிருந்தார். பிறகு சொன்னார்:
“றிசைன் பண்ணுறது வலு சுகமான வேலை. இப்ப நாங்கள் அதைச் செய்யிறதாலை பிரச்சினை தீர்ந்திடாது. எங்கட வேண்டுகோளும் நிறைவேறாது.”
“அப்ப?”
“இன்னொரு சந்தர்ப்பம் குடுத்துப் பார்ப்பம். சில சமயம் உண்மையிலேயே எங்கட வேண்டுகோள் பிந்தியிருக்கலாம்.”
“இன்னொரு சந்தர்ப்பமோ?.” விவேயும் கனக்சும் இதை எதிர்பார்க்கவில்லை.
ராஜினாமாக் கடிதத்தில் சிங்கராயரின் கையெழுத்தை வாங்க வராமல் விட்டிருக்கலாம் என்று கனகசுந்தரம் நினைத்தார்.
“உந்த லெற்றரை இப்ப குடுக்காமல், அதுக்கு முதல் இன்னோரு வேண்டுகோள் விட்டுப் பார்ப்பம்.”
“எப்படி?”
“திருப்பி அடிக்கச் சொல்லி.”
“உது சர்வராது சேர்…” விவே சிரித்தான்.
“காசில்லை எண்டு மறுமொழி சொல்லலாம் – சுகமா”
“அதுக்குத்தான் ஒரு வழி இருக்கு.”
“என்ன?”
“செலவழிச்ச காசை நாங்கள் தாறம் எண்டு சொல்லி”
இருவரும் குறுக்கிட்டார்கள். விவே சொன்னான்:
“வெட்கங் கெட்டவேலை! உதிலும் பார்க்க, தமிழைப் போடச் சொல்லிக் கேளாமல் இருக்கலாம்.”
சிங்கராயர் நிதானமிழக்கவில்லை.
“பொறும் தம்பி, றிசைன் பண்னுறதாலை எங்கட வேண்டுகோள் நிறைவேறி விடுமா? – சொல்லும்.”
“நிறைவேறாது – ஆனா வேறவழி இல்லை.”
“கந்தோர் கன்ரினை நடத்துறது ஆர்? இந்தச் சங்கந்தானே?”
இவர்களிரண்டு பேரும் தலையாட்டினார்கள்.
“சங்கத்தாலை றிசைன் பண்ணிப் போட்டு, கன்ரீனிலை ஒரு தேத்தண்ணி கூடக் குடிக்கமுடியாது.”
“தேத்தண்ணி பெரிசில்லை, சேர்.” விவேயால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“அதுதான்.” என்றார் கனக்சும்.
“அதை நான் பெரிசு எண்டு சொல்லேல்லை. ஆனா, அதைத் தானும் ஏன் இழக்க வேணும்?.
இந்த வேண்டுகோளுக்கு எந்த ஒரு மறுமொழியும் சொல்ல முடியாது-திருப்பி அடிக்கிறதை விட… ஆனபடியால் தான் இவ்வளவு சொல்லுறன். இதுக்கும் மாட்டோம் என்று சொன்னால், றெஸிக்னேஷன் கடிதத்திலை முதல் கையெழுத்து வைக்கிற ஆளாக நானிருக்கிறன்.”
16
“எங்கள் வேண்டுகோளை செயற்குழு ஆராய்ந்து முடிவை அறிவித்தமைக்கு நன்றி பாராட்டுகிறோம். எனினும், பரஸ்பர நல்லெண்ணத்திற்கும் ஒத்துழைப்பிற்கும் மதிப்புக் கொடுக்கும் விதமாக கடிதத்தில் தமிழும் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறோம்.
“இதன் கீழ்க் கையொப்பம் இட்டிருக்கும் உறுப்பினர்களாகிய நாம், ஏற்கனவே அச்சிடப்பட்ட கடிதத்தலைப்பிற்கான செலவைச் சங்கத்திற்குத் தந்து அத்தலைப்புகளைப் பெற்றுக் கொள்ளச் சித்தமாய் உள்ளோம். ஆகவே தமிழையும் சேர்த்து, புதுக் கடிதத் தலைப்புகளை அச்சிடுமாறு செயற்குழுவை மீண்டும் தயவாகக் கேட்டுக் கொள்கிறோம்.”
17
“உங்கள் வேண்டுகோள், செயற்குழுவின் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனைக்கு நன்றி தெரிவிக்கிற அதே நோரத்தில், தன் முன்னிலையில் அநேக பொறுப்புகள் இருப்பதால், கடிதத் தலைப்பு விஷயத்தில் இன்னும் சில நாட்களைச் செலவிட முடியாத நிலையிருப்பதனை செயற்குழு வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறது.”
“முன்னர் அறிவித்தது போல, கைவசமுள்ள கடிதத் தலைப்புகள் முடிவடைந்ததும், தமிழையும் சேர்ப்பது பற்றி உங்கள் வேண்டுகோள் பரிசீலனைக்கெடுத்துக் கொள்ளப்படும் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.”
18
“தங்கள் பதில், நிரம்பிய துயரத்தையும், திருப்தியீனைத்தையும் எமக்குத் தந்தது. செயற்குழுவின் இத்தீர்மானத்தால் நலன் செய் சங்கத்திலிருந்து விலகுவதைவிட வேறெந்த முடிவுக்கும் வர எம்மால் இயலவில்லை. எமது ராஜினாமாக்களை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறோம்.”
இந்தக் கடிதத்தின் கீழ், இருபத்தொன்பது கையொப்பங்களும் இருந்தன.
(திசை – 1989)