குதிரை!… ( சிறுகதை ) …. யாழ். எஸ்.பாஸ்கர்.
மோகன் கடந்த இரண்டு தடவையும் பத்தாம் வகுப்புப் பரீட்சையில் ஃபெயிலாகி விட்டான்.
வரப்போகின்ற பரீட்சை அவனுக்கு மூன்றாவது பரீட்சை. இம்முறை எப்படியாவது பாஸாகி மேற்கொண்டு படிக்க வேண்டும் என்பதே அவனது விருப்பமும் பெற்றோரின் விருப்பமுமாகும்.
ஆனால், மோகனுக்கோ இம்முறையும் தன்னால் சித்தி அடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. அப்பா அம்மாவின் ஏச்சும் பேச்சும் ஒரு பக்கம், பரீட்சை வேறு நெருங்கி விட்டதே என்ற பதட்டம் இன்னொரு பக்கமுமாக குழம்பிய மன நிலையுடன் தவித்தான்.
மோகன் படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரன் என்று சொல்லமுடியாது. ஆனால், எப்படியும் பத்தாம் வகுப்பைத் தாண்டிவிட வேண்டும் என்பதில் அவன் மிக வைராக்கியத்துடன் இரவும் பகலும் மூளையைப் போட்டு பிசைந்தெடுத்த போதுதான் அவனது வகுப்புத் தோழன் செந்தில் கூறியது தீப்பொறியெனப் பற்றியது.
“ நாங்கள் இப்படி கஸ்ரப்பட்டு படித்து பெயிலாகிறதை விட, பேசாமல் காசு கொஞ்சம் கொடுத்து யாரையும் கொண்டு குதிரை ஓடி பாஸாகிவிட்டுப் போகலாம். எனக்கு தெரிந்த அண்ணர் ஒருவர் இருக்கிறார். அவர் ஒருத்தரைக் கொண்டு குதிரை ஓடி, பாஸாகி மேலே தொடர்ந்து படிப்பதற்காக லண்டன் போய் படித்து இஞ்ஜினியரிங் முடித்து அங்கே வேலையும் செய்கிறார். “ என்றான் தோழன்.
“ மோகன் இங்க பார், நீ எப்படியும் பத்தாவது பாஸ்பண்ணிப்போடு, நான் உன்னை லண்டனுக்கு மேற்கொண்டு படிப்பதற்கு அனுப்பிவைக்கிறேன். “ அப்பா கூறும் வார்த்தையும் மோகனுக்கு அடிக்கடி மின்னல் என தோன்றி மறைந்தன.
மோகனின் மூளை குதிரைரேஸில் ஓடி, முதலாவதாக முந்தும் குதிரையின் வேகத்தை விட வேகமாக வேலை செய்தது. அப்போதுதான் மித்திரனின் ஞாபகம் வந்தது. மித்திரன் யாழ்ப்பாண நகரில் பெயர் பெற்ற குதிரை ஏஜென்ட் என்பது யாழ்ப்பாண கல்லூரிகளில் பயிலும் சில மாணவர்களுக்குத் தெரியும்.
மோகனும் கேள்விப்பட்டிருக்கிறான். எனவே மித்திரனை சந்தித்தால் தன்பிரச்சினை இலகுவாக முடிந்து விடும் என்ற முடிவோடு அவனை சந்திக்கும் முயற்சியில் இறங்கினான்.
கடும் அலைச்சலின் பின் முகவரியைக் கண்டுபிடித்து, மித்திரன் வீட்டு வெளி கேற் வாசலில் நின்று சைக்கிள் பெல்லை அடித்தவாறு “ மித்திரன் அண்ணை “ என்று குரல் கொடுத்தான்.
சிவந்த நிறம், சுருட்டை முடி பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் போன்ற அழகான தோற்றம். “ யாரது? நான் தான் மித்திரன். என்ன வேண்டும்” என்றான்.
“ நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன். என் பெயர் மோகன். நான் மானிப்பாயில் இருந்து வருகின்றேன். கொஞ்சம் தனிமையில் பேச வேண்டும். என்னுடன் வர முடியுமா? “
“ அப்படி என்ன தனிமையில் பேச வேண்டிய விசயம்? “ மித்திரன் கேட்டான்.
“ விசேடமாக ஒன்றும் இல்லை. இம்முறை பத்தாம் வகுப்பு பரீட்சை எடுக்க உள்ளேன். அது சம்பந்தமாகத்தான் உங்களுடன் பேச வேண்டும் “ என்று இழுத்தான் மோகன்.
விசயம் என்ன என்பதை புரிந்து கொண்டான் மித்திரன்.
“ இங்கு பேச முடியாது, வெளியில் ஏதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து, ஆறுதலாக பேசுவோம். இதோ ஒரு நிமிடத்தில் உடுப்பை மாற்றிக் கொண்டு வருகின்றேன் “ என்று சொன்னவாறு மித்திரன் உள்ளே சென்றான்.
இருவரும் அருகில் உள்ள ஒரு உணவகத்திற்குள் நுழைந்தனர்.
“ என்ன குடிக்கிறீர்? ரீயா கோப்பியா? “
“ ரீ. “
“ சாப்பிட வடை? “
“ இல்ல… வேண்டாம். “
“ அட பரவாயில்ல… சர்வர் இரண்டு ரீ இரண்டு செற் உழுந்து வடை. சரி விசயத்திற்கு வாரும். “
“ நான் சயன்ஸ் பாடம் படிச்சனான். இரண்டு தடவை பத்தாவது ஃபெயில். இம்முறை குதிரை ஓடலாம் என நினைக்கிறேன். அதுதான் உங்களிடம் வந்தேன். “
“ கடைசி நேரத்தில வந்திருக்கிறீர். ஏற்கனவே என்னிடம் உள்ள எல்லாம் புக் ஆகிவிட்டன. தற்சமயம் எந்த குதிரையும் கைவசம் இல்லை. அதுவும் அல்லாமல் சயன்ஸ் குதிரை வேண்டும் என்று கேட்கிறீர். சயன்ஸ் குதிரை பிடிப்பது என்பது மிகவும் கஸ்ரம். “
“ அண்ணை எப்படியாவது எனக்கு இந்த உதவியை செய்யுங்கள். எனக்கு வீட்டிலும் ஒரே பிரச்சனை. அப்பா எப்ப பார்த்தாலும் திட்டிக்கொண்டே இருக்கிறார். “
“ அது சரி… அப்பா என்ன செய்கிறார்? “ பார்ட்டி எப்பிடி வெயிற்றான பார்ட்டியா என அறிவதற்காக ஒரு கொக்கியைப் போட்டான் மித்திரன்.
“ அப்பா சி ரி பி பஸ் ட்ரைவர். அத்தோடு அம்மாவும் அப்பாவும் தோட்டமும் செய்வினம். நான்தான் அவர்களுக்கு. வேறு பிள்ளைகள் கிடையாது. “
பரவாயில்லை கொஞ்சம் வெயிற்றான பார்ட்டிதான் என மித்திரன் ஊகித்துக் கொண்டான்.
சர்வர் ரீ வடையை கொண்டு வந்து மேசையில் வைத்தான்.
ரீயையும் வடையையும் சாப்பிட்டவாறே பார்ட்டியை நழுவவிட மனம் இல்லாமல் என்ன செய்வது என்று மூளையைப் போட்டுக் குடைந்தான் மித்திரன்.
“ என்ன அண்ணை…? கடுமையாக யோசிக்கிறியள்? “
“ ஒன்றும் இல்லை. நீர் கடைசி நேரத்தில வேறு வந்திருக்கிறீர். உம்மையும் பார்க்க பாவமா இருக்குது. கடைசிநேரத்தில பிடிக்கிறது என்பது வலுகஸ்ரம். இந்த முறை பொலீஸ் கெடுபிடியும் கூடுதலாக இருக்கும் என்று நிறைய பேர் பயப்பிடுகிறான்கள். சிலபேர் ரேட்டையும் உயர்த்திப் போட்டாங்கள். அதுதான் என்ன செய்யிறது என்று யோசிக்கிறன். “ என்றான் மித்திரன்.
“ அண்ணா என்னைக் கைவிட்டுப் போடாதேங்கோ. என் எதிர்காலமே உங்களிட்டதான். இம்முறை பாஸ் பண்ணினால் தொடர்ந்து மேலே படிப்பதற்கு லண்டன் அனுப்புவதாக அப்பா கூறி உள்ளார். எப்படியாவது முயற்சி செய்யுங்கள் ப்ளீஸ். “
“ ஒன்றுக்கும் யோசியாதையும். எனக்கு இரண்டு நாள் ரைம் தாரும். சங்கர் என்று என்னுடைய நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் மூலம்தான் ஏற்கனவே சில குதிரைகள் ஏற்பாடு செய்துள்ளேன். அவன் வலு சுழியன். எப்பிடியாவது தேடி பிடிச்சுடுவான். நீர் எதற்கும் யோசிக்காமல் போயிட்டு வாரும். ரேற் முன்ன பின்ன இருந்தால் பிரச்சினை இல்லைத் தானே?
“ அது பிரச்சினை இல்லை வெண்டுபோடுங்கோ! “
மறு நாள் மித்திரன் சங்கரை சந்தித்தான்.
“ மச்சான் எனக்கு அவசரமா ஒரு உதவி தேவை. “
“ என்ன சொல்லு? “
“ சயன்ஸ் குதிரை ஒன்று தேவை. எப்பிடியாவது ஏற்பாடு பண்ணித்தா… “
“ என்னடா இப்ப வந்து நிற்கிறாய். ஏற்கனவே எட்டுக்குதிரையள் பிடித்து தந்திருக்கிறேன். போதாதென்று இன்னும் ஒன்று வேண்டும் என்று வந்து நிற்கிறாய். இது என்ன கடையில வேண்டுற பொருள் என்று நினைச்சிட்டியோ? “
“ சும்மா இந்த நக்கல விட்டிட்டு எப்பிடியாவது ஒழுங்கு பண்ணித்தா. உன்னை நம்பி அட்வான்ஸ் வேறு வாங்கிட்டேன். அதுவும் அல்லாமல் எனக்கு வேண்டப்பட்டபையனும் கூட. “
“ திடமா உறுதி கூற மாட்டன். எதற்கும் முயற்சி செய்கிறன்.
சரி காசு இருந்தால் அட்வான்ஸ் கொஞ்சம் குடுத்திட்டு போ… “
“ இந்தா ஒரு ஆயிரம் வைச்சுக்கோ. நான் போயிட்டு வாறன்.
ஓ.கே.. “
சங்கர் இரண்டு நாட்களாக அலைந்தும் ஒரு குதிரை கூட செற் ஆகவில்லை. பரீட்சை வேறு நெருங்கிவிட்டது. என்ன செய்வது என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்த போதுதான் விஜயன் வந்தான்.
“ மச்சான் காசு இருந்தால் இருநூறு ரூபா கொடு. அவசரமாக தேவைப்படுகுது. இரண்டு வாரத்தில் திருப்பி தாரன். “
அப்போது சங்கரின் மூளை மின்சார வேகத்தில் செயல்பட்டு கடிவாளத்தைப் போடு என்று கட்டளை இட்டது.
“ மச்சான் இருநூறு ரூபாய் என்ன, இரண்டாயிரம் தாரன். எனக்கு திருப்பியே தரவேண்டாம். “
“ என்னடா புதிர் போடுறாய் ? “
“ உண்மையாகத்தான் சொல்லுறன். எனக்கு உன்னால் ஒரு காரியம் ஆகவேண்டும். “
“ புதிர் போடாமல் விசயத்திற்கு வா.
“ நான் சொல்லுறதைக் கவனமாகக் கேள். எனக்கு அவசரமாக ஒரு குதிரை தேவை. “
“ அதுக்கு நெடுந்தீவுக்குத் தான் போக வேண்டும். “
“ அந்தக் குதிரை இல்ல, பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு ஒருவருக்காக ஓடுவதற்கு… “
.“ ஓ… அதுக்கா… ? எனக்குத் தெரிந்த யாரும் இல்லையே! “
“ அது எனக்கும் தெரியும். அதனால் தான் உன்னைக் கேட்கிறேன். “
“ என்ன நானா? “
“ ஆம். நீயே தான். “
“ நானே பத்தாவது. ஃபெயில். என்னைப் போய் குதிரை ஓடச் சொல்லுகிறாய். “
“ நீ பத்தாவது ஃபெயில் என்று எனக்குத்தான் தெரியும். ஆனால், அவங்களுக்கு பதினொறாவது சயன்ஸ் கிளாஸ் படிக்கும் மாணவன். “
“ நான் படித்தது ஆர்ட்ஸ். சயன்ஸ் பாடத்திற்கு குதிரை ஓடச் சொல்லுகிறாய். எனக்கு ஒன்றுமே தெரியாதே? “
“ இஞ்ச வா நீ… அங்கு போய் ஒன்றும் எழுதிக் கிழிக்க வேண்டாம். உனது ஐடி நம்பரை விடைத்தாளில் எழுதிப்போட்டு நேரத்தை கடத்துவதற்கு ஏதாவது செய். “
“ ஏதோ சொல்… சரி, எவ்வளவு தருவாய்? “
“ நான் முதல் சொன்ன படி 2000ரூபாயும் தருவேன். இப்ப 500 அட்வான்ஸ் வைச்சுக் கொள். “
விஜயனுக்கு தாங்க முடியாத சந்தோசம். குடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது இப்படித்தானோ என நினைத்துக் கொண்டான்.
“ நான் சொல்லுறதைக் கவனமாக கேள். நாளைக்கு என் நண்பன் மித்திரன் ஒரு பையனைக் கூட்டிக்கொண்டு வருவான். அவர்களிடம் உன்னை அறிமுகப்படுத்துவேன். நீ ஒன்றும் பேசக் கூடாது. எல்லாத்திற்கும் ஓம் என்று தலை ஆட்டினால் போதும். மிகுதி எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். “
“ அது சரி ஐடி என்ன மாதிரி? “
“ நாளை வரும் போது உன்ர இரண்டு போட்டோவும் கொண்டுவா.
பையனிடம் முழு விபரங்களையும் பெற்றுக் கொண்ட பின்னர் தேவராஜா அண்ணரிடம் போய் சையின் வாங்குவோம். “
“ அவரிட்டையா? அவருக்கு என்னை நல்லாத் தெரியுமே? ஓன்றும் பிரச்சனை இல்லையா? “
“ அது ஒன்றும் பிரச்சனை இல்லை. எல்லாம் இங்கிலீசில எமுதியிருக்கும். அவருக்கு முன்னால நீ இங்கிலீசில சயின் போட அவர் தமிழில போடுவார். அவற்ற கையெழுத்தைப் பார்த்தால் இங்கிலீசில போட்ட மாதிரித்தான் இருக்கும். நீ ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். “
“ கல்வியிலேயே ஊழல் நடக்குது.உண்மையாக கஸ்டப்பட்டு படிச்சுப் பாஸ் பண்றவர்களை கேவலப்படுத்தும் செயல் இது, அது சரி ஜேபி மாருக்கு
ஆங்கிலம் தெரிய வேண்டாமா…? அவரை எனக்குத் தெரியுமென்றாலும் இந்தப் பதவிக்கு இவரை யார் சிபார்சு செய்தது “ என்று கேட்டான் விஜயன்.
“ அல்பிரட் துரையப்பாதான் “ என்றான் சங்கர்
“ ஜே பி என்பது கண்ணியமான பதவி. கல்வித் தகுதியும் ஆங்கில அறிவும் முக்கியம். அவர் தனக்கு ஐயா சாமி போடுபவர்களையும் அவருக்காக தேர்தலில் வேலை செய்பவர்களுக்கும் இப்படியான பதவிகளை எடுத்துக் கொடுத்து மடக்கிவைச்சிருப்பார் என கேள்விபட்டிருக்கிறன்.
சரி அப்ப நாளைக்கு சந்திப்பம். “
மறு நாள் மித்திரன் மோகனையும் கூட்டி வந்தான்.
“ என்ன சங்கர்… எல்லாம் ஓகே தானே? “
“ ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு மாதிரி ஓடித்திரிந்து ஒரு சுப்பர் குதிரை ஒன்றை செற் பண்ணிட்டன். “
“ எனக்கு தெரியும் தானே நீ சுழியனென்று….. சங்கர், இவர் தான் மோகன். ரிசல்ட் வந்ததும் லண்டன் போய் படிப்பை தொடர இருக்கிறார். “
இதை கேட்டதும் சங்கருக்கு திக்கென்று இருந்தது. இருந்தும் தன்னை சுதாகரித்துக் கொண்டு, “ ஓ… அப்படியா! நீர் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். உமக்கு செற் பண்ணியிருக்கும் குதிரை அப்படியான குதிரை. நீர் எதிர்பார்ப்பதை விட திறமான றிசல்ட் எடுக்கக் கூடியது. நீர் இப்ப இருந்தே லண்டன் போவதற்கான ஒழுங்குகளைப் பார்க்கலாம். “
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே விஜயன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.
“ பாரும் உம்முடைய அதிர்ஸ்டத்தை.. சொல்லி வாய்மூட முன் உம்மட குதிரையும் வந்திட்டு.
வாடா உனக்கு ஆயுள் நூறு“ என சொல்லிக் கொண்டே இருவரையும் அறிமுகப்படுத்தினான்.
“ நான் எல்லாம் பேசிமுடிச்சிட்டன். நாங்கள் தேவராஜா அண்ணரைப் பார்த்து ஐடி அலுவலை முடிச்சிட்டால், பிறகு பரீட்சை எமுத வேண்டியது தான் பாக்கி. “
“ சரி சங்கர் எல்லாம் சுமுகமாக முடிஞ்சிட்டுது. அப்ப நாங்கள் கிளம்புறம். “
“ ஓகே…. மோகன் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். நம்பிக்கையுடன் போய் வாரும். லண்டன் போன பின் எங்களை மறந்து விடாதையும். “
“ எப்படி அண்ணா உங்களை மறப்பது. நீங்கள் செய்யும் உதவியை மறக்க முடியுமா? “
மோகன் சைக்கிளை வேகமாக மிதித்து ஓட, அவன் எதிர் கொள்ளும் காற்றின் வேகத்தை விட அவன் மனக்குதிரை லண்டன் கனவுகளுடன் ஓடியது.
—0—
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் யாழ். பாஸ்கரின் சிறுகதை படித்தேன். இறுதியாக இவரது ஒரு சிறுகதையை பனியும் பனையும் கதைத்தொகுப்பில் படித்திருந்தேன். யாழ். பாஸ்கர் தொடர்ந்தும் சிறுகதைகள் எழுதவேண்டும் என வாழ்த்துகின்றேன். கல்வித்துறையில் மட்டுமல்ல, ஆக்க இலக்கியத்துறையிலும் பலர் குதிரை ஓடியிருக்கிறார்கள்.