கதைகள்

சிங்கப்பூரில்; சிலகாலம்!… 13 …. (உண்மைக் கதை)….. ஏலையா க.முருகதாசன்

யோகமலர் எனக்கு சாண்ட்விச் வைச்சுத் தந்த பிளாஸ்ரிக் பெட்டியையும் சுடுதண்ணிப் போத்தலையும் சுத்தமாகக் கழுவிய போது இப்படி அக்கறை உள்ளவளை கடவுள் சிங்கப்பூரில் சந்திக்க வைச்சிருக்கிறாரே என நெகிழ்ந்து போனன்.

நீங்கள் இங்கிருக்கும் வரைக்கும் நான் உங்களுக்கு அன்பான மனைவியாக வாழ்ந்து நீங்கள் சிறீலங்காவுக்கு போவதற்கு முன்பு உங்கள் மடியில் நான் உயிர்விட வேண்டும் அதைத்தான் நான் கடவுளிடம் எப்பொழுதும் வேண்டுகிறன் என்று அவள் சொல்வது எனக்குப் பெரும் கவலையாகவிருந்தது.

அவள் நீங்கள்தான் எனக்குக் கிடைச்ச புருசன் என்று சொல்வதோடு நின்றுவிடாது எனது ஆரோக்கியத்தில் மட்டுமல்ல எனது மனைவி பிள்ளைகளிடத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவளாக இருந்தமை எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

மனிதன் எப்பொழுதம் சிந்தனைவசப்பட்டவன்தான்.அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.நானும் யோகமலரும் சந்தித்த சில வாரங்களுக்குள்ளேயே பிரிக்க முடியாத புருசன் பெண்டாட்டி என்று பந்தம் ஏற்பட்டதை நினைக்கும் போது இதுதான் விதியோ என நினைத்தன்.

அத்துடன் மொலக்ஸ் என்று கொம்பனிக்கு வேலைக்குப் போய் இரண்டு நாட்கள்கூட ஆகவில்லை அதற்குள் சிறீலங்காவை வேராகக் கொண்ட இரண்டு பெண் பிள்ளைகளில் ஒருத்தியின் தாய் என்னிடம்

கொடுத்துவிடும்படி குண்டுத் தோசை கொடுத்துவிட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதற்கு சிறீலங்காத் தமிழர் என்ற ஒரு உணர்வும் பந்தமுந்தான் காரணம் என்பதை உணர முடிந்தது.தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்கள் என்பது இரத்த உறவினருடன் மட்டும் நின்று விடுவதில்லை.தனது நாட்டவன் என்பதற்குள்ளும் தன்னினத்தவன் என்பதற்குள்ளும் அது அடங்கியிருப்பது உண்மையிலும் உண்மை.

வேலைக்கு வந்தவுடன் எனது பகுதியில் இன்னொரு செற்றப்மென்னாக இருக்கும் மலாய்க்காரருடன் பேசிக் கொண்டிருந்தன்.

இன்னும் இரண்டு கிழமைக்குப் பிறகு என்எம்பி என்ற பக்ரறிக்கு வேலைக்குப் போவது மட்டுமல்ல, எல்லாச் சிறீலங்கன்சும் வேறு வேறு பக்ரறிக்குப் போவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர், உங்கடை கேர்ள் பிரண்டும் உங்களோடு என்எம்பிக்கு வருகிறாராமே’உண்மையா என்றார்.

உண்மைதான் என்று நான் சொன்னதும், நீங்கள் லக் உள்ளவர் என்று சொல்லி நிறுத்தியவர் அர்த்தம் பொதிந்த புன்னகையுடன் சிறீலங்காவில் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள்தானே என்று கேட்டுவிட்டு ஒரு மனைவி இருக்கத்தக்கதாக இன்னொருவரை கேர்ள் பிரண்டாக வைத்திருக்க உங்களுடைய கலாச்சாரம் அனுமதிக்குமா என்றவர் தான் கேள்விப்பட்டவரை அனுமதிக்க மாட்டார்களாம் என்றவர் …ஆனால் உங்கள் மனைவி அறியமாட்டார்தானே…..என்று தொடர்ந்து அவர் பேச முற்படுகையில் அவரிடமிருந்து எப்படி விலகிச் செல்வது என்று யோசித்துக்; கொண்டிருந்த போது அவரே யுவர் கேர்ள் பிரண்ட் இஸ் கம்மிங் என்று சொல்ல திரும்பிப் பார்த்தேன் யோகமலர் வந்து கொண்டிருந்தாள்.

அவள் வருவதைக் கண்டதும் திரும்பி அவளையே பார்த்துக் கொண்டிருக்க எனக்கருகில் வந்தவள்,’இவனுடன் பேசிக் கொண்டிருந்தீங்க என்ன பேசினான், சரி அதைப் பிறகு சொல்லுங்க, ஆமா நான் கொடுத்ததை எல்லாம் சாப்பிட்டீங்களா’ என்று கேட்டவளிடம் முழுவதையம் சாப்பிட்டனான் என்று சொன்ன நான் நிறைய நியூஸ் இருக்குது பிறகு சொல்றன் என்று சொன்னவுடன் நெற்றியைச் சுருக்கி அப்படியா என்ன நியூஸ் இங்க சொல்லுங்க’ என்றாள்.

நிறைய இருக்கு பிறகு சொல்றேன் என்று சமாளித்தன்.அப்பொழுது சுவாங் என்னை நோக்கி வந்தவர் யோகமலர் என்னுடன் நிற்பதைக் கண்டதும், திரும்பிப் போய்விட்டார்.

அதைக் கண்ட யோகமலர் என்னங்க அவர் உங்களோட பேச வந்திட்டு திரும்பிப் போயிட்டாங்க,என்னான்னு போய்க் கேளுங்க என்று யோகமலர் சொல்ல அவரை நோக்கிப் போனன்.

அவருக்குக் கிட்டப் போனதும்,’ஏன் என்னைப் பார்க்கவென வந்திட்டு திரும்பிப் போனீர்கள் „என்று கேட்க,நீங்கள் உங்கள் கேர்ள் பிரண்டுடன் பேசிக் கொண்டிருந்தீர்கள் டிஸ்ரேப் பண்ண வேண்டாம் என்று திரும்பி வந்திட்டன் என்றார்.

சிலர் யோகமலர் எனது கேர்ள் பிரண்ட் என்றும் இன்னும் சிலரும் அவள் மனைவி நிலைக்கு வந்துவிட்டாள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் மட்டுமல்ல கதைச்சுக் கொண்டுந்தானிருக்கின்றனர்.

சுவாங் சொன்னதைக் கேட்டு நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டன்.அவள் மனதளவில் பெண்டாட்டியாக வாழத் தொடங்கி பல நாட்களாகிவிட்டன.செக்ஸை உங்களுடைய கேர்ள் பிரண்டிடம் இருந்து பெறலாம் என அவர் கண்ணைப் பூஞ்சி சிரித்துக் கொண்டு சொன்னார்.

அவர் அப்படிச் சொன்னதை என்னால் இரசிக்க முடியவில்லை.சுருக்கென்று கோபம் வந்தது. ஆனால் நான் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. கேட்டும் கேளாதமாதிரி நின்றன்.ஒரு மனைவியினுடனான தொடர்பை அவர் பொதுப் பார்வையில் பார்த்துச் சொன்னதும் எனக்கு உண்மையில் பிடிக்கவே இல்லை.

மற்றவர்கள் பார்வையில் அவளுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு தவறானதாகவும் பொழுது போக்கானதாகவும் தோன்றலாம். ஆனால் அந்த நிலை எங்களிருவரிடமும் இல்லை.அவளுடனான முதல் சந்திப்பிலிருந்து இன்றுவரை நாம் இருவரும் ஒருவரையொருவர் இங்கு வாழும் வரையும் பிரிந்திருக்காத கணவன் மனைவியாகவே வாழத் தொடங்கிவிட்டோம் என்பதை யாருக்கும் நாம் விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்பதில் நானும் அவளும் ஒரே எண்ணத்தில் இருந்தோம்.என்னைவிட பலபடி அவள் என்மீது அதிக காதல் கொண்டு என்னை பாசத்தால் அணைத்து வைத்திருக்கிறாள்.அவள் என்னை நெகிழச் செய்து வருகிறாள்.

சுவாங் சொன்ன சொல்லால் எனது முகம் கறுத்துவிட்டது. அதைக் காட்டிக் கொள்ளாமல் யோகமலருக்கு கிட்ட வந்ததும்’ என்னங்க ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு அவர் என்ன சொன்னாரு’ என்றாள்.பிறகு சொல்றன் என்று நான் சொல்லவும் வேலை ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

வழமையான வேலை. மனம் ஒருபக்கம் அலைபாய இயந்திரத்துடன் இயந்திரமாக வேலை செய்து கொண்டிருந்தோம்.

சாப்பாட்டு இடைவேளை வந்தது.நேற்றிரவு சாப்பாடு வைச்சுத்; தந்த பிளாஸ்ரிக் பெட்டியையும்,சுடுதண்ணிப் போத்தலையும் பையில் வைத்துக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தன்.

அதை வாங்கி வைத்தவள் இன்னொரு பையை எடுத்து வைச்சாள்.பையைத் திறந்து பார்த்தன் அதற்குள் ஒரு பிளாஸ்ரிக் பெட்டியும் சுடுதண்ணிப் போத்தலும் இருந்தது.

பிளாஸ்ரிக் பெட்டிக்குள் பூரியும் உருளைக் கிழங்குக் கறியும் இருக்கின்றது என்றவள். முழுவதையும் சாப்பிட வேண்டும் என்றாள்.பூரிக்குள் கிழங்குக் கறியை வைத்து தோசைபோல சுருட்டி வைச்சிருந்ததை பெட்டிக்குள்ளால் பார்க்க முடிந்தது.

„இன்னைக்கும் சுக்குக் காப்பிதான் போட்டு வைச்சிருக்கேங்க,அப்பதான் சாப்பாடு செமிக்கும் என்றவள் இன்னொரு சிறிய பிளாஸ்ரிக் பெட்டிக்குள் அப்பிளை துண்டுகளாக வெட்டி வைச்சிருக்கன் அதையும் சாப்பிடுங்க’ என்றாள்.

சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம் என்றவள் வழமைக்கு மாறான பெரிய பிளாஸ்ரிக் பெட்டியை எடுத்துத் திறந்தாள். அதற்குள் கோழிக்கறி கலந்த சோறு இருந்தது. கரண்டியைத் தந்து எடுத்துச் சாப்பிடுங்க என்றவள் தானும் அதிலிருந்து எடுத்து சாப்பிடத் தொடங்கினாள்.இனிமே உங்களுக்கு ஒன்னு எனக்கொன்று என்று இரண்டு சாப்பாடு கொண்டு வரமாட்டேங்க.இரண்டு பேருக்கும் ஒரே பொக்சிலேதான் கொண்டு வருவேங்க என்றாள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சரி சொல்லுங்க சுவாங் என்ன சொன்னாரு என்று கேட்டாள்.அவர் சொன்னதைச் சொன்னன்.அவள் வெட்கத்துடன் சிரித்துவிட்டு அதுக்குத்தானா உங்க முகம் வாடியிருந்ததா, விட்டுடுங்க என்றாள்.

அவர் சொன்னதை என்னால சீரணிக்க முடியவில்லை.அவரவர் பார்வையில் நாம் எப்படியும் இருக்கலாம்.ஆனால் நீங்கள் இங்கு எனது அன்பான

மனைவி…அதுதான் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றன்.

சாப்பிடுவதை நிறுத்திவிட்டுச் சுவரோடு தலையைச் சாய்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய மூச்சை இழுத்து பெருமூச்சு விட்டவள் கலங்கிய கண்ணோடு என்தோளின் மீது சாய்ந்தவள் நீங்க என்மீது வைச்சிருக்கும் பாசத்துக்காகவே இப்பவே நான் செத்திடலாம் போல இருக்குங்க என்றவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஆகாயத்தை பார்ப்பதம் என்னைப் பார்ப்பதுமாக இருந்தாள்.

அவளைக் கட்டாயப்படுத்திச் சாப்பிட வைத்தன்.அவள் கொஞ்சமாகச் சாப்பிட்டவள் என்னை வற்புறுத்தி முழுவதையும் சாப்பிட வைச்சாள்.

இவ்வளவையும் நானா சாப்பிடுவது என்று கேட்க, ஆமாங்க நீங்க ஆம்பிளைங்க எனக்காகச் சாப்பிடனும்ங்க என்றவள், பெண்டாட்டிக்காக சாப்பிடனுமா என்று கேட்க அக்காவுக்காக சாப்பிட்டது போல எனக்காகவும் சாப்பிடனும் என்றவள் எனது காதுக்குள் ஒரு விசயத்தைச் சொல்லிவிட்டு வெட்கப்பட்டு தலைகுனிஞ்சாள்.

மொலக்சில் சிறீலங்கா வம்சாவழியைச் சேர்ந்த பெண்பிள்ளை குண்டுத் தோசை என்ற குழிப் பணியாரம் கொண்டு வந்து தந்ததை நான் சொன்னதும்.வேகமாக அவள் அதைச் சாப்பிட்டீர்களா என்றாள்.

இல்லை அதை எனது வீட்டிலை இருக்கிறவர்களுக்கு குடுத்தனான் என்று சொன்னதும்,நான் கொடுக்கிற சாப்பாட்டைத் தவிர வேற யார் தந்தாலும் சாப்பிடக்கூடாதுங்க என்றாள்.சனிக்கிழமை படத்துக்குப் போறதைப் பற்றிச் சொன்னன்.தன்னுடைய பிரண்டில் ஒருத்தியைக் கூட்டிக் கொண்டு வாறன் என்றும் ,தான் வந்திறங்கும் பஸ் ஸ்ராண்டுக்கு வந்து கூட்டிக் கொண்டு

உங்க மச்சாளின் மகள் வீட்டுக்குப் போய் அவங்களையும் கூட்டிட்டு படத்துக்கு போவம் என்றாள்.

சாப்பாடு முடிய,எல்லாரும் போனதன் பின் பல்லைக் கடிச்சுக் கொண்டிருங்க இன்னும் கொஞ்ச நாள்தான் உங்களை காக்க வைப்பன் என்று அவள் சொல்லிக் கொண்டே என்னிடமிருந்து அதைப் பெற்றாள்.

வேலை முடிய அவளின் பஸ்ஸில் அவளை ஏற்றிவிட அவள் எனக்கு கையைக் காட்ட நானும் கையைக் காட்டிவிட்டு இரவு வேலைக்காக நிரையாக நின்ற பஸ்களை கடந்து மொலக்சை நோக்கி நடக்கத் தொடங்கினன்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *