Featureநிகழ்வுகள்
கண்டன ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் சங்கமும் அழைப்பு விடுக்கிறது!
யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு! கண்டன ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் சங்கமும் அழைப்பு விடுக்கிறது.
ஊடக அறிக்கை:
10.01.2021 ஞாயிறு
தமிழர்களின் மரபு வழித் தாயகமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்கள் யார்? இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ்மொழி பேசும் மக்கள். ஆகவே இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ்த் தேசிய இனத்துக்குள் இருந்தே, கல்வி கற்று பரீட்சைகளில் தேர்ச்சியடையும் மாணவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களுக்குள் நுழைகிறார்கள். இந்த அடிப்படை அறத்தையும், வரலாற்றையும் யாரும் மறக்கவும் கூடாது. மறுக்கவும் முடியாது.
எது சட்ட விரோதம்? இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள், தமது பூர்வீக நிலத்திலோ அல்லது புலமைச் சொத்தாகிய பல்கலைக் கழகங்கள், பொதுசன நூலகங்கள் போன்ற கவனிப்புக்குரிய பண்பாட்டுத் தளங்களிலோ
தமது கூட்டுக் காயங்களையும், கூட்டுக் கவலைகளையும், கூட்டுக் கோபத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நினைவுத்தூபிகளை அமைத்து, தம்மை ஆற்றுகைப்படுத்தும், எழுச்சிகொள்ளச் செய்யும், புதுப்பித்து மீள்உருவாக்கம் செய்யும் உலக ஒழுங்கில் நினைவேந்தல்களை நடத்துவது எப்படி சட்டவிரோதமாகும்? யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி தகர்க்கப்பட்டமையை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வன்மையாக கண்டிக்கின்றது. புதிய தூபி அமைக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது. பல்கலைக் கழகங்களுக்குள் மட்டுமல்ல, தமிழ் மக்கள் பெரும் கூட்டமாக ஒன்று கூடும் பொதுச்சந்திகளில் கூட நினைவுத்தூபிகள் அமைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
தமிழ் மக்கள் தமது கூட்டுக் காயம், கண்ணீர், வலி, கவலை, கோபம், கண்டனம், எதிர்ப்பு இவற்றை வெளிப்படுத்த ஹர்த்தால் மிகச்சிறந்த போராட்ட வடிவம் தான்! எனவே 11.01.2021 திங்கள் கிழமை அன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் விடுக்கப்பட்டிருக்கும் ஹர்த்தாலுக்கு வர்த்தகப் பெருமக்கள் தமது வர்த்தக நிலையங்களை அடைத்தும், தனியார் போக்குவரத்துச் சேவையினர் தமது சேவைகளை இடை நிறுத்தியும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ் மக்களை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், தமிழர் தாயக சங்கத்தினரும் கோருகின்றோம்.
அரசியல் கட்சிகள் ஹர்த்தாலோடு மட்டும் நின்று விடாமல், கிடைத்திருக்கும் இந்த சிறு தீப்பொறியை பெரும் நெருப்பாக பற்றி எரியச் செய்யும் புதிய போராட்ட வழிமுறைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு,
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் சங்கம்
தலைவர் கோ.ராஜ்குமார் (0094 77 854 7440)
ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா