கதைகள்

சிங்கப்பூரில்; சிலகாலம்!… 11….. (உண்மைக் கதை) ஏலையா க.முருகதாசன்

(ஜிஇயிலும் மொலக்சிலுமாக பதினான்கு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வேலை செய்ததால் உடல் அலுப்பாமல் நித்திரை தூக்கியடிச்சு நித்திரையானதால் நான் பயணம் செய்து கொண்டிருந்த பஸ் இரண்டு தடவைகள் சுற்றி வந்தும் அசந்து நித்திரை கொண்டதால் இனரர்சேன்ஜ் பஸ் நிலையத்தில் இறங்கவே இல்லை.)

 

அடுத்த நாள் திங்கட்கிழமை வேலைக்குப் போன போது மனைவியிடமிருந்து வெள்ளிக்கிழமை வந்திருந்த கடிதத்தையும் கொண்டு போனேன்.

அக்காவிடமிருந்து வரும் கடிதங்கள் எல்லாவற்றையும் தானும் வாசிக்க வேணும் என்று ஆசைப்பட்டிருந்தாள் யோகமலர்.

எனது மனைவியை அக்கா என்றும் பிள்ளைகளைத் தன் பிள்ளைகள் என்றும் ஆசையாக பாசத்தோடு அவள் அழைக்கத் தொடங்கிப் பல நாட்களாகிவிட்டன.

தனக்குக் கிடைத்த இந்த வாழ்க்கை அக்கா அளித்த வரம் என்று சொல்லி பலமுறை நெகிழ்ந்து போயிருக்கிறாள்…..

வேலைக்குப் போனவுடன் இரண்டு கம்பாயம் தைச்சுத்தரும்படி நான் கேட்டிருந்த மலாய்ப் பெண் கையைக் காட்டி என்னை வரச்சொல்லி தைத்த இரண்டு கம்பாயங்களையும் எடுத்துக் காட்டினார்.மிகவும் அழகாக நேர்த்தியாக தைச்சிருந்தார்.

மாதுளம்பழ வண்ணத்துணி பின்புலத்தில் சிறிய சிறிய மஞ்சள் பூக்கள் உள்ள துணியில் தைச்சிருந்தார்.

இரண்டும் ஒரே விதமாக அழகாக இருந்தன.எவ்வளவு தையல்கூலி என்றன். நாற்பது டொலர் என்றார்.நாற்பது டொலர்கள் மட்டுமா மலிவாக இருக்கிறதே என்றன்.

இது துணிக்காசு மட்டுமே தையல்கூலி வேண்டாம்.நீங்கள் உங்கள் இரண்டு மனைவிகளுக்கும் ஒரே விதமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டுத் தைச்சுத்தரச் சொன்னீர்கள்,தையல்கூலி எனது அன்பளிப்பாக இருக்கட்டும் என்றார்.

எனது அன்பளிப்பாக தையல்கூலி இருக்கட்டும் என்று சொன்னவளிடம் நாற்பது டொலர்களைக் கொடுக்கும் போது யோகமலர் என்னை நோக்கி வந்தவர் „என்ன புருசனாரோ இவளுடன் என்ன பேசிக் கொண்டிருக்கிறீங்க என்று கேட்டவளுக்கு மலாய்க்;காரி கண்ணைக் காட்டியதைக் கண்டுவிட்டேன்.

அப்பொழுது புரடக்சன் பகுதியின் லீடர் சுவாங் அங்கிருந்தே வரும்படி சைகை காட்டினார்.சுவாங் கூப்பிடுகிறார் என்னென்று கேட்டிட்டு வாறன் என்று அங்கு போக எத்தனிக்கையில், சரி புருசனாரே என்று யோகமலர் சொல்ல அவரை நோக்கிப் போய்க் கொண்டிருந்த போது மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன்

மலாய்ப் பெண் அவளுக்கு இரண்டு கம்பாயங்களையும் எடுத்துக் காட்ட அதில் ஒன்று தனக்கென்று அறிந்து பூரித்தது அவளது முகத்தில் தெரிந்தது.

 

சுவாங் மொலக்ஸ் என்ற தொலைக்காட்சிப் பெட்டிக்கான உதிரிப் பாகங்களை இணைக்கிற கொம்பனியில் இரவு வேலையொன்றை எனக்கு ஒழுங்குபடுத்தியிருந்தார்.

மொலக்ஸில் வேலைப்பகுதிக்கு பொறப்பாகவிருப்பவர் சுவாங்கின் நண்பர் அவருக்கூடாகவே அந்த வேலையை எடுத்துத் தந்தார்.

நான் செய்கிற வேலை முடிந்ததும்.அங்கு போய் இரவிரவாக அந்த வேலையைச் செய்ய வேணும்.அன்றிரவே அந்த வேலைக்குப் போகச் சொன்னார்.

என்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் சிரித்துக் கொண்டே செக்சுக்கு என்ன செய்யப் போகிறாய்.டெஸ்கா வீதியிலிருக்கும் பாலியல் தொழிலாளிகளிடம் போகப் போகிறாயா.தான் அமெரிக்கப் பெண்களிடம் போகிறவன்,நீ வருகிறாயா எனக் கேட்டார்.அவர் வெளிப்படையாகக் கேட்டது எனக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.

நான் ஒரு இடமும் வரவில்லையென்று வேகமாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.பெரும்பாலான சீனர்கள் பாலியல் சம்பந்தமான விடயங்களை வெளிப்படையாகவே கதைப்பார்கள்….

சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமைகள் நடக்கக்கூடாது என்பதற்காக அரசு பாலியல் தொழிலுக்கு அனுமதி வழங்கியிருந்தது.சட்டரீதியான அனுமதி உள்ள தொழில் அது.

ஆனால் பாலியல் தொழிலாளிகள் தாம் பாலியல் தொழில் செய்வதற்குரிய ஆரோக்கியமானவர்கள்,பால்வினை நோயற்றவர்கள் என்ற மருத்துவச் சான்றிதழை ஆறு மாதத்திற்கொருமுறை பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் அத்தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதை பல சீனர்களுடன் கதைத்ததன் வழியாக அறிந்திருந்தேன்.

நான் சிங்கப்பூருக்கு வந்தவுடன், எங்களுக்கு முன்பு வந்த இளைஞர்கள் அத்தொழில் நடக்கும் இடத்தைப் பற்றி எங்களுக்குச் சொல்லியிருந்தார்கள்.சிலர் போயுமிருக்கலாம்.

நமது இளைஞர்களாகட்டும் கல்யாணம் செய்தவர்களாகட்டும் கப்பல் வேலைக்குப் போகிறவர்கள் துறைமுகங்களில் கப்பல்கள் நின்றவுடன் கப்பலுக்கே பாலியல் தொழிலாளிகள் வருவதாகவும், தாம் வேலை

செய்யும் கப்பல் துறைமுகங்களில் அதிக நாட்கள் நிற்குமாயின் கப்பல் நிற்கும் நகரத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் வரை போய்வர அனுமதியுண்டு என்று சொல்வார்கள்.

அப்படியான சந்தர்ப்பங்களில் ஒருசிலர் பாலியல் தொழிலாளிகளிடம் சென்று வந்ததையும் சொல்லியிருக்கிறார்கள்.எனது நகரில் உள்ள இருவர் கப்பலில் வேலை செய்திருக்கிறார்கள். அதில் ஒருவர் கப்பல் அனுபவம் பற்றி எதுவுமே என்னிடம் கேட்க வேண்டாம் நான் எதுவுமே சொல்லமாட்டன் என்று சொல்லியிருந்தார்.

இன்னொருவர் தான் பாலியல் தொழிலாளியுடன் பதினைந்து நாட்கள் விடுதியில் தங்கியிருந்ததாகவும், அந்தப் பதினைந்து நாட்களும் அவள் தன்னை ஒரு மனைவிக்குரிய அன்புடன் கவனித்ததாகவும் சொல்லி நெகிழ்ந்தார்.ஊரில் ஒரு பெண்ணைக் காதலித்த போதே கப்பலுக்குப் போனதாகச் சொன்ன அவர் தான் பாலியல் தொழிலாளியுடன் வாழ்ந்ததை பின்னாட்களில் காதலி மனைவியானதன் பின் சொன்னதாகச் சொல்ல மனைவி அது சகஜந்தானே அது தவிர்க்க முடியாததுதானே என்று சொன்னதாகவும் சொன்னார்.

நான் அதைக் கதையாக எழுதியுமிருந்தேன்.கல்யாணம் செய்ததன் பின் கப்பலுக்குப் போகிறவர்கள் இச்சூழலுக்குள் அகப்பட்டிருப்பார்கள் என்பதை மனைவிகள் உணருவார்கள். அல்லது கப்பலுக்குக்குப் போனவர்கள் தமது நண்பர்களுக்கு தமது இரகசியங்களைச் சொல்ல அது நாளடைவில் மனைவிகளுக்கும் தெரிய வரும்.

எனது சீன நண்பர் தனியாள்.ஒரு நாள் என்னை மதிய உணவுக்கு அழைத்திருந்தார்.பேக் பண்ணின தாரா இறைச்சி, பால், லிச்சிப் பழம் எல்லாம் தந்து உபசரித்தார்.

தமிழர்களுக்கு முக்கனிகளான வாழைப்பழம்,மாம்பழம்,பலாப்பழம் எவ்வளவு முக்கியமோ

அவ்வளவு முக்கியத்தவத்தைச் சீனர்கள் லிச்சிப் பழத்துக்கு கொடுப்பார்கள்.உடல் ஆரோக்கியத்தைப் பேணி உயிர்காக்கும் பழம் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல உண்மையும்கூட.நான் சிங்கப்பூரில் இருந்த போது அப்பொழுதைய பிரதமராகவிருந்த லீ குவான் யூவுக்கு அவரின் பிறந்த நாளின் போது லிச்சிப்பழம் கொடுத்து மகிழ்ந்தார்கள் என்ற செய்தியை அங்கு வெளிவரும் தமிழ்முரசு பத்திரிகை வழியாக வாசித்து அறிந்திருந்தேன்.(லிச்சிப் பழம் ரம்புட்டான் பழக் குடும்பத்தைச் சேர்ந்தது வன்னியில் காணப்படும் முதலிப் பழமும் அவ்வகையைச் சேர்ந்ததே.மங்குஸ்தானும் அது போன்றதே.)

நான் அங்கிருந்த போது எனக்கு மிக நன்கு தெரிந்த இளவாலை மயிலங்கூடலைச் சேர்ந்த புலவர் பார்வதிநாதசிவம் அவர்களின் கவிதை ஒன்று தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்திருந்தது.அதைப் பார்த்து மகிழ்ந்த நான் சிங்கப்பூரிலிருந்து வந்தவுடன் அவரிடம் அதைச் சொன்ன போது அதை யார் அனுப்பினது என்று தனக்குத் தெரியாது என்று சொன்னார்.

இன்று சாப்பாட்டு இடைவேளையின் போது யோகமலருடன் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.அவள் எப்பொழுதும் புருசனாரே எதுவாக இருந்தாலும் பெண்டாட்டிக்கு உண்மை சொல்ல வேண்டுமென்பாள்.அத்துடன் நில்லாமல் இப்படித்தான் அக்காவுக்கும் மூடிமறைத்திருக்கிறீர்கள் போல என்று உறைக்கும்படி சொல்வாள்.

சிறுவயதில் இருந்தே எதையும் அறிந்து கொள்வதில் ஆர்வமிருந்து வருகிறது.இதைப் புதினம் அறிதல் என்றுகூடச் சொல்லலாம்.சிங்கப்பூருக்கு வந்தவுடனேயே இளைஞர்களில் சிலர் மத்தியில் டெஸ்கா றோட்டுக்குப் போய் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும் என்ற பயம் கலந்த ஆர்வம் இருந்தது.

பொஸ் நீங்களும் வாருங்கள் போய்ப் பார்த்துவிட்டு வருவோம் என்று கேட்டார்கள்.நான் தயங்கினேன்.பொஸ் நெருப்பென்றால் சுடவா போகுது பயப்படாமல் வாருங்கள் என்றார்கள்.

என்னுடன் மூன்று பேர் வந்தார்கள்.அந்த வீதிக்குள் நுழையும் போது ஏதோ ஒரு குற்ற உணர்வும் கூச்சமும் தோன்றியது.அங்குமிங்குமாக ஆண்கள் நின்றார்கள்.வேகமாக நடந்து கொண்டிருந்தோம்.ஒவ்வொரு அறையின் வெளிப்புறச் சுவரிலும் பாலியல் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை எழுதி வைத்திருந்தார்கள்.அதனை நான் இங்கே விபரிக்க விரும்பவில்லை.

நின்று நிதானித்து எதையும் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தோம்.ஒரு பக்கத்தில் அரவாணிகள் வாடிக்கையாளர்களுடன் பேரம் பேசுவது போலச் சத்தமாகப் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

இன்னொரு அறைக்கு வெளியே கூடம் போன்ற இடத்திலிருந்த ஒரு தமிழ் இளைஞன் என்று நினைக்கிறேன் அவனையும் அழைத்துக் கொண்டு சீலை கட்டிய பெண் தமிழ்ப் பெண்ணாகக்கூட இருக்கலாம் அறைக்குள் நுழைந்ததைக் கண்டேன்.

அந்த இடத்தைவிட்டு வெளியே வந்த போது ஏதோ ஒரு குகையை விட்டு வெளியே வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது கூடவே ஏன்தான் இங்கு வந்தோம் என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது.

எனது இந்த அனுபவத்தை „அது அவர்களுடைய உலகம்’என்ற பெயரில் வெற்றிமணிப் பத்திரிகையில் எழுதியிருந்தேன்.நான் நினைக்கிறேன் இந்த இணையத்தளத்திலும் அது வந்திருக்க வேண்டும்.

இப்படியும் வாழ வேண்டி இருக்கின்றதே என்று அந்தப் பெண்கள் மீது எனக்குப் பரிதாபம் ஏற்பட்டது.பாலியல் உணர்வினால் ஏற்படும் பாலியல் வன்முறைகள் வராமல் தடுப்பதற்காக வளர்ச்சியடைந்த நாடுகள் பாலியல் தொழிலைச் சட்டரீதியான முறையில் ஆரோக்கியத்தையும் பேணி இத்தகு இல்லங்களை அமைக்க அனுமதி கொடுத்திருக்கின்றன.பாலியல் உணர்வு வேண்டத்தகாத உணர்வு என்பது போல நினைப்பவர்களும் உண்டு,அது தவறு.

மேலைத்தேய நாடுகளில் இத்துறைசார் கல்வி உண்டு.பாலியல் தூண்டுதலால் அப்பொழுது ஏற்படும் ஒரு ஆணின் மனநிலை என்ன பெண்ணின் மனநிலை என்ன என்பதை கசடறக் கற்று பலரை ஆய்வு செய்து அதனால் ஏற்படும் உடலின் இயக்கம் அதைத் தூண்ட மூளையில் உற்பத்தியாகும் திரவகத்தின் செயல்பாடு,இருதயத்தின் நுரையீரலின் செயல்பாடு என்பவற்றை சிறப்பாக ஆய்வு செய்து நூல்களாக வெளியிட்டிருக்கிறார்கள்.

ஏலையா என்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த போத ஜேர்மனி சாபுறூக்கன் நகரிலிருந்து ஒரு ஆயுள்வேத வைத்தியர்(இவர் ஊரில் ஆயுள்வேத வைத்தியராக இருந்தவர்) ஆயுள்வேத வைத்தியம் பற்றி தொடர்ச்சியாக கட்டுரையொன்றை எழுதிய போது உடலுறவுத் தருணத்தில் இதயத்தின் வேகமும் செயல்பாடும் எப்படி இருக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.ஆயுள்வேத வைத்தியத்துறையில் இதுபற்றி சிறப்பாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நான் நினைக்கிறேன் எமது முன்னோர்கள் இந்த விடயத்தில் அறிவார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று.தமது பிள்ளைகளுக்கு கல்யாண வயது வரும் போது அவர்கள் கல்யாண வாழ்விற்குப் பின்னரான உடலியற் தேவையை சிறப்பாக அனுபவிக்க வேண்டுமென்பதற்காக உடலே கருவி என்பதற்கமைய ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளுக்கு

சரியான முக்கியமான உணவுகளை கொடுத்து வளர்த்திருக்கிறார்கள் என்பது உண்மையே.

அவர்கள் வெளிப்படையாக பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை.ஆனால் அவர்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் ஆணையும் பெண்ணையும் இணைத்து வைப்பதில் உள்ள உண்மையான பொருள் என்ன என்பதை அவர்கள் அதன் தாற்பரியத்தை அறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

தனது மகளுக்கோ மகனுக்கோ கல்யாணம் செய்து வைத்தவுடனேயே மகளுக்கோ மருமகளுக்கோ மாதவிலக்கு தள்ளிப் போகும் போது தாயும் தகப்பனும் மாமனும் மாமியும் தங்களுக்குப் பேரப்பிள்ளை பிறக்கப் போகின்றதே எனப் பூரிப்படைகிறார்கள்.தங்களது மகள் பிள்ளை பெறத் தகுதியற்றவள் என்று அவள் வாழ்வு வந்துவிடக்கூடாதே எனப் பெற்றோர்கள் துடிப்பார்கள்.

தங்களுக்கு ஒரு பிள்ளையில்லையே என ஏங்கும் தம்பதிகளின் இடத்திலிருந்து பார்த்தால்தான் இது புரியும்.

மனிதர்களின் உடல் தேவைகளைச் சரியாகப் புரிந்து கொண்ட நாடுகள் அதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதிலும் வடிகால்களை அமைப்பதிலும் அதைச் சட்டமாக்கியும் இருக்கிறார்கள்.

சிங்கப்பூர் மேற்கூறிய விடயத்தை சரியாக சட்டரீதியாக அணுகிய அதே வேளை பாலியல் படங்களான புளுபிலிம்கள் பார்ப்பதற்கு தடை விதித்திருக்கின்றது..இப்படங்களைப் பார்த்து பிடிபட்டால் கடுமையான தண்டனைகள் உண்டு.

சிங்கப்பூர் மேற்கத்தைய நாடுகளைப் போல நவநாகரீகமான நாடெனிலும் மூவினங்களான சீனர், மலாயர்,தமிழர் ஆகியோரின் கலாச்சாரத்தை பேணுவதில் சிங்கப்பூர்

அரசாங்கம் அவர்களுக்கு துணையாகவே இருந்து வருகின்றது.

நடு இரவு எந்த நேரமாகவிருந்தாலும் வீதிகளிலோ லிப்டுகளிலோ பெண்கள் பயமின்றி போய்வர முடியும்.குறிப்பாகச் சீன பெண்கள் தமது உடைகளில் ஒன்றாக அரைக்காற்சட்டை தொடைக்கு மேலாகவே போடுவது இயல்பான ஒன்று.

அவர்கள் அந்த உடையுடனேயே லிப்டுகளில் போய்வருவதை நானே பலமுறை கண்டிருக்கிறேன்.

லிப்டுகளில் அந்த உடையில் அவர்களைக் காணுதல் என்பது எமக்குப் புதிதுதான்.அதைப் பற்றி அவர்களின் எதிரிலேயே நமது இளைஞர்களில் சிலர் தமிழில் இரகசியமாக கிண்டலடிப்பதை நான் அவதானிருக்கிறேன். ஒருவரை அவருக்குப் புரியாத மொழியில் கிண்டலடிப்பது நல்லதல்ல என அவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

இது ஒரு புறமிருக்க புளுபிலிமை பார்த்துவிட்டு அதன் தாக்கத்துடன் வரும் ஒரு ஆண் தனிமையில் ஒரு பெண் லிப்டில் வரும் போது அந்தக் கணத்தில் அவனுக்கு ஏற்படும் காமவெறி உந்துதலால் பின்விளைவுகள் எதையுமே யோசிக்காமல் அந்தப் பெண் மீது பாலியல் வன்முறை நடக்க வாய்ப்புண்டு என்பதுடன் இந்த வன்முறை உதாரணமாக ஒரு சீனப் பெண் மீது ஒரு ஆண் மலாயர் பாலியல் வன்முறை செய்வாரானால் இது இன முரண்பாடுகளாகவும் அதுவே வன்முறையாகவும் வெடிக்க வாய்ப்பு உண்டு.

இத்தகு படங்களைப் பார்க்கும் குடும்பங்கள் தவறுதலாக தமது பிள்ளைகளான சிறுவர்கள் பார்க்குமிடத்தில் வைத்தால் அதனால் சிறுவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை உளவியல் ரீதியாக கவனத்தில் எடுத்து சிங்கப்பூர் அரசு சட்டங்களை இயற்றியிருக்கின்றது…..

வேலை தொடங்க சில நிமிடங்கள் இருந்தன.சுவாங்கிடமிருந்து யோகமலருக்கு அருகில் வந்து நின்ற என்னைக் கண்ட யோகமலர் என்ன புருசனாரே அந்தச் சைனீஸ் ஏன் கூப்பிட்டவர் என்று கேட்க,இன்றிரவிலிருந்து இந்தக் கிழமை மட்டும் மொலக்ஸ் என்ற கொம்பனிக்கு இரவு வேலைக்குப் போகப் போகிறன் அதோடை வேறு விசயமும் கதைத்தவர் என்று சொல்ல, இந்த வேலைக்கப்புறம் இரவிரவாக வேலை செய்யப் போகிறீர்களா உடம்பு கெட்டும்ங்க வேண்டாம்ங்க என்று அவள் கவலைப்பட்டாள்.இந்த ஒரு கிழமைக்குத்தானே என அவளைச் சமாதானப்படுத்தினேன்.

வேற ஒன்னுமில்லையா எனக் கேட்டாள்.இருக்குது சாப்பாட்டு நேரத்திலை சொல்றன் என்று சொல்லிவிட்டு எனது வேலையைச் செய்யத் தொடங்கினேன்.

அப்பப்ப மிசின்கள் வேலை செய்யாமல் நிற்பதும் திருத்திவிடுவதுமாக எனது வேலை போய்க் கொண்டிருந்தது.யோகமலருக்கு அருகில் போகும் நேரமெல்லாம், நீங்க வர வர எனக்கு சில விசயங்களை மூடிமறைக்கிறீங்க என்பாள்.அப்படி ஒன்றுமே இல்லை என்பேன்.இவளுக்கு நான் டெஸ்கா றோட்டுக்குப் போனதை எப்படிச் சொல்லிச் சமாளிக்கப் போகிறன் என்று ஒரே யோசனை,பயமுமாக இருந்தது.என்மீது அப்பழுக்கில்லாத நம்பிக்கையும் அன்பும் வைத்திருப்பவளுக்கு நானும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்பதே காரணமாக இருந்தது.

சாப்பாட்டு நேரம் வந்தது.வழமை போல எனக்கும் அவள் சாப்பாடு கொண்டு வந்திருந்தாள்.எனது கைகளுக்குள் தனது கையைச் செருகியபடி உட்கார்ந்தவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு „உங்களிட்டை ஒரு உண்மையைச் சொல்லப் போகிறன், நீங்கள் கோபிக்கக்கூடாது என்று தயங்க …நீங்க சொல்ற விசயத்தைப் பொறுத்து அது இருக்குமென்றவள் சொல்லுங்கள் என்றாள்.

தயங்கித் தயங்கி பாலியல் தொழிலாளிகள் இருந்த அந்த வீடுகளைப் பார்க்கப் போனதையும் நண்பர்கள் கட்டாயப்படுத்தித்தான் போனேன் என்று சொன்ன நான் அவளின் தலையில் கைவைத்து என் முன்னால் இருக்கிற என் மனைவியான உங்கள் மீதும் ஊரிலை இருக்கிற எனது மனைவி மீதும் சத்தியமாகச் சொல்கிறன் நான் சும்மா பார்க்கத்தான் போனனான் நம்புங்கள் என்றன்.

அவள் எனது கைகளை எடுத்து தனது மார்போடு அணைத்து நம்புறேங்க.உங்களைப் பற்றி எனக்குத் தெரியும் என்றவளிடம் செக்சுக்கு என்ன செய்வீங்க என்று சுவாங் கேட்டார்.தான் அமெரிக்கப் பெண்ணிடம் போவதாகவும் சொன்னார் என்றன்.

உங்க மனைவி நானிருக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமல்லவா என்றாள்.அப்படிச் சொல்லக்கூடாது மனைவி என்பவள் பெறுமதியானவள்.எனக்கு நீங்கள் பெறுமதியானவள்.உங்களைக் காட்டிச் சொல்வது எனக்குப் பிழையாகத் தெரிந்தது அதுதான் சொல்லவில்லை என்றன்.

என்னை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய மனைவியின் பெறுமதியை உணரும் உங்களை கடவுள்; சிறீலங்காவில் பிறக்க வைத்திட்டாரே.அப்படித்தான் பிறக்க வைத்தவர் நீங்க கல்யாணம் செய்யாதவராக இங்க வரச் செய்திருக்கலாமே என்று மனம் தளர்ந்து விம்மினாள்.

அவளுடைய தோழிகள், தொடங்கிவிட்டாள் அழ எனச் சொல்வது எனக்கும் கேட்டது அவளுக்கும் கேட்டது.அவங்களுக்குப் புரியுமா எனது நிலைமை என தோழிகளை குறைகூறினாள் யோகமலர்.

அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்ட நான் எழுந்து சென்று மலாய் பெண்ணிடம் கம்பாயம் இருந்த பையை வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினேன்.

பையை வாங்கியவள் அப்பதான் முதன்முதலாக பார்ப்பது போல அதற்குள் இருந்து கம்பாயங்கள் இரண்டையும் எடுத்தவள், நான் முதல்லேயே பார்த்திட்டன் என்றவள் புருசனார் எனக்குத் தந்த முதலாவது அன்புப் பரிசு இது. நான் நன்றி சொல்ல மாட்டன் புருசன் செய்ய வேண்டியதைச் செய்கிறார் என்றவள் பாசத்தோடு இறுக்கி அணைத்தாள்.

எப்படீங்க கம்பாயத்துக்கு கலரைச் செலக்ட் பண்ணினீங்க எனக்குப் பிடிச்ச கலருங்க என்று சொல்ல, உங்களுடைய அக்காவுக்கும் பிடிச்ச கலர்,இந்தக் கலர் அவருக்கு எடுப்பாக இருக்கும் என்றவுடன் கடவுள் சரியாகத்தான் அக்காவையும் என்னையும் உங்களுக்கு மனைவியாக்கியிருக்கிறார்.

உங்களுக்கு இரண்டு மனைவிங்க என்பது எழுதப்பட்ட விதிங்க.அதான் கடவுள் சிங்கப்பூருக்கு உங்களை அனுப்பி உங்களைச் சந்திக்க வைச்சிருக்கிறார் என்றவள் உடனடியாக நாளைக்கு அக்காவுக்கு ஒரு கம்பாயத்தை அனுப்பி போட்டோ எடுத்து அனுப்பச் சொல்லுங்க என்றவள் சாப்பிடுங்கள் என்று எனக்கு கொண்டு வந்த சாப்பாடடைத் தந்தாள்.

சாப்பிட்டு முடிஞ்சதும் மனைவி எழுதின கடிதத்தைக் கொடுத்தன், அதில் மலேசியப் பிள்ளை இப்பொழுதும் சாப்பாடு கொண்டு வந்து தருகிறவரா என எழுதியிருந்ததுடன் அவருக்கும் சுகம் சொல்லவும் என்று எழுதியதுடன் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிட்டு வாருங்கள் என்று எழுதியதைக் காண்பித்து என்னங்க இது என்று கேட்டாள்.அவளின் காதில் அதன் அர்த்தத்தைச் சொல்ல என்னங்க என்று வியந்தவள் எனது காதுக்குள்ளும்; ஒரு விசயத்தைச் சொல்லிவிட்டு அது நாள் வரையும் பல்லைக் கடிச்சுக் கொண்;டு இருங்க என்று அர்த்தத்துடன்

சொல்லிவிட்டுச் சிரிச்சவள், நான் என்னங்க செய்யிறது பத்து நாள் பொறுத்துக்குங்க என்று கெஞ்சுவது போலக் கேட்டாள்.அதைப் பற்றி நான் யோசிக்கவேயில்லை என்று சொல்ல நீங்களா…..அக்கான்ர லெட்டர் எனக்கு உங்களைப்பற்றி புரிய வச்சிட்டுதுங்க என்று சிரித்தவள் நீங்களா…ம் …ம் எல்லாமே எனக்குப் புரியுமுங்க என்றாள்…

மைத்துனியின் மகள் வந்து கதைச்சதைச் சொன்ன நான் வருகிற சனிக்கிழமை படத்துக்கு போவம் என்று கேட்கிறாள்.நீங்களும் வாருங்கள் மூவருமாக போவம் என்றன்.எந்த மறுப்பும் தெரிவிக்காமல் வருகிறன் என்றவள்,அவளுடன் படத்துக்குப் போறது இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கட்டும்ங்க.நான் உங்க பெண்டாட்டி எப்ப எங்க போறதுன்னு நானும் நீங்களும்தான் முடிவெடுக்கனும், அவங்க சொல்லி அல்ல என்றாள்.

இங்க எங்க இரண்டுபேர் விசயத்திலயும் யாருமே தலையிட வேண்டாம்.அவங்க படம் பார்க்கிறதோட நிறுத்திக்கிடனும்.எங்க உறவைப் பற்றிப் பேசினா நானும் பேசுவன் என்றவளை நான் அப்படி ஒன்றும் நடக்காது என்று சமாதானப்படுத்தினன்.

எனது பில்டிங்கு முன்னால் உள்ள பில்டிங்கில் பொம்பிளைப் பிள்ளையின்ரை காதல் விவகாரம் பற்றியும் அவர்களின் லீடரை இரத்தினம் என்பவர் பேசியதையும் சொன்னன்.

அதற்கு அவள், அதையெல்லாம் யோசிச்சு மனசைக் குழப்பாதீங்க அவங்க பிரச்சினையை அவங்க பார்த்துப்பாங்க என்றவள் உங்களை நம்பியா அவங்க இங்க வந்தவங்க, விட்டுடுங்க என்று அறிவுரை சொன்னாள்.

என் முகத்தை உற்றுப் பார்த்தவள், ஏங்க உங்களுக்க ஒழுங்கா சேவ் பண்ணத் தெரியாதா இந்தா கழுத்தடியிலை சரியாகச் சேவ் பண்ணலை மயிர் அங்க இங்க இருக்குது என்றவள் என் தோள்மீது கொஞ்ச நேரம் சாய்ஞ்சிருந்தாள்.அவள் சில

நாட்களாக சுடிதாரிலேயே வந்து கொண்டிருந்தாள்.அதைப் பார்த்த நான் ஏன் நீங்கள் ரைற் ஸ்கேர்ட்டோ ஸிலீவ்லெஸ் பிளவுஸ்ஸோ போடுவதில்லை என்று கேட்க, என்று உங்களை புருசனாக மனம் ஏற்றுக் கொண்டதோ அன்றிலிருந்தே இந்த உடம்பு என்னோட புருசானருக்குரிய உடம்பு மட்டுமே.மற்றவர்கள் பார்க்க நான் சாகும் வரையும் றைற் ஸ்கேர்ட்டோ ஸிலீவ்லெஸ் பிளவுஸோ போட மாட்டேங்க என்றவளை நினைத்து இப்படியும் ஒருத்தியா என நெகிழ்ந்தன்.

என்னைப் பரிதாபமாக பார்த்தவள் எல்லாரும் எழுந்து போகும் வரைக்கும் தாமதித்தவள் இப்போதைக்கு இதுதாங்க என தனது முகத்தை எனது முகத்துக்கு மிக மிக அருகில் கொண்டு வந்தாள்.

வேலை முடிஞ்சு அவளுடைய பஸ் வரையும் கொண்டு போய்விடும் போது அக்காவின்ர கம்பாயம் கவனம்ங்;க இரவு வேலைக்குப் போறீங்க கவனம்ங்க நீங்க அனுப்பிட்டீங்க என அறிஞ்சதற்கப்புறம்தாங்க நான் அதைப் போட்டு படம் எடுப்பேங்க என்றவள் ஏங்க இரவு வேலைக்குப் போறீங்க என்று கவலையுடன் பார்த்தபடியே பஸ்ஸில் ஏறி உட்கார பஸ் புறப்பட கையசைத்தபடியே இருந்தாள்.

நான் இரவு வேலைக்குப் போவதாக சூரியகுமாரிடம் சொல்லிவிட்டன். எனது பஸ்ஸைக் கடந்து மொலக்ஸ் கொம்பனி இருக்கிற பக்கமாக நடக்கையில் நான் தவறான பஸ்ஸில் ஏறப் போகிறேனோ என நினைத்து யாரோ ஒருவர் தசான் கியர் யுவர் பஸ் என்று சொல்வது கேட்டது.

நான் கேளாத மாதிரி மொலக்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.ஜிஇயிலிருந்து நூறு மீற்றர் தூரத்தில் உள்ள வலது பக்க குறுக்கு றோட்டிலேயே அந்தக் கொம்பனி இருந்தது.

அங்கு நான் போன போது சுவாங்கின் நண்பர் அங்கிருந்தார்.என்னைக் கண்டதும் இரவு வேலைக்குப் பொறுப்பானவரிடம் ஆங்கிலத்தில் எனது பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தவர் பொறுப்பானவரின் பெயரை மகேந்திரன் என்று சொல்லி அறிமுகம் செய்து வைக்கையில் அவர் தமிழர் என்பதைப் புரிந்து கொண்டன்.

அது ஒரு மண்டபமாக இருந்தது. அங்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். நான்கு சிறிய மிசின்களும் இருந்தன.அனைவரும் தமிழர்கள் .தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

மகேந்திரன் நான் செய்ய வேண்டிய வேலையை விளங்கப்படுத்தினார். கலர் கலரான மெல்லிய அரை மீற்றர் வயர்களின் நுணியில் அமத்தப்பட்ட கிளிப்கள் இருக்கும் அவற்றை நிரையாக ஒரு பிளாஸ்ரிக் கட்டையில் உள்ள சிறிய வெட்டுகளில் வைத்து அமத்த வேண்டும்.அந்த கிளிப்களின் மறுமுனை ஒரே அளவாக இருக்க வேண்டும்.

உதாரணமாக இன்ரர்நெற் வயரில் இருக்கும் மறுமுனை போல இருக்கும்.நான் அமத்திச் செய்த வயர்கள் போன்ற வயர்களை தொலைக்காட்சிப் பெட்டிகளில் பார்த்திருக்கிறன்.

பொறுப்பாளரும் மலேசியா சிங்கப்பூர் எல்லையில் உள்ள எல்லை நகரமான ஜோகூர்பாருவிலிருந்துதான் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

இருபது நிமிட இடைவேளை என்பதால் இரண்டு பெண்களும் சாண்ட்விச் போன்ற ஒன்றைக் கொண்டு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுப்பாளரும் மற்றைய இரண்டு ஆண்களும் கோப்பி மிசினில் கோப்பி அடிச்சுக் குடிச்சார்கள்;. நான் எதுவுமே

குடிக்காமல் இருந்ததைக் கண்ட உயரமான இளைஞன் கோப்பி அடிச்சுத் தந்திட்டு என்னைக் கூட்டிக் கொண்டு போய் கோப்பி மிசின் இருக்கும் இடத்தைக் காட்டி எவ்வளவு காசு போட வேண்டும் என்று சொல்லித் தந்தான்.அவன் தந்த கோப்பிக்கு காசு கொடுக்கப் போக அந்த இளைஞன் வேண்டாம் என்றான்.

கோப்பியைக் குடிச்சுக் கெண்டிருக்க எனக்கருகில் வந்த ஒரு பெண் சாண்ட்விச்சை நீட்டி சாப்பிடுங்க என்றாள் தமிழில்.நான் தமிழன் என்று இந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியுமென்று நினைச்;சு, நான் தமிழ்னு உங்களுக்கு எப்படித் தெரியுமென்றன்.உங்க பெயரை வைத்து மகேந்திரன் நீங்க தமிழ்னு சொன்னார் நீங்க சிறநீலங்காவிலிருந்து வந்தவர்னும் சொன்னார் என்றாள்.நீங்களும் மலேசியாவா என்று கேட்டன்.இல்லைங்க நாங்க இரண்டு பேரும் சிங்கப்பூரியர்கள்.நாங்களும் சிறீலங்கா தமிழ் பரம்பரைதாங்க.எங்கடை தாத்தாக்கள் சிறீலங்காதாங்க என்றாள்.அவள் சொன்னதைக் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னாடிதான் சாப்பிட்டன் தாங்யு வெறிமச் வேண்டாம் என்றன்.அந்தப் பெண் போய்விட்டாள்.

தமிழில் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வேலை செய்வது மகிழ்ச்சியாகவிருந்தது.அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு வேலை முடிஞ்சு யூரோங் இன்ரர்சேன்ஜ் மத்திய நிலையத்துக்கு போகும் பஸ்ஸில் பதினைஞ்சு சதத்தை சாரதிக்கு பக்கத்திலிருந்த பெட்டிக்குள் போட்டுவிட்டு உட்கார்ந்த நான் உடனேயே நித்திரையாகிவிட்டேன் .

ஜிஇயிலும் மொலக்சிலுமாக பதினான்கு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வேலை செய்ததால் உடல் அலுப்பாமல் நித்திரை தூக்கியடிச்சு நித்திரையானதால் நான் பயணம் செய்து கொண்டிருந்த பஸ் இரண்டு தடவைகள் சுற்றி வந்தும்

அசந்து நித்திரை கொண்டதால் இனரர்சேன்ஜ் பஸ் நிலையத்தில் இறங்கவே இல்லை.

மூன்றாவது முறையாக சுற்றி வந்தும் நான் இறங்காததைக்; கவனித்த பஸ் றைவர் என்னிடம் வந்து இது மூன்றாவது முறை பஸ் சுற்றி வந்துள்ளது என்று சொல்லி எழுப்பிவிட்டார்.

நான் துடித்துப் பதைத்து இறங்கி பூன்லேறைவுக்கு போகும் பஸ்ஸில் ஏறி வீட்டுக்குப் போய்ச்சேர காலை ஏழு மணியாகிவிட்டது. போனதும் படுக்கையில் விழுந்ததுதான் தெரியும்.

சூரியகுமார் சோறும் சமைத்து கத்தரிக்காய் கறியும் வைத்ததுடன் தனக்கென றொட்டியும் சுட்டிருந்தார். இரவுச் சாப்பாட்டை யோகமலர் கொண்டு வருவதால் நான் இரவுச் சாப்பாடு கொண்டு போதில்லை.

எனக்கு யோகமலர் இரவுச் சாப்பாடு கொண்டு வரும் விசயம் அறையில் உள்ள அனைவருக்குமே தெரியும். பதினொன்றரைக்கு நித்திரையால் எழும்பிய நான் மனைவிக்கு ஒரு கடிதத்தை எழுதிக் கொண்டு, கம்பாயத்தையும் பையில் போட்டு எடுத்துக் கொண்டு எங்களுடைய பில்டிங்குக்கு அருகில் உள்ள கடையில் பிலிம்றோல் ஒன்றையும் வாங்கிக் கொண்டு தபால் அலுவலகத்திற்கு கொண்டு போய் அங்கேயே பார்சலுக்குரிய பெரிய மொத்தமான தபால் உறை ஒன்றை வாங்கி கம்பாயம் கடிதம் பிலிம் றோல் எல்லாவற்றையும் வைத்து ஒட்டிக் கவுண்டரில் கொடுத்த போது எனது பெயரைச் சொல்லியவாறு ஒரு பெண் வந்து நின்றார்.

அவரைத் திரும்பிப் பார்த்தேன் அவர் எனது ஊரான தெல்லிப்பழை கொல்லங்கலட்டி வீதியில் இருக்கும் செந்தில்குமாரி.அவரை எனக்கு நன்கு தெரியும்.அவருடைய சிறிய தாயார் என்னுடைய சக வகுப்பு மாணவி.அவரைப் பார்த்ததும் என்ன நீங்கள் இஞ்சை என்றேன்.

தனது கணவர் என்ஜினியராக வேலை செய்கிறார் என்றவர், கணவரின் வேலைத்தளத்தில் ஒரு கிரைன் சரிஞ்சு பிரச்சினையாகிவிட்டது என்றவர் கடிதம் ஒன்றைக் கொடுத்துவிட்டு அவசரமாகப் போய்விட்டார்.

வீட்டுக்கு வந்த நான் கொஞ்ச நேரம் கோழித்தூக்கம் போட்டுவிட்டு வேலைக்குப் போக ஆயத்தமானேன்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *