ஒரு கிறிஸ்தவக் கதை!…… ( சிறுகதை ) …… காவலூர் ராசதுரை.
நத்தாருக்கு முதல் நாள் மாலை.
ஞானப்பிரகாசம் குடும்பம் வழக்கம்போல மாலை நேரப் பிரார்த்தனைக்காக வீட்டு நடு அறையில் குழுமியது.
ஞானப்பிரகாசத்தின் மூத்த மகன் ஜேசுதாசன் புதிய ஏற்பாட்டைத் திறந்து ஒரு பகுதியை வாசித்தான்.
`நல்ல சமாரித்தன்’ பற்றிய உவமையை அவன் வாசித்துக் கொண்டிருந்தான்.
அன்றையதினம் அந்த உவமை வாசினைக்கு எப்படி அகப்பட்டது? தெய்வ சித்தமாக இருக்குமா?
ஞானப்பிரகாசம் இப்படித் தன்னுள் எண்ணிக்கொண்டார்.
அவர் வீட்டில் தினமும் வேதாகமம் வாசிப்பது வழக்கம். ஓர் ஒழுங்கு முறையின்றி புத்தகத்தைத் திறக்கும் போது எந்தப்பக்கம் திறபடுகிறதோ அதை வாசிப்பார்கள். தினமும் ஜேசுதாசன்தான் வாசிக்க வேண்டுமென்பதில்லை. முறை வைத்து ஒரு நாளைக்கு ஒருவராக வாசிப்பார்கள்.
இன்று ஜேசுதாசனின் முறை.
‘உன்னைப்போல பிறனையும் நேசிப்பாயாக’ என்பதற்கு உவமையாக இயேசு சொன்ன கதைகளில் ‘நல்ல சமாரித்தன் கதையும் ஒன்று.
ஜேசுதாசன் அந்தப் பகுதியை வாசித்து முடித்ததும் அவனுடைய தகப்பனார் அவனை நிமிர்ந்து நோக்கினர்.
அந்தப் பார்வை…
“வேதாகமம் என்ன சொல்கிறது பார்த்தாயா’ என்று கேட்பதுபோல ஜேசுதாசனுக்குத் தோன்றியது.
ஜேசுதாசன் புன்முறுவலுடன் தாயார் றோசம்மாவைப் பார்த்தான்.
‘அப்பாவும் மகனுமாகச் சேர்ந்து எனக்கு காது குத்தப் பார்க்கிறீர்கள். ஊம். என்னத்தையாவது செய்யுங்கள்’ என்று றோசம்மா சலித்துக்கொண்டாள்.
என்றாலும் அவளுடைய குரலில் ஒருமணி நேரத்துக்கு முன்னர் தெறித்த கனலைக் காணவில்லை. பேசவேண்டியதையெல்லாம் பேசித்
தீர்த்துவிட்டதாலோ, இயேசுநாதரின் உவமையை நினைவூட்டியதாலோ, அவள் ஓய்ந்துபோயிருந்தாள.
எல்லாம் ஞானப்பிரகாசத்தால் வந்த வினை. அவருக்கு ஒருநாளும், தானுண்டு, தன் அலுவலுண்டு என்றிருக்கத் தெரியாது. அல்லாவிட்டால் அனாவசியமாகப் பிறருடைய தகராறில் சாட்சி சொல்லப் போயிருப்பாரா?
அவர் சாட்சி சொல்லப் போனமையாலேயே அயல்வீட்டுக்காரருக்கும் அவருக்கும் மனஸ்தாபமுண்டாயிற்று.
விஷயம் என்னவோ அற்ப விஷயந்தான்.
அயல்வீட்டுக்காரருக்கும் எதிர்வீட்டுக்காரருக்கும் தகராறு,
தகராறு நாளுக்குநாள் முற்றி தப்பு யாருடையது என்று தீர்மானிக்க் இயலாத அளவுக்கு முற்றிவிட்டிருந்தது.
இந்தக் கட்டத்திலே ஒருநாள் இரு வீட்டாருக்கும் கைகலப்பு உண்டாயிற்று. இந்தக் கைகலப்பில் எதிர்வீட்டுக்காரரின் மண்டை உடைந்து விட்டது. ஞானப்பிரகாசத்தார் குறுக்கிட்டு ‘விலக்குப்’ பிடிக்காதிருந்தால் யாராவது ஒருவர் அன்று இறந்திருக்கக்கூடும். அந்த அளவில் அவர் செய்த காரியம் சரிதான். ஆனால் அதற்குப் பின்னர், பொலிசார் வழக்குத் தொடர்ந்தபோது ஞானப்பிரகாசம் அயல் வீட்டாருக்கு எதிராகச் சாட்சி சொல்லப் போகலாமா?
றோசம்மாவுக்கு இரண்டு வீட்டுக்காரரும் வேண்டியவர்களோ இல்லையோ, எவரையாவது பகைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அயல் அட்டம் என்று இருந்தால் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்யத்தான் வேண்டும். அதற்காக ஒருவருக்கு எதிராகச் சாட்சிசொல்லக் கிளம்புவதா?
ஞானப்பிரகாசத்துக்கு றோசம்மாவின் தர்க்கம் அசட்டுத்தனமானதாகத் தோன்றியது. இரு வீட்டுக்காரரும் சண்டை பிடித்தது உண்மை. ம்ண்டை உடைந்ததும் உண்மை. தான் இடையிட்டு இருவரையும் பிடித்து விலக்கி விட்டதும் உண்மை. வழக்குக்கணக்கென்று வந்தால், கண்டதைப் போய்ச் சாட்சி சொல்லத்தானே வேண்டும்? ஆண் மகன் என்றிருந்தால் அவனுக்கு வீட்டுக்கு வெளியேயும் சில கடமைகள் உண்டு. கண்டதைச் சொல்ல உடன்படாவிட்டால் ஒருவனுக்குக் கோபம். சொன்னால் மற்றவனுக்குக் கோபம். எப்படியும் ஒருவனுக்கு கோபமுண்டாகவே செய்யும்.
ஆகவே ஞானப்பிரகாசம் மனச்சாட்சியின்படி நடந்து கொண்டார்.
இப்படி நடந்ததால் என்ன நடந்தது?
எதிர்வீட்டுக்காரருக்கும் ஞானப்பிரகாசம் வீட்டாருக்கும் நட்பு இறுக்ம்கமாயிற்று.
அயல் வீட்டுக்காரர் ஞானப்பிரகாசம் குடும்பத்தையும் தமது வைரிகளாகக் கருதி நடக்கத் தலைப்பட்டார்கள்.
இது ஞானப்பிரகாசம் எதிர்பார்த்ததுதான். ஆனல், இதற்குப் பிற்பாடு நடந்த ‘திருப்பம்’ இருக்கிறதே. அதை அவர் எதிர்பார்க்கவேயில்லை. அயல்வீட்டுக்காரர் அரசாங்க உத்தியோகத்தர்; நீதிம்ன்றத்தில் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டால் உத்தியோகத்துக்குப் பங்கமுண்டாகும். இதற்கு முன்னரும் சில முறைப்பாடுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தன. இந்தமுறை வழக்கு இறுகும்போலத் தோன்றியது. ஆகவே அவர் தம்முடைய வழக்கறிஞர் மூலமாக எதிர்வீட்டாரின் வழக்கறிஞருடன் பேசி சமரசத்துக்கு இருவரும் வந்தார்கள். வழக்குக் கைவிடப்பட்டது. இந்தச் சமரசத்தின்படி எதிர்வீட்டுக்காரருக்கு நூறோ இருநூறோ கிடைத்ததாகவும் பேச்சு.
இப்பொழுது அந்த இருவீட்டாருக்கும் நட்பில்லாவிட்டாலும் பகை கிடையாது. ஆனல் ஞானப்பிரகாசம் வீட்டாருக்கும் அயல்வீட்டாருக்கும் பகை.
இதற்கிடையில் எதிர்வீட்டுக்காரருக்கு பட்டினத்தின் வேறொரு பகுதியில் நல்லதொரு வீடு கிடைத்துவிட்டது. நேற்று நல்ல நேரம் பார்த்து வீடு மாறிப் போய்விட்டார்கள்.
போகும்போது ஞானப்பிரகாசத்திடம் வந்து விடை பெற்றுப் போனார்களா?
றோசசம்மாவுக்கு அதுதான் ஆத்திரம் நன்றிகெட்ட சாதி, அனாவசியமாக நமக்காக அயல்வீட்டுக்காரரையும் பகைத்துக்கொண்டேனே. காசுபணம் கிடைத்தபோது அவனுக்கும் ஐந்தைப் பத்தைக் கொடுப்போம் என்று நினைக்கவில்லை. அதுதான் போகட்டும், போகிறபோது போய் வருகிறோம் என்றாவது சொல்லவேண்டாமா?
அப்பொழுதுதான் ஞனப்பிரகாசம் சிரித்துக்கொண்டே அந்தக் குண்டைத் தூக்கி றோசம்மாவின் தலையில் போட்டார்.
எதிர்வீட்டுக்காரர் மண்டை உடைபட்ட அன்று கைச் செலவுக்கென்று ஞானப்பிரகாசத்திடம் ஐம்பது ரூபாய் கடன்வாங்கினராம். அதையும் திருப்பிக் கொடுக்காமல், பேச்சு மூச்சில்லாமல் போய்விட்டாராம்!
றோசம்மா ஞானப்பிரகாசத்தை ஏசினார். அந்த மனிதர் மூச்சுக் காட்ட வேண்டுமே!
ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர்தான் இந்த ஏச்செல்லாம் மழை பெய்தமாதிரிப் பெய்து ஒய்ந்தது.
அவருக்கு வாய்த்தாற்போல அவருடைய மகன் இப்பொழுது நல்ல சமாரித்தனின் உவமையை வேதாகமத்திலிருந்து வாசித்துக் காட்டுகிறான்.
றோசம்மா என்ன செய்வாள்?
ஞானப்பிரகாசம் ‘பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்து’
என்று சிலுவை அடையாளமிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கிறார்,
தினகரன். 1967