இரண்டாவது ஆசை!…. ( சிறுகதை ) ….. வல்வை ந.அனந்தராஜ்.
உருகுனை இராஜதானியின் அந்தப் பிரமாண்டமான அரண்மனை வழமைபோல் மந்திரி பிரதானிகளாலும், காவலர்களாலும் நிறைந்து கலகலப்பாகக் காணப்பட்டது.
அங்கே மேல் உப்பரிகையில் அழகிய சிங்கள சிற்ப வேலைப்பாடுகளினால் அமைக்கப்பட்ட பட்டத்து ராணியின் பள்ளியறையில் மட்டும் என்றுமில்லாதவாறு மௌனம் குடிகொண்டிருந்தது.
பளபளக்கும் தங்கக் கட்டிலில், இலவம் பஞ்சு மெத்தையில் ஒய்யாரமாகச் சாய்ந்து சரிந்து சயனித்துக் கொண்டிருந்த மகாராணி விகாரைமகாதேவியின் உள்ளத்தை வாட்டிக் கொண்டிருந்த துயரம் இன்னும் பலமடங்கு அதிகரித்துக் கொண்டே சென்றது!
அவளுடைய அடிவயிற்றிலிருந்து எழுந்து கொண்டிருந்த பெருமூச்சு அனல் காற்றாக அந்தப் பள்ளியறையைச் சூடேற்றிக் கொண்டிருந்தது.
“தேவி!…ஏன் இந்த மௌனமும், துயரமும்? அதுவும் கருத்தரித்திருக்கும் போதுதானா இப்படி உனது உடலை வருத்திக் கொண்டிருக்க வேண்டும்?”
உருகுணை இராஜதானியின் பட்டத்து ராணி விகாரைமகாதேவியின் கால்மாட்டில் அமர்ந்து, அவன் விடுகின்ற பெருமூச்சுக்களையே பார்த்துக் கொண்டிருந்த மன்னன் காக்கவண்ணதீசனால், பொங்கி எழும் துயரத்தை அடக்க முடியவில்லை.
அவளது ஒவ்வொரு மூச்சுக்கும் தாளம் போடுவது போல், பரந்த மார்பகங்கள் முன்னோக்கி எழுவதும், தாழ்வதுமாகவே இருந்தன.
என்னதான் நாடாளும் மன்னனாக இருந்து, நீதி வழுவாது செங்கோலாட்சி, பார்போற்ற அரசாண்ட போதும், பள்ளியறையில் பட்டத்து ராணியின் முன்னால் மன்னனும்கூட பணிந்துதான் போகவேண்டும் என்பதற்கு இலக்கணமாகவோ என்னவோ, மன்னனும் அவளருகில் சோகத்துடன் இருந்தான்.
சிங்கள மன்னர்களின் வரலாற்றில் காக்கவண்ணதீசனின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலமாக இருந்தது. அவன் தனது அரசை வலிமையும், செல்வமும் மிக்கதொரு இராஜதானியாகப் பரிபாலித்து வந்தவுடன் தமிழர்களுடன் நல்லுறவையும் பேணி, அரச நிர்வாகத்தை நடத்தி வந்தது, உருகுணையின் சிறப்பான ஆட்சிக்கு வழிவகுத்தது.
“தேவி!…”
மெல்லிய முனகலுடன் மீண்டும் அழைத்த காக்கவண்ணதீசன் என்றுமே பொறுமையிழந்து விடக்கூடிய சாதாரண ஒரு மனிதனாக இருந்ததில்லை.
களனிதீசனின் மகளாகவிருந்த விகாரமகாதேவியை காக்கவண்ணதீசன் திருமணம் புரிந்த வரலாறே ஒரு சுவையான சம்பவம்தான்!
கல்யாணி இராஜதானியின் மன்னனான களனிதீசனின் மனைவியுடன், அவனுடைய தம்பியான அய்ய உத்திகன் என்பவன் கள்ளத்தொடர்பை வைத்திருந்தான். இது தெரியவரவே,அய்ய உத்திகன் அரசனுக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடித் தலைமறைவாக வாழ்ந்து வந்தான். அங்கிருந்தபடியே அரசனின் மனைவிக்கு ஒரு காதல் கடிதத்தை எழுதி, புத்தபிக்கு வேடமணிந்த ஒருவனிடம் கொடுத்து மகாராணியிடம் இரகசியமாகச் சேர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
ஒவ்வொருநாளும் அரண்மனைக்குப் பிச்சை எடுப்பதற்கு செல்லும் பிரதம பிக்குவின் பின்னால் செல்லும் ஏனைய பிக்குகளுடன் பிக்குவேடமணிந்த, அவனும் சென்று, கடிதத்தை இரகசியமாக அரசியிடம் சேர்ப்பிக்க முனைந்தபோது, களனிதீசன் அதனைக்கண்டு, அந்தக் கடிதத்தைப் பிரித்து பார்த்ததும் அவன் கண்கள் கோபாக்கினியை வீசியது. அவனுடைய செய்கையால் ஆத்திரமடைந்த மன்னன் களனிதீசன், மாறுவேடமணிந்து வந்த பிக்குவையும், பிரதமபிக்குவையும் கொன்று, கடலில் போடுவித்தான். அதனால் கடல், பொங்கிப் பரவாகித்ததுடன், களனிதீசனின் இராசதானியாகிய கல்யாணி மீதும் பாய்ந்தோடத் தொடங்கியது.
பொங்கிப் பிரவாகித்துக் கொண்டிருக்கும் கடலை அமைதிப்படுத்துவதற்காக தனது மகள் மகாதேவியை ஒரு தெப்பத்தில் ஏற்றி கடலுக்கு காணிக்கையாக்கினான். அவளை ஏற்றிச்சென்ற தெப்பம், மகாமகத்தின் கரையை அடைந்தது. மயங்கியநிலையில் கரையொதுங்கிய இராஜகுமாரியை யாரென்று அடையாளங் கண்டு கொண்ட காக்கவண்ணதீசன், மகாதேவியை மணந்து, தனது பட்டத்துராணியாக்கிக் கொண்டான்.
மகாமகத்தில் அவள் கரை ஒதுங்கிய இடம், விகாரை ஒன்றுக்கு அருகில் இருந்ததால், அவள் “விகாரை மகாதேவி” என அழைக்கப்பட்டாள்.
இராஜபரம்பரையைச் சேர்ந்த மகாராணியின் மகளாகப் பிறந்து வாழ்ந்த விகாரை மகாதேவியின் இறுமாப்பும், பிடிவாதமும் மட்டும் இன்னும் குறையவில்லை.
அந்தப் பள்ளியறையின் கட்டிலில் சாய்ந்தபடி படுத்திருந்த விகாரை மகாதேவியையே கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்த காக்கவண்ணதீசனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
“ஏன்தான் இவள் இப்படிப் பிடிவாதமாக இருக்கிறாள்…? இவளுக்கு என்ன குறையை நான் வைத்திருக்கிறேன்… உம்… எதற்கு இன்னும் ஒரு தடவை கேட்டுப் பார்ப்போம்…”
மன்னன், மனதுக்குள் குமைந்தவாறே, அவளுடைய மென்மையான கரங்களைப்பற்றிக் கொண்டான்.
“மகாதேவி!… இந்த உருகுணை இராஜதானிக்கே வலிமைவாய்ந்த மன்னனாகவிருக்கும் என்னால் உனது குறையைத்தீர்க்க முடியாதா? பகைவர்களே கண்டு நடுங்கும் படைவலிமையும், அதற்கும் மேலாக என் நாட்டு மக்களின் ஆதரவும் இருக்கும்போது, எனது பட்டத்து ராணியின் தேவைகளை நிறைவேற்ற முடியாத கையாலாகாத ஒரு மன்னன் என்று எண்ணுகிறாயா?….”
தனது கம்பீரம், ராஜமிடுக்கு எல்லாவற்றையும் உதறி எறிந்துவிட்டு, அவள் முன்னால், ஒரு குழந்தைபோல், குழைந்து குழைந்து பேசிக் கொண்டிருந்தான்.
தனது வலிமையான உரமேறிப்போன விரல்களால், விகாரை மகாதேவியின் மென்கரங்களை வருடிக்கொண்டே, அவளுடைய காந்தக் கண்களின் அழகை அணு அணுவாக இரசித்துக்கொண்டே இருந்தான்.
“ம்… கையை எடுங்கள்… உங்களால் எனக்கு என்னதான் செய்து தரமுடியும்? தமிழர்கள் என்றாலே உங்களது உடன்பிறப்பாகக் கருதுகின்றீர்கள். அவர்களால் எங்களுக்கு ஏற்படப்போகின்ற அழிவைப்பற்றி என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா?… எங்களுக்குப் பிறக்கப்போகும் மகன், இந்த உருகுணையில் அச்சமின்றி அரசாளக்கூடிய ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றீர்களா?… எப்பொழுது பார்த்தாலும் தழிழர்களுடன் சமாதானம், சமாதானம் என்ற குரல்தான் உங்கள் வாயிலிருந்து ஒலிக்கின்றது. ஏங்களுடைய சிங்கள இனத்தின் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களா?…”
அவளுடைய ஒவ்வொரு சொற்களும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புபோல், காக்கவண்ணதீசனைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன. அவளுடைய கைகளை விலக்கிய காக்கவண்ணதீசன், அதிர்ச்சியடைந்து எழுந்து நின்றான்.
அவள் புதிர்போட்டுப் பேசிக்கொண்டே இருந்தது. காக்கவண்ணதீசனை, மேலும் குழப்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருந்தது.
“தேவி!… என்ன உளறுகிறாய்? எங்கோ ஒரு கோடியில் தாமுண்டு, தம் கடமையுண்டு என்று இருக்கின்ற தமிழர்களுக்கும் உனது துயரத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? ஏன் அவர்களை இழித்துப் பேசுகின்றாய்? உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?…”
அவளுடைய செய்கைகள், காக்கவண்ணதீசனுக்குக் கோபத்தை ஏற்படுத்தினாலும், சற்று நிதானத்துடனேயே பேசிக்கொண்டிருந்தான்.
“ஆமாம்!… உருகுணையின் மகாராஜவுக்கு, கடலில் மிதந்து வந்த இந்த அனாதை பைத்தியமாகத்தான் தோன்றும்… ம்… போங்கள் வெளியே… உங்களுடன் என்னால் எதுவுமே பேசமுடியாது…”
பட்டத்துராணி என்ற நிலையை மறந்துவிட்ட விகாரைமகாதேவி குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்விட்டாள்.
“தேவி!… இந்த நேரம் உணர்ச்சிவசப்படுவது, உன் வயிற்றில் வளரும் குழந்தைக்குத்தான் பாதிப்பு ஏற்படும். நாளை இந்த நாட்டை ஆளப்போகும் எங்கள் மகன் அல்லவா? அவன் நல்ல பண்புள்ள, குணமுள்ள மைந்தனாகப் பிறந்துவர ஏதாவது நல்லவற்றை நினைப்பதைவிட்டு…”
“ஆமாம்!… அதனால்தான், அவனுடைய எதிர்காலத்தைப்பற்றி இப்பொழுதே சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன்… என்னுடைய கர்ப்பகால ஆசைகளை நிச்சயமாக உங்களால் நிறைவேற்றி வைக்க முடியாது… என் முன்னால் நிற்காதீர்கள்… நான் சிறிது ஓய்வெடுக்க வேண்டும்… வெளியே போய்விடுங்கள்…”
விகாரை மகாதேவியின் கோபம் தலைக்கேறிக் கொண்டிருந்தது. அழுது, அழுது அவளுடைய இரண்டு கண்களும் கோவைப் பழம்போல் சிவந்திருந்தன.
“தேவி!… கோபம், உன் நிதானத்தை மறைக்கின்றது. உனது ஆசைகளைத் தயங்காமல் கூறு… நிச்சயமாக நான் நிறைவேற்றி வைப்பேன்.”
“அப்படியா மகாராஜா!… வார்த்தை தவறமாட்டீர்கள் தானே? மகாராஜா…! மூன்று ஆசைகள்தான், என்னை நெருட வைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை உங்களால் நிறைவேற்றித்தர முடியுமா?”
பவளம் போன்று சிவந்த அவளுடைய சின்னஞ்சிறிய உதடுகளையும், பூரித்து பருத்த கன்னங்களையும், உள்ளத்து உணர்வின் வெப்பத்தினால் விம்மிப் புடைத்து ஒடுங்கும் மார்பையும் கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஆஹா… கர்ப்பகாலத்தில்தான் பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்களோ?”
அவளது அழகை ஆழமாக ரசித்துக்கொண்டே இருந்த காக்கவண்ணதீசன், அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதைக் கேட்கும் பாவனையில் இருந்தான்.
மகாராஜா!… எனது குழந்தை பிறந்து, இந்தப் பூமியில் கால் வைப்பதற்குமுன், நிறைவேற்றி வைக்கவேண்டிய முதலாவது ஆசை, இந்த உருகுணையில் வாழுகின்ற பெருந்தொகையான பிக்குகளுக்கு வழங்கி, நானும் பருகக்கூடிய
பெரியதொரு தேன் அடையை எடுத்துத்தரவேண்டும்!…” அவளை அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்த மன்னனுக்கு, அவளுடைய அற்பமான ஆசையை நினைத்துப் பார்த்தும் சிரிப்புத்தான் வந்தது.
“ம்… அடுத்து என்ன, உன் ஆசை… கூறு மகாதேவி!…”
மன்னன், ஆவலுடன் அவளுடைய அடுத்த இரு ஆசைகளையும் கூறும்படி பணித்தான்.
“மகாராஜா!… எனது, இரண்டாவது ஆசை… சிங்கள தேசத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தமிழ் மன்னன் எல்லாளனின் முதலாவது படைத்தளபதி ஒருவனின் தலையைச் சீவிய இரத்தம் தோய்ந்த வாளைக் கழுவிய நீரை, ஆசை தீரக் குடிக்கவேண்டும். ஆதன் மூலம் கருவிலே வளரும் எனது மகனின் உதிரத்தில் வீரம் வளரவேண்டும். சிங்கள தேசிய உணர்வு ஊற்றெடுக்கவேண்டும். மூன்றாவதாக அனுராதபுரத்தின் வாடாத தாமரை மலர்களைக்கொய்து, மாலைகட்டி, அதனை நாள் முழுக்க அணிந்து மகிழவேண்டும்…”
அவள் மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே, மன்னனைப் பார்த்தபடி படுத்திருந்தாள்.
“மகாதேவி!… என்ன இது?… இப்படியொரு விபரீதமான ஆசையை உன் மனதில் தேக்கி வைத்திருக்கின்றாய்! பஞ்சசீலத்தை தாரமாகக் கொண்ட, உன்னதமான பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிக்கும் நீயா, இப்படி ஒரு கொடுரமான எண்ணத்தை வளர்த்து வருகின்றாய்! மகாதேவி!… உனது முதலாவது ஆசையையும், மூன்றாவது ஆசையையும் இப்பொழுதே, இந்தக்கணமே என்னால் நிறைவேற்றி வைக்க முடியும்… ஆனால் தேவி!… உன்னை சிரம் தாழ்த்தி வேண்டுகின்றேன்… உனது இரண்டாவது ஆசையை மட்டும் மறந்துவிடு… எல்லாளன்!… நீதியும், நேர்மையும் வழுவாது ஆட்சிபுரியும் ஒரு மறத்தமிழன்… அவனைப் போன்றுதான் அவனுடைய படைத்தளபதிகளும் நீதிக்குப் புறம்பாக எதையும் செய்யமாட்டார்கள்… அவர்களைப் போய்…”
அதற்குமேல், அவனால் எதுவுமே கூறமுடியவில்லை… சோகம் கவிந்த நிலையில் தன் தலையைத் தொங்கப் போட்டபடி அரண்மனையைவிட்டே வெளியேறினான்.
காக்கவண்ணதீசன் வெளியேறிய சில நாழிகைகளுள், அரண்மணை வாசலில் குதிரைகளின் குளம்பொலி கேட்டு ஓய்ந்தது.
குதிரையிலிருந்து இறங்கிய காக்கவண்ணதீசனின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதிகளில் ஒருவனான வேலுசுமண, அரண்மனையை நோக்கி விரைந்து வந்தான்.
“மகாராஜா!… மகாராஜா!…”
மிக அவசரமாக அழைத்துக்கொண்டே வந்த தளபதி வேலுசுமணவின் குரலைக் கேட்டதும், விகாரை மகாதேவி, பள்ளியறையைவிட்டு வெளியே வந்தாள்.
“வேலுசுமண!… மகாராஜா அவசர அலுவல் காரணமாக வெளியே சென்றுவிட்டார்… உன்னிடம் இருந்துதான் ஒரு உதவியை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்… நல்ல சமயத்தில் நீயே வந்துவிட்டாய்… வா உள்ளே!…”
வியப்புடன் அவளையே பார்த்துக்கொண்டு நின்ற வேலுசுமண, மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போன்று, அந்தப் பட்டத்து ராணியைப் பின் தொடர்ந்து சென்றான்.
“தளபதியாரே! நான் கருவுற்றிருக்கும் நிலையில், கருவில் வளரும் எனது மகனின் உள்ளத்தில் வீரத்தையும், நாட்டுப்பற்றையும் உருவாக்க ஆசைப்படுகின்றேன்”
பெரிய பீடிகையுடன் ஆரம்பித்த மகாராணி, தன்னுடைய ஆசையை நிறைவேற்றும் பொறுப்பை தளபதி வேலுசுமணவிடம் கையளித்தாள்.
ஆம்!.. பட்டத்துராணி விகாரை மகாதேவியின் மசக்கைகால இரண்டாவது ஆசையை நிறைவேற்றுவதற்காக மன்னனுக்குத் தெரியாமலேயே எல்லாள மாமன்னனின் தலைநகரான அனுராதபுரத்திற்கு, தளபதி வேலுசுமண அனுப்பி வைக்கப்பட்டான்.
குதிரை வேலையாள் போன்று, மாறுவேடத்தில் அனுராதபுரத்திற்குச் சென்ற வேலுசுமண, தான்கொண்டு சென்ற வாளினைக் கதம்ப நதிக்கரையில் ஒழித்து வைத்துவிட்டு அரண்மணை லாயத்தில் குதிரைகளைப் பராமரிக்கும் பணியில் சேர்ந்து கொண்டான்.
அவன் அங்கிருந்தபடியே, எல்லாளனின் முதல்தர படைத்தளபதிகளில் ஒருவனான நந்த சாரதியின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கண்காணித்துக் கொண்டு வந்தான்.
“ம்… எப்படியும், இவனைக் கதம்ப நதிக்கரைக்கு வரச்செய்ய வேண்டும். அங்கே வைத்து இந்த நந்த சாரதியின் தலையைச்சீவி இரத்தம் தோய்ந்த வாளைக் கொண்டுபோய் மகாராணியின் பாதங்களில் காணிக்கையாக்க வேண்டும்…”
அவனை ஏமாற்றி அழைத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த வேலுசுமண, ஒரு நாள், ‘வாகா’என்ற அரச குதிரையை எல்லோருமே, அறியக்கூடிய வகையில் கடத்திக்கொண்டு போய் கதம்ப நதிக்கரையில் கட்டி வைத்துவிட்டுக் காட்டிற்குள் உருவிய வாளுடன் மறைந்து நின்றான்.
வேலுசுமண, ராஜகுதிரையை கடத்திச் சென்றுவிட்டான் என்பதை அறிந்து தளபதி, நந்த சாரதி வெகுண்டெழுந்து அவனைப் பிடித்து இழுத்து வருவதற்காகத் தனது குதிரையில் காற்றாய்ப் பறந்து சென்றான்.
காற்றையும் கிழித்துக் கொண்டு புயலெனப் பாய்ந்து வந்த நந்த சாரதியைத் தூரத்தில் கண்டுவிட்ட வேலுசுமண அப்படியே மலைத்துப்போய் நின்றான்…!
“அடேயப்பா!… எல்லாளனின் படைத்தளபதிக்கே இவ்வளவு வீரமா?…”
காட்டிற்குள் மறைந்து நின்று, அவன் வருவதையே பார்த்துக் கொண்டு நின்று வேலுசுமண, குதிரையில் வேகமாக நெருங்கி வந்த நந்த சாரதியின் தலையை கண்கள் இமைக்கும் முன்னே, தன்கூரிய வாளினால் சீவினான்.
அவன் வந்த வேகத்தில் வேலுசுமணவின் கூரியவாள் வீச்சில், நந்த சாரதியின் தலை துண்டாடப்பட்டு, உருண்டு சென்று கதம்ப நதிக்கரையில் விழுந்தது.
நதிக்கரையில் இருந்த நந்த சாரதியின் தலையைக் கைப்பற்றிய வேலுசுமண, இரத்தம் தோய்ந்த வாளுடன் உருகுணைக்கு வந்து, விகாரை மகாதேவியை வணங்கி, அவளிடம் அந்த வாளைக் கையளித்தான்.
“ஆஹா… சபாஷ்!… தளபதியாரே!… எனது ஆசையை நிறைவேற்றி வீரமுள்ள ஆண்மகன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்… இதனூடாக வயிற்றில் வளரும் எனது மகனுக்கு தமிழர்களுக்கு எதிராக உணர்வை ஊட்டுவேன்…”
அவள், ஆர்ப்பரித்து சிரித்துக் கொண்டே, வாளில் தோய்த்திருந்த தளபதி நந்த சாரதியின் இரத்தத்தை நீரில் கழுவிக் குடித்தாள்!
ஆம்!… அவள் குடித்த தமிழ் மன்னன் எல்லாளனின் தளபதியின் குருதி, அவளது கருவில் உருவாகி வளர்ந்துகொண்டிருந்த ‘கைமுனு அபயன்’ என்ற துட்டகைமுனுவின் குருதியினூடாகப் பரவி, விகாரை மகாதேவியின் ஆசையைச் செயற்படுத்தும் சக்தியாக மாற்றியது!
(2003)