
சிங்கப்பூரில் எனது மூன்றுவருடகால வாழ்வும் என்னைக் கணவனாக வரித்துக் கொண்டவளின் முகத் தெளிவும். (உண்மைக் கதை பகுதி (4)![]()
ஏலையா க.முருகதாசன்:
என்னுடைய பக்கம் திரும்பிய அகமட் யோகமலருக்கு அருகிலேயே நின்றுவிடுவேனோ என்று நினைத்து வேர்க் இஸ் இம்போட்டன் என்றவர் கிவ் ரெம்போ ரூ நெக்ஸ் மந்த் என்று சொல்லி விட்டுப் போனவர் திரும்பி வந்து முருகதசான் புரடக்சன் ஏறியாவில் உள்ள ஒருவர் இன்று வரவில்லை.அந்த மிசினிலிருந்து உதிரிப்பாகம் உடனடியாகத் தேவைப்படுகின்றது.உங்ளுக்கு அந்த மிசினை இயக்கி உதிரிப்பாகங்களை தயாரிக்க பயிற்சி கொடுத்திருந்தோம்தானே உடனடியாக அதை இயக்கி உதிரிப் பாகங்களை தயாரியுங்கள் எனச் சொன்னார்.
டிரிப் சுவிட்ச் செய்வதற்கான உதிரிப் பாகங்களும் அங்கேயே செய்யப்படுவன.எனக்கு அதை இயக்குவதற்கு பயிற்சியும் ஆரம்பத்திலேயே தந்திருந்தார்கள்.
அங்கு பல அளவுகளில் உதிரிப் பாகங்களுக்குரிய உலோகங்களில் பெரிய வளையங்களாக அவை இருக்கும்.அதனை ஒரு இடத்தில் மேலிருந்து இயங்கும் கிரேனால் உதிரிப் பாகத்தை மிசினுக்கு நேரே இருக்கம் ஒரு ஸ்ராண்டில் கொழுவி இறுக்கமாக பூட்டிவிட்டு அந்த வளையத்திலிருந்து மேல் முனையை இழுத்தக் கொண்டு வந்து மிசினின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு செருகி எடுத்ததன் பின்னர் மிசின் கதiவைத் திறந்து வைத்தபடி ஒருமுறை சுவிட்சைப் போட லேத் கருவி மேலேயிருந்து கீழே வேகமாக நகர உதிரிப் பாகம் வெட்டப்படும்.வெட்டப்படப் போகும் உதிரிப்பாகம் சரியான அளவுகளில் வெட்டப்படுகிறதா என்பதை கண்டறிய அதற்கான வளைவான ஒரு கம்பியை, வெட்டிய மறுமுனையில் உள்ள துவாரத்திற்கள் செலுத்தினால் அது உள்நுழைந்தால்,சரியான முறையில் வெட்டப்படும் என்பதால், கதவினை மூடிவிட்டு மிசினை இயக்க வேண்டும்.டிரிப் சுவிட்சுக்கான ஒரு குறிப்பிட்ட உதிரிப்பாகம் பற்றாக்குறையாக இருப்பதால் அந்த உதிர்ப்பாகத்தை வெட்டுகின்ற மிசினை உடனடியாக இயக்கச் சொன்னார்.
கதைப்பது கேட்கக்கூடிய தூரத்திலேயே யோகமலர் வேலை செய்து கொண்டிருந்ததால் யோகமலருக்கு சொல்லிவிட்டு போவமென்று நினைத்து அவளுக்குக் கிட்டப் போனபோது „ என்ன அன்பான புருசனாரே அகமட் என்ன சொன்னாங்க’எனறாள், „அங்கை பாருங்கள் உங்களுக்க இடப்பக்கம் தெரியுதே அந்த மிசினை ஓடவிட்டு பாட்ஸை வெட்ட வேண்டும் அங்கை போகப் போகிறேன்’ என்றேன்.அதைத்தான் சொன்னவர் என்று சொல்லிக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்தேன்.அவள் முகம் தெளிவாக இருந்தது.
„ அங்க போகப் போறிங்களா’ என்று அவள் கேட்க ஓம் என்பது போல தலையையாட்டினேன்,’இன்னைக்கு மட்டுந்தானா’ என்று அவள் கேட்க,’இன்றைக்கு மட்டுந்தான் „ என்று சொல்ல,தனது கைப்பைக்குள்ளிருந்து ரொபி போன்ற ஒன்றை எடுத்து, சுற்றியிருந்த தாளை பிரித்தெடுத்து கையில்
வைத்திருந்தபடியே „வாயைத் திறவுங்கள்’ என்று சொல்லி எனது வாய்க்குள் பச்சை நிறத்தில் ரொபி போன்ற ஒன்றை வைத்தாள்,’என்ன இது’ ,’சாப்பிடுங்கள்’ என்று சொல்ல,புளிப்பும் இனிப்பும் கலந்த அதை உமிஞ்சு கொண்டே நான் வேகமாக நான் இயக்க வேண்டிய மிசினை நோக்கி நடக்க,அவளின் தோழி ஒருத்தி எனது வாய்க்குள் ரொபியை வைத்ததைக் கண்ட அவள்’ யோகி இது ரூ மச்’ என்று நையாண்டி செய்ய’ ஆமா என் புருசனுக்கு நான் கொடுப்பேன்,உனக்கென்ன ரூ மச்சா இருந்தாலென்ன திறீ மச்சா இருந்தா உனக்கென்ன’ என்று சொல்வது எனது காதில் விழுந்தது.
நான் இயக்கி இயங்கிக் கொண்டிருக்கும் மிசினடியிலிருந்தபடியே யோகமலரைப் பார்க்க முடியும்.அவளும் தனது மிசினிலிருந்து அடிக்கடி என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
மிசினிலிருந்து வெட்டி வந்த பாகங்களின் தரத்தை பரிசோதிக்க வந்த ஆசா என்ற மலாய் பெண் வெட்டிய உதிரிப்பாகங்களலிருந்து ஐந்தினை எடுத்து, என்னை நிமிர்ந்து ஒரு புன்னகையுடன் பார்த்தவள், பாகங்களின் அளவைத் தான் கொண்டு வந்த கருவியால் அளந்து சரிபார்த்துக் கொண்டே,யோகமலர் இருந்த பக்கமாக தனது கண்களை திருப்பிக் காட்டி „அந்தக் கேர்ளை கல்யாணம் செய்யப் போறீங்களாமே கேள்விப்பட்டேன் „என்று சொன்னவள் தனது வேலையின் கவனத்தைச் சிதறவிடாது, „சரியான அளவுகளில் வெட்டப்படுகிறது தொடர்ந்து மிசின் வெட்டட்டும் „என்றவள், மிசினடியிலிருந்து கொஞ்சம் தள்ளிவந்து உலோக வளையம் வைத்திருந்த ஸ்ராண்டில் ஒரு கையையும், இன்னொரு கையை தனது இடுப்பில் வைத்தபடி அதே உள்ளர்த்தமான புன்னகையுடன், நான் கேள்விப்பட்டது உண்மையா,’நீங்கள் ஒரு நாள் சொல்லியிருந்தீர்களே நீங்கள் கல்யாணம் செய்து மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருப்பபதாய்,அப்ப இது எப்படி’ என்றாள்.
„உங்களுடைய மனைவி அந்தக் கேர்ளை கல்யாணம் செய்வதற்கு சம்மதிப்பாளா’ என்று கேட்டவள்,’உங்கள் சொந்த விசயத்தில் தலையிட விரும்பவில்லை.சும்மா கேட்டன்,உங்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்கப் போயினம்ஒருவர் சிறீலங்காவில் இன்னொருவர் மலேசியாவில்,மலேசியாவுக்கும் சிறீலங்காவுக்கும் அடிக்கடி விமானத்தில் பறக்க வேண்டி வரப் போகுது, எப்படியாயினும் வாழ்த்துக்கள் „என்று சொல்லிய தரங்காணும் வேலையைச் செய்யும் ஆசா வெட்டி நிரம்பிய உதிரிப் பாகங்கள் உள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு போவதைச் சைகையால் காட்ட நான் மிசினை நிறுத்த,நிரம்பிய தகரப்பெட்டியை எடுத்து தள்ளுவண்டியில் வைக்க, நான் அருகில் இருந்த வெறும்பெட்டியை காலால் நகர்த்தி உதிரிப் பாகம் வெட்டிவிழும் இடத்திற்கு தள்ளிவிட்டேன்.
ஆசாவும் நானும் கதைத்தது மூன்று நிமிடங்களுக்கு உட்பட்டதே.ஆங்கிலத்திலேயே அவள் கதைத்தாள்.அவள் ஆங்கிலத்தில்தான் கதைக்க வேண்டும்.எனக்கு மலேய் தெரியாது அவளுக்கு தமிழ் தெரியாது.ஆனால் தமிழில் சில சொற்களை விளங்கிக் கொள்வாள்.மலேய் பெண்கள் இளமையில் மிக அழகாயிருப்பார்கள்.முகம் மாதுளை
முத்துக்களின் சிவப்பு நிறத்திலிருக்கும்.ஆனால் அவர்கள் திருமணம் செய்து பிள்னைகளைப் பெற்றுவிட்டாள் உடல் பருமனாகத் தொடங்கிவிடும். கம்பாயம் என்ற அழகான உடை உடுத்தியிருப்பார்கள்.இளம் மலேய் பெண்கள் நீளக் காற்சட்:டையும் பிளவுசும் போடுவார்கள்.
ஆசா என்னுடன் கதைத்த அன்று, சின்னச் சின்னப் பூக்கள் போட்ட கம்பாயம் உடுத்தியிருந்தாள்.அந்த உடையில் அழகாகவும் இருந்தாள்.அதே போன்று உடைகளைத் தைக்கும்,நான் வேலை செய்த பக்ரறியில் ஒரு மலேய் பெண்ணைக் கொண்டு இரண்டு கம்பாயம் தைப்பித்தேன்.மலேய்ப் பெண்ணிடம் ஒன்று மனைவிக்கு இன்னொன்று யோகமலருக்கென்றேன்.மலேய் பெண் உங்களுடைய மனைவியின் உடல் அளவு எப்படியிருக்குமென்றாள்.நான் யோகமலரின் உடல் அளவு என்று சொன்ன நான், அடுத்த நாள் மனைவியின் புகைப்படத்தைக் கொண்டு போய் காட்ட பார்வையாலே அளவெடுத்தவள், யோகமலரையும் பார்வையால் அளவெடுத்தாள்.யோகமலருக்கு கம்பாயம் தைப்பதை சொல்லவேண்டாம் என்றேன்.சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கம்பாயம் என்ற உடுப்புபற்றித் தெரியும்.விமானப் பணிப் பெண்கள் அழகாக உடுத்திருப்பார்களே அதுதான் கம்பாயம்.
நான் ஆசாவுடன் கதைத்துக் கொண்டிருப்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டேயிருந்தாள் யோகமலர்.சங்ரிலா கொட்டலில் பேர்சனல் மனேஜர் ராண்(அவர் ஒரு பெண்) எங்கள் இருவரையும் கணவன் மனைவி என்று சொல்லியது பக்ரறியில் முழு வேகத்துடன் பரவிவிட்டது.
சிறீலங்காவிலிருந்து வந்த ஒருவன் மலேசியா ஜோகூர் பாருவிலிருந்து வேலைக்கு வந்த பெண்ணை திருமணம் செய்யப் போகிறான் என்று ஒரு கதையும் , அவர்களிருவரும் நண்பர்கள் என்றும், இல்லை அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும்.சிறீலங்காவிலிருந்து வந்தவருக்கு அங்கு மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். எப்படி அவர் இவளைக் கல்யாணம் செய்ய முடியும் என்று பலவிதமான கதைகள் பக்ரறியில் உலவத் தொடங்கி,பிறகு பக்ரறியின் கேட்டைக் கடந்து மெல்ல மெல்ல சிறீலங்காவிலிருந்து வந்தவர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது.
யாரென்று தெரியாமலே, பெண்கள் ஆண்கள் மத்தியில் கேள்விப்படுதல் என்ற நிலையில் எங்கள் இருவரைப் பற்றிய கதையைக் கதைக்கத் தொடங்கியிருந்தனர்.
வந்த இடத்தில் சேறிலை விளக்கி தண்ணியில கழுவிப் போட்டு போடுவன் என்று என்னைப் பற்றியும், மலேசியாக்காரி மருந்து போட்டு மயக்கி வைச்சிருக்கிறாள் என்று யோகமலர் பற்றியும் அவருக்கு’அது „தேவைப்படுகிறது அதை அனுபவிக்கிறான் என்றும் கதைகள் உலா வந்த நேரத்தில் ஓசிபிசி கட்டிடத்தில் உள்ள ஒரு தெல்லிப்பழைப் பிள்ளைக்கு கொடுத்துவிடச் சொல்லி எனது மனைவியின் கடிதத்திற்குள் அவரின் பெற்றோர் தபால் உறையில் ஒட்டி அனுப்பி அவரின் முகவரி எழுதிய கடிதத்தைக் கொடுக்கவென அங்கு போயிருந்தேன்.
அது பெரிய மாடிக் கட்டிடம்.லிப்டில் போய் தேடுவது மிகவும் சிக்கலானது.ஆதலால் படியில் ஏறி ஒவ்வொரு புளோராக சிறீலங்காப் பிள்ளைகள் இருக்கும் அறைகளின் கதவுகளைத் தட்டி கடித உறையிலிருந்த முகவரியைக் காட்டி, இவர் எந்தப் புளோரில் இருக்கிறார் எனக் கேட்க சிலர் தெரியாதென்றும் சிலர் ஊகத்தில் அவராகத்தான் இருக்கும் என்றும் சொன்னார்கள்.டென்மார்க்கில் அம்மன் கோவில் வைத்திருப்பவரும் சிங்கப்பூரில் வேலை செய்தவரே.அவர் அங்கிருந்த போது அங்கும் யாருக்கோ எதுவோகொடுக்கவென்று போயிருந்தேன்.பின்னர் ஞாபகப்படுத்திக் கொண்ட போது அவரின் முகம் ஞாபகத்திற்கு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நூல் வெளியீட்டுக்காக டென்மார்க் போனபோது அந்தக் கோவிலுக்கும் போயிருந்தேன்.கோவிலை நடத்தும் பெண் என்னை உற்றுப் பார்த்தார். விட்டுவிட்டு அடிக்கடி பார்த்தார். சில வேளை அவர் அங்கு என்னை கண்டதை ஞாபகப்படுத்திப் பார்த்திருக்கலாம்.
ஒருவழியாக தபால் உறையில் உள்ள முகவரிப் பெண்ணின் அறையைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினேன்.கதவைத் திறந்த பெண்ணிடம் முகவரியைக் காட்டி அவர் இருக்கிறாரா என்று கேட்டுவிட்டு,என்னுடைய ஊர் தெல்லிப்பழை என்னுடைய பெயர் முருகதாசன் இங்கை ஜிஇயில் வேலைசெய்கிறன்.மனைவி அனுப்பிய கடிதத்திற்குள் இந்தக் கடிதம் இருந்தது குடுக்க கொண்டு வந்தனான் என்று சொல்ல, அறைக்குள்ளேயிருந்து என்னைப் பற்றி நான் சொன்ன விபரத்தைக் கேட்டுக் கொண்டிருந்த மூன்று பெண்கள் கோல் போன்ற இடத்திற்கு வந்தார்கள்.
அதில் ஒருத்தி தனக்குத்தான் இந்தக் கடிதம் என்று சொல்லி வாங்கினவள் தாங்ஸ் என்று சொல்லிவிட்டு,இருங்கள் ரீ குடிச்சிட்டுப் போங்கள் என்றாள் வேகமாக வேண்டாம் என்றேன். அங்கே நான்கு பேர் நின்றார்கள், இன்னொருத்தி திரும்பி கேட்கவா என்றாள், அவளே „கோபிக்காதீங்க உங்கடை பக்றியில் ஊரிலை கல்யாணம் செய்து மூன்று பிள்ளைகளிருக்கிற ஒரு ஆள் அங்கை வேலை செய்யிற மலேசியன் கேர்ளை கல்யாணம் செய்யப் போகிறாராமே உண்மையா’ என்றாள்.
எனக்குப பகீர் என்றது.உடம்பு வியர்க்கத் தொடங்கியது.அவர்கள் ,நான்தான் அவர் என்று தெரிந்து கேட்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். என் பெயரை அவர்கள் கேள்விப்பட்ட செய்தியோடு சேர்த்து அறிந்திருந்ததால்,தெரிந்துதான் கேட்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட நான் முகத்தில் எதையுமே காட்டிக் கொள்ளாமல்,’நீங்கள் சொல்ற மாதிரி நான் கேள்விப்படேலை’ என்று சென்ன நான்,வாறன் என்று சொல்லிவிட்டு,இனிப் படியேறத் தேவையில்லையென்றெணணிக் கொண்டு லிப்டடிக்குப் போய்க் கொண்டிருக்கையில் பூட்டாத கதவு வழியாக „இவர்தான் அந்த ஆள் ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரிச் சொல்லிவிட்டுப் போகிறார்’என்று யாரோ ஒருத்தி சொல்வது காதில் விழும் சத்தத்துடன் கதவைச் சாத்தும் சத்தமும் கேட்டது.
( குறிப்பு :ஒரு சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சில விசயங்களை சொல்லும் போது ஞாபகம் நழுவிப் போகாமலிருப்பதற்காக தொடர்புடைய சம்பவங்களை விபரித்து பின் தொடர்தலை தொடருகிறேன் என்பதை எனது சுயசரிதையை வாசிப்பவர்களுக்கு அறியத் தருகின்றேன்;)
இரவுச் சாப்பாட்டு நேரம் வந்தது.வழமை போல அவளுக்கருகிலிருந்து அவள் கொண்டு வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.நான் வேலைக்குப் போகும் போது தேநீர் கொண்டு போவது வழக்கம்.ஆனால் இனிமேல் நீங்கள் கோப்பி தேநீர் கொண்டு வர வேண்டாம் நானே கொண்டு வருகிறேன் என்று சொன்னவள் அன்று பெரிய சுடுதண்ணிப் போத்தலில் கோப்பி கொண்டு வந்திருந்தாள்.சுடுதண்ணிப் போத்தல் மூடியைத் திறந்து கோப்பியை வார்த்து தந்தவளிடம் கேட்டேன் „ நீங்கள் எதிலை குடிக்கப் போறியள் „ என்று இதிலைதான்,’நீங்க குடிச்சிட்டு தாங்க நான் இதிலை’ குடிக்கிறன் என்றாள்.’இதிலையா’ என்றேன்,’ஆமா புருசன் குடிச்ச கப்பிலை பெண்டாட்டி குடிக்கலாம்’ என்றாள்.
யோகமலர் எப்பொழுதும் மெல்லிய கீறாய் திருநீறு பூசியிருப்பாள்.சிறிய கறுப்புப் பொட்டும் வைச்சிருப்பாள்.
சாப்பிட்டு முடிஞ்சு கோப்பியும் குடிச்சு முடிஞ்சதன் பின் அவள் கேட்டாள் „ பார்த்திட்டே இருந்தேன், அந்தக் குவாலிற்றிக் கொண்ரோலர் ஆசா ரொம்ப நேரமாச் சிரித்து சிரித்துப் பேசினாள், புருசனாரே பொய் சொல்லாமல் பெண்டாட்டிக்கு உண்மை சொல்லுங்க அவள் என்ன பேசினாள் என்றாள்(என் மனைவிக்கும் இவளுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தன.இன்றும் நான் போகுமிடம் சொல்லிவிட்டுப் போய் நேரஞ் சென்று வந்தால் புருசனே எங்கை இவ்வளவு நேரமும் நின்று போட்டு வாறியள், பெண்டாட்டிக்குப் பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்லுங்கள் என்பாள்.நான் ஒரு இடமும் போகவில்லை போன வேலை முடிஞ்சு நேர வாறன் என்று சமாளித்தால் அவள் நான் போன இடங்களையும் சொல்வாள்,உங்களைப் பற்றி அடிஅந்தலை வரையும் தெரியுமென்பாள்.நான்; உங்களுடைய பெண்டாட்டி என்பாள்)
ஆசா சும்மாதான் கதைத்தாள் என்றேன்,பெண்டாட்டிக்குப் பொய் சொல்லாதீங்க „ நீங்க என்னைக் கல்யாணம் பண்ணப் போறீங்களா என்று கேட்டிருப்பாள்,உங்க மனைவி அதான் என் அக்கா அதற்குச் சம்மதிப்பாளா என்று கேட்டிருப்பாள்.சிறீலங்காவில் ஒரு மனைவி மலேசியாவில் ஒரு மனைவி பிளைட்ல அங்குமிங்கமாக பயணம் செய்யப் போறியள் என்று கேட்டிருப்பாள் அதுதானே என்றாள்.பிறகு,ஆமா நாங்க கல்யாணம் பண்ணினா அவளுக்கென்ன,அது எங்க பேர்சனல் மாற்றர்.நீங்க அவளோட பேர்சனல் மாற்றர் எதுவுமே இனிமே பேசாதீங்க என்றாள்.
எனக்குத் திகைப்பாகவிருந்தது.கதைத்ததைச் சொன்னாளா என்றேன்.அதற்கு அவள் ஆசா எதுவுமே சொல்லவில்லை இது சத்தியம் என்றவள் „ என் அன்பான புருசனாரே,புருசன் மீது தூய்மையான அன்பு வைச்சிருக்கும் பெண்டாட்டி
புருசனை முழுமையாக அறிவாள்.என்று உங்கள புருசனாக என்னோட மனம் ஏற்றுக் கொண்டதோ அன்றிலிருந்து நீங்க என் புருசன்தான்.உடலால மட்டும் சேரவில்லையேதவிர நீங்க எனக்குரியவர் என்று விதி எழுதப்பட்டுவிட்டது அதுவும் சீக்கரத்தில் நடக்கும் என்று அவள் சொல்ல அவளின் திடத்தை என்னைப் புருசன் என்று சதா நினைத்துக் கொள்ளும் தூய்மையான அன்பைக் கண்டு என்ன நினைப்பது என்று தெரியாது தடுமாறி பூரித்துப் போனேன்.அவளிடம் எனது மனைவியும் புருசனே என்று கூப்பிட்டு பெண்டாட்டிக்குப் பொய் சொல்ல வேண்டாம் என்று சொல்லி என்னைப் பற்றி முழுவதும் சொல்லிவிடுவா என்ற விபரத்தைச் சொன்னேன்.
„அப்படியா’என்று மலர்ந்தவள், பார்த்தீங்களா அக்காவும் நானும் உங்க பெண்டாட்டிங்க என்று நீங்க பிறந்த போதே எழுதியாச்சு.நான் கும்பிடுற அம்மன் உங்களை எனக்கு காட்டியிருக்கா என்று சொன்னதும் இன்னும் வியப்பாக இருந்தது.வியப்பும் மகிழ்ச்சியுமான நான் „ என்னுடைய குலதெய்வமும் எங்களுடைய ஊரான தெல்லிப்பழையிலை இருக்கிற முத்துமாரியம்மன் என்றேன்.
அதைக் கேட்டதும் வியப்புடன் தலையைக் குனிந்து கொண்டவள்,எனது கைக்குள் தனது கையைக் கொடுத்து பிடித்தபடியே தோளில் சாய்ந்தபடி அழுதாள்.’பார்த்தீங்களா, எங்க விதியை, உங்களை மலேசியாவிலோ சிங்கப்பூருலோ பிறக்க வைக்காவிட்டாலும் சிறீலங்காவில பிறக்க வைத்து வேர்க்கிற்கு இங்க வரவழைத்து என்னையும் வேர்க்கிற்கென்று இங்கை வரவழைத்து உங்களை எனக்குக் காட்டி உங்கள் மீது காதல் கொள்ள வைத்து நீ கொஞ்ச நாள் உங்ககூட வாழ்ந்தாளும் உன் புருசனோட வாழ் என்று நான் வழிபடுற அம்மன் சொல்லியிருக்கா என்று அழுதவளின் கண்ணிலிருந்து சூடான கண்ணீர் எனது தோள்பட்டையச் சேர்ட்டையும் தாண்டி சுட்டது.சிங்கப்பூரிலோ மலேசியாவிலோ நீங்க பிறந்திருந்தாளும் உங்களை விதி சேர்த்திருக்குமா என்பது சந்தேகமே. உங்களைஇங்க வரவழைச்சு சேர்த்திருக்கேன்றா என்றாள்
எங்களுக்கு ஐந்து மீற்றர் தள்ளி உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறீலங்கா பிள்ளைகளில் ஒருத்தி’அங்கை பார் நடக்கிற கூத்தை.அவள்தான் அப்படியென்றாள் இந்தாளுக்கு புத்தி எங்கை போயிட்டு’ என்று சொல்வது அரையும் குறையுமாகக் கேட்டது.
தலையைத் தடவி எதற்காக எப்பவும் அழுகிறியள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு மிகத் தூரம் என்று சொல்ல முடியாத அருகில்: இருந்த அவளுடைய மூன்று தோழிகளும் எழுந்து வந்து,எங்களுக்கருகில் உட்கார்ந்து,’அழ ஆரம்பிச்சிட்டாளா, இவளோட நாங்க படுறபாடு பெரும்பாடுங்க.வேல முடிஞ்சு பஸ்ல போவம்லா அப்ப இவ அழுது கொண்டே வர்றா,ஏண்டி அழுறே என்றாள் இனி அவரை நாளைக்குத்தானே பார்ப்பேன்றாள்,நீங்க ஊருக்குப் போறப்போ என்ன செய்வீங்களோ எது செய்வீங்களோ தெரியாது அவளையும் அழைச்சிட்டுப் போங்க,இல்லேன்னா
அவள் பைத்தியக்காரியாயிடுவா’ என்றவர்கள் எழுந்து பழைய இடத்திலிருக்கப் போய்விட்டார்கள்.
அவள் எனக்கு நெருங்கிய அருகிலிருந்தாள், நெற்றியைப் பார்த்தேன்.திருநீற்றுக்கீறு வியர்வையால் மறைந்திருந்தது.சிறிய கறுப்புப் பொட்டைப் பார்த்தேன்.’என்ன பார்க்கிறீங்க இந்தக் கறுப்புப் பொட்டு சீக்கரத்தில உங்க கையால சிவப்பு பெட்டா மாறிடும்ங்க’ என்றவள், இனியும் அங்கயா வேல என்றாள்.நான் ஓம் என்பது போல தலையாட்டினேன்.
சாப்பாடு முடிஞ்சு எல்லோரும் எழுந்து போக,கொஞ்சம் பொறுங்க என்று தாமதித்தவள் எல்லாரும் போனதன் பின்பு கையை நீட்டினாள் தூக்கிவிட்டேன் .புருசனாரே உங்க பெண்டாட்டிக்கு என்று முகத்தை முன்னுக்கு கொண்டு வந்து ‘ என்று எதையோ எதிர்பார்த்து நின்றாள்……..அதைக் கொடுத்தேன்…
(என்னதான் சுயசரிதை என்றாலும் என்னைத் தன் கணவனாக தீவிர அன்பு செலுத்தி வாழ்பவளின் எனக்கும் அவளுக்குமுள்ள அந்தரங்க விருப்பினை எழுதுவது அவளின் ஆத்மாவுக்குச் செய்யும் துரோகமாகும்எனவே எழுத விரும்பவில்லை)
(தொடரும்)
![]()