கவிதைகள்

படைப்புக்கள் சிறந்து நின்றால் பாரில் வாழும்!… ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

கவிதை செய்வேன் நானும்
நல்லதொரு கவிதை செய்வேன்

மரபுடனும் கவிதை செய்வேன்
மரபின்றியும் கவிதை செய்வேன்

மயக்கும்படியும் கவிதை செய்வேன்
பலர் வியக்கும்படியும் கவிதை செய்வேன்

கண்டதையும் கவிதை செய்வேன்
காணாததையும் கவிதை செய்வேன்

ஆயினும் நான் கவிஞனில்லை
உயர உயர வானில் பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகிடுமா?

ஆதலினால் சொல்லுகின்றேன்
நான் கவிதை செய்வேன் ஆனால் கவிஞன் இல்லை

கட்டுரை வடிப்பேன்
வடிவுடனே கட்டுரை வடிப்பேன்

எட்டாதவற்றையும் கட்டுரை ஆக்கிடுவேன்
எட்டுகின்றவற்றையும் கட்டுரையாய் சொல்வேன்

நம்புகின்றவற்றையும்
கட்டுரையாய் கண்டிடுவேன்
நம்ப முடியாதவற்றையும் கூட
கட்டுரையாய் காணச்செய்வேன்

ஆனாலும் நான் கட்டுரையாளன் என்றென்னை சொல்லேன்
வான்கோழி ஆடினாலுமது மயில் ஆகாதென்றறிவேன்

கதைகள் சொல்வேன் பலகதைகள் சொல்வேன்

உண்மைக் கதைகளும் சொல்வேன்
கற்பனைக் கதைகளும் சொல்வேன்

மயக்கும் தரத்திலும் கதைகள் சொல்வேன்
வியக்கவைக்கும் வகையிலும் கதைகள் சொல்வேன்

ஆனாலும் கதாசிரியன் என கதைக்க மாட்டேன்
ஏனென்றால் ஆறெல்லாம் வற்றாதோடும் ஆறாகாது

ஆய்வுக் கட்டுரைகளும்கூட
படைத்து நிற்பேன்
காரணங்கள்கூறி அதைப் பகர்ந்திடுவேன்

மற்றவர்கள் ஏதும் சொல்வாரோ என எண்ணமாட்டேன்
மடமைகளை தகர்த்திடவும் மனத்தளர்ச்சி கொள்ளமாட்டேன்

ஆனாலும் ஆய்வாளன் என்று செப்பமாட்டேன்
ஆலயில்லா ஊருக்கு இலுப்பைப்பூ ஆகமாட்டேன்

எத்தனை செய்தாலும் ஏற்றமென
எண்ணமாட்டேன்
அத்தனை செய்தாலும் சாமானியன் சிறந்தவனாவானோ

மலை உடைப்பான் கல் எடுப்பான்
சிலைகள் செய்வான்
எத்தனை எத்தனையோ

கோபுர உயரமெல்லாம் சிலைகள் செய்வான்
கோவில் வாசலுக்கும் சிலைகள் செய்வான்

கோவில் மதிலுக்கும் பல சிலைகள் செய்வான்
கோவில் படிகளெல்லாம் சிலைகளாலே சிறக்கவைப்பான்

முற்றாக முழுமுதற் கடவுளென்று
முக்கியமாய் கருவறைக்கும் சிலை வடிப்பான்

சிலைவடிக்கும் சிற்பிகளை யாரறிவார்
அவர் வடித்த சிற்பமெலாம் வாழ்வாங்கு வாழ்கிறதே

படைப்பாளி யாரென்று தெரியாதிடினும்
படைப்புக்கள் சிறந்திருந்தால் பாரில் வாழும்
அடுப்பெரிக்கும் சிலநொடி முன்னால்கூட
அதிலிருந்து விடுபட்டு திருக்குறள் போல்
உலகில் உயிர்த்தே வாழும்!!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *