நேசம் நாடும் நெஞ்சங்கள்
அஹிம்சா சமூக நிறுவனத்தினால் நிவாரணப்பணிகள் முன்னெடுப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 18587 விதவைகள் உள்ளனர் இவர்களின் வாழ்வாதாரத்திற்குஅரசாங்கம் உதவவேண்டும்!…. செ.துஜியந்தன்.
ஊரடங்குச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கணவனை இழந்த பெண்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் மனிதாபிமானப்பணியில் எமது அஹிம்சா சமூக நிறுவனம் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 813 கிராமங்களிலும் 18587 விதவைகள் உள்ளனர். இதில் போரதீவுப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில் மட்டும் 1838 விதவைகள் உள்ளனர்
இவ்வாறு அஹிம்சா சமூக நிறுவனத்தின் ஆலோசகரும் ஓய்வு நிலை அதிபருமான கே.தங்கராசா தெரிவித்தார். மண்டூர் தம்பலவத்தை கிராமத்தில் ஊரடங்குச் சட்டத்தினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஓய்வுநிலை அதிபர் கே.தங்கராசா அங்கு பேசுகையில்..
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புக்களினாலும், தனிநபர்களினாலும் தொழில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு கிராமத்தை அல்லது சில கிராமங்களை தெரிவு செய்தே உதவிகளைப்பலர் வழங்கிவருகின்றனர்.ஆனால் எமது அஹிம்சா சமூக நிறுவனம் மட்டுமே முற்றிலும் விதவைகளைத்தெரிவு செய்து நிவாரணம் வழங்கிவருகின்றது.
முப்பதுவருட உள்நாட்டுப்போர் முடிவுற்ற பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் திரட்டப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இங்கு 18587 விதவைகள் உளளனர். அதனடிப்படையில் முதற்கட்டமாக தம்பலவத்தை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 40 விதவைகளுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கிவைக்கிறோம். தெரிவு செய்யப்பட்ட எனையவர்களுக்கான உதவிகளை இரண்டாம்கட்டமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் எனத்தெரிவித்தார்.