நேசம் நாடும் நெஞ்சங்கள்
காணாமல் ஆக்கப்பட்டாேரைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களுக்கு, “உறவுகளுக்கு கை கொடுப்போம்” அமைப்பினர் உதவி!
காணாமல் ஆக்கப்பட்டாேரைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களுக்கு, “உறவுகளுக்கு கை கொடுப்போம்” அமைப்பினர் உதவி!
தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி உயிர் அச்சுறுத்தலையும், இறப்பையும் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டாேரைத் தேடிக்கண்டறியும் உறவுகளால் வவுனியாவில் ஆயிரத்து நூறு நாட்கள் கடந்தும் நடத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டமும் ஏ9 வீதிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட வீடு ஒன்றில் நடத்தப்பட்டு வருகின்றது.
கடந்த 06.04.2020 திங்கள் கிழமை அன்று ஆயிரத்து நூற்று நாற்பத்து நான்கு நாட்களை (1144) எட்டியுள்ள நிலையில், சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் சங்கத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, “உறவுகளுக்கு கை கொடுப்போம்” அமைப்பினர் அத்தியாவசிய உணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, கிடைக்கப்பெற்ற 70 குடும்பங்களுக்கு தலா 1850 ரூபாய் பெறுமதியான உணவுப்பொதிகளை பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார் வழங்கினார்.
“சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள்”, கொரோனா நோய் இடர் காலத்தில் மட்டும் இதுவரை தமிழர் தாயகத்தில் 3500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 1850 ரூபாய் பெறுமதியிலான உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளதோடு, தொடர்ந்தும் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.