Featureநேசம் நாடும் நெஞ்சங்கள்

உருக்கமான வேண்டுகோள்!… முருகபூபதி.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

சமகாலத்தில் பேரவலமாக உருவாகியிருக்கும் கொரோனோ வைரஸ் தொற்றின் காரணத்தினால், எமது தமிழர் தாயகத்தைச்சேர்ந்த ஏழைத்தமிழ் மக்களும் அன்றாடம் மேற்கொண்ட உழைப்பினை மாத்திரமே நம்பியிருந்த மக்களும் நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு உத்தரவினால், வெளியே சென்று தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதை நன்கறிவீர்கள்.

இக்காலப்பகுதியில் மக்களின் நலனை கவனத்தில் கொண்டு நீங்கள் அனைவரும் செயற்படுவதற்கு முன்வரல் வேண்டும் என்று அன்புடன் கோருகின்றோம்.

உங்களது அரசியல் மற்றும் ஆளணி செல்வாக்கினை பயன்படுத்தி, வடக்கிலும் கிழக்கிலும் இயங்கும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடமிருந்து மக்களுக்கு அன்றாடம் தேவையான உலர் உணவுப்பொருட்களை நன்கொடையாகப்பெற்று, சேகரித்து பொதிசெய்து உங்கள் பிரதேச ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்க முடியும்.

மலையத்தில் ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இத்தகைய பணிகளை முன்னெடுத்துவருகின்றன. அதேபோன்று வடக்கிலும் கிழக்கிலும் ஒரு சில மக்கள் நலன்பேணும் அமைப்புகள் இத்தகைய மனிதாபிமான பணிகளை முன்னெடுத்துள்ளதை அறிவோம்.

இந்த இக்கட்டான வேளையில் மக்களின் நலனுக்காகவும் அடிப்படை உரிமைகளுக்காகவும் அரசியல் அதிகாரம் கேட்டு தேர்தல்களில் போட்டியிட முன்வரும் வேட்பாளர்களின் சமூகப்பங்களிப்பும் அவசியமானது என்றே கருதுகின்றோம்.

தென்னிலங்கையிலிருந்து பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த இரண்டு கிரிக்கட் ஆட்டவீரர்கள், சங்கக்கார, மற்றும் மகேல ஜயவர்தனா ஆகியோர் வன்னிப்பகுதி மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

முன்னர் 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கிலங்கையில் சூறாவளி அநர்த்தம் வந்தவேளையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களும், விரிவுரையாளர்களும் பஸ் வண்டிகளில் பயணம் செய்து அந்தப்பிரதேசங்களில் புனர்வாழ்வுப்பணிகளை முன்னெடுத்தனர்.

பின்னர், 2004 இறுதியில் சுநாமி அநர்த்தம் வந்தபோது போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டு, அரசும் – விடுதலைப்புலிகளும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுப்பணிகளில் இறங்கியதையும் நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

தற்போது தோன்றியிருக்கும் இந்த அவலமான காலப்பகுதியில் வடக்கு – கிழக்கு ஏழை மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை சேகரிக்கவும் பொதி செய்து விநியோகிக்கவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், கிளிநொச்சி பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச்சேர்ந்த மாணவர்களை நீங்கள் தொண்டர்களாக பயன்படுத்தவும் முடியும்.

அரசியல் கருத்துவேறுபாடுகளை ஒரு புறம் வைத்துவிட்டு, இந்த மனிதாபிமான சேவையில் ஒன்றுபட்டு, ஏழை மக்களின் துயரத்தை துடைக்க முன்வருமாறு வடக்கு – கிழக்கு மாவட்டங்களிலிருந்து அடுத்துவரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ள அனைத்து வேட்பாளர்களிடத்திலும் இந்த உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 32 வருடகாலமாக இயங்கும், இலங்கை ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிவரும் எமது தன்னார்வத் தொண்டு நிறுவனம், இலங்கை மாணவர் கல்வி நிதியம், வடக்கு – கிழக்கு – மலையக தொடர்பாளர் அமைப்புக்களான

யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையம் (Centre for Child Development)

நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு ( VOLUNTARY ORGANIZATION FOR VULNERABLE COMMUNITY DEVELOPMENT )

மலையக சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் (Plantation Community Development Organization என்பனவற்றின் ஊடாக வழங்கிய 2020 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு

நிதியுதவியை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறது. அத்துடன் உள்ளுர் அன்பர்களின் உதவியுடன் அண்மையில் தோன்றியிருக்கும் வைரஸ் தொற்று நெருக்கடியின்போதும் ஏழை மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை விநியோகித்து வருகின்றன என்ற செய்தியையும் இங்கு உங்கள் அனைவரதும் கவனத்திற்காக தெரிவிக்கின்றோம்.

தேர்தல் கால வேட்பாளர்களும் தங்களால் இயன்ற வழிமுறைகளில் எமது தாயகத்தின் மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் உதவ முன்வரல் வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

அன்புடன்

முருகபூபதி

தலைவர் – இலங்கை மாணவர் கல்வி நிதியம்

அவுஸ்திரேலியா. kalvi.nithiyam@yahoo.com web: csefund.org

——————————————————————————————–

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *