இலங்கை

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த உதவுங்கள்

மாகாண சபைகள் தேர்தலை நடத்தும் முறை தொடர்பில் ஆராய்வதற்கான தெரிவுக் குழு கூட்டங்களில் சில கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்வதில்லை.அந்த கூட்டங்களில் கலந்துகொண்டு தமது யோசனைகளை அவர்கள் முன்வைக்க வேண்டும். அப்போதே தேர்தலை நடத்துவதில் நிலவும் சட்ட சிக்கல்களை தீர்த்து விரைவில் தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும் என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில வர்த்தக உடன்படிக்கைகள் தற்போது கலாவதியாகியுள்ளன. இந்தியாவுடனான உடன்படிக்கை, வலய உடன்படிக்கைகள் தற்போது பொருளாதார மாற்றங்களுக்கு அமைய மேம்படுத்த வேண்டும். இது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கைகளுக்கமைய மாற்றம் செய்ய வேண்டிய இடங்களில் மாற்றம் செய்வதே அடிப்படை நோக்கமாகும். இந்தியாவுடன் எட்கா போன்ற பல்வேறு பெயர்களுடனான உடன்படிக்கைகள் உள்ளன. இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகளை அடிப்படையாகக் கொண்டே அவை செயற்படுத்தப்படும். இந்நிலையில் இந்தியாவுடன் இருதரப்பு முதலீட்டு உடன்படிக்கை துரிதப்படுத்தப்படும்.

இதேவேளை ஐநாவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுகின்றோம். ஐநாவின் அமைதிப் படையில் எமது சிப்பாய்களை அனுப்பும் பணிகள் கடந்த காலங்களில் அனுப்புவதில் சிக்கல்கள் நிலவிய நிலையில் நாங்கள் அதனை தீர்த்து ஹைட்டிக்கு தற்போது குழுக்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐநாவின் இணை நிறுவனமான யுனெஸ்கோவில் கிதுள் சீவுவதை உலக கலாச்சார மரபுரிமைகளில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதேவேளை நியூசிலாந்தில் புதிய தூதரகத்தை அமைத்துள்ளோம். அதன்படி அந்த நாட்டில் நாட்டுடன் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். அதேபோன்று ருவாண்டாவிலும் தூதரகம் அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை சுவிஸ்லாந்தில் வதிவிடப்பிரதிநிதி அலுவலகமே உள்ளது. இதனால் அங்கு சூரிஸ் மற்றும் பேர்ண் ஆகிய பகுதிகளில் கொன்சியூலர் அலுவலகங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அத்துடன் இலங்கை முழுவதும் உள்ள இலங்கைகயர்களுக்காக கொன்சியூலர் அலுவலகங்களை விரிவுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

ஜீஎஸ்பி வரிச் சலுகை இன்னும் இரண்டு வருடங்களுக்கு இலங்கைக்கு கிடைக்கும். இதனால் மீள விண்ணப்பிப்பதற்காக இடைக்கால அமைச்சரவை குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பூர்த்தி செய்ய வேண்டிய விடயங்கள் சில உள்ளன. இதில் அங்கங்களாக ஒருங்கிணைந்த குற்றங்களை தடுத்தல் சட்டமூலத்தை கொண்டுவரவும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் அதற்கு பதிலாக வேறு சட்டத்தை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் விசாரணை குழுவின் அறிக்கையிலும் நீதிமன்ற தீர்ப்பிலும் நாட்டில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் அதற்கான சட்டங்கங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படியே நாங்கள் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை கொண்டு வருகின்றோம். உள்ள சட்டத்தில் இருந்த கடுமையான விடயங்களை நீக்கியே புதிய சட்டம் கொண்டுவரப்படுகின்றது.

இதேவேளை வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கு தேவையான ஆரம்பக்கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் விரைவாக தேர்தலை நடத்த வேண்டிய தேவை எங்களுக்கும் உள்ளது. அது தொடர்பில் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இங்கே அதுபற்றி கதைக்கும் கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த குழு கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதில் இருக்கும் சட்ட சிக்கல்களை தீர்த்து விரைவாக தேர்தலை நடத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்வைக்க வேண்டும். சகலரும் தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். சகல கட்சிகளும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுடைய யோசனைகளை முன்வையுங்கள். அப்போது விரைவாக தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *