இலங்கை

காதலனுக்காகத் தாயின் 8 1/2 பவுண் தாலியைத் திருடி, உறவுக்கார பெண்ணைச் சிக்கவைத்து நாடகமாடிய 22 வயது யுவதி கைது

மட்டக்களப்பில் காதலனுக்காகத் தனது தாயின் எட்டரைப் பவுண் தாலிக் கொடியைத் திருடி, அதனை ஈடுவைத்து 14 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வரும் உறவினர் பெண் மீது திருட்டுப் பழியைச் சுமத்தி நாடகமாடிய தனியார் வங்கி ஊழியரான 22 வயது யுவதியை நான்கு மாதங்களின் பின்னர் நேற்று திங்கட்கிழமை (23) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இந்தப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி தாலிக்கொடி திருடப்பட்டுள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.இதனையடுத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவுப் பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகத் தாலிக் கொடியைத் தொலைத்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் அந்தப் பெண்ணைக் கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்திய போதிலும், அவரிடமிருந்து நகை எதுவும் மீட்கப்படவில்லை. இருப்பினும், சந்தேகத்தின் பேரில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அப்பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அந்தப் பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்தவர் இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து, அப்பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாகப் பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் இகலகம, விக்கினதாஸ், டிகாசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இத்தாலிக்கொடி திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுத்தனர்.

விசாரணையின் போது, வீட்டின் உரிமையாளரின் மகளும் தனியார் வங்கியொன்றில் கடமையாற்றுபவருமான 22 வயது யுவதியின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்று, நீதிமன்ற அனுமதியுடன் வங்கிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, ஜூன் 28ஆம் திகதி திருட்டுபோன தாலிக்கொடியை, 30ஆம் திகதி தனியார் வங்கியொன்றில் தமது அடையாள அட்டையைக் கொடுத்து 14 இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்துக் அந்த யுவதியை நேற்று கைது செய்த பொலிஸார், அவரிடம் முன்னெடுத்த ஆரம்பக்கட்ட விசாரணையில், காதலனின் பணத் தேவைக்காகத் தாயின் தாலிக்கொடியைத் திருடி ஈடுவைத்து, அன்றைய தினமே காந்தி பூங்காவில் வைத்துக் காதலனிடம் 14 இலட்சம் ரூபா பணத்தைக் கையளித்ததாகத் தெரியவந்துள்ளது.

காதலன் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட யுவதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *