உலகம்

இந்தோனேசியாவில் தொழிற்சாலை தீ விபத்து; சடுதியாக உயர்ந்த பலி எண்ணிக்கை

இந்தோனேசியாவின் செராங் மாவட்டத்திலுள்ள சிகாண்டே பகுதியில் அமைந்துள்ள இனிப்புத் தொழிற்சாலையில் சனிக்கிழமை (21) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதியின் தொழிலாளர் விவகார ஆலோசகர் சயீத் இக்பால் உறுதிப்படுத்தியுள்ளார்.

மீட்புப் பணியாளர்கள் இதுவரை உடற்பாகங்கள் அடங்கிய 24 சடலப் பைகளை மீட்டுள்ளதாகவும், சுமார் 30 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாகவும் பான்டென் தேடுதல் மற்றும் மீட்புப் பணியகத் தலைவர் அல் அம்ராட் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 65 பணியாளர்களில் 24 பேர் வீடு திரும்பியுள்ளனர், நால்வர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 29 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 8 பேரின் நிலை உறுதிப்படுத்தப்படவில்லை என தொழிற்சாலை நிர்வாகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயின் தீவிரத்தினால் மீட்கப்பட்ட உடல்களை நேரில் பார்த்து அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸ் அனர்த்த உயிரிழப்பு அடையாளப் பிரிவு அதிகாரி வஹ்யு ஹிதாயதி தெரிவித்துள்ளார்.

ஒரு சடலப் பையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் உடற்பாகங்கள் இருக்கக்கூடும் என்பதால், காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அடையாளம் காணும் பணிக்கு 2 முதல் 3 வாரங்கள் வரை ஆகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குளிரூட்டும் இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவினாலேயே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 15 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நீர்த்தாரை வண்டிகள் பயன்படுத்தப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், தொழிற்சாலையின் நடு மற்றும் பின்பகுதிகளில் வெப்பம் தொடர்வதால் குளிரூட்டும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கட்டடத்தின் பல பகுதிகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் மீட்புப் பணியாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றனர்.

யுனைடெட் ஃபேமிலி ஃபுட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்தத் தொழிற்சாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவன் எர்வின் விஜயா, விபத்து நடந்த வேளையில் சுமார் 300 பேர் பணியில் இருந்ததாகவும், தொழிற்சாலையில் உரிய தீத்தடுப்பு மற்றும் அவசரகால வெளியேற்ற வழிகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடத்த தொழிற்சாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அழைப்பாணை விடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *