உலகம்

கிரிக்கெட்டுக்குள் புகுந்த புவிசார் அரசியல்; கைலாகு சர்ச்சை குறித்து MCC விளக்கம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளின்போது பரஸ்பரம் கைலாகு கொடுக்காத விவகாரம், கிரிக்கெட் சட்டங்களை நிர்வகிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என அதன் கிரிக்கெட் சட்டங்கள் தொடர்பான அதிகாரி பிரேசர் ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளின் வீரர்களும் பாரம்பரியமாக கைலாகு கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதை எம்.சி.சி. விரும்பினாலும், இதற்கு அப்பாற்பட்ட அரசியல் மற்றும் பிற விவகாரங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் கைலாகு கொடுக்காத நடைமுறை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரேசர் ஸ்டீவர்ட்,

“கைலாகு கொடுப்பது தொடர்பில் மேல்மட்டத்திலிருந்து உத்தரவுகள் வந்தால், அதனை எம்.சி.சி.யால் கட்டுப்படுத்த முடியாது. வீரர்கள் கைலாகு கொடுப்பதை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அதைவிடப் பெரிய விவகாரங்கள் இருப்பதையும், அவை எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை என்பதையும் புரிந்துகொள்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சில விவகாரங்கள் கிரிக்கெட்டைத் தாண்டி புவிசார் அரசியல் மட்டத்தில் உள்ளவை என்றும், அவை குறித்து கருத்து தெரிவிப்பது தனது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களத்தில் வீரர்கள் ஒருவரையொருவர் மதிப்பதுடன், நடுவர்களையும் அவர்களின் அதிகாரத்தையும், கிரிக்கெட் விளையாட்டையும் மதித்து நடப்பதை உறுதிப்படுத்துவதே தங்களால் கட்டுப்படுத்தக்கூடிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) தோஹாவில் நடைபெற்ற ஆசியக் கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியிலும் இரு அணிகளின் வீரர்கள் கைலாகு கொடுக்கவில்லை. இதனையடுத்து, இந்த விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *