இலங்கை

கல்முனை, சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் எப்போது ?

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், தேர்தலுக்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

குறித்த இரண்டு உள்ளூராட்சி மன்றங்களினதும் எல்லை நிர்ணயப் பணிகள் இதுவரை நிறைவடையவில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டிய திகதியாக எதிர்வரும் ஆண்டின் மார்ச் 15-ஆம் திகதியை நிர்ணயித்து, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

மாநகர சபைகள் மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப கடந்த ஒக்டோபர் மாதம் 13-ஆம் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

எவ்வாறாயினும், குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அவற்றின் எல்லை நிர்ணயப் பணிகளை மேற்கொண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இப்பணிகளுக்காகத் தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் 2 எல்லை நிர்ணயக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அக்குழுக்களின் அறிக்கைகளுக்கு அமைய தொகுதிகள் அறிவிக்கப்படவுள்ளன.

 

தொகுதிகளை அறிவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் தேர்தலை நடத்துவதற்கான வேட்புமனுக் கோரல் திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *