இலங்கை

11 மாதங்களில் 2,463 பேர் பலி: கடுமையான போக்குவரத்து சட்ட அமுலாக்கத்துக்கு தயாராகிறது இலங்கை

இலங்கையில் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் போக்குவரத்துச் சட்டங்களை அமுல்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தவுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் வீதி விபத்துகளில் 2,463 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பண்டிகைக் காலத்தில் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. செனதீர, பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

பொலிஸ் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை 2,330 மரண விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 2,463 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே காலப்பகுதியில் 5,868 பாரிய விபத்துகள், 9,870 சிறிய விபத்துகள் மற்றும் 4,488 சொத்து சேதங்களை ஏற்படுத்திய விபத்துகள் பதிவாகியுள்ளன.

விபத்துகளில் பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அதிகளவில் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் 813 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் தொடர்பான விபத்துகளில் 1,044 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 876 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், 168 பேர் பின்னால் அமர்ந்து பயணித்தவர்களும் ஆவர்.

மேலும், வீதி விபத்துகளில் 240 பயணிகள், 190 சாரதிகள் மற்றும் 165 சைக்கிள் ஓட்டுநர்களும் உயிரிழந்துள்ளனர்.

55 முதல் 85 வயதுக்குட்பட்டவர்களே பாதசாரி விபத்துகளில் அதிகம் உயிரிழந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் செனதீர சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் வயதான வீதிப் பயனாளர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் நிலைமை வெளிப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், மரண விபத்துகளின் எண்ணிக்கை 11ஆல் அதிகரித்துள்ள போதிலும், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16ஆல் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்துவோரைக் கண்டறியும் விசேட சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்காக நாடளாவிய பொலிஸ் நிலையங்களுக்கு போதிய மூச்சுப் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், தேவைப்படும் இடங்களுக்கு போக்குவரத்து தலைமையகத்தினால் மேலதிக கருவிகளும் வழங்கப்படவுள்ளன.

அதேவேளை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்துடன் (NTMI) இணைந்து, சாரதிகளுக்கு வீதியோரத்தில் திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நடமாடும் ஆய்வக வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. வீதி விபத்துகளில் தொடர்புடைய சாரதிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துவதுடன், போக்குவரத்துச் சட்டங்களையும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் செனதீர வலியுறுத்தியுள்ளார்.

ஆண்டு இறுதிப் பயணக் காலத்தில் வீதி விபத்துகளைத் தடுத்து, உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் அனைத்து போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுகளும் உஷார் நிலையில் செயற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *