உலகம்

நியூயோர்க் செனட்டுக்கு தெரிவான முதல் பாலஸ்தீனியர் – அபெர் கவாஸ் வரலாற்றுச் சாதனை

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபை மற்றும் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதலாவது பாலஸ்தீனியர் மற்றும் முதலாவது முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை 34 வயதான அபெர் கவாஸ் (Aber Kawas) படைத்துள்ளார்.

நியூயோர்க் நகரின் குயின்ஸ் (Queens) பகுதியில் அமைந்துள்ள 12ஆவது மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிட்ட ஜனநாயக சோசலிசவாதியான அபெர் கவாஸ், குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து 74.5 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

பாலஸ்தீன விடுதலைக்கான தனது கொள்கைகளில் சமரசம் செய்யாமல் அரசியலில் ஈடுபட முடியுமா என்ற தயக்கம் ஆரம்பத்தில் தனக்கு இருந்ததாகவும், எனினும் தற்போதைய அரசியல் சூழல் மாற்றமடைந்துள்ளதால் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததாகவும் அவர் அல் ஜசீரா ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் நகர முதல்வர் ஸோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிசவாதிகள் அமைப்பின் (DSA) ஆதரவுடன் களமிறங்கிய கவாஸ், குறைந்த செலவிலான வீட்டுவசதி, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து மற்றும் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவு ஆகியவற்றை முன்னிறுத்தித் தனது பிரசாரத்தை முன்னெடுத்திருந்தார்.

அபெர் கவாஸின் பெற்றோர்கள் பலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள் ஆவர். இவரது தந்தை 1948ஆம் ஆண்டிலும், தாய் மனல் அபு சமாஹா (Manal Abu Samaha) 1967ஆம் ஆண்டிலும் பாலஸ்தீனத்திலுள்ள தமது பூர்வீக வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

பின்னர் ஜோர்தானில் அயலவர்களாக வளர்ந்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், 1990களில் தமது கைக்குழந்தையுடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.

அபெர் கவாஸ் ஏழாம் வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது, அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவினரால் அவரது தந்தை தடுத்து வைக்கப்பட்டார்.

செப்டெம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னரான காலப்பகுதியில் நியூயோர்க்கிலுள்ள முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்ட நெருக்கடிகளால் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் அவரது தாயாரே தனித்துச் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேவேளை, இம்முறை நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் மிச்சிகன் செனட் சபைக்குத் தெரிவான அப்துல் எல்-சயீத் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் முதல்வராக தெரிவான நித்யா ராமன் உள்ளிட்ட பல முற்போக்கு மற்றும் பாலஸ்தீன ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலிய சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு நியூயோர்க் மாநிலத்தின் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் நிதியுதவி வழங்குவதைத் தடை செய்யும் சட்டமூலத்தை மீண்டும் கொண்டு வருவதே தனது முதன்மையான இலக்கு என அபெர் கவாஸ் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *