நாமல் ராஜபக்ஷவின் பிறந்தநாள் கடிதம் உணர்வுபூர்வமான தோற்றத்தை உருவாக்கும் முயற்சி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகன் நாமல் ராஜபக்ஷ எழுதியுள்ள கடிதம், ஜவஹர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதங்களையும், சிறையில் இருந்த காலத்தில் விஜய குமாரதுங்க தனது மகளுக்கு எழுதிய கடிதத்தையும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. அவ்வாறானதொரு உணர்வுபூர்வமான தோற்றத்தை ஏற்படுத்துவதற்கே நாமல் ராஜபக்ஷ முயற்சிப்பதாகக் ஜனபலய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பு பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவ் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.பயண வழிகாட்டி
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு நாமல் ராஜபக்ஷ தனது தந்தைக்கு உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார். தந்தை சிறையில் இருப்பதால் அவருடன் நெருக்கமாக இருந்து பிறந்தநாளைக் கொண்டாடி வாழ்த்துத் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட பக்குவத்தையும் ஊக்கத்தையும் கொண்டு தற்போதைய சவால்களை எதிர்கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது, ஜவஹர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதங்களும், சிறையில் இருந்த காலத்தில் விஜய குமாரதுங்க தனது மகளுக்கு எழுதிய கடிதமும் நினைவுக்கு வருகின்றன. அவ்வாறானதொரு கடிதத்தை எழுதியதன் ஊடாக, நாமல் ராஜபக்ஷவும் அதேபோன்ற உணர்வுபூர்வமான தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க நாமல் முயற்சிக்கிறார்.
ஆனால், நாமல் ராஜபக்ஷ தனது தந்தையிடம் கேட்க வேண்டிய கேள்வி அதுவல்ல. ‘தந்தையே, உங்களுடைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட ஊழல் அரசியல் முறைமையைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தி, என்னையும் ஊழல் செய்பவனாக மாற்றியது ஏன்?’ என்றே அவர் கேட்டிருக்க வேண்டும்.
அதேபோன்று, மகிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். மகனுக்கு சரியான வழிகாட்டலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் ஊழல் அரசியல் கலாசாரத்தைத் தொடர அனுமதித்ததன் விளைவுகளையே இன்று காண்கிறோம்.
மேலும், ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் மற்றும் கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி மோசடிஇவ்விவகாரங்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பான சட்டச் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகள் தொடர்பில் பதிலளிப்பதற்குப் பதிலாக, உருக்கமான கடிதங்களை எழுதி மக்களின் உணர்வுகளைத் தூண்டி, தம்மைத் தூய்மையானவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஒரு தந்தை தனது மகனை உண்மையாக நேசித்திருந்தால், இத்தகைய ஊழல் அரசியல் முறைமையை நாட்டில் உருவாக்கியிருக்கமாட்டார். குடும்ப உறவின் பெயரால் அரசியல் பொறுப்புக்கூறலை மறைக்க முடியாது என்பதே எமது விமர்சனத்தின் அடிப்படை என்றும் அவர் வலியுறுத்தினார்.
![]()